ஒரு காலத்தில் இதன் பெயரை சொன்னாலே சந்தோசம் பொங்கும் பலருக்கு, அதுவும் கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு மிக மிக சந்தோசத்தை தரக்கூடியது. மணியார்டர் வந்தால் அனுப்பியவருக்கு கூட சந்தூசமே, அந்த கொஞ்சூண்டு இடத்தில எல்லாத்தையும் எழுதணும் என்று எழுதுவதில் ஆரம்பித்து பெற்றோருக்கோ மகன்/மகளுக்கோ மனது நிறைய சில சமயம் கடன் வாங்கியாவது அனுப்பி வைத்து சந்தோசப்படுவார்கள்.
மணியார்டர் வாங்குபவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம், அப்பாவிடமிருந்தோ அம்மாவிடம் இருந்தோ வரும் பணம், தூரத்தில் வேளையில் உள்ள மகனிடம்/மகளிடம் இருந்து வரும் பணம், பணம் எங்கிருந்து வந்தால் என்ன? நம்மிடம் வந்து சேர்ந்தால் போதும், தபால்க்காரர்க்கு ஒரு சின்ன அன்பளிப்பாவது கிடைக்காதா என்ற எண்ணத்தில் வரும் மகிழ்ச்சி என எல்லோருக்கும் ஓரளவிற்காவது மகிழ்ச்சி கொடுத்த மணியார்டர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கிறது.
நான் கல்லூரியில் படிக்கும்கலத்தில் எங்கள் செட் தான் கடைசியாக மணியார்டர் வாங்கிய செட்டாக இருக்கும் என நினைக்கிறேன், எங்கள் ஜூனியர் மாணவர்கள் எல்லோரும் கல்லூரி வரும்போதே வங்கியில் கணக்கு அரம்பிக்கத்துவங்க, அதுக்கு அடுத்த மாணவர்கள் எல்லோருமே வங்கிக்கணக்கு கல்லூரியில் சேருவதற்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டனர். எங்களுக்கெல்லாம் (உடனே ரொம்ப முன்னாடி படிச்சேன்னு நெனச்சுக்காதீங்க, 2005 ல கல்லூரி முடிச்சேன்) கல்லூரி சேரும்போது விடுதியும், கல்லூரியும் புதுசு. கல்லூரிகாலத்தில்எனக்கு அதிகமாக மணியார்டர் வந்தது இல்லை, வீடு இரண்டு மணி நேர பயணத்தில் இருந்ததால் மணியார்டர் கமிசனை விட பேருந்துகட்டணம் குறைவு.
முதலாம் ஆண்டில் விடுதியில் தங்கி இருந்த பெரும்பாலான மாணவர்கள் வாரக்கடைசியில் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட, மிகக்சிலரே விடுதியில் தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு மாத துவக்கத்தில் மணியார்டர் வரும், பெரும்பாலும் அனைவரும் பழகி இல்லாத காரணத்தாலும், என்னுடைய நண்பர்கள் எல்லோரும் வாரக்கடைசியில் ஊருக்கு சென்று வரும் தூரத்தில் இருந்ததாலும் மணியார்டர் வாங்கும் யாரையும் மணியார்டரையும் நான் பெரிதாக கவனித்தது இல்லை. எங்கள் வீட்டில் அக்கா, அண்ணன் இருவரும் விடுதியில் தங்கிப்படித்தாலும் பணம் மணியார்டரில் அனுப்பியது கிடையாது அதனாலும் இருக்கலாம்.
இரண்டு மாதம் கழித்து நண்பன் ஒருவன் ஒரு நூறு ரூபாய் கடன் வாங்கியபோது இரண்டு நாளில் மணியார்டர் வந்ததும் தந்து விடுகிறேன் என்று சொல்ல, நமக்கும் மணியார்டர் மீது கொஞ்சம் கவனம் வந்தது. முதன் முதலில் மணியார்டர் பற்றி சொல்கிறானே என்றும், என்னடா மணியார்டர் வந்ததும் தருகிறேன் என்று சொல்கிறானே என்றும் தோன்றியது. இருக்காதா பின்ன அப்போது எனக்கு மணியார்டர் சினிமாவில் மட்டுமே பார்த்து பழக்கம்.
நான் பார்த்த படத்தில் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் பையனோ அல்லது அப்பவோ மிக கஷ்டப்பட்டு அவர்கள் பெற்றோருக்கோ, மகனுக்கோ பணம் அனுப்புவார்கள். மணியார்டர் என்றாலே கஷ்டத்தில் இருப்பவர் மட்டும் உபயோகிக்கும் ஒரு வித யுக்தி என நினைத்து இருந்தேன்.(மோசமான நினைப்புத்தான்). பதினொன்றாம் வகுப்பில் தமிழ் துணைப்பாடத்தில் வரும் மணியார்டர் பாரம் மட்டுமே நான் பார்த்தது.
நான் பார்த்த படத்தில் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் பையனோ அல்லது அப்பவோ மிக கஷ்டப்பட்டு அவர்கள் பெற்றோருக்கோ, மகனுக்கோ பணம் அனுப்புவார்கள். மணியார்டர் என்றாலே கஷ்டத்தில் இருப்பவர் மட்டும் உபயோகிக்கும் ஒரு வித யுக்தி என நினைத்து இருந்தேன்.(மோசமான நினைப்புத்தான்). பதினொன்றாம் வகுப்பில் தமிழ் துணைப்பாடத்தில் வரும் மணியார்டர் பாரம் மட்டுமே நான் பார்த்தது.
இதே மனநினையில் இருந்த எனக்கு இரண்டு நாளில் வராத மணியார்டர் வேறு இன்னும் கொஞ்சம் யோசிக்க வைத்தது, என்னடா இவன் கஷ்டத்தில் இருக்கிறானோ? இவன் பெற்றோர் மிக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்களோ என்று எண்ண வைத்தது, இரண்டு நாளில் அவனக்கு வந்த இரண்டு தொலைபேசியில் (செல்போன் இல்ல விடுதி பொது தொலைப்பேசி) கொஞ்சம் உறுதியாக, அடுத்த நாள் போன் பேசிவிட்டு வந்து சொன்னான், மச்சி சனிக்கிழமை பணம் வந்துடும் என்று. அவன் அப்பா திடிரென்று நேரில் வந்து பார்த்துவிட்டு போலாம் என மணியார்டர் அனுப்பவில்லையாம். அந்த வாரக்கடைசி நான் ஊருக்கு செல்லவில்லை, முதல் வாரம் நான் விடுதியில் தங்கியது (எனக்கு தெரியாது இதுக்கப்புறம் எப்பவாவது மட்டுமே ஊருக்கு செல்லப்போகிறேன் என்று)
அந்த வாரம் மிக சந்தோசமாக சென்றது, இரவு விடிய விடிய கதை பேசி, காலையில் எட்டு மணி வரை தூங்கி மெதுவாக எழுந்து, சாப்பிட்டு மெல்ல ஒரு நடை போட்டு, ஆற அமர பேப்பர் படித்து, மறுபடியும் மொக்க போட்டு எனக்கு மிக பிடித்து இருந்தது.
அதன் பின்னர் அவனுக்கும் அடிக்கடி மணியார்டர் மட்டுமே வரும், எனக்கு வந்த மணியார்டர் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, என் அண்ணன் அனுப்பி வைத்தார், எனக்கு பணம் கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்க அண்ணன் இருப்பதோ சென்னையில், அப்போது கல்லூரியில் யாரிடமும் வங்கி கணக்கோ எடிஎம் கார்டோ இல்லை, சென்னைக்கே அது அப்போது தான் வந்தது. முதல் மணியார்டர் எனக்கு அது, அந்த மணியார்டர்க்கு காத்திருக்கையில் மனதில் வரும் ஒரு சந்தோசம். தபால்க்காரர் தூரத்தில் வரும்போதே விடுதி குட்டிச்சுவரில் அமர்ந்து இருக்கும் எங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். இதையெல்லாம் அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
நம்ம பசங்க சிலபேர் இருக்காங்க (நான் கூட )மதிய நேரத்தில் கல்லூரியில் இருந்து கீழே சென்று (எங்கள் கல்லூரி ஒரு குன்றின் மீது இருந்தது) தபால் காரரின் மணியார்டர் லிஸ்ட்டை முதலிலேயே பார்த்து விடுவோம். ஒன்னு நமக்கு கடன் கொடுக்க வேண்டியவன் எவனுக்காவது பணம் வந்திருக்கா என்று பார்க்க இன்னொன்று நாம கடன் கேட்டா நமக்கு கொடுக்க கூடியவன் எவனுக்காவது பணம் வந்திருக்கா என தெரிந்துகொள்ள. முதலில் தபால்க்கரர் மணியார்டர் லிஸ்ட் எல்லாம் கொடுக்க மறுத்துவிட ஒருவாரகாலத்தில் நண்பன் இரண்டு பாரத்தை மட்டும் சுட்டுவிட, தபால்க்கரரின் நடப்பு கிடைத்தது. பின்னே சுட்ட பாரத்தை அவரிடமே மறுபடியும் கொண்டு சேர்த்தோம். கீழே கடை வைத்துள்ள பாஸ் அண்ணனிடம் கொடுத்து தபால் காரரிடம் கொடுக்க சொல்ல, அவரும் சரியாக செய்தார். அடுத்த வாரத்தில் இருந்து லிஸ்ட் எங்க கைல, கொஞ்ச நாளில் அடிக்கடி பாஸ் அண்ணன் கடையில் கேக் மற்றும் பன் சாப்பிடும் அளவிற்கு நடப்பு வளர்ந்தது. நமக்கு மணியார்டர் வராது ஆனா எல்லோர் மணியார்டரும் நம்ம கைக்கு வராம போகாது (பஞ்சுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல ).
மணியார்டர் பாரத்தில் இருக்கும் சின்ன இடத்தில என்ன எழுதி இருக்காங்க என படிக்கும்போது நிஜமா வரும் சந்தோசம் அற்புதம். அப்பாவிடம் இருந்து வரும் மிரட்டல் கலந்த அன்பு, அம்மாவிடம் இருந்து வரும் பாசம் கலந்த எழுத்து. சில சமயம் அண்ணனிடம் இருந்து வரும் மகிழ்ச்சி(எங்க அண்ணன் பெருசா எதையும் எழுத மாட்டார், பணம் கிடைச்சா போன் செய்து சொல், ஜாலியா இரு என்று மட்டுமே எழுதுவார்) சில சமயம் காதலியிடம் இருந்து வரும் மறைக்கப்பட்ட காதல் கலந்த எழுத்துக்கள். எப்போதாவது வெறுப்புடன் சந்தோசம் கலந்த நண்பனின் பணம். எல்லாமே வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியே.
எனக்கு தெரிந்து இருவர்க்கு அடிக்கடி காதலியிடம் இருந்து மணியார்டர் வரும், ஒருத்தனுக்கு அவனோட மாமா பொண்ணு அனுப்பும் (இப்ப அந்த பெண்ணையே கல்யணம் பண்ணிட்டான் ) அப்பவே மாமனார்கிட்ட கறக்க ஆரம்பிச்சுட்டான். இன்னொருத்தனுக்கு அதிக அக்கறையாய் அவன் காதலி அனுப்புவாள் ( யார் என்ன என்று கண்டுபுடிக்க முடியவில்லை).
நானும் மூன்றாம் ஆண்டில் இருந்து மணியார்டருக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலைமைக்கு ஆளாகிவிட்டேன், ஆமாம் எங்கள் நண்பன் கரடியின் திறமை அது, நாதாரி எல்லோரிடமும் கடன் வாங்கி விடும் திருப்பிக்கொடுக்காது, கடன்கொடுத்த நாங்கள் அவனுக்கு எப்போ மணியார்டர் வரும் என தேவுடு காத்து இருப்போம். ஆனா நல்ல பையன் அவன், எவ்வளவு மணியார்டர் வருது என சொன்னால் கண்டிப்பாக அதில் முன்னூறு கம்மியாக வரும். நாங்களே வாங்கி எங்களுக்குள் பிரித்துக்கொண்டு அவனுக்கு ஒரு பங்கு கொடுப்போம். ஒரு வாரத்தில் மறுபடியும் எங்களிடம் கொடுத்த பணத்தை வாங்கி விடுவான், மறக்க முடியாத நாட்கள்.
மணியார்டர் வந்த அடுத்த நாளே (இது முதல் வருடத்தில்) எல்லோரும் ஈரோடு கிளம்பி சென்று விடுவோம் சினிமாவிற்கு. இரண்டாம் வருடம் பாதிப்பேர் சினிமாவிற்கு சென்று ஹோட்டலில் சாப்பிட்டு வருவோம் மீதி எங்க போகுதுங்க நம்ம பஞ்சாபி தாபா தான். ஒரு பீர நாலு பேர் கட்டிங் போட ஆரம்பித்த காலம்.மூன்றாம் வருடம் சினிமா, பீர் அடித்து வரும்போது ஹோட்டலில் சாப்பாடு. நான்காம் வருடம் ஊர் சுத்தி எங்காவது சென்று பீர் பின்னர் சாப்பாடு அவ்வளவுதான்.
மணியார்டர் வரும் நல்லா படிக்கும் பையங்க வருடத்தின் எல்லா நாட்களிலும் செழிப்பா இருப்பாங்க அவங்கதான் நமக்கு எப்பவுமே ஒரு நீரூற்று. மூன்றாம் வருடத்தில் நண்பன் ஒருவன் வங்கிக்கணக்கு துவங்க பணம் எடுக்கும் அட்டையை வாங்கினான், அப்போது எல்லாம் அது பெரிய விஷயம்(செல்போன் கூட அதுபோலத்தான்) அன்றே துவங்கியது மணியார்டரின் மவுசு, வெகு விரைவில் மணியார்டருகும் தபால்கரருக்கும் விடுதியில் அவ்வளவாக வேலை இல்லை, வயது அதிகரித்ததாலோ என்னவோ அவர் முகத்திலும் மகிழ்ச்சி குறையத்துவங்கியது.
மணியார்டரில் வரும் மணியைவிட கொஞ்சூண்டு இடத்தில இருக்கும் அந்த எழுத்துக்களை படிக்கும்போது மனதில் நம்முள் தோன்றும் பாசத்தின் முன் எதுவும் பெரிதில்லை, கால ஓட்டத்தில் காணாமல் போனது என்னைப்பொறுத்தவரை மணியார்டரும், நம்முள் இருந்த பாசமும் கூட. என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் வந்த தொழில்நுட்பங்கள் நமது பாசத்தை, அன்பை குறைக்கத்துவங்கி பலநாட்கள் ஆகின்றன. நினைத்தவுடனே பேசும்போது தேக்கிவைத்த பாசம் எங்கு இருக்கிறது? அட்டையை சொருகினால் பணம் வரும்போது கையில் கொடுக்கும் பணத்தின் அருமை எங்கு புரிகிறது?