Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Thursday, April 5, 2012

முடிவு


இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தியது, ஒருவர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிடும்.



சிறு வயதில் இருந்தே எனக்கு இந்த முடிவு எடுப்பதில் சரியான அனுபவம் கிடையாது, நான் எடுத்த சில முடிவுகள் சரியாக அமைந்தாலும் பல முடிவுகள் தவறாகவே அமைந்தது. என் வாழ்க்கையின் சில முக்கிய முடிவுகள்



பள்ளியில் படிக்கும்போது ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளி ஆசிரியர் எனது இடது கை பழக்கத்தை விட்டொழிக்க எடுத்த முயற்சிகளால் ஓரளவு வெற்றி பெற்று என்னை வலது கையில் எழுத வைத்து இருந்தார்.  எக்காரணத்தை கொண்டும் இடது கையில் எழுதுவதை மறக்கக்கூடாது என்று முடிவெடுத்து இன்று வரை இரு கையிலும் எழுதும் திறமை பெற்றுள்ளேன். அன்று எடுத்த அந்த முடிவு இன்றும் என்னை ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருவனாக அடையாளப்படுத்துகிறது.




சிறுவயதில் மிகவும் தன்னம்பிக்கை வைத்த சிறுவனாக இருந்த நாட்களில் நீச்சல் கற்றுக்கொள்ள செல்லும்போது, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தாத்தா ஊரில் இருந்து எங்க ஊருக்கு செல்ல வேண்டும், நான் நீச்சல் கற்றுக்கொள்வது என முடிவெடுத்தது பிற்காலத்தில் என்னை காப்பாற்றியது.

 
தமிழ் மீடியத்தில் நன்றாக புரிந்து படித்துக்கொண்டு இருந்தவனை கல்லூரிகாலத்தில் எளிதாக இருக்கும் என்று ஆறாம் வகுப்பில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்க்க நினைத்தபோது, புரியாமல் ஆங்கிலத்தில் படிப்பதை விட புரிந்து தமிழில் படிக்கிறேன் என்று முடிவெடுத்தேன்.



பின்னர் எட்டாம் வகுப்பில் மறுபடியும் மூளை சலவை செய்யப்பட்டு டைக்கும் ஷூக்கும் ஆசைப்பட்டு ஆங்கில வழிக்கல்வியில் மாறினேன்.



தமிழ் மீடியத்தில் இருக்கும் வரை மிக மிக நல்ல பையன், ஆங்கில மீடியமே எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது, பொய் சொல்ல, மனப்பாடம் செய்து படிக்க, பிட் அடிக்க, ஏமாற்ற, கெட்ட வார்த்தை பேச என்று ஆனால் எளிதில் இரண்டே வருடத்தில் ஆங்கில வழி கல்வியில் ஒன்றிவிட்டேன் , சுமாரான மாணவனாக மாறி மனப்பாடத்திலேயே படிக்க கற்றுவிட்டேன், மேற்கூறிய இரண்டு முடிவுகளிலும் என்னால் எதுசரி எது தவறு என அறுதியிட்டு கூற முடியவில்லை.



பத்தாம் வகுப்பிற்கு பிறகு எந்த குரூப் எடுப்பது என்று வந்தபோது என் சுயமான முடிவெடுக்கும் நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது, ஆமாம் வீட்டில் இருந்த சகோதர சகோதரி இரண்டு பெரும் முதல் குரூப் ஆகையால் முதல் குரூப் தவிர வேறு எதுவும் எனக்கு ஆப்சன் ஆகக்கூட கொடுக்கப்படவில்லை, அதிலும் உயிரியல் குரூப் தான்.


மேல்நிலைப்பள்ளியில் அதிக சுதந்திரம் காரணமாக மேலும் பள்ளியை கட் அடித்து, ஊர் சுற்றி படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் கவலை இல்லாத எனக்கான வாழ்க்கையை வாழ்ந்தேன். மருத்துவம் என்பதை கண்டிப்பாக படிக்கக்கூடாது என்று முடிவெடுத்து பொறியியல் படிக்க மட்டுமே முயற்சித்தேன்.


பொறியியல் படிக்க முயற்சி செய்தாலும் மதிப்பெண் பத்தாததால் ஒரு வருடம் மறுபடியும் படிக்கவா இல்லை ஏதும் கலை கல்லூரியில் படிக்கவா என்று வந்த போது மறுபடியும் ஒரு வருடம் படிக்க என முடிவெடுக்கப்பட்டு படித்தேன்,




தனித்தேர்வருக்கான பயிற்சிப்பளியில் சேரவா இல்லை நானே படிக்கவா என வந்தபோது நானே படிக்க என நிர்பந்திக்கப்பட்டு ஒரு வழியாக கஷ்ட்டப்பட்டு பொறியியல் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும்வரை வந்தேன்.


கல்லூரியில் எந்த துறை எடுப்பது கணிப்பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் என முடிவெடுத்தபோது இயந்திரவியல் என நிர்பந்திக்கப்பட்டேன்.


இயந்திரவியலை புடிக்காமல் படிக்கும்போது 5 பேப்பர் அரியர் வச்சு பின்னர் புத்தருக்கு போதி மரத்தடியில் வந்தது போல எனக்கு மொட்டைமாடியில் நியாநோதயம் வந்து பின்னர் ஒரு வழியாக புடிக்காவிட்டாலும் படித்து முடித்தேன்.


கணினி துறையில் வேலைக்கு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்க இயந்திரவியல் துறையில் சேர நிர்பந்திக்கப்பட்டு சேர்ந்தேன், வேலையிலும் வாழ்க்கையில் எது பிடிக்காத ஒரு வேலையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதையும் பின்பற்றி அதிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறேன்.


வாழ்க்கையில் எல்லோரையும் போல வாழ்ந்து முடிவெடுத்து இது வரை வந்த எனக்கு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான  முடிவைமட்டும் நானோ என்னை சார்ந்தவர்களோ எடுக்காமல் எந்த ஒரு ஜோசியக்காரனோ எடுக்கிறான் எனும்போது எனது வருத்தத்தை பதிவு செய்ய இது ஒரு வழி.


என்ன செய்ய வாழ்க்கை எனபது நீ உனக்காக நீயே முடிவெடுத்து வாழ்வது ஒரு வகை, மற்றவர்கள் உனக்காக முடிவெடுத்து நீ வாழ்வது மற்றொரு வகை. இதில் நான் இரண்டாம் வகையில் வாழ நிர்பந்திக்கப்பட்டு உள்ளேன்.


ஆனாலும் எந்த நாதாரியோ நான் ஜோசியக்காரன் என சொல்லி அவன் பொழைப்பை தேட எத்தனையோ பேர் பொழைப்பை கெடுக்கிறான்.

Thursday, March 8, 2012

இனி ஒரு விதி செய்வோம்

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கக்கூடிய சட்டத்திருத்தம்  மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது, இதன் மூலம் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இப்போது கிடைக்கக்கூடிய தண்டனையை விட அதிக தண்டனை கிடைக்கும். இதில் மிக முக்கியமானது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை தான். ரத்தத்தில் கலந்து இருக்கும் மதுவின் அடிப்படையிலும் மற்றும் விதிமீறல் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதமும் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கலாம்.


மேலும் பல வித விதிமீறல்களுக்கு ஐந்து மடங்கு அபராதம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது, சாலையில் எதிர் திசையில் செல்வது, சிக்னல் மதிக்காமை போன்றவற்றிற்கு தண்டனைகள் அதிகரிக்கப்படும் .


அதிகரித்து வரும் சாலை விபத்துக்களும் அதில் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் இந்த சட்டத்தை கொண்டுவர காரணம். உலகளவில் எதில் முன்னணியில் இருக்கிறோமோ சாலை விபத்துகளில் முதல் இடத்தில இருக்கிறோம். இதற்கு பல காரணங்கள் உண்டு அனைத்தும் நம் மக்களையே சாரும். மக்கள் மீது பழி சுமற்றி அரசு தப்பித்து விடக்கூடாது, ஏனென்றால் அரசும் கொஞ்சம் கூட யோசிக்காத அரசு அதிகாரிகளும் இதற்கு முக்கிய காரணம்.


சாலை விபத்துக்கள் நடக்க முக்கிய காரணம் எவை?


வாகனம் ஓட்டுபவர் தவறாக இருக்கலாம்


வாகனம் பழுதால் விபத்து ஏற்படலாம்


மற்ற வாகனம் தவறாக வந்ததால் ஏற்படலாம்


அடிப்படை சாலை வசதிகள் இல்லாதலால், வசதிகள் மோசமானதாக இருப்பதால் ஏற்படலாம்


தேவையான அறிவிப்புகள் இல்லாமை, மோசமான சாலை வசதிகள், பழுதடைந்த சாலை இவையும் ஒரு காரணம்.


இத்தகைய காரணங்களில் நாம் எல்லாவற்றிலும் முன் நிற்கிறோம், எதுவும் எதையும் விஞ்சும் வண்ணம் உள்ளது. இதில் சாலை விதிகளை பற்றி தெரியாத நம் மக்களே அதிகம் ஆனால் வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்துக்கு செல்லாமலே ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் அதிகம், அதை பெருமையாக வேறு சொல்வார்கள். விதிகளை தெரியாமல் உரிமம் வாங்குவதும் அதை காசுக்காக கொடுப்பதும் முதல் குற்றம்.


சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் நமது மக்கள் அடுத்து, விதி தெரிந்தாலும் எவன் மதிக்கிறான் நான் மதிக்க என்று செல்வோர், வாகனத்தில் ஏறிவிட்டால் மற்றவர்களையும், பாத சாரிகளையும் மதிக்காமல் சாலை முழுதும் தனக்கே சொந்தம் என என்னும் சிலர் இவர்கள் எல்லாம் முதல் காரணிகள். இவர்களுக்காகவே இந்த சட்டம். ஆனால் எனக்குள் இன்னும் சில சந்தேகம், கனரக வாகனங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு என்ன சட்டம்?


பின்புறம் விளக்கு இல்லாத கனரக வாகனம், நெடுஞ்சாலையில் ஓரத்தில் அபாய விளக்கு இல்லாமல் நிறுத்தி வைப்பதால் ஏற்படும் விபத்து, சிக்னல் கொடுக்காமல் கண்டபடி செல்லும் கனரக வாகனம் ஏற்படுத்தும் விபத்து, சாலையில் எதிர் திசையில் வந்து ஏற்படுத்தும் விபத்து , சரியாக பராமரிக்காமல் வாகனத்தை விபத்திற்கு உள்ளாக்குதல் என இவற்றிற்கு தகுந்த தண்டனை கிடைப்பது இல்லை.


அரசாங்க பேருந்துகளிலே பின் விளக்குகள் சரியாக இருப்பது இல்லை, அரசாங்க பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள் அதுவும் சமீப காளங்களில் குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் இது மிக அதிகமாக இருக்கிறது.
பொதுமக்களிலும் ஒழுக்கம் கட்டுப்பாடு விதிகளை மதித்தல் போன்றவை மோசமாக மாறிவிட்டது.


நமது நாட்டில் வாகனம் ஓட்ட கற்றுத்தரும் நிறுவனங்கள் ஏராளம் ஆனால் அவற்றில் மிக சரியாக சொல்லித்தருவதில் மிக சில நிறுவனங்களே கவனம் செலுத்துகின்றன.


கனரக வாகனங்களை பொறுத்தவரை இருக்கும் நிறுவனங்கள் பெரும்பான்மை சரியாக சொல்லித்தருபவையாக இருக்கின்றது ஆனால் கார் சொல்லிக்கொடுக்கும் நிறுவனகள் மிக சிலவே சரியாக சொல்லிக்கொடுப்பவை ஆனால் விபத்துகளில் பார்க்கும்போது கனரக  வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.


இதற்கும் மேலாக மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்து. மிக சீராக இருக்கும் சாலையில் திடிரென ஒரு பள்ளம் இருக்கும் ஆனால் அதன் அருகில் எந்த அறிவிப்பும் இருக்காது, மிக மோசமான சாலைகளை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டதில் நம்மில் பலருக்கு அனுபவமிருக்கும்.


அறிவிப்பு பலகை இல்லாத சாலை, குண்டு குழியுமான சாலைகளில் பொறுப்பாக ஒருவர் போனால் மற்றவர்கள் கண்மூடித்தனமாக வந்து  விபத்தில் சிக்குதல் அதிகம்.


பழைய மகாபலிபுரம் சாலையை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு வழிக்கு பத்தொன்பது ரூபாய் வாங்குகிறார்கள் காருக்கு ஆனால் இதுதான் இருப்பதிலேயே  மோசமான சாலை. சாலை ஓரத்தில் மரண குழிகள், எந்நேரமும் காவு வாங்கும் கம்பிகள் நின்றுகொண்டு இருக்கும், மேலும் சர்வீஸ் சாலை போடுகிறோம் என மண்ணை தோண்டி சாலையில் கொட்டி வைத்து இருப்பார்கள், அதற்கு அடுத்து பேருந்து நிறுத்ததிர்க்காக ஒரு வழியையே மறைத்து மக்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.


ASV சன்டெக் பார்க் அருகில் சாலையை கடக்க பாலம் அமைத்து இருப்பார்கள், இந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் 80 சதவிகித மக்கள் இள வயது (முப்பதுக்கும் குறைவாக ) ஆனால் அதில் 5 சதவிகித மக்கள் கூட சாலையை கடக்க பாலத்தை உபயோகிப்பது இல்லை. எல்லோரும் போக்குவரத்தை மறித்து நடு தடுப்பு சுவரை தாண்டி சாலையை கடக்கின்றனர். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இது போல பல இடங்களில் நடக்கிறது, ஆனால் இவர்களில் பலர் வாகனத்தில் போகும்போது மற்றவரை மனதுக்குள் திட்டாமல் செல்வது இல்லை. ஏன் நாம் வாடகைக்கு வாகனம் எடுக்கும் போது அதன் ஓட்டுனர் சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் கேள்வி கேட்பது இல்லை.


இதை விட கொடுமை சில இடங்களில் பாலம் அமைத்து அதில் ஏறக்கூட முடியாமல் சாலையை பறித்தும் வைத்து உள்ளனர் அரசு அதிகாரிகள்.


நன்றாக சாலையை அமைத்துவிட்டு அதில் திடிரென்று வேகத்தை குறைக்க என்று நடுவில் தடுப்புகளை வைக்கும் வழக்கத்தை நமது போலீசார் கொண்டு உள்ளனர். இத்தகைய தடுப்பில் விளக்கு இல்லாத ஒரு இரவில் மோதி அடிபட்ட அனுபவம் எனக்கு உண்டு.


இப்படி எல்லாமே மோசமாக செல்லும் போது நாம் எப்படி வருங்காலத்தில் மக்களை சாலை விதிகளை மதித்து நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்?


சாலை விதிகளை ஓட்டுனர் உரிமம் பெறும்போது மட்டும் படிக்காமல் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும்.


பெற்றோர் குழந்தைகளை சாலையில் அழைத்து செல்லும்போது விதிகளை மீறாமல் செல்ல வேண்டும்.


ஓட்டுனர் உரிமம் பதினெட்டு வயதில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.


விதிகளை மீறாமல் உரிமம் பெற கடினமான பரிட்சைகளை வைக்க வேண்டும்.


பயிற்சி பள்ளிகள் துவங்கும் விதிமுறைகள் கடினமாக்கப்பட வேண்டும், அவற்றை முறைப்படுத்த வேண்டும்.


சாலை வசதிகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும், அடிப்படை சாலை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.


இதற்கும் மேலாக மக்கள் மனதில் எனக்கென்ன என்ற எண்ணம் விலக வேண்டும்.


இவையெல்லாம் செய்தால் நம் நாட்டில் சாலை விபத்துகளை குறைக்கலாம்.


இன்னொரு முக்கியமான விஷயம் போலீசார் லஞ்சம் வாங்குவதை குறைக்க வேண்டும், இந்த சட்டம் வந்தால் எனக்கென்னவோ போலீசார் வாங்கும் லஞ்சம் அதிகரிக்கும் என தொன்றுகிறது. எந்த ஒரு அதிகாரிக்கும் தனது சம்பளம் போதும் லஞ்சம் தேவை இல்லை எனும் அளவிற்கு சம்பளமும் மனதும் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

அட போங்கப்பா

நமது பதிவர்களில் எல்லோரும் எதாவது ஒரு கட்சியை சார்ந்தவராகவே உள்ளனர் ஒரு சிலர் இல்லை கட்சியா? அரசியலா? என்று கேட்கும் அளவில் உள்ளனர், யாரும் நடுநிலையாக ஒரு கருத்தை சொல்வதும் இல்லை, நானும் கூட. நடுநிலை என்று நானே சொல்லிக்கொள்வது தவறு.



ஆனால் சமீபகாலமாக வரும் பதிவுகளில் அதுவும் மின்வெட்டை பற்றி வரும் பதிவுகளில் இப்பொதுள்ள ஆட்சியில் மின்வெட்டை பற்றி கவலைப்படாமல் ஏதோ இருப்பது போல எழுதுவது தான் வேதனை அளிக்கிறது. இப்போது ஏன் தேர்தலுக்கு முன்பிருந்தே ஆட்சிக்கு வர தகுதி இருந்த கட்சிகள் அனைத்துக்கும் தெரியும் தமிழகத்தின் மின் நிலை, அதில் ஆட்சியில் இருந்த கட்சிக்கு மிக தெளிவாக தெரியும் நிலை என்ன என்று.

எதிர்க்கட்சி ஒன்று இன்னும் மூன்று மாதத்தில் மின்வெட்டை நிறுத்தி விடுவோம் என்று கூறினால் நம்பிவிடுவீர்களா? ஆட்சியில் இருக்கும் கட்சி ஏன் அப்போது சொல்லவில்லை? அவர்களே எப்போது மின்வெட்டு நிறுத்தலாம் என்பதை மற்றவர்களை விட அதிகமாக தெரிந்தவராக இருப்பார்கள் ஆனால் எந்த பிரசாரத்தின்போது அவர்கள் மின்வெட்டு இருப்பதை ஒத்துக்கொள்ளவும் இல்லை அதை தீர்ப்போம் என உறுதி கூறவும் இல்லை.


எதிர்க்கட்சி அவ்வாறு உறுதி கூறினால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற கூறுகின்றனர் என்பது பலருக்கும் தெரியும், ஏன் அப்போதே பதிவிடுவது தானே உங்களால் முடியாது என்று?? அப்போது இருந்துவிட்டு இப்பொது குறை கூறுவதில் பயன் இல்லை, எந்த கட்சியாக இருந்தாலும் இன்றைய மின்வெட்டு தவிர்க முடியாதது, மேலும் மின்வெட்டை தவிர்க்க இரண்டு கட்சிகளுமே தகுந்த நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருக்கும், அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் கண்டிப்பாக மின்வெட்டு நிலைமை ஓரளவிற்கு சரி செய்யப்பட்டு இருக்கும், ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் மின்வெட்டு இருந்தால் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என.

கட்சி சார்பாகவோ, இல்லை தமக்கு பிடிக்காத தலைவரை தூற்றவோ இல்லாமல் நடுநிலையாக நடந்த நல்லவற்றை பாராட்டாமல் இருப்பது தவறு. நூலக மற்றம், சமச்சீர் கல்வி போன்றவற்றில் தவறாக கையாண்டு இருந்தாலும் நில அபகரிப்பு, டிஎன்பிசி தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை போன்ற நல்லவைகளும் இருக்கின்றன.




சதா ஆட்சியில் இருக்கும் கட்சியை தூற்றியும், என்னமோ எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்காது என்பது போலவும் வரும் பல பதிவுகளை பார்த்து எரிச்சலில் (மின் வெட்டு தந்த ஏரிச்சல் கூட சேர்ந்து) எழுதிய பதிவு.

இதனால் சகலவிதமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த பதிவால் என்னைத்தயவு செய்து எந்த கட்சியிலும் இணைத்து ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளன் ஆகவோ நினைத்துவிடதீர்கள்.


எனக்கு தேவை என்றால் யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவாளன் ஆகும் சந்தர்ப்பவாதி நான் என்பதை நீங்கள் யோசிக்கும் போதே தெரிகிறது அதற்கும் நான் பொறுப்பல்ல.




Tuesday, January 3, 2012

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாய்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது நாட்டில் எதுவுமே மாறாமல் ஒற்றுமையா இருப்பது ஒன்றில் மட்டுமே, அதுதான் ஒழுக்கமின்மை. பெரும்பாலான இந்தியர் இந்த ஒழுக்கமின்மையில் அடங்குகின்றனர். சின்ன சின்ன விசயத்தில் இருந்து பெரிய விஷயங்கள் வரை நம்மில் இருப்பது ஒழுக்கமின்மை மனப்பான்மையே.

சின்ன வயதில் இருந்தே நாம் வளர்க்கப்படும் விதம் அவ்வாறே இருப்பதால் இதில் நாம் யாரை குறை சொல்ல? சின்ன வயதில் பள்ளியில் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் அதே மாணவர்கள் முன்னிலையில் மதிய உணவு இடைவேளையில் புகைபிடிக்கிறார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் அதை கடைபிடித்து நேர்மையாக ஒரு முன்னோடியாக இருந்தால் கண்டிப்பாக அவர்களிடத்தில் பயிலும் மாணவர்களில் ஒரு 25 % மாணவர்கள் கண்டிப்பாக அவரை பின்பற்றுவர்.

ஆசிரியர் மட்டுமில்லாமல் ஆசிரியைகளும் சிலர் அவ்வாறே இருகின்றனர், மற்றவர்களை பற்றி புறம் பேசுதல், மாணவர்கள் முன்னிலையில் சிறு சிறு விதி மீறல் செய்தல் போன்றவைகளை செய்வதால் பாதிக்கப்படுவது நம் மக்களே, இதில் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களை குறை சொல்லி பயன் இல்லை, அவர்களும் மனிதர்களே.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தால் போதும் என்ற நினைப்பில் பெற்றோர் இருந்தால் எப்படி பிள்ளைகள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வளருவார்கள், பள்ளியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என படித்து விட்டு வரும் பிள்ளைகளை கூட்டி செல்லும் பெற்றோர் எத்தனை பேர் வாகன பாதைகளுக்கு எதிர் புறமாக செல்கின்றனர்? சிகப்பு விளக்கை தாண்டி செல்வது,  பையனுக்கு லைசென்சு வாங்கற வயசு வரதுக்குள்ள வண்டி வாங்கி கொடுப்பது, என் பையன் எட்டு வயசுலேயே கார் ஓட்டுவான் என பெருமை பேசுவது, ஒரு பெரிய குடும்பத்தையே இரு சக்கர வண்டில கூடி செல்வது,  பையனோ பெண்ணோ  தப்பு செய்திருந்தால் தண்டிக்காமல் ஆதரித்து பேசுவது, மன்னிப்பு கோராமை என எல்லா தப்பையும் அவர்கள் முன்னாடி நாம் செய்தால் அவர்கள் எப்படி வளருவார்கள். வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி அதை முன்னால் பெருமையாக பேசினால் பின்னர் பிள்ளைகள் எப்படி ஒழுக்கமாக வளருவர்?

வாகனம் ஓடுவது மட்டும் இல்லை, ஊருக்கு செல்ல அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது என நாம் எதையும் பிள்ளைகள் முன்னாடியே செய்கிறோம். மேலும் பெண்களை மதிக்காமல் நடப்பது, பிள்ளைகள் முன்னினையில் பெண்களை கிண்டல் செய்வது, தேவையில்லாத கமெண்ட் அடிப்பது, ஆண் பெண் பேதம் பார்த்து வளர்ப்பது என எல்லாவற்றையும் நாமே செய்துவிட்டு பிற்காலத்தில் இந்த காலத்து பிள்ளைகள் கெட்டு போய்விட்டனர் என சொல்கிறோம்.

குறிப்பாக, இப்போது பெரும்பாலான ஆண்கள் பெண்களை எந்த அளவுக்கு மதிக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும், நமது ஒட்டுமொத்த இந்தியாவுமே இன்னும் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் படித்தவர் படிக்காதவர் எல்லோருமே தமது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க முன் வருவது இல்லை. தன் வீட்டு பெண்களையே மதிக்காத எத்தனையோ ஆண்கள் எப்படி மற்ற பெண்களை மதிப்பார்கள்? பள்ளிகளில் இருந்து கல்லூரி, அலுவலகம் என போகுமிடம் எல்லாம் சக ஆண்கள் எவ்வாறு பெண்களின் மேல் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என யோசித்தால் நிலைமை கவலைக்கிடமாக போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரு பெண் எவ்வளவு கஷ்டத்தை கடந்து ஒரு அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தால் அதை சில வஞ்சக மனிதர்கள் எளிதில் அந்த பெண்ணிற்கு இடையூறு செய்து எவ்வவளவு தொந்தரவு தர முடியுமோ அவ்வளவும் தருகின்றனர்.

அதை நேர்மையாக அவர்களுக்கு அதரவாக பேசும் ஆண்களுக்கு பெண்களிடம் வழிபவன், பல் இளிப்பவன், சொல் விடுபவன் என சக மனிதர்களிடமே  இளக்கார பேச்சு வேறு.

சுயக்கட்டுப்பாடு இல்லாத, ஒற்றுமை இல்லாத, ஒழுக்கம் இல்லாத, போராட்ட குணம் இல்லாத சமுதாயமாக நமது ஒட்டுமொத்த இந்தியாவுமே வழிநடத்தப்படுகின்றது. பெண்கள் மரியாதையை என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, அத்தனை பேர் நம்மில் படித்தவர்கள் ஒரு அரை கிலோமிட்டர் தூரம் சென்று திரும்பி வருவதற்கு பதிலாக, எதிர் வழியில் செல்கிறோம், நாம் செய்வது மற்றவர்களுக்கு இடையூறு என்பதை தெரிந்தே செய்கிறோம். சாலையை கடக்க சுரங்க பாதையோ இல்லை மேல் வழிப்பாதையோ இருக்கும்போது தடுப்புக்கட்டையை தாண்டி குதிப்பது பெரும்பாலும் படித்தவர்களே.

ஒழுக்கம், சுயகட்டுப்பாடு என்பது பாடப்புத்தகத்தில் மட்டும் இருந்தால் போதும் என்ற நினைப்பு பெரும்பாலும் அனைவர் மனதிலும் இருக்கிறது.

ஊரே அம்மணமாய் இருக்கும்போது கோவணம் கட்டியவன் பைத்தியம் என்பது போல ஒரு சிலர் நேர்மையாய் இருப்பதுமற்றவர்களுக்கு கேலி செய்ய எதுவாக அமைந்து விடுகிறது, வருடத்தின் முதலிலேயே இத்தகைய பதிவை எழுதுவது மனதிற்கு சிறுது வருத்தமே ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

தனி நபர் சம்பந்தப்பட்ட விசயங்களை நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை, புகை பிடிப்பது, குடிப்பது என்பது அவரவர் விருப்பம் ஆனால் அதற்குபின் நாம் நடந்துகொள்வது என்பது தனை நபர் சார்ந்தது அல்ல.


நான் இதில் சொல்ல வந்தது பொதுவாக நம் அனைவருக்கும் உள்ள பிரச்சனையே, நானும் இதில் சிலவற்றை பிடித்தோ பிடிக்காமலோ, சமுதாயதுக்காகவோ செய்துள்ளேன், எப்படி இதில் இருந்து மீண்டு வருவது?

Tuesday, March 10, 2009

குழப்பம்

இன்றைய பொழுதை நல்ல படியாக கழிக்க வேண்டுமென்ற நினைப்பில் தான் தினமும் பொழுது துவங்குகிறது ஆனால் எல்லா நாளும் அப்படி இருபது இல்லையே. என்னுள் எழுந்த சில மாற்றங்கள் என்னையும் அறியாமல் என்னை ஆக்கிரமித்துள்ளன. பொய் வாழ்கையில் எவ்வளவு நாள் வாழ்வது?

சந்தோசங்களை தருகிறது என்று என் மகிழ்ச்சியை இழந்து இப்போது நிற்கிறேன். வாக்குறுதிகளும் உன்மீதுள்ள பற்றும் மட்டுமே இப்போது என்னில் உள்ளன, காத்துக்கொண்டு இருக்கும் வாக்குறுதிகளே என்னைகாப்பாற்றுகின்றன என்று சொன்னால் அது கண்டிப்பாக உண்மை, இத உண்மை என்னை மட்டுமே அறிந்தது, நீ அறிய வாய்ப்புகளை நீ ஏற்படுத்திக்கொள்ள வில்லை. இந்த உண்மையை என்னுள் மட்டுமே புதைத்திட விருப்பமில்லாமல் ஒரு நாள் நீ அறிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தவே வெளிப்படுத்துகிறேன். என்னில் ஏற்படுத்திய அனைத்து மாற்றத்திற்கும் நீயே காரணம் ஆனால் உன்னில் சிறு மாற்றங்களை ஏற்ப்படுத்த முடிந்த என்னால் இப்போது எதையும் செய்ய முடியவில்லையே??

கைகளைமீறி சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் மீண்டும் ஏறி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையில் மறுபடியும் நான்

Wednesday, December 17, 2008

விவசாயம் ஏன் செய்யக்கூடாது??

கல்லூரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததும் சிறிது காலத்தில் எனக்கு தோன்றியது எதாவது தொழில் செய்ய வேண்டும் என்பது. இன்று வரை அந்த எண்ணம் இருக்கின்றது ஆனால் என்ன தொழில் செய்வது? எந்த தொழில் செய்தாலும் அதில் ஏற்கனவே இருக்கும் நிறுவனகள் பல, எதாவது புது ஐடியா (இதுக்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் தோன்ற வில்லை) கிடைத்தாலும் நல்ல இருக்கும் எதுவும் கிடைக்க வில்லை.

எனது தந்தை வேறு ஓட்டுனராக பணிபுரிகிறார், அவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே விருப்ப ஓய்வு குடுத்துவிட்டு வர சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அவரும் வந்தபாடு இல்லை, ஓய்வு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் என்ன வேலை செய்வது என்று கேள்வி. நான் தயங்காமல் சொன்னது விவசாயம், அடிப்படையில் விவசாயக்குடும்பம் எங்களது குடும்பம், எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் விவசாயம் செய்து வந்தோம், எங்களது படிப்பை முன்னிட்டு சொந்த ஊரில் இருந்து நகருக்கு குடி வந்து பின்னர் விவசாயத்தை கைவிடும் நிலைமை ஏற்ப்பட்டது. அது வரையிலும் எனது தாயார் எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

சிறு வயதில் எனது தாத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பை காரணம் காட்டி இன்று வரை வயலில் இறங்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர் எனது தந்தை. படிப்படியாக லாபம் குறைந்து பின்னர் நட்டம் வரும்படி ஆனதால் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டது. இப்போது வீட்டில் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வந்து விட்டதால் எனது தந்தையை வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்கும்படி அழைக்கிறேன்.

பரம்பரை தொழிலை சிறிது காலமெனும் நடத்த வேண்டும் என்று ஒரு ஆசை மற்றும் என்னவோ தெரியவில்லை விவசாயதிலொரு நாட்டம் இன்னமும் இருக்கிறது. மற்ற ஊர் பெரியவர்கள் (அவ்வாறுதான் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் ஊர் மந்தையில் தினசரி தாயம் விளையாண்டுகொண்டு உள்ளது, எந்த வேலையும் செய்யாமல்) போல எனது தந்தையையும் தினமும் தோட்டத்திற்கு சென்று மேற்ப்பார்வை பார்த்துவிட்டு வெட்டி நியாயம் அடித்துக்கொண்டு வரும்படி சொன்னால் கேட்க்க மாட்டேன் என்று சொல்கிறார். அவருக்கு பிடிக்கவில்லையாம்,பிள்ளைகள் வளர்ந்து நன்றாக இருக்கும்போது இன்னும் ஏன் கஷ்டப்படவேண்டும்?? அவர் காலில் அவர் நிக்க வேண்டும் என்பது சரி அதற்காக கஷ்டப்பட வேண்டும் என்று இல்லை, அவர்க்கென்று ஒரு தொழில் ஏற்படுத்தி தருகிறோம் கவனியுங்கள் என்றால் வறட்டு சண்டையை நினைத்து மாட்டேன் என்கிறார்.

விவசாயத்திற்கு வருவோம், நமது நாட்டில் விவசாயம் என்பது செத்துக்கொண்டு வருகிறது, எனக்கு தெரிந்து விவசாயக்குடும்பத்தில் இருந்து என்னுடன் படிக்க வந்த எந்த மாணவரும் இன்று மறுபடியும் விவசாயத்தை பொழுதுபோக்காக செய்யகூட தயங்குகின்றனர். விவசாயிக்கு நமது நாட்டில் மரியாதையுமில்லை, எங்கு சென்றாலும் அவமானமும், நட்டமும் கிடைகின்றதால் எவரும் தம் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை.

விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் வசதி நமதுநாட்டில் இல்லாதவரை விவசாயிகள் கண்டிப்பாக ஒழிந்து போவார்கள், எனது மனதில் தோன்றுவது இனும் பத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு மீண்டும் பெரிய வரவேற்பு இருக்கிறது, ஏனெனில் விவசாய பொருளுக்கு டிமாண்டு அதிகம் வரும் ஆனால் அதற்கான உற்பத்தி கண்டிப்பாக இருக்காது. அப்போது எளிதில் கிடைக்காத பொருளுக்கு விலை ஏற்றம் என்பது நடக்கும் அனால் அதுவரை நமது குறுநில விவசாயிகள் தாக்குபிடிப்பார்களா என்பது தெரியவில்லை.

விவசாயத்திற்கு பயன்படும் வகையிஒல் பல கருவிகள் இயந்திரங்கள் வந்துள்ளன ஆனால் அவற்றை பயன்படுத்த பெரிய நிலப்பரப்பு வேண்டும், குறுநில விவசாயிகள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலைமையில் அவ்வசதிகள் கண்டிப்பாக அவர்களுக்கு பயன்படுத்த கிடைக்காது, வேண்டும் என்றால் சில குறுநில விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக விவசாயம் செய்து அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்த முயற்சி செய்யலாம் ஆனாலும் அதை தடுக்க நமதுநாட்டில் சாதி என்று ஒன்றை உருவாக்கி உணவளித்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்கள் ஏன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது, தமது தந்தையரை மற்றும் உறவினர்களை வைத்து தமக்கு தெரிந்த புதிய தொழில்நுட்பங்களை வைத்து ஏன் முயற்சி செய்யக்கூடாது இதில் ஓரளவிற்கு லாபம் கிடைத்தால் பின்னர் பெரிய அளவில் செய்யலாமே?

விவசாயத்தில் ஈடுபட்டு பணம் ஈட்டினால் நன்றாக வருமானம் ஏற்படுத்தினாலும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அவமானத்தால் எவரும் ஈடுபட தயங்குகின்றனர். எனக்கு தெரிந்த நண்பரின் உறவினர் மாதம் விவசாயத்தில் மட்டும் நாற்பது ஆயிரங்கள் சம்பாதிக்கிறார் ஆனாலும் அவருக்கு ஐந்து வருடங்களாக பெண் தேடிக்கொண்டு இருந்து பின்னர் சொந்தத்தில் திருமணம் செய்தனர். எவரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.
இந்நிலைமாறினால் கண்டிப்பாக நமது சமுதாயத்தில் மாற்றம் வரும்.

Tuesday, December 16, 2008

கல்வி நமது நாட்டில்

கல்வி நமதுநாட்டில் வியாபாரம் ஆகி பல நாட்கள் ஆகின்றன
இவற்றின் விளைவுகளை நாம் என்றாவது நினைத்து பார்த்தூமா?
இந்திய சூழலில் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் பெரும்பான்மை தனியார் பள்ளிகளே.

ஒருவர் தமது மகனையோ மகளையோ முதன் முதலில் பள்ளியில் சேர்க்க என்னென்ன செய்ய வேண்டி உள்ளது.

முதலில் மிக சிறந்த பள்ளி என்று சொல்லப்படும் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க நாள் முழுக்க நிக்க வேண்டும், பின்னர் அதற்க்கு சிபாரிசு பிடித்து நன்கொடை குடுத்து இடம்பிடிக்க வவேண்டும், ஒரு சாமானியனால் அதை செய்ய கண்டிப்பாக முடியாது .நன்கொடை என்று சொல்வது எல் கே ஜி க்கு லட்சகணக்கில். நினைக்கவே பயமாய் உள்ளது.

நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நிலைமை இதுதான், என்ன நன்கொடை என்பது அளவில் மாறும் லட்சத்தில் தொடங்கி ஆயிரத்தில் முடிகிறது இந்த லட்சிய கல்வி.

பள்ளிகளின் மார்கெட்டை பொருத்து நன்கொடை மாறும்.
பள்ளிக்கே இவ்வளவு தொகை செலவு செய்தால் பின்னர் மேற்படிப்பன கல்லூரிக்கு எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள், பொறியியல் கல்லூரியில் படித்து வெளியே வர பல லட்சங்கள் செலவு ஆகும்.
இவாறெல்லாம் செலவு செய்து படித்து வருபவர் செலவுசெய்த பணத்தை எடுக்க முயற்சி செய்யாமல் இருபாரா? நன்றாக படிக்கும் மாணவருக்கே இவ்வளவு செலவு என்றால் சிறிது குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால் அவ்வளவுதான் அவங்க அப்பா கொள்ளை அடித்து தான் பணம் காட்ட வேண்டும்.

படித்து முடித்த பின்னர் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது ஆனாலும் குடும்ப கஷ்டம் தீர மூன்று ஆண்டுகள் சம்பாதித்து கடனை அடைத்தால் அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய வேண்டிவரும். அதற்க்கு கையில் சல்லி காசு இருக்காது கடன் வாங்கி செய்ய வேண்டும் பின்னர் சம்பாதித்து அதை அடைக்க வேண்டும், பின்னர் குழந்தை என்று வந்தால் பள்ளியில் சேர்க்க செலவு என்று அரம்பிக்கும்பாருங்கள்.

ஏன் நமது அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து செயல் இழந்து காணப்படுகின்றன? நேர்மையான அதிகாரிகள் ஆசிரியர்கள் என்று எவருமே காணப்படுவது இல்லையா? மக்கள் நம்பிக்கை வைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு முறை ஒரு அலுவலர் கூறினார்.

நம்பிக்கை வைத்து அனுப்பும் அளவிற்கு பள்ளி இருக்கிறதா? தகுந்த வசதிகளுடன் பள்ளி இருந்து மக்கள் அனுப்பவில்லை என்றால் கேள்வி கேட்கலாம் , எந்த வசதியும் இல்லாமல் எப்படி அனுப்ப?

மொத்தத்தில் நமது நாட்டின் கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று மாற்றப்பட்டு வருகின்றது. பின்னர் எப்படி பின்தங்கி உள்ள மாணவன் முன்னேறுவான்? அவனுக்கு ஆரம்பத்திலேயே முறையான கல்வி கிடைக்க வில்லை அப்படி கிடைத்தாலும் படிக்க முடியாத வரு பணம் தடையாக உள்ளது. சும்மா கல்வியில் முன்னேறி உள்ளது என்று சொல்லிகொண்டாலும் கடந்த பத்து வருடத்தில் எத்தனை அரசாங்க பொறியியல் கல்லூரி தொண்டங்கப்பட்டது நமது மாநிலத்தில்? தனியார் கல்லூரிகள் ஏற்க்கனவே நிறைய உள்ளன அவர்களுடன் கெஞ்ச வேண்டிஉள்ளது ஒவ்வொரு வருடமும் இத்தனை இடங்களை அரசாங்கத்திற்கு கொடுங்கள் என்று.
தகுந்த கல்வி கொடுக்க கூடிய தரமான அரசாங்க கல்லூரிகளை உருவாக்கினால் தாமாக தரமான கல்வி மற்றும் குறைவான தங்குந்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகள் கல்வி அளிக்க வரமாட்டார்களா?
என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திருமணத்திற்கு பின்னர் வரும் செலவுகளை நினைத்து பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.

இன்னும் நாம் வானளாவிய கட்டிடங்களையும், நிலாவிற்கு ஆள் அனுப்பினாலும் ஏழை மக்கள் சாலையோரத்தில் vaala இடம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நான் படித்தது அரசு பள்ளியில் ஆனாலும் அதற்கு தனிப்பாடம் சென்றுதான் படிக்க முடிந்தது . இருந்தாலும் படிக்கிற மாணவன் எங்கு இருந்தாலும் படிப்பான் என்ற கொள்கை இப்போதெல்லாம் உடைபடுகிறது.

தீர்வு:
கல்வியை அரசு மட்டுமே செயல் படுத்த வேண்டும், இதை செய்ய இப்போதைக்கு முடியாது.

அப்படி என்றால் கல்வி கொள்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.

பள்ளிகளின் தரத்தை உயர்த்தி எந்த ஒரு மாணவனும் இருக்கும் இடத்திற்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற விதி வேண்டும்.

கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு தரும் உதவி தொகையினை தகுதி வாய்ந்தவர்களுக்கு அவர்களின் நிலைமையை பொருத்து மாற்றி அமைக்க வேண்டும்.

அனைவருக்கும் சமசீரான கல்வி வேண்டும்.

இதெல்லாம் நடந்தால்?? என்ன அதற்குள் உங்கள் தூக்கம் கலைந்துவிடும்

Wednesday, July 16, 2008

குழப்பம்

கடிவாளம் இல்லாத குதிரை போல கண்டபடி ஓடுகிறது மனம், எல்லாம் நல்ல படியாக நடக்கும் போது குதூகலிக்கும் மனம் சிறிது தாமதத்திற்கும் கோபப்படுவது ஏனோ? சிறு வயதிலிருந்தே இந்த தாமதம் என்ற ஒன்று மட்டும் எப்போதும் என்னை கோபப்பட செய்கின்றது. முன்கோபி என்ற பெயரை எனக்கு சூட்ட இந்த தாமதம் ஒரு காரணி.

வாக்குறுதியை மீறும்போது தாமதம் ஏற்ப்படுகிறது, அதனால் ஒருவர் அவரது பணியில் அலட்சியமாக இருக்கிறார் இதை எதிர்ப்பவன் முன்கோபி கூலாக இருக்க கத்துக்கொள் என்றெல்லாம் எனக்கு அறிவுரை. எவனும் அலட்சியக்காரனுக்கு புத்தி சொல்ல தயாராக இல்லை, எப்படி சொல்வான் அவனும் ஒரு அலட்சியக்காரனாக இருக்கும் பட்சத்தில்.

தெரியவில்லை மகிழ்ச்சி காலங்கள் மறுபடியும் வருமோ இல்லை புயலுக்கு முன் அமைதி என்றபடி புயலடிக்குமோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை செல்கிறது. கூடவே நானும்....

இன்றிரவு என்ன செய்யலாம் என்ற கருத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது வரை இந்த பத்து நிமிடத்தில் ஓடி மறைந்துள்ளது.

பிரச்சனைகளை ஆலோசிக்க துணை தேடினால் அதை அவர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்.

கடந்த வருடங்களை பார்க்கும்போது காலம் என்னுள் ஏற்ப்படுத்திய மாற்றங்கள் திகைப்பை ஏற்ப்படுத்துகின்றன, இன்பத்தை தேடி வாழ்க்கையில் இன்னும் சென்று கொண்டிருக்கும் நான் இதுவரை என்னுள் இருந்த மகிழ்ச்சியை மறந்து விட்டேன் என்று யோசிக்கவே இல்லை.

இப்போது எனக்கு என்ன தேவை???? உண்மை நேர்மை என்று கிடைக்காத பல தேவைப்படுகின்றது.... கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டுள்ளேன்.

Friday, June 13, 2008

இவங்களையும் என்ன செய்யறது

பொது இடத்தில்குப்பை போடுவது பற்றி இந்த பதிவை படித்தேன், இன்று காலையில் தான் நானும் இது போன்ற பிரச்னையை பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், நான் எழுத நினைப்பது சாலை விதிகளையும் நாம் அதை எப்படி மதிக்கின்றோம் என்பதையும்.

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் தினமும் சாலை விதிகளை மதித்து நீங்கள் என்றாவது வண்டி ஒட்டி உள்ளீர்களா? பெரும்பாலான பதில் இல்லை என்று வரும்.நான் சொல்வது மிக மிக அடிப்படை சாலை விதிகள் பற்றி.
பொதுவாக இடது பக்கமாகவே செல்ல வேண்டும், ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு 300, 400 மீட்டர் செல்ல வேண்டும் என்பதற்க்காக எதிர் திசையில் வண்டி ஒட்டுகின்றோம், யோசித்து பாருங்கள் இது நன்றா?

நிறுத்த கோட்டிற்கு முன்னால் வண்டியை நிறுத்த வேண்டும், எனக்கு தெரிந்து சென்னை சாலைகளில் அப்படி ஒரு பழக்கம் இருப்பதாக தெரியவில்லை, குத்து மதிப்பாக சிக்னல் முன் நிறுத்துவார்கள் பின்னர் இன்ச் இன்சாக நகர்ந்து (சில நேரங்களில் அடி அடியாக ) பாதி தூரம் சென்று விடுவார்கள். யோசியுங்கள்

சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், நம்மில் பாதி பேர் மதிப்பது அங்கு போக்குவரத்து காவலர் நிற்பதால், ஏன்னுங்க இன்னும் கொஞ்சம் பேர் முன்னாடி நிக்கறவன் நின்னா நிப்பாங்க.

சிக்னல் குடுக்காமல் கண்டபடி திரும்புவது, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்க மறுப்பது, அடிபட்டா இருவருக்கும் தான் ஆனால் அதை யோசிப்பதே இல்லை. தான் மட்டும் நல்ல இருந்தா போதும், நான் மட்டும் போன போதும் நீ எப்படி போன எனக்கென்ன.

ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிக்கு வழி விடுவதில்லை இல்லை என்றால் அவர்கள் கூடவே செல்வது, அப்பத்தான அவர்கள் வழியில் நாமும் சென்று விடலாம்.

தலை கவசம் அணிவது கிடையாது கேட்டா முடி கொட்டுகிறது தலையில் வேர்க்கிறது என்று, உண்மை தான் ஆனால் கொஞ்சம் யோசி எதாவது ஒன்னுன தலையே போய்டும் அப்புறம் முடி கொட்டி என்ன ஆக போகிறது??? (இது தனி நபர் விருப்பம் அனாலும் யோசியுங்கள் )

நண்பர்களே! இதெயெல்லாம் செய்வது படிக்காத பாமரன் இல்லை அனைவரும் இல்லை இல்லை பெரும்பாலும் படித்தவர்கள் மட்டுமே, லைசென்ஸ் வாங்க அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்று மாற்றம் கொண்டு வந்தாயிற்று அதனால் கண்டிப்பாக வண்டி ஓட்டும் அனைவரும் இனி படித்து இருபபர்.

சிக்னலில் நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பதனால் என்ன ஆகிவிட போகின்றது?? பத்து அடி முன்னால் சென்று நிற்பதனால் என்ன பயன்?? மாறாக கோட்டிற்கு பின்னால் நின்றால் சாலையை கடப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும். நான் வழக்கமாக நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பேன், ஆனால் இதுவரை ஒரு முறை கூட பின்னால் இருப்பவர் ஒலிப்பானை அடித்து என்ன நகர சொல்லாமல் இருந்தது இல்லை. நானும் ஒரு முறை கூட நான் நகர்ந்தது இல்லை, காரணம் என்னபார்த்தாது ஒருத்தன் திருந்தனும் என்றுதான்.

ரோட்டில் போக்குவரத்து அதிகம் இல்லை என்றால் சிக்னலை மதிப்பது இல்லை, உன்னை பார்த்து பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே செல்வார்கள் இதுவே நீ நின்று பார் கண்டிப்பாக உன் பின்னால் வருபவர்கள் நிறுத்துவார்கள்.

ஒரு போக்குவரத்து காவலரிடம் கேட்டேன் ஏன் இப்படி கடுகடுப்பாகவே பெரும்பாலும் இருகிறீர்கள் என்று, அவர் பார்வையில் சொல்கிறார், தினமும் 8 மணிநேரம் பணி, அதுவும் ரோட்டில்தான், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த புகையில் நின்று பாருங்கள் அதும் போக்குவரத்தை ஒழுங்கு செய்து பாருங்கள் என்றார். இதில் சாலையை கடப்பவர்க்கு கண்டிப்பாக போக்குவரத்தை ஒதுக்க வேண்டும் என்பது எங்கள் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஆனால் அதற்குள் இரண்டு நிமிடம் காத்திருக்காமல் வாகனங்கள் செல்லும்போது கடப்பவர்கள் எத்தனைபேர், அனைவரும் படித்தவர், அப்போது நாங்கள் கோபப்படுவது தப்பாக தெரிகிறது என்றார். நம்மவர்கள் வண்டி ஓடும் லட்சணத்தில் எங்கே நாங்கள் நிம்மதியாய் இருப்பது, காவலாளி இல்லை என்றால் பத்தில் 6 பேர் சிக்னல் மதிப்பது இல்லை என்கிறார்.

வண்டி ஓட்டிகள் நாங்கள் செல்வதால் என்ன வந்துவிட போகிறது என்று நினைக்கின்றனர் , ஒலிப்பானை தேவையான இடத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் ஆனால் நம்மவர்கள் அவர்கள் கைக்கு வேலை இருக்கும்போது மட்டும் ஒலிக்க மறுக்கிறார்கள். வண்டியில் செல்லும்போது எச்சில் துப்புவது, அய்யா உங்கள் வீட்டில் துப்பினால் என்ன சொல்வீர்கள், இந்த சாலையை நீங்களும்தான பயன் படுத்துகிறீர்கள், அப்புறம் எதுக்குங்க இப்படி? போக்குவரத்துக்கு இடையுறாக வண்டியை நிறுத்துவது, நோ பார்க்கிங் என்றாலும் பத்து நிமிடத்தில் வந்துடலாம் என்று நிறுத்தி செல்வது.

நான் மட்டும் தப்பு செய்யாமல் நல்லவனாகவே இருக்கிறேன் என்று சொல்ல வில்லை, சில சமயம் நானும் போக்குவரத்து விதி மீறலை செய்ய வேண்டயுள்ளது, ஆனால் என்னை பொறுத்தவரை அடிப்படை விதிகளையும் பாதசாரிகளையும் மதித்தே செல்கிறேன். ஒரு நாள் எந்த விதி மீறலையும் செய்யாமல் வண்டி ஒட்டி பாருங்கள் அதில் எவ்வளவு திருப்தி கிடைக்கின்றது என்று பின்னூட்டம் இடுங்கள், திருப்தி இல்லை என்றால் நீங்கள் உங்க மனதிற்கு பட்டவாறு செல்லுங்கள்.

அடிப்படை விதிகளை கடை பிடித்து செல்கையில் மற்றவர் உங்களை விதி மீறல் செய்ய சொன்னால் இது விதிக்கு புறம்பானது செய்ய மாட்டேன் என்று கம்பீரமாக சொல்லுங்கள். அப்போது மற்ற சில உங்களை பார்க்கும்போது பெருமையாய் உணர்வீர்கள். நான் நிறுத்த கோட்டை தாண்டாமல் நின்று பின்னால் வரும் வாகனம் வழி கேட்ட போது மறுத்தேன் இதற்க்கு ஒரு போக்குவரத்து காவலர் வாழ்த்து தெரிவித்தார் (அந்நேரம் அருகில் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார், இப்போது உங்கள் மதிப்பை பற்றி யோசித்து பாருங்கள்) இதெல்லாம் சிற்சில நல்ல பழக்கங்கள். இந்த பதிவை படித்து ஒருவராவது மாறினால் கூட எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி.

நண்பர்களே சிந்தியுங்கள், வெளி நாட்டில் இருப்போர் அங்கு உள்ள வெளிநாட்டினர் நம்ம நாட்டு போக்குவரத்தை பற்றி என்ன நினைக்கின்றனர் என கேட்டு பாருங்கள் பின்னர் முடிவெடுங்கள்.

நன்றி