Friday, June 27, 2008

வகுப்பறையில் ஒரு நாள்-ஹாக்கி

வகுப்பறையில் ஒரு நாள்

எட்டாவது சேந்து சில நாட்களில் உடற்கல்வி ஆசிரியர் வந்து மாணவர் அனைவரையும் அழைத்து நமது பள்ளியில் ஹாக்கி அணித்தேர்வு செய்யப்போகிறோம், விருப்பமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்று கூறினார். நம்ம மனசு ஆஹா கிரிக்கெட் என்றால் அத்தன பெரும் வருவாங்க இதுக்கு எப்படியும் ரொம்ப கம்மியாதான் பசங்க வருவாங்க அதனால நாம இதவே விளையாடலாம், அதுவுமில்லாம இது நம்ம தேசிய விளையாட்டு என்று நினைத்தது. அதுமாதிரி நெறைய பசங்கலாம் வரல ஒரு இருபதுபேர் இருந்தோம்.

அப்பவே மைல்டா ஒரு கேள்வி மனசுல இருந்துச்சு,, எதுக்குடா இத்தன பேரையும் இந்த மைதானத்த இரண்டு ரவுண்டு அடிக்க சொல்றாருன்னு, கஷ்ட்டப்பட்டு அடிச்சு முடிச்சா, சரி எல்லோரும் மட்டைய எடுத்துகிட்டு வாங்கடா சொல்லித்தாரேன் என்று சொல்லி கூட்டிப்போனார், அடடா நம்ம இவளவு எளிதாக தேர்வு செய்யப்படுவோம் என்று நினைக்கவில்லையே சந்தோசப்பட்டேன். நானும் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு சென்றேன்.
எல்லோருக்கும் பந்தை அடிக்க சொல்லிகொடுத்தார், எனக்கும்தான், சரி என்று நானும் அடிக்க, அடுத்த அடி எனக்கு விழுந்தது, மட்டையின் எந்தப்பக்கம் அடிக்க சொன்னா நீ எந்தப்பக்கம் அடிக்கற என்று, அப்புறம் அவர் சொன்னமாதிரி அடிக்க முயற்சி செய்தால் பந்து ஐந்து அடிகூட நகரவில்லை. அப்புறம்தான் தெரிந்தது நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன், இவர் சொல்லிகொடுத்தது வலதுகைப்பழக்கம் என்று.நான் அவரிடன் "சார் நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் எனக்கு இப்படி வரவில்லை, இடது கை மட்டைகுடுங்க நான் விளையாட" என்று சொல்ல. அவர் என்னை ஒரு மாதிரியாத்தான் பார்த்தார். இப்பதான் தெரியுது நம்ம கனாக்காணும் காலங்கள்ல வர பி.டி மாதிரியோ என்று...

அப்புறம் இப்படி விளையாண்டா விளையாடு இல்லாட்டி போ, நம்ம பள்ளியில அந்த மட்டை எல்லாம் இல்ல, நீ உண்மைலேயே விளையாடனும் என்று எண்ணம் இருந்தா நீயே சொந்த காசுல ஒரு மட்டை வாங்கி வந்து விளையாடு என்றார். எங்க நமக்கு குடுக்கற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்ல அப்ப எங்க ஹாக்கி மட்டை வாங்க, இருந்தாலும் மனச தளர விடாம ஊர்ல இருக்க எல்லா கடைலயும் போய் கேட்டேன், இடதுகை மட்டை எங்ககிட்ட இல்ல வேற பக்கம் இருக்கலாம் என்று சொன்னாங்க, நானும் நம்பி ஒரு மாசாம் தேடிட்டு அப்புறம் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து ஹாக்கிக்கு முழுக்கு போட்டுட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு ஹாக்கில இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு என்று தனியாக மட்டை இல்லையாம். அவர்களும் வலது கை ஆட்டக்காரர் போல ஆட வேண்டுமாம். இடது கை மட்டை எங்குமே கிடைக்காதாம். இப்ப சொல்லுங்க அந்த பி. டி எப்படி பட்டவர் என்று, "ஐ வான்ட் டு சி யூர் ஒரிஜினல் சர்டிபிகட்" என்று அணிக்கு அவர்ட்ட கேட்க்க அங்க ஆள் இல்ல .

நம்ம ஊர்ல விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கே இந்த அளவுக்குத்தான் தெரிஞ்சு இருக்கு அப்புறம் எங்க ஒலிம்பிக்ஸ்ல போய் தங்கம் வாங்கறது, அதெல்லாம் கனவோடு நிறுத்திக்கணும் போல.

இப்படித்தான் நான் ஹாக்கி விளையாண்டு, அப்படியே மாவட்ட அணி, மாநில அணி, அப்புறம் இந்திய அணி, அப்படியே நேரா ஒலிம்பிக்ஸ் தான் என்ற கனவு கலைந்து போனது. என்னடா வகுப்பறையில் ஒருநாள் என்று சொல்லி மைதானத்தில் ஒருநாள் என்று முடிச்சுட்டானே என்று பாக்காதீங்க, இதுவும் வகுப்பறையில்தான் ஆரம்பித்தது :))

எனது பள்ளி ஆசிரியர்கள்

எனது பள்ளி ஆசிரியர்கள்

எவருமே அவரது பள்ளி வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த ஆசிரியர்களை மறந்து இருக்க முடியாது. என்னை எந்த விதத்திலாவது கவர்ந்த அல்லது என்னால் மறக்க முடியாத, எனக்கு நினைவில் உள்ள ஆசிரியர்களை பற்றி எழுதப்போகிறேன்.(ஆசிரியர் மற்றும் ஆசிரியை அனைவரும் தான்)

கீழ் வகுப்பில் இருந்து வருவோம்,
எனக்கு எல்.கே.ஜி வகுப்பு எடுத்தவரெல்லாம் நியாபகம் இல்லை அனால் யு.கே.ஜி வகுப்பு ஆசிரியை முகம் மட்டும் இன்னும் நியாபகம் இருக்கிறது. கலையான அந்த முகம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, கடைசி வரை அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன், இப்போது அவர் அந்த பள்ளியில் இல்லை. எனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தது, மதியம் தூங்க வைத்தது எல்லாம் இன்னும் நியாபகம் வருகின்றது. எனது கல்வி வாழ்வை துவக்க உறுதுணையாய் அமைந்த அந்த ஆசிரியைக்கு நன்றி.

அடுத்து எனது இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஆசிரியை, கற்பகம் டீச்சர், அப்போதெல்லாம் இவரிடம் நிறைய பயம், அதிகம் அடிக்க மாட்டார்கள் அனால் முகத்தில் ஒருவித கோவம் மட்டும் எப்போதும் இருக்கும். பின்னர் என்னை வகுப்புத்தலைவன் ஆகியதில் இருந்து என்னிடம் சின்ன பாசம். ஆனால் இவங்கதான் என்னை ஒரு பெரிய மாற்றத்துக்கு "அடி" போட்டு தயார் பண்ணினாங்க. இடது கை பழக்கம் உள்ள என்னை அடித்து அடித்து வலதுகையில் எழுத வைத்த உலகப்பெருமை இவங்களையே சேரும். அன்றில் இருந்து இன்று வரை இவங்கள நெனச்சாலே ஒரு வித கோவம் எனக்குள் வருகின்றது. அனாலும் ஒரு நல்ல காரியம்,நான் இடது கையால் எழுதுவதை விடவில்லை.

ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நான் அன்றில் இருந்து இன்று வரை என்னால் மறக்க முடியாத சில ஆசிரியரை சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.ஆறாம் வகுப்பு படிக்க போகும் முதல் நாளில் எனது தந்தை எனது அண்ணாவின் துணையுடன் என்னை ஆங்கில வழி கல்விக்கு மாற்ற திட்டம் போட்டார், அப்போது நான் படித்த அதே பள்ளியில் இருந்த ஆங்கில வழித்திட்டத்தில் ( மெட்ரிகுலேசன் பள்ளி ) என்னை சேர்க்க திட்டமிட்டு படிவம் எல்லாம் நிரப்பியாயிற்று, திடீரென்று என்னைப்பார்த்த அந்த பள்ளி முதல்வர் என்னப்பா உன்னால ஜெய்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், நீ நம்புறியா? சேந்துகிரியா இல்லை வேணாமா என்றார். நான் வேணாம் என்று சொல்லியவுடன் பையனுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தமிழ் வழியிலே படிக்கட்டும் அடுத்த வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினார், அதுமட்டுமில்லாது எனது வகுப்பு ஆங்கில ஆசிரியரை தனியாகச்சந்தித்து என்னைப்பற்றி சொல்லி தனி கவனம் எடுத்துக்கொள்ள கூறியுள்ளார். எனவே இவர்க்கும் என்னிடத்தில் தனி மரியாதை எப்போதும் உண்டு.

எனது ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் வைத்தியலிங்கம், மிக அமைதியான ஆசிரியர், அப்போது அவர்க்கு சின்ன வயசுதான் இருக்கும், வகுப்பில் என்னை வகுப்புத்தலைவன் ஆக்கியது மட்டுமில்லாமல், தினமும் வகுப்பில் ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வது, ஆங்கிலத்தை நுணுக்கமாக சொல்லித்தருவது என்று என்னை ஒரு வழியாக தயார்ப்படுத்தினார் (அப்படியும் நான் கத்துகல என்பது வேறு விஷயம்).இருந்தாலும் ஆங்கிலத்தின் மேலுள்ள ஒரு பயம் போயிற்று. இப்பொது ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர்க்கு எனது நன்றிகள்.

அடுத்து அறிவியல் ஆசிரியர் பாபு அவர்கள், இவரும் ஆங்கில ஆசிரியரும் நண்பர்கள், குணத்தில் நேர் எதிர், கோவத்தில் எனக்கு அண்ணன். அடிபிரிச்சுடுவார், என்மீது கொஞ்சம் அக்கறை உண்டு இவர்க்கு. ஆனாலும் வகுப்புத்தலைவன், நன்றாக படிக்கிறேன் என்ற அகந்தையில் நான் ஏதும் சில சின்ன விஷயம் பண்ணினாலும் அடி பின்னி எடுத்துவிடுவார். இவர் கடைசிவரை என்னிடம் கற்றுக்கொள்ள சொல்லியது "கோவப்படு, நான் என்ற அகந்தையை எப்போதும் விட்டுவிடு, உனக்கு மட்டும்தான் வெற்றி நிரந்தரம் என்பதை மறந்துவிடு" இதுதான். இவரின் பண்புகள் எனக்குள் வந்ததை சமீபத்தில்தான் கண்டுகொண்டேன் (இன்னும் இந்த அகந்தை மேட்டர் நம்மகிட்ட வரல, அப்பப்ப தலை தூக்கும் அப்போதெல்லாம் இவர் நியாபகம் வந்து எட்டிப்பார்க்கும்)

எட்டாவது வரை இவர்கள் இரண்டு பேர்மட்டுமே எனக்கு நினைவில் நின்ற ஆசிரியர், ஒன்பதாவது போகும்போது என்னை ஒரு வழியாக மனதளவில் ஆங்கில வழிக்கல்விக்கு தயார் படுத்திக்கொண்டேன், அதே முதல்வர் இப்போது என்னப்பா தயாரா என்று சொல்லி சிரிக்கிறார். என்னை வகுப்பறையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்த ஆசிரியையிடன் சொல்லிவிட்டுச்சென்றார். அந்த ஆசிரியை பெயரும் கற்பகம், இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் ஆசிரியை, இவர்க்கும் என்னை பிடிக்க ரொம்ப சில நாட்களே ஆகியது. எனக்கு மிக நல்ல அறிவுரைகளை சொல்லி, பயத்தை போக்கி, என்னை மற்ற மாணவர்களுடன் சகஜமாக பழக வைத்ததின் பெருமை இவரையே சேரும். இன்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரைப்பற்றி பேசுவது உண்டு.

அடுத்து கணித ஆசிரியர் விஜயகுமார், நானும் பள்ளிக்கு புதிது இவரும் புதிது, அடி பின்னியெடுக்கும் ஆசிரியர்க்கு பதிலாக இவர்தான் உங்கள் கணித ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை இவருடன் தொடர்பு இருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் தனிப்பாடதிலிருந்து வெளியேறினேன். இவரைப்பற்றி நிறைய எழுத வேண்டியதால் தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து புது முதல்வர், இவரும் விஜயக்குமாரின் பதிவில் வந்துவிடுவார், இவர்க்கும் மிகப்பெரிய பங்கு இல்லாவிடிலும் எனது எதிர்காலத்தை மாற்றிய ஆசிரியரில் மிக முக்கிய இடம் உண்டு.

அப்புறம் சமூக அறிவியல் ஆசிரியை சுலோக்சனா, தாவரவியல் ஆசிரியை அங்கையர்க்கன்னி இவங்கல்லாம் அங்கங்க வந்துட்டு போனாங்க. அங்கையர்க்கன்னி நான் புத்தகத்தைப்பார்த்து பரீட்சை எழுதும்போது கண்டுபிடித்து அடித்து,ஏண்டா என்கிட்டயே இப்படி மாட்டிகிட்டா நீ பிட் அடிக்கவே லாயக்கு இல்லை என்று சொல்லி என்னை நன்றாக வித விதமாக பிட் அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற தூண்டிவிட்டவர்.(இத இப்ப பார்த்தாங்கன்னா அவ்வளவுதான் )

பதினொன்றாம் வகுப்பு, பள்ளி மாறியாயிற்று.கோவிந்தராஜன் அய்யா தமிழாசிரியர், என்னால் மறக்க முடியாத ஆசிரியர்... தமிழை படிக்காத நீ, போதுமான அளவுக்கு ஏற்கனவீ படிச்சுட்ட அத தக்கவைத்துக்கொண்டாலே போதும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க தேவையானதை மட்டும் இப்போது செய் என்று அறிவுரைகூறியவர்.

பசுபதி -இயற்பியல் ஆசிரியர், பொதுவாக மற்றவரைப்போல இவரை எனக்கு கொஞ்சம் புடிக்காது ஆனால் இவரின்றி நான் இயற்பியலில் 185 மதிபெண்கள் எடுத்து இருக்க முடியாது, எனது தந்தையின் நண்பர், அதற்காக என்மீது தனி அக்கரை செலுத்தாமல் எல்லோரிடமும் அக்கறை செலுத்துவார். அவர் சொல்லிகொடுத்த அந்த cyclotran பாடம் இன்றும் என் நினைவில் நிற்கின்றது. இவர் கையெழுத்தை நான் செய்முறை அறிவியல் ஆய்வு புத்தகத்தில் போட ஆரம்பித்து வகுப்பில் பாதி பேர் அதை பின்பற்றினர்.

இதற்கு பிறகு எனக்கு மனதில் நிற்கும் ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை... இன்னும் சிலர் இருந்து இருக்கலாம். ஆனால் எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு நேரமிருந்தால் அவரது ஆசிரியர் பற்றி எழுதலாம் இன்னும் விரிவாக சுவையாக. (முக்கியமாக கோவிந்தராஜ் அய்யாவைப்பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்)

Thursday, June 26, 2008

எனது முதல் சென்னை பயணம்

எனது முதல் சென்னை பயணம்

உண்மைய சொல்லனும்னா இதன் என்னோட முதல் நெடுந்தூர பயணம். மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தேன், எனது அக்கா பனிரெண்டாம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு எழுத சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பள்ளி விடுமுறை வேறு, அப்பாவிற்கோ அவரது சலுகைகளான வருடத்திற்கு 4500 கிலோமீட்டர் குடும்ப இலவச பயணத்திட்டத்தை ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை. எப்படியோ என்னையும் சென்னை கூடிப்போகிறேன் என்று சொல்லிவிட்டனர்.

அது என்ன கிழமை என்று தெரியவில்லை கரூரில் இருந்து சென்னைக்கு பேருந்துப்பயணம். அரசுப்பேருந்து, நீண்டதூரம் செல்ல வேண்டும், என் அப்பா விடுமுறையில் எங்களுடன் பயணம் மேற்கொண்டார், அவர் ஓட்டுனர் இருக்கையை விட்டு பயணியர் இருக்கையில் பயணிப்பதை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். எனக்கு ஜன்னலோர இருக்கை.

அப்போதெல்லாம் பேருந்துக்கு திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று பெயர், ஒவ்வொரு இருக்கைக்கு பின்னால் ஒரு திருக்குறள் எழுதப்பட்ட பட்டை ஒட்டப்பட்டிருக்கும். இப்போ அதை எல்லாம் மறந்து விட்டிருக்கின்றனர். ஒரே ஒரு குறள் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் எழுதப்பட்டுள்ளது சில பேருந்துகளில். (காலம் மாறிபோச்சு போல)

விடிய விடிய தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன், பேருந்து எத்தனை லாரிகளை முந்திக்கொண்டு சென்றது, எத்தனை பேருந்துகளை முந்திச்சென்றது என்று எண்ணிக்கொண்டு வந்தேன். இடையில் நிறுத்தி சாப்பிட சென்றபோது அங்க வந்த பேருந்துகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். அப்பாவின் நண்பர் பிரபு அண்ணா வந்து வீட்டுக்கு கூட்டிச்சென்றார்.

அன்று மாலை வரை ஓய்வு, எனக்கு சென்னையை பார்த்தாலே ஒரு மலைப்பு அப்போது, அன்று மாலை வழக்கம் போல அண்ணா சமாதி, M.G.R சமாதி எல்லாம் குட்டிச்சென்ற்ரார்கள், பின்னர் கடற்கரை (என்னடா எல்லாமே அங்கதான இருக்குன்னு சொல்லக்கூடாது, எனக்கு அப்போ அதெலாம் தெரியாது) முதல் முதலாக கடலைப்பார்த்தேன், நெஜமா ரொம்ப பயமா இருந்துச்சு, பெரிய பெரிய அலை, அப்பா கையா பிடிச்சுகிட்டு தண்ணில ஆடுனேன். கடற்கரைல சுண்டல் வாங்கித்தந்தாங்க, அதெல்லாம் எனக்குப்புதுசு, அதுவரை வெளி திண்பண்டங்களை (பள்ளிக்கு வெளியிலோ, இல்லை வேறு எங்கும் சாலையோரமாக உள்ள கடைகளிலோ வாங்கி திங்க அனுமதி இல்லை எனக்கு) சாப்பிட்டது இல்லாததால் ஆசையாய் நிறையா சாப்பிட்டேன்.

அக்காவிற்கு அடுத்த நாள் நுழைவுத்தேர்வு, ஏதோ ஒரு கல்லூரியில் எழுதினார்கள், எழுதி முடித்து விட்டு வந்த உடனே வீட்டுக்கு வந்தாயிற்று. அன்று எங்கும் கூட்டிச்செல்லவில்லை. எனக்கும் பெரிதாக ஏதும் தோணவில்லை வீட்டிலேயே விளையாட, தொலைக்காட்சி பார்க்கவே நேரமில்லை அப்ப எங்க வெளிய போறது. அடுத்த நாள் V.G.P கோல்டன் பீச் சென்றோம், அந்த அசையா மனிதன், அங்குள்ள ராட்டினங்கள், சிறு ரயில் வண்டிகள் எல்லாமே புதுசு எனக்கு. மாலை வரை அங்கு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.

அடுத்த நாள் இரவு கிளம்பி சென்னையில் இருந்து கரூர் வந்து சேரத்திட்டம். மறுபடியும் பேருந்துப்பயணம், நீண்ட பயணம், மறுபடியும் அதே லாரி, பேருந்து எண்ணிக்கை, வேடிக்கை என்று வந்து சேர்ந்தேன், இருந்தாலும் கரூர் வந்து சேர சேர மனதில் ஒரு சோகம், அவ்ளோதானா பேருந்துப்பயணம் என்று மனது எண்ணியது. இப்படித்தாங்க என் முதல் சென்னைப்பயணம் இருந்துச்சு. இன்றுவரை எனக்கு எங்கு செல்வதானாலும் சாலை வழியே செல்லவே இன்றும் மனதுக்குப்பிடிக்கிறது.

அதுக்கப்புறம் பள்ளியில் வகுப்பு தோழர்களிடம் சென்னை சென்றேன், அங்கு அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று ஒரு வாரம் முழுக்க சொல்லித்திரிந்தேன்.

இந்த ஒரு பயணம்தான் எனக்கு நான் என்ன குறிக்கோளில் படிக்கப்போகிறேன் என்பதை எடுத்துக்காட்டியது. ஆம் அக்கா மருத்துவக்கல்லுரியில் சேரப்போகிறார், நாமும் அது போலத்தான் என்று அப்போதே முடிவு எடுத்தாயிற்று. (நான் இல்லீங்க அப்பாதங்க)

சென்னையில் இருந்த அத்தனை நாளிலும் எங்களுக்கு விதவிதமாக சாப்பாடு போட்ட பிரபு அண்ணா தம்பதியர் மற்றும் அவர்கள் வீடு. இன்னைக்கும் அவர் வீடுக்குச்செல்வது என்றால் அவர்களின் உபசரிப்பும் சாப்பாடும் முதலில் மனதில் வரும்.

இலவச பயணத்திட்டம் பற்றி எழுதினேன் அல்லவா, நான் கல்லூரி வந்தவுடன் அதுவரை உபயோகிக்காமல் விட்ட அந்த திட்டத்தை நான் மட்டுமே காலி செய்தேன் நான்கு வருடமும்.

அந்த திருக்குறள் எழுதப்பட்ட பட்டையை நான் கோடு போட பயன்படுத்தி இருக்கிறேன். அப்பா ஒரு பத்து இருபது குறள் எடுத்து கொண்டு வந்து தந்தார்கள். தினமும் ஒரு குறளாக பயன்படுத்துவேன். வகுப்பு ஆசிரியர்க்கு அதனாலேயே என்மீது தனி பிரியம்.(வித்தியாசமா scale பயன்படுத்தறேன் என்று, எங்க வாங்கினது இது என்று கேட்டு வர வேறு சொல்லி இருகாங்க ஒரு தடவ என்கிட்ட).

அப்போதெல்லாம் கேமரா இல்லாததால் இந்த பயணங்களில் போட்டோ எடுக்கவே இல்லை :(

சென்னையில் எங்கு சென்றாலும் பல்லவன் பேருந்துகளையே உபயோகப்படுத்தினோம். அப்பா ஊழியர் என்பதால் உடன் வந்த குடும்பத்தினர்க்கு பயணசீட்டு வாங்கும்போது அனைத்து நடத்துனரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தனர் அப்போது.

Wednesday, June 25, 2008

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு


என்னங்க பாக்கறீங்க திடிர்ன்னு குண்ட தூக்கி போடுறேன்னா? உண்மை தாங்க, விலை ஏற்றம் செய்து ஒரு மாதம் ஆக போகின்ற நிலையில் இந்த நாட்களில் நான் கண்ட உண்மை.


சென்னையில் கடந்த ஒரு மாதமாக வழக்கமாக நான் பெட்ரோல் போடுகிற நிலையங்களில் ஆகட்டும், இல்லை மற்ற எல்லா நிலையங்களில் ஆகட்டும் பெட்ரோல் விலை 60 ரூபாய் ஒரு லிட்டர்க்கு.


ஒவ்வொரு முறையும் நான் பெட்ரோல் போடும்போது சாதரண பெட்ரோல் போடுவது வழக்கம், கடந்த மாதங்களில் அது எங்கேயும் கிடைப்பதில்லை. சாதரண பெட்ரோல் விலை 55 ரூபாய் அனால் சூப்பர் பெட்ரோல், எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் விலை 60 ரூபாய். எங்கேயும் சாதரண பெட்ரோல் கிடைப்பது இல்ல.


கூட்டி கழிச்சு பாருங்க விலை ஏற்றம் 5 ரூபாய் இல்லை 12 ரூபாய். எப்போதும் கிடைத்த சாதரண பெட்ரோல் இப்போ கிடைப்பதில்லை, 60 ரூபாய் போட்டு பெட்ரோல் போடும் நிலை. இரண்டு சக்கர வண்டிகளில் இந்த சூப்பர் பெட்ரோல் போடுவதால் எந்த பயனுமிருக்கப்போவது இல்லை. அப்படியே இருந்தாலும் 2 -3 கிலோமீட்டர் அதிகம் ஓடும் அதற்கு 5 ரூபாய் அதிகம் குடுக்க வேண்டும்.


அதும் என்னோட யமாஹா எல்லாம் லிட்டர்க்கு 30 கிலோமீட்டர் குடுத்தாலே அதிகம் அதையும் அடிச்சு பிடிச்சு கெஞ்சி ஓட்டி 40 கிலோமீட்டர் குடுக்க வைக்கறேன். முடியலப்பா சாமி. இதுல சூப்பர் பெட்ரோல் வேறயாம் அய்யா என் வண்டி எத போட்டாலும் 30 தான் குடுக்கும் என்று கெஞ்சியும் எவனும் மசிய மாட்டேங்கிறான்.


இதுல இவங்க சூப்பர்னு சொல்லி சாதரண பெட்ரோல்ல கலப்படம் செஞ்சு வித்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஏதும் இல்லை. ஏற்கனவே ஒரு நிலையத்தில சாதரண பெட்ரோல் போடும் இடத்தில் சூப்பர் என்று ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருந்தனர். அதான் டவுட்டு...


இதெல்லாம் மாறனும்னா ஒரே வலி (வழின்னு தான் டைப் பண்ணுனேன் அனா அதுவா இப்படி வலின்னு மாறிவிட்டது) நம்ம தலைவர் விஜயகாந்த் ஆட்சிக்கு வரணும். ( ஒரு காமெடி வேனாமாங்க....)


ஆட்சிய மாத்துங்க (மாத்துன மட்டும் குறைய போகுதா இல்லபா ஒரு சேஞ்க்குதான். மாத்தின நம்ம மக்கள் இதையெல்லாம் மறந்துடுவாங்க தான.)
அணையைப்போற விளக்கு இவ்ளோ நாள் பிரகாசமா எரிஞ்சுக்கிட்டு இருந்த மாதிரி இருக்கு.

Tuesday, June 24, 2008

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

இது பழைய நிகழ்வு, சென்ற வருடம் தீபாவளியின் போது நான்கு நாட்கள் விடுமுறை வந்தது, விடுமுறைக்கு முதல் நாள் எனது தந்தையின் அலைபேசி தொலைந்து போனது. நாங்களும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காமல் போகவே சரி வாடிக்கையாளர் சேவை மையத்தில் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தோம்.

எதற்கும் தொலைந்த நம்பர்க்கு அழைத்து பார்ப்போம் என்று அழைத்தால் யாரோ எடுத்தார்கள், எங்களுக்கோ மகிழ்ச்சி, அவரிடம் அலைபேசி எங்களுடையது, தவற விட்டுவிட்டோம், நீங்கள் எங்கு உள்ளீர்கள் வந்து வாங்கிகொள்கிறோம் என்று கூறினோம். அவரோ நான் வெளியூரில் உள்ளேன் தர முடியாது என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். பின்னர் எங்களது நெருங்கிய நண்பர் ஒருவரது பெண்ணிற்கு என் தந்தை நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியது வேறு யாரோ இருக்கவே அவர்கள் செய்ய என்னிடம் கேட்க அவர்களுக்கு அலைபேசி தொலைந்ததை சொன்னோம்.

இனிதான் ஆரம்பம் நம்ம பிஎஸ்என்எல் சேவை, வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்பு கொண்டு சொல்லலாம் என்று நினைத்தால் முதல் கேள்வி, வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளதா என்று, இருதால் என்ன நம்பர்? ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நம்பர் கண்டு பிடித்து அழைத்தோம், நம்பரை சரி பார்க்கவும் என்று வந்தது, பின்னர் பல முறை தொடர்பு கொண்டும் தங்கள் நம்பரை சரி பார்க்கவும் என்று மட்டுமே வந்தது, பின்னர் வேறு தொலைபேசியில் இருந்து அழைத்தால் அழைப்பு போயிற்று, யாரோ ஒரு பெண் எடுத்தார், தகவலை சொல்லி தந்தையின் நம்பரை துண்டிக்குமாறு வேண்டினோம். அவர் அதற்க்கு அசால்டாக இது தமிழ்நாடு சரக நம்பர் நீங்கள் அதற்க்கு தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி தொடர்பை துண்டித்தார் . அப்பா சென்னை தமிழ் நாட்டில் இல்லையா என்று மனதில் கேள்வி எழுந்ததுலாம் சொல்லனுமா??

கஷ்டப்பட்டு சேவை மைய நம்பரை கண்டுபிடித்தால் இப்படி சொல்றாங்க என்று நினைத்து மறுபடியும் அதே நம்பர்க்கு அழைக்க, அந்த பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது, "இப்போது தான சொன்னேன் இங்க சொல்ல கூடாதுன்னு, ஏங்க மறுபடியும் பண்றீங்க" என்று கேட்டார், அம்மா எனக்கு தமிழ்நாடு சேவை நம்பர் தெரியாது நீங்க உதவி செஞ்சா நல்லார்க்கும் என்று கேட்டால் கடுகடுப்புடன் எப்படியோ ஒரு நம்பரை கூறினார்.. அவரிடம் ஏனிந்த நம்பர்க்கு வேறு தனியார் நம்பரில் இருந்து அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கேட்டோம் அதற்க்கு அவர் இது எங்கள் சேவைக்கு மட்டும் மற்றவர் தொடர்பு கொண்டால் அப்படிதான் அடிக்கடி நடக்கும் என்று சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் :)

வேறு நம்பரை தொடர்பு கொண்டு விசயத்தை சொன்னால் அவர் அப்படிங்களா, சரிங்க நீங்க பக்கத்துல இருக்க ஆபிஸ் போய் ஒரு எழுத்துபூர்வமான புகார் குடுங்க தொடர்பை துண்டித்து விடுவார்கள் என்றார். எல்லாம் என் நேரம் என்று நினைத்து அருகில் இருக்கும் ஆபிஸ் தேடினால் கிண்டில இருந்தது, அங்கு சென்றால் தீபாவளி அரசாங்க விடுமுறை நான்கு நாட்கள் என்று சொல்லி மூடி இருந்தனர், பின்னர் சென்னையை அலசியதில் அனைத்து அலுவலகமும் விடுமுறை, மறுபடியும் சேவைமையம் , இந்த முறை வேறு அதிகாரி மறுபடியும் முதலில் இருந்து விளக்கி என்ன பண்ண என்று கேட்டோம், திங்கட்கிழமை சென்று புகார் குடுங்க என்றார். அய்யா அதில் மீத தொகை 3200 ரூபாய் இருக்கு, மற்றும் எடுத்த நபர் அதை தவறான முறையில் உபயோகிக்கறார் அதனால் தான் சொல்கிறோம் என்று சொல்ல, அப்படிலாம் தொடர்பை துண்டிக்கும் வசதி இல்லை என்றார். என்ன மறுபடியும் ஷாக் ஆகிட்டேன் :)

ஏர்டெல் நம்பரை பல முறை இப்படி பண்ணின அனுபவம் எனக்கு இருந்தும் நம்ம பிஎஸ் என் எல் ல ஒன்னும் பண்ண முடியல. அடுத்து அவரிடம் "அய்யா அதுவரை அவர் தவறான முறையில் அதை உபயோகித்து அதற்கு பின்னால் எங்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன பண்ண" என்று கேட்டோம். அதற்க்கு நாங்கள் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார். சரி நாங்கள் அழைத்ததுக்கு பதிவு என் குடுங்க, பின்னால் நாங்கள் புகார் குடுக்கும்போது இதையும் சொல்லி விடுகிறோம் எங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கட்டும் என்றால் அதெல்லாம் முடியாது என்று தொடர்புதுண்டித்தது.

இதற்கிடையில் அலைபேசியில் சேமித்து வைத்த நம்பர்களில் பலருக்கு அழைப்பு போயிருந்தது , பலர் அலறி அடித்து எங்களை தொடர்புகொள்ள விஷயம் மிக சீரியஸ் ஆனது. மறுபடியும் சேவை மையம்,இந்த முறை வேறு நபர் எடுத்தார், விசயத்தை மறுபடியும் சொல்லி புரிய வைத்து உதவி கேட்க அவர் இங்க அந்த வசதி ஏதும் இல்லை, நீங்கள் எழுத்து பூர்வ புகார் குடுக்க வேண்டும் என்றார்,சரி நீங்கள் நாங்கள் அழைத்து சொன்னதற்கு ஆதாரமாக பதிவு எண்குடுங்க என்றால் அதற்கும் வழி இல்லை என்றார். பின்னர் அவரே ஒரு விஷயம் சொல்லி எங்களை ஓரளவிற்கு மகிழ்ச்சிபடுத்தினார். அது நீங்கள் பேசியது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகையால் பயப்பட வேண்டாம் ஏதும் பிரச்சனை ஆகும் பட்சத்தில் இது உதவும் என்று கூறினார்.

அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நண்பர் ஒருவரின் உறவினர் ஒருத்தர் காவல் அதிகாரி, அவரிடம் உதவி கேட்டோம். அவரும் எண் தந்தை நம்பர்க்கு அழைக்கவே அவரிடமும் ஏகதாளம் பேசி உள்ளான் அலைபேசியை வைத்திருந்தவன். பின்னர் அவரே ஒரு யோசனை சொன்னார், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் குடுத்து நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள், திங்கள் கிழமை அலுவலகம் திறந்தவுடன் அவன் எங்குள்ளான் என்று கண்டு பிடித்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அதன் படியே செய்தோம்.

திங்கட் கிழமை, புகார் குடுத்து ஆளை தேடினால் அதற்க்கு நிறைய நேரம் ஆகும் என்று செய்தி... சரி மீதம் உள்ள தொகை எவ்வளவு என்று பார்த்தால் 1200 ரூபாய். அதாவது மிஞ்சட்டும் என்று தொடர்பை துண்டித்து வேறு சிம் வாங்கினோம். இதற்க்கு இடையில் பிஎஸ்என்எல் இணைய சேவை மூலம் புகார் குடுக்கலாம் என்று முயற்சித்து பார்த்தேன், அதை எழுதினால் இன்னும் ஒரு பதிவுவரும்.

இவர்கள் சேவை இப்படி இருக்க இவர்கள் நாங்கள் முதல் இடத்தில் இருந்தூம் இப்போ ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று புலம்புகிறார்கள் .

ஏங்க நான் கேட்கறேன், இந்த நான்கு நாட்களில் இதே அலைபேசி வேறு எதாவது தேசவிரோத, சமூகவிரோத கூட்டத்திடம் சிக்கி இருந்து அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது??

அலைபேசி இணைப்பு குடுப்பதில் அக்கறை காட்டும் இவர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும். சமீபத்தில் வேறு ஒரு பிரச்சனைக்காக இணையத்தில் குடுத்த சேவை மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் LIC ஆபிஸ் என்று தொடர்பை துண்டித்தனர். ~!!! ஒண்ணுமே புரியல.

நண்பர்களே நீகள் பிஎஸ்என்எல் அலைபேசி வைத்திருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

வகுப்பில் நன்றாக படிக்க கூடிய பையனில் அவனும் ஒருவன், ஏனோ தெரியவில்லை அவனில் ஒரு இனம்புரியா சோகம் இருந்தாலும் அந்த சோகத்தை மறக்கடிக்க செய்வது அவன் வகுப்பு தோழர்கள் மட்டுமே. வகுப்பறைகள் மூன்றாவது விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள இடத்தில் மாற்றப்பட்டது. அவனுக்கும் அந்த மாற்றம் தேவைப்பட்டது. இந்த மாற்றம் அவனில்லும் எதோ ஒரு மாற்றத்தை தூண்டிவிட்டது.

வகுப்பில் ஒரு நாள், மாணவர் அனைவரும் விளையாட சென்றுவிட்டு வந்திருந்தனர், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் வந்து அவனுடைய ஒரு புத்தகத்தை எடுத்தான், அட்டை கிழிந்து இருந்தது, அந்த அட்டை நேற்றுத்தான் போடப்பட்டது. எப்படி கிழிந்தது என்று தெரியவில்லை, அவன் அழுதுகொண்டே நம்ம ஹீரோ விடம் வந்தான், ஏனென்றால் வகுப்பில் அப்போது வேறு யாரும் இல்லை, அவர்கள் உள்ளே வரும்போதுதான் மற்றொரு மாணவன் வெளியே சென்றான்.

அந்த மற்றொருவன் தான் இப்போது வில்லன், ஏனென்றால் அவனுக்கு அப்போதே ஒரு வன்முறை எண்ணம் இயற்கையாக அமைந்து இருந்தது, சரியாக படிக்க மாட்டான், அடிக்கடி டீச்சரிடம் அடி வாங்குவன் இது போதாதா அவனுக்கு ரவுடி பட்டம்கட்ட??

அட்டை கிழிந்த மாணவனுக்கு ரவுடி மீது சந்தேகம், இப்போது நம்ம ஹீரோ உதவிக்கு வருகிறார், "டேய் நான் பார்தேண்ட அவன்தான் உன் அட்டையை கிழித்தது",

"எப்படா பார்த்த?" இது அட்டை கிழிந்த மாணவன், நம்ம விளையாட போனப்ப நான்தான் கடசியா வந்தேன்ல அப்ப அவன் உன் பைய எடுத்து பாத்துகிட்டு இருந்தான், நான் என்னனு எட்டி பார்த்தா உன் நோட்டு அட்டைய கிழிச்சு உள்ள வச்சான். மனதினுள் இதை அவன் நம்பிவிட்டால் நமது நெருங்கிய நண்பன் ஆகிவிடுவான் என்ற திட்டத்துடன் தன் வாழ்வின் முதல் பொய்யை சொல்ல துவங்கினான்.

அட்டை கிழிந்த மாணவன் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்தவன் இப்போது அதில் வேறு பெட்ரோல் ஊற்றிவிட நேராக டீச்சரிடம் கொண்டு சென்றான். நம்ம ஹீரோ சாட்சி குடுக்க, குற்றவாளி விசாரிக்கப்பட்டான். "டீச்சர் நான் ஏதும் பண்ல, எனக்கு ஏதும் தெரியாது" என்றான். அப்ப எதுக்கு கடசியா வெளிய போன, என்ன பண்ணின வகுப்புக்கு உள்ள? இது டீச்சர். "இல்ல டீச்சர் நான் ஏதும் விளையாட போகல, என்ன யாரும் சேத்துக்கல அதான் வகுப்பில் உட்க்கார்ந்து இருந்தேன்" இது அவன்.

இப்படி பண்ணின எவன் விளையாட சேத்துப்பான்?? டேய் உண்மைய சொல்லு யார் இது பண்ணினா? இவனா நல்ல தெரியுமா ??? டீச்சர் கேள்வி கேட்க்க, நம்ம ஹீரோ இவன்தான் டீச்சர் நான் பாத்தேன் இவன் அட்டைய கிழிக்கும்போது. சொல்லும்போது நம்ம ஹீரோ மனதில் அயிரம்கேள்விகள், தவறு என்று தெரிந்து செய்யும் ஓவொன்றும் அப்படி வலிக்கும் என்று புரிந்து கொண்டான். அப்போது குற்றம் சாட்டப்பட்டவன் பார்த்த பார்வையின் அர்த்தம் இருக்கே,

டேய் நீயா இப்படி? என்று புடனியில் அடித்த மாதிரி இருந்தது நேற்று எனக்கு. ஏன் என்று தெரியாமல் நானாக தலை குனிந்தபடியே சமீபத்தில் நடந்த அலுவலக அரசியலில் என்னை குற்றவாளி ஆக்கிய நிகழ்வை நினைத்தேன். chaos தியரி புரிந்த மாதிரி இருந்தது....

Thursday, June 19, 2008

பொறியியல் முதல் வருடம் வகுப்பின் முதல் நாள்

ஆடி அசஞ்சு எல்லோருடன் சேந்து வகுப்புக்கு வந்து சேந்தேன், நண்பன் ஹரி வேறு வகுப்பு, அப்போது தான் கவனித்தேன், வழக்கமாக முதல் வருடம் அனைத்து மாணவர்களையும் கலந்து வகுப்பு பிரிப்பார்கள் பின்னர் இரணம் வருடம் மட்டுமே துறைவாரியாக மாணவர் பிரிந்து செல்வர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இங்கு முதல் வருடத்திலேயே துறை வாரியாக பிரித்து போட்டிருந்தனர், முதல் நாள் முதல் வேளையிலேயே ஏமாற்றம், பின்னே இருக்காதா இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் அந்த ஒரு வருடத்தில் மட்டுமே மாணவிகளுடன் சேர்ந்து படிக்க முடியும், அந்த ஆவலில் இங்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சியது, ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் மட்டும் சிவில் மாணவர்களுடன் சேர்த்து வகுப்பு. சிவிலில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகம் எங்கள் வருடத்தில்.

அனைவரும் ஏளனமாக பார்த்தனர், இருந்தாலும் நாங்க மெக்கானிக்கல் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு சீன் போட்டு ஓட்டினோம், எங்கள் வகுப்பிலும் 3 பெண்கள் இருந்தனர், அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பினால் எங்கள் கெத்து என்ன ஆவது??? (பின்னால ரொம்ப கடல போடராண்டா இவன் என்று பசங்க சொல்ற அளவுக்கு நம்ம வாழ்க்க மாறிப்போச்சு )

சரி அத விடுங்க முதல் நாள் வகுப்பு முடிஞ்சு போச்சு, எல்லோரும் விடுதிக்கு கிளம்பனும், மாலை சிக்கிரமகவே கிளம்பிட்டதால அப்படியே நடந்து போய்க்கிட்டு இருந்தோம், முன்னாள் போன ஒருவன் "டேய் சீனியர்ஸ் உட்கார்ந்து இருக்காங்கடா சத்தம் போடாம அமைதியா வாங்கடா எஸ்கேப் ஆகிடலாம்" என்று சொல்ல எல்லோரும் அமைதியாய் நடந்தோம். திடீரென்று ஒரு சத்தம் " டேய் மணி " எல்லோரும் திரும்பி கத்தியது யாரென்று பார்க்க பார்க்க, அது அடியேன் தான்.

இருந்த சீனியர்சில் ஒருவன் என் நண்பன், கூடவே 14 வருடம் ஒன்றாக படித்து, 12thல கொஞ்சம் என்னைவிட நல்லா படிச்சு உள்ள வந்துட்டான் , நான் ஒரு வருடம் என்னை இம்ப்ருவ் பண்ணிக்கிட்டு வந்திருந்தேன், என்ன இருந்தாலும் நண்பன மறக்க முடியுமா? அதான் சௌன்ட்.... அப்படியே அத்தன பேரையும் அள்ளிக்கிட்டு போனாங்க, அதுல ஒருத்தன் என்னை மிரட்ட, அப்புறம் மணிதான் நம்மள காப்பாத்தினான். நம்மள அப்படியே உக்கார வச்சிட்டு கூட வந்த பசங்கள பிடிச்சானுக, அப்ப எல்லோரும் என்ன பார்த்த பார்வை இருக்கே.....
கருங்காலி எட்டப்பன் மாதிரி உட்க்கார்ந்து முறுக்கு திங்கறான் பாரு என்று சொல்லாமல் சொல்லியது.

Wednesday, June 18, 2008

உணவு நேரத்து யோசனைகள்

மதிய நேரம் வழக்கமான உணவு நேரத்துக்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன, கணினி திரையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு பின் வழக்கமான என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.


வழக்கமாக உணவருந்த உடன் வரும் நண்பன் வந்தான் அருகில் வந்து மற்றொருவன் பெயரை சொல்லி அவன் உணவருந்த கூப்பிடுகிறான் வா செல்லலாம் என்றான். அந்த மற்றொருவனும் நானும் மிக நெருக்கமான நண்பர்கள் என்ற பெயர் அலுவலக சக ஊழியர்களிடம் உண்டு.ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை. மிக திட்டமிட்டோ, அல்லது சண்டையின் காரணமாகவோ ஏற்ப்பட்ட பிரிவு இல்லை, கடைசியாக அவனிடம் பேசியது ஒரு திருமண விழாவிற்கு செல்ல கூப்பிட்ட போதுதான், வருகிறேன் என்று தெரிவித்த அவன் மாலையில் வர இயலாது என்று தெரிவித்தான்.


அடுத்தடுத்த நாட்களில் அவனிடம் பேசும் சூழ்நிலை வரவில்லை பின்னர் ஒரு நாள் அவனை தேடி போகும்போது அவனருகில் இருந்த மற்றுமொரு நண்பன் அவனுடன் வெளியே சென்றதாகவும், அவன் செல்லிடைப்பேசியை மாற்றி புதிதாக வாங்கி விட்டதாகவும் கூறியபின் ஏனோ அவனிடம் போக மனம் ஒவ்வவில்லை (இது தமிழ் வார்த்தையா தெரியவில்லை) பின்னர் அங்கு செல்கையில் அவனிடம் பேசுவது நின்றது, ஏனோ நேற்று கூட மலையில் பேருந்து ஏறும்முன் அனைவரும் இருக்கும்போது கூட அவனாக என்னிடம் ஒரு புன்னகையை சிந்தவில்லை, இவற்றை எல்லாம் எதிர்பார்க்கும் அளவிற்கு என் மனமுமில்லை. என்னை இப்படி மாற்றியமைக்கு அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்ட அகம்பாவம்தான் காரணம்.


மிகச்சிறந்த நண்பன், என்னிடமிருந்த என்னை மறுபடியும் கொண்டு வர உதவியவன், எதோ அவன் எது செய்தாலும் அதில் காரணம் இருக்கும், இதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று ஒரு நாள் எனக்கு தெரிய வரலாம் தெரியாமலும் போகலாம் அனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவதாயில்லை.


இவ்வாறு அவர்கள் இருவரும் உணவருந்த செல்கையில் நான் எதற்கு என்று நினைத்தேன், வழக்கமாக உணவருந்த வருபவனும் இதற்கு முன்னாள் என்னுடன் வந்த ஒரே காரணத்தால் எனக்காக வருவானே அன்றி அவனுக்காக என்னுடன் சாப்பிட வேண்டும் என்று வருவது இல்லை.என்னுள் இருந்த அந்த சுய வெறுப்பு தலை தூக்கியது, மனதை தேற்றிக்கொண்டு செல்ல முற்படும்போது மற்ற இரு நண்பர்களும் அவர்களுடன் செல்ல இருப்பதை அறிந்தேன், மொத்தம் உள்ள நால்வரில் இருவர் என்னிடம் பேசுவதை தவிக்கும் நிலையில் இருப்பவர். என் மனம் அல்லாடியது, வழக்கம்போல அம்மாவிடம் செல்லிடை பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து விட்டு சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசிவிட்டு, அவர்க்கு தெரிகிறது நான் என் மனம் அலைகளிக்கபடுவதால் பேசுகிறேன் என்று அனாலும் நானாக வெளிக்காட்டவில்லை, ஏதும் சொல்லப்போய் நான் திட்டிவிடுவேன் என்று நினைத்து சாதரணமாக பேசி வைத்தார்கள்.


எவ்வளவு பெரிய குற்றவாளி நான், என் மனம் புண்பட்டது என்று அழைத்து அதயும்சொல்லாமல், அவர் மனதை புண்படுத்தி இப்பொது அதைப்பற்றி எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். நான் வராததை நாசுக்காக குறுஞ்செய்தி அனுப்பி தெரிவித்துவிட்டேன். யோசிக்கும்போது என்னிடம் நெருக்கமாக உள்ள அனைவரும் ஒரு கட்டத்தில் என்னை விட்டு வெளியேறுகின்றனர், அதற்கான காரணத்தை அப்போது யோசித்தால் அது என் தவறாக தெரியவில்லை. அனுபவம் தந்த பாடத்தை கற்றபின் யோசிக்கையில் அது முழுக்க முழுக்க நான் செய்த தவறுகளே என்று புரிகிறது,மீண்டும் சென்று ஓட்டிக்கொள்ள மனது மறுக்கிறது, சேர்த்துக்கொள்ள அவர்களும் தயாராக இல்லை.


ஒதுக்கப்படுதலை விட ஒதுக்கப்படுதலை உணர்கின்றபோது மனதில் வலி அதிகரிக்கிறது, அதும் உனக்கென்று அறுதல் படுத்திக்கொள்ள எவரும் இல்லை என நீயே நினைத்து உன்னை தனிமை சிறைக்குள் பூட்டும்போது அது உன்னை ஆக்கிரமிக்கிறது... நாட்கள் செல்ல செல்ல அந்த வழியே பழகி போய் பின்னர் இன்பமாக மாறும் என நான் நினைக்கவே இல்லை. அப்போது இந்த தனிமையை நான் நினைத்துபார்த்த நாட்களை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.


தனிமையை ரசிக்கும்போது தான் வாழ்க்கையில் உள்ள அழகை ரசிக்க முடிகிறது, நெடுந்தூர தனிமைப்பயணம், நீண்ட தூர பைக் சவாரி, பேசும் பூக்கள், செல்லமான மீன்கள், நட்பான புத்தகங்கள், கோவத்தை,துயரத்தை பகிர்ந்து கொள்ளும் தலகாணி, இன்னும் எவை எவையோ, எல்லாவற்றையும் தேடி சென்று கொண்டு உள்ளேன் என்று நினைப்பதே அழகாய் இருக்கிறது.


இந்த தேடலில் தோற்று நான் ஒருவேளை மறுபடியும் புதிய நண்பர்கள் உறவினர், சுற்றம் சூழ என்று மாறலாம் அப்படி மாறினாலும் என் தனிமைக்கு எப்போதும் சிரிதுஇடம் குடுப்பதை பற்றிகொண்டிப்பக யோசிப்பேன்.


இது நீங்கள் படித்து மகிழ நான் எழுதவில்லை,நான் எனக்கு தோன்றியதை இருப்பதை நினைத்துக்கொண்டு இல்லாத (வாய்பேச முடியாத) நண்பன்/ நண்பிக்கு சொல்லுவதாக எண்ணி எழுதியுள்ளேன்.

Tuesday, June 17, 2008

வகுப்பறையில் ஒரு நாள்- ரெடிமேட் பரீட்சை

வகுப்பறையில் ஒரு நாள்- ரெடிமேட் பரீட்சை

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு தேர்வுக்கு முந்தைய மாதம், வழக்கம் போல சமூக அறிவியல் ஆசிரியர் வகுப்பு தேர்வு வைத்தார், தினமும் அவர் வகுப்பில் தேர்வு வைக்கப்படும், இரண்டு அல்லது மூன்று கேள்விகள் முதலிலேயே சொல்லிவிடுவார், அதிலிருந்து அடுத்த நாள் இரண்டு கேள்வி அல்லது ஒரு கேள்வி தேர்வில் வரும்.

நம்ம வழக்கம் போல முதல் இரண்டு நாள் படித்து வந்து பரீட்சை எழுதினால் பாதியில் எல்லாம் நின்றுவிடும், பின்ன அதுவரை தமிழில் மனப்பாடம் பண்ணின நான் இங்க ஆங்கிலத்தில் மனப்பாடம் பண்ண கஷ்டப்பட்டு அதை தமிழில் எழுதி ஆங்கிலத்தை தமிழில் படித்து ஒருவழியாக மனப்பாடம் பண்ணி தேர்வு எழுதினேன். தேர்வு முடிவு வழக்கம் போல தான், ஜஸ்ட் பாசு, அனால் எனக்கோ அவர்களிடம் நல்ல பேர் எடுத்ததை காப்பாற்ற வேண்டும் என்று ஆசை, அனால் என்ன மற்றவர் போல காபி அடிக்க தெரியாது பயம் வேற, என்ன செய்யலாம் என்று யோசித்தேன்...

அடுத்த இரண்டு டெஸ்டிலும் நல்ல முன்னேற்றம் எனது மார்க்கில், பசங்க ஆச்சரியப்பட்டு போனார்கள் இருந்தாலும் சந்தேகம் நான் காபி இல்லை பிட் அடிக்கிறேனா என்று, பின்னர்தான் தெரிந்தது நான் இரண்டுமே செய்யவில்லை புதுசாக ஒன்று பண்ணுகிறேன் என்று, அதுதான் ரெடிமேட், எப்படியும் இரண்டு கேள்விகள் அல்லது ஒரு கேள்வி, நான் ஒரு தாளில் முதல் இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் அடுத்த இரண்டு பக்கம் ஒரு கேள்விக்கான பதில் என்று எழுதி வந்து விடுவேன், ஒருகேள்வி கேட்டால், முதல் இரண்டு பக்கத்தை கிழித்துவிட்டு ஒரு கேள்வியை குடுத்து விடுவேன், இது மற்ற பசங்களுக்கும் எளிதாக போய்விட்டதால் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

வழக்கமாக பரீட்சை அட்டையில் நிறைய பேப்பர் வைத்து அதில் இதை ஒளித்து வருவோம் பின்னர் அந்த ஆசிரியை அதையும் கண்டு பிடித்து இனி பரீட்சை அட்டையில் ஒரு வெள்ளை பேப்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார் ஆப்பு, நாம விடுவோமா?? அடுத்த ஐடியா கண்டுபிடித்தூம், அப்போ நாங்க எல்லாம் முழங்கால் வரை சாக்ஸ் போட்டு வருவோம் அதனால் பரீட்சை பேப்பர் மடிப்பது போல மடித்து சாக்சில் வைத்து எடுத்து வந்து குடுத்தோம்ல.....

வகுப்பறையில் ஒரு நாள் தொடரும்....

Friday, June 13, 2008

இவங்களையும் என்ன செய்யறது

பொது இடத்தில்குப்பை போடுவது பற்றி இந்த பதிவை படித்தேன், இன்று காலையில் தான் நானும் இது போன்ற பிரச்னையை பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், நான் எழுத நினைப்பது சாலை விதிகளையும் நாம் அதை எப்படி மதிக்கின்றோம் என்பதையும்.

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் தினமும் சாலை விதிகளை மதித்து நீங்கள் என்றாவது வண்டி ஒட்டி உள்ளீர்களா? பெரும்பாலான பதில் இல்லை என்று வரும்.நான் சொல்வது மிக மிக அடிப்படை சாலை விதிகள் பற்றி.
பொதுவாக இடது பக்கமாகவே செல்ல வேண்டும், ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு 300, 400 மீட்டர் செல்ல வேண்டும் என்பதற்க்காக எதிர் திசையில் வண்டி ஒட்டுகின்றோம், யோசித்து பாருங்கள் இது நன்றா?

நிறுத்த கோட்டிற்கு முன்னால் வண்டியை நிறுத்த வேண்டும், எனக்கு தெரிந்து சென்னை சாலைகளில் அப்படி ஒரு பழக்கம் இருப்பதாக தெரியவில்லை, குத்து மதிப்பாக சிக்னல் முன் நிறுத்துவார்கள் பின்னர் இன்ச் இன்சாக நகர்ந்து (சில நேரங்களில் அடி அடியாக ) பாதி தூரம் சென்று விடுவார்கள். யோசியுங்கள்

சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், நம்மில் பாதி பேர் மதிப்பது அங்கு போக்குவரத்து காவலர் நிற்பதால், ஏன்னுங்க இன்னும் கொஞ்சம் பேர் முன்னாடி நிக்கறவன் நின்னா நிப்பாங்க.

சிக்னல் குடுக்காமல் கண்டபடி திரும்புவது, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்க மறுப்பது, அடிபட்டா இருவருக்கும் தான் ஆனால் அதை யோசிப்பதே இல்லை. தான் மட்டும் நல்ல இருந்தா போதும், நான் மட்டும் போன போதும் நீ எப்படி போன எனக்கென்ன.

ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிக்கு வழி விடுவதில்லை இல்லை என்றால் அவர்கள் கூடவே செல்வது, அப்பத்தான அவர்கள் வழியில் நாமும் சென்று விடலாம்.

தலை கவசம் அணிவது கிடையாது கேட்டா முடி கொட்டுகிறது தலையில் வேர்க்கிறது என்று, உண்மை தான் ஆனால் கொஞ்சம் யோசி எதாவது ஒன்னுன தலையே போய்டும் அப்புறம் முடி கொட்டி என்ன ஆக போகிறது??? (இது தனி நபர் விருப்பம் அனாலும் யோசியுங்கள் )

நண்பர்களே! இதெயெல்லாம் செய்வது படிக்காத பாமரன் இல்லை அனைவரும் இல்லை இல்லை பெரும்பாலும் படித்தவர்கள் மட்டுமே, லைசென்ஸ் வாங்க அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்று மாற்றம் கொண்டு வந்தாயிற்று அதனால் கண்டிப்பாக வண்டி ஓட்டும் அனைவரும் இனி படித்து இருபபர்.

சிக்னலில் நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பதனால் என்ன ஆகிவிட போகின்றது?? பத்து அடி முன்னால் சென்று நிற்பதனால் என்ன பயன்?? மாறாக கோட்டிற்கு பின்னால் நின்றால் சாலையை கடப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும். நான் வழக்கமாக நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பேன், ஆனால் இதுவரை ஒரு முறை கூட பின்னால் இருப்பவர் ஒலிப்பானை அடித்து என்ன நகர சொல்லாமல் இருந்தது இல்லை. நானும் ஒரு முறை கூட நான் நகர்ந்தது இல்லை, காரணம் என்னபார்த்தாது ஒருத்தன் திருந்தனும் என்றுதான்.

ரோட்டில் போக்குவரத்து அதிகம் இல்லை என்றால் சிக்னலை மதிப்பது இல்லை, உன்னை பார்த்து பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே செல்வார்கள் இதுவே நீ நின்று பார் கண்டிப்பாக உன் பின்னால் வருபவர்கள் நிறுத்துவார்கள்.

ஒரு போக்குவரத்து காவலரிடம் கேட்டேன் ஏன் இப்படி கடுகடுப்பாகவே பெரும்பாலும் இருகிறீர்கள் என்று, அவர் பார்வையில் சொல்கிறார், தினமும் 8 மணிநேரம் பணி, அதுவும் ரோட்டில்தான், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த புகையில் நின்று பாருங்கள் அதும் போக்குவரத்தை ஒழுங்கு செய்து பாருங்கள் என்றார். இதில் சாலையை கடப்பவர்க்கு கண்டிப்பாக போக்குவரத்தை ஒதுக்க வேண்டும் என்பது எங்கள் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஆனால் அதற்குள் இரண்டு நிமிடம் காத்திருக்காமல் வாகனங்கள் செல்லும்போது கடப்பவர்கள் எத்தனைபேர், அனைவரும் படித்தவர், அப்போது நாங்கள் கோபப்படுவது தப்பாக தெரிகிறது என்றார். நம்மவர்கள் வண்டி ஓடும் லட்சணத்தில் எங்கே நாங்கள் நிம்மதியாய் இருப்பது, காவலாளி இல்லை என்றால் பத்தில் 6 பேர் சிக்னல் மதிப்பது இல்லை என்கிறார்.

வண்டி ஓட்டிகள் நாங்கள் செல்வதால் என்ன வந்துவிட போகிறது என்று நினைக்கின்றனர் , ஒலிப்பானை தேவையான இடத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் ஆனால் நம்மவர்கள் அவர்கள் கைக்கு வேலை இருக்கும்போது மட்டும் ஒலிக்க மறுக்கிறார்கள். வண்டியில் செல்லும்போது எச்சில் துப்புவது, அய்யா உங்கள் வீட்டில் துப்பினால் என்ன சொல்வீர்கள், இந்த சாலையை நீங்களும்தான பயன் படுத்துகிறீர்கள், அப்புறம் எதுக்குங்க இப்படி? போக்குவரத்துக்கு இடையுறாக வண்டியை நிறுத்துவது, நோ பார்க்கிங் என்றாலும் பத்து நிமிடத்தில் வந்துடலாம் என்று நிறுத்தி செல்வது.

நான் மட்டும் தப்பு செய்யாமல் நல்லவனாகவே இருக்கிறேன் என்று சொல்ல வில்லை, சில சமயம் நானும் போக்குவரத்து விதி மீறலை செய்ய வேண்டயுள்ளது, ஆனால் என்னை பொறுத்தவரை அடிப்படை விதிகளையும் பாதசாரிகளையும் மதித்தே செல்கிறேன். ஒரு நாள் எந்த விதி மீறலையும் செய்யாமல் வண்டி ஒட்டி பாருங்கள் அதில் எவ்வளவு திருப்தி கிடைக்கின்றது என்று பின்னூட்டம் இடுங்கள், திருப்தி இல்லை என்றால் நீங்கள் உங்க மனதிற்கு பட்டவாறு செல்லுங்கள்.

அடிப்படை விதிகளை கடை பிடித்து செல்கையில் மற்றவர் உங்களை விதி மீறல் செய்ய சொன்னால் இது விதிக்கு புறம்பானது செய்ய மாட்டேன் என்று கம்பீரமாக சொல்லுங்கள். அப்போது மற்ற சில உங்களை பார்க்கும்போது பெருமையாய் உணர்வீர்கள். நான் நிறுத்த கோட்டை தாண்டாமல் நின்று பின்னால் வரும் வாகனம் வழி கேட்ட போது மறுத்தேன் இதற்க்கு ஒரு போக்குவரத்து காவலர் வாழ்த்து தெரிவித்தார் (அந்நேரம் அருகில் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார், இப்போது உங்கள் மதிப்பை பற்றி யோசித்து பாருங்கள்) இதெல்லாம் சிற்சில நல்ல பழக்கங்கள். இந்த பதிவை படித்து ஒருவராவது மாறினால் கூட எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி.

நண்பர்களே சிந்தியுங்கள், வெளி நாட்டில் இருப்போர் அங்கு உள்ள வெளிநாட்டினர் நம்ம நாட்டு போக்குவரத்தை பற்றி என்ன நினைக்கின்றனர் என கேட்டு பாருங்கள் பின்னர் முடிவெடுங்கள்.

நன்றி

கோபப்பட்ட தருணங்கள்..

நீச்சல் பயிற்சியாளர் கமெண்ட் அடித்த போதும்

பெட்ரோல் அளவை குறைத்து சதி செய்ததை அறிந்த போதும்

எனக்கு வேலை இல்லாதபோதும்

நண்பன் துறை சார்ந்த அநியாயத்தை கேட்ட போதும்,

உணவகத்தில், உறைவிடத்தில் என்று எங்கும் நடக்கும் அலட்சியத்திலும் கோபப்பட்ட நான்

நெடுநாளைக்கு பிறகு என் குரலை கேட்கும் வாய்ப்பை குடுத்து என் தந்தையை சந்தோசப்படுத்தினேன்.

இது கவிதையா? தெரியாது அனால் இப்படி எழுத தோன்றியது முதல் முறையாக..
சந்தோசப்பட்டேன் இத்தருணத்தில்.

TVS 50 யிலிருந்து YAMAHA வரை

கடந்த ஒரு வாரமாக ஆபிசுக்கு வண்டியில் தான் வருகிறேன், ஆறு மாதமாக வண்டி எடுத்தால் வரும் முதுகு வலியுடன் தான் வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தேன் அந்த வண்டியை வீட்டில் விட்டு அண்ணாவின் பழைய YAMAHA எடுத்து வந்ததால் இப்போது இவ்ளோ சீன்....

அமாங்க எவ்ளோ நாள் தான் வெயிட் பண்ணுவது?? முதன் முதல் வண்டி எங்கள்வீட்டில் அப்பா வாங்கிய TVS 50 தான். அப்போதெல்லாம் வண்டி வாங்குவது பெரிய விஷயம் எங்களுக்கு அதுமில்லாமல் வண்டி எங்களக்கு தேவை இல்லாமல் இருந்தது. பணி முடிந்து வீட்டிற்க்கு வரும்பூது நடுநிசி ஆகி விடுவதால் வண்டி வாங்கினார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்.
வண்டி வந்த பின்னர் அதில் போவது என்றால் கொண்டாட்டம் தான், நான்தான் வீட்டில் கடைக்குட்டி என்பதால் வண்டியில் முன்னால்தான் நிக்க வைப்பார் அப்பா, வண்டியில் முன்னால் நின்று அல்லது உட்கார்ந்து கொண்டு போவது எவ்வளவு சந்தோசம்.... பின்னால் அண்ணா, முன்னால் நான் என அடிக்கடி வெளியே கூட்டி செல்வார், சினிமா செல்வதென்றால் ரொம்ப கொள்ளை சந்தோசம், எனக்கு ஆங்கில திரைப்படத்தை கண்ணுக்கு காட்டியவர் அப்பாதான்.

தோட்டத்தில் வண்டியுடன் உட்கார்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இன்னும் அண்ணாவிடம் பத்திரமாக உள்ளது, நான் சிறு வயதில் எடுத்த போட்டோ என்பது அது மட்டுமே, அப்பாவுடன் ஊருக்கு செல்கையில் வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்தார், முன்னால் உட்கார்ந்து handle bar பிடித்து ஓட்ட வேண்டியது தான் இப்படியே நிறைய நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

TVS 50 ஐ ஸ்டார்ட் செய்வது மட்டும் எனக்கு வரவே இல்லை, அந்த பெரிய பெடலை சுற்றி அந்த சின்ன கிளச்சை அழுத்தி விட வேண்டும், நான் சைக்கிள் மிதிப்பது போல மிதித்து ஸ்டார்ட் பண்ண முயற்சி பண்ணுவேன், அனால் முடியாது .

அப்பா வந்தால் மட்டுமே வண்டி ஒட்டிய நான் ஒரு நாள் அம்மா ஊரில் ஒரு திருவிழாவில் தெரிந்தவர் வண்டியை எடுத்து வர சொல்லி சாவி கொடுத்தார், நானும் தள்ளிக்கொண்டு வரலாம் என்று தான் நினைத்தேன் அப்படி தள்ளிக்கொண்டு வரும்போது ஸ்டார்ட் பண்ண ட்ரை பண்ணுகையில் ஸ்டார்ட் ஆகிவிட்டது அப்படியே சைக்கிள் ஓட்டுவது மாதிரி ஏறி உடர்ந்து ஒட்டி வந்தேன், அப்போ அம்மா முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பின்னர் இப்படியே எனது வண்டி தொடர்பு எங்கள் TVS 50 யுடன் மட்டுமே இருந்தது, அப்போ எனக்கெல்லாம் gear வைத்த வண்டி ஓட்ட ஆசை ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை, ஒரு நாள் பள்ளியில் பத்தாவது படிக்கையில் நண்பன் ஒருவன் m80 எடுத்து வந்தான், மற்ற நண்பர்கள் ஒட்டி பார்க்கையில் எனக்கும் ஆசை வந்தது, மற்றவர்கள் ஓட்ட தெரிந்து ஒட்டினர் எனக்கோ கேள்வி ஞானம் மட்டுமே. அவன் என்னிடம் இது உன் முறை என்று வண்டியை குடுக்க, ஸ்டார்ட் செய்து gear மாற்றி க்ளட்ச மெதுவா விடனும்னு நிறைய பேர் சொல்லி கேட்டதாலோ இல்ல நிறைய படிச்சு தெரிஞ்சதலோ அப்படியே செஞ்சேன் ஆனா வண்டி ஓரடி முன்னால் சென்று ஆப் ஆச்சு, அஹா நமக்கு ஆப்புதாண்டா என்று நினைத்து மறுபடியும் ட்ரை பண்ணினத்தில் கிளிக் அஹி ஒரு ரவுண்டு சென்று வந்தோம். ரொம்ப மகிழ்ச்சி, எனக்கும் gear வண்டி ஓட்ட தெரியும் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்ல.

நமக்கு வந்த வாய்ப்பு எல்லாமே gear இல்லாத வண்டியாதான் வந்துச்சு அக்கா வண்டி கூட kinetic honda. ரொம்ப நல்ல வண்டி அது, ஒரு நாள் தெரிந்த ஒருவர் அக்கா வண்டியை எடுத்து சென்று விட நான் அக்காவை கூட்டி சென்று விடுவதர்க்காக அவர் கடையில் சென்று வண்டி சாவியை கேட்டேன், அவர் ஒரு சாவியை குடுத்து கீழே உள்ளது எடுத்துக்கொள் என்று சொல்லி விட்டார். பின்னர்தான் தெரிந்தது அது yamaha RX100 என்று, வண்டி ஓட்ட தெரியாது என்று சொன்னால் அது அசிங்கம் என்று நினைத்து நமக்கு தான் கேள்வி ஞானம் உள்ளதே அதை வைத்து ஓட்டிக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் கிளம்பினேன், வழக்கம் போல ஸ்டார்ட் செய்து கிளம்பினால் ஓரடியில் நின்றது அதுவும் ஒரு வித துள்ளலுடன், மறுபடியும் முயற்சி செய்தால் அப்படியே ஓரடியில் நின்றது இப்படி கஜினி முகமது போல பல தடவை முயற்ச்சி செய்து பின்னர் க்ளச்சை விட்டால்தான ஆப் ஆகும் பிடித்து கொண்டே செல்லலாம் என்று அப்படியே ஓட்டினேன்,


இந்த லட்சணத்தில் வீட்டில் இருந்து அக்காவை மருத்துவமனைக்கு வேற கொண்டு சென்று விட கிளம்பினேன், என்னை நம்பி எப்படி அக்கா உட்கார்ந்தார் என்று தெரிய வில்லை, அவளவு தைரியம் போல, நடுவே எங்கயும்நிர்க்காமல் கொண்டு சென்று விட்டதில் ரொம்ப மகிழ்ச்சி, அக்காவிற்கு இன்று வரை அப்போது எனக்கு வண்டி ஊட்ட தெரியாது என்பது தெரியாது.

அப்படி இப்படின்னு காலேஜ்ல சேந்தாச்சு, அங்க வண்டி வைத்துக்க கூடாது என்ற கட்டளை உள்ளது அதனால் எப்படா முடிப்போம் ஒரு வேலை எதாச்சும் வாங்கி உடனே சம்பளம் வாங்கறதுக்கு முன்னாடியே ஒரு yamaha வங்கிடனும் என்பது ஆசை, பின்ன அதுக்குள்ள அண்ணா ஒரு yamaha வாங்கிடாரே, எங்கள் ஊரில் yamaha வண்டிக்கு கொஞ்சம் மவுசு அதிகம், ஏன் என்று தெரியவில்லை, தெரிந்தவர் கூறவும்.(எந்த ஊர்னு கேட்காதீங்க கரூர் தான் ).இன்னும் மற்ற ஊர்களை விட இங்கு அதிகம் என்னால் பார்க்க முடிகின்றது.

ஆனால் வெளியே வந்து வேலை கிடைத்தவுடன் வண்டி பேச்சு, பழைய வண்டி கூடாது என்று வீட்டில் அனைவரும் கூறி விட்டனர், சரி அண்ணாவிற்கு புது வண்டி எடுத்து குடுத்து விட்டு அண்ணா வண்டி எடுத்துக்கொள்ளலாம் என்றால் அண்ணா மாட்டவே மாட்டேன் என்றார். என்னடா இது என்று அப்படி இப்படி bit அ போட்டு pulsar வாங்கியாச்சு. 3 வருசமா எப்படி எப்படியோ முயற்ச்சி செய்தும் கிடைக்காத அண்ணா வண்டி இப்போது கிடைத்து விட்டது. அய்யா இப்போலாம் அதில் தான் பறக்கிறார்.

முன்னலாம் எதோ ஒரு அசட்டு தைரியத்தில் இப்படி வண்டிய எடுத்து ஓடிடு இபலாம் ஏன் என்னால் ஒரு சின்ன விசயத்தில் கூட முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன் என தெரியவில்லை, போருப்ப்பு வந்ததால் என்று நினைக்கிறேன் :(.
என் வண்டியை பற்றி அப்புறம் பார்க்கலாம்....

Thursday, June 12, 2008

நீச்சல்

நீச்சல்

ஒரு வருடமாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தேன், நீச்சல் குளத்துக்கு செல்ல போகிறேன் என்று, மெம்பெர் ஆகணும் என்றால் டாக்டர் சான்றிதல் மற்றும் வங்கி வரைவோலை வேண்டும் என்றும் தெரியும் அனாலும் சேரவில்லை.

என்னைகேட்டு பலபேர் சேர்ந்த பிறகு எனக்கும் அறிவு வந்தது, தினமும் வாழ்க்கையே வெறுத்து போனது போல புலம்பிக்கொண்டு இருந்த நான், ஏதும் புதிதாக இல்லை எல்லாம் அப்படியே இருக்கு என்று சொல்லியே காலத்தை ஓட்டினேன். ஏதும் புதிதாக பண்ணினால் சுவாரசியமாக இருக்கும் என்று பல நாட்கள் நினைத்தது உண்டு அனால் செயல் வடிவம் பெறவில்லை.

திடீரென்று எனது அறை நண்பர்கள் நீச்சல் தெரியாதவர்கள் அவர்களே நீச்சல் கற்றுக்கொண்டு இப்போது வழக்கமாக செல்லும் பழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர் அனால் நான் மட்டும் அட்வைஸ் ஆருமுகமாக இருந்தேன், எப்படி எனக்குள்ளும் அந்த தீ பற்றிக்கொண்டது?? தெரியவில்லை, திடீரென்று ஒரு நாள் முடிவெடுத்தேன் அடுத்த நாள் சென்று சேர்ந்து விட்டேன்.

முதல் நாள் நண்பனுடன் சென்றேன் ஏற்கனவே அவனை நீயெல்லாம் என்ன அடிக்கிற நான் சின்ன வயசுள்ள அப்படி இப்படி என்று பீலா வேறு விட்டிருந்தேன் அதை காப்பற்ற வேண்டுமே என்ற பயம் இருந்தது. உள்ளே சென்றவுடன் முதல் முறை வேகமாக சென்றேன், ஆஹா நமக்கு இன்னும் அதே வேகம் இருக்கிறது என்று எண்ணி அடுத்த முறை செல்லும்போது தெரிந்தது இன்னும் நீ பழையபடி இல்லை என்று ஆனாலும் என்னாலும் முடியும் என்று என்னுடன் பிறந்த விடாமுயற்சியுடன் 5 முறை சென்று விட்டு எழுந்து விட்டேன்.

கடந்த வாரம் கூட ஊருக்கு சென்று இருக்கையில் தோட்டத்து கிணற்றில் தனியாக நீச்சல் அடித்தேன் அப்போ கூட இன்னும் சில நேரம் இருந்து விட்டு வரலாம் என்று நினைத்தேன் அனால் இங்கு?? உள்ளே விழுந்தவுடன் எப்போடா முடித்து விட்டு கிளம்பலாம் என்ற எண்ணம் தான், என்னதான் நகர்புறம் நீச்சல் தொட்டி என்றாலும் மனது இன்னும் கிராமத்தை தான் நாடுது. கற்கண்டு போல இனிக்கும் அந்த கிணற்று தண்ணீர் எங்கே, இந்த கிளோரின் கலந்த தொட்டி தண்ணீர் எங்கே, வாயில் பட்டவுடன் கசக்கின்றது. குளம் முழுவது நீல நிறத்தில் உள்ளது பார்க்க அழகாக உள்ளது அனாலும் நீந்த மனதுக்கு ஏன் பிடிக்கவில்லை??

கிணற்றில் உள்ள பயம் கலந்த ஒரு த்ரில் ஏன் இங்கு இல்லை? கற்றுக்கொண்ட கிணற்று நீச்சலில் தேர்ந்த நான் இந்த நகர்புறத்து பகட்டு நீச்சலில் எந்த விதத்தில் தாழ்ந்தேன்? தலைக்கு உரை அணிந்து தான் வர வேண்டுமாம், சரி இருக்கட்டும் இது ஒரு சுகாதாரமான முறை அனால் நானாக கற்ற நீச்சலை இவர்கள் சொல்லி குடுக்கும் முறையில் மட்டுமே அடிக்கணும் என்று இவர்கள் சொல்ல என்ன காரணம்??

என்னால் தண்ணீரில் மிதிக்க முடியும், இவர்கள் செய்யும் எல்லாமும் செய்ய தெரியும் அனாலும் இவர்கள் முறையில் அல்ல, அனாலும் அதற்கு இறுதி பயன் என்ன? எல்லாம் ஒன்று தான? கணித பாடத்தில் ஒரு ஆசிரியரிடம் பயின்று அவர் முறைப்படி கணக்கு போடுகையில் அவர்க்கு மாற்றாக வந்த ஆசிரியர் அதை தப்பு என்று சொல்லியபோது எனக்கு எழுந்த கோவம் இப்போதும் வருகின்றது, அனால் அப்போது அது கட்டாயம், இப்போது இங்கு அறிவுரை அனால் கட்டாயம் இல்லை.
எதோ ஒன்று நான் கற்ற நீச்சல் எனக்கு பயத்தை முதலில் கொடுத்தாலும் பின்னர் தன்னம்பிக்கையை கொடுத்து பயத்தை விரட்டி அடித்து பாம்புடன் நீந்தும் அளவிற்கு தைரியம் குடுத்தது, இந்த நகர்ப்புறத்து நீச்சல் வெறும் பகட்டு நீச்சல் போல என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது.

எது எப்படியோ போகட்டும் எனக்கு தெரிந்து கிராமத்தில் வளர்ந்து நகர்புறத்துக்கு வந்த அனைவரும் மற்றவர்களை விட வாழ்க்கையில் சிறிது அதிகம் கற்று வந்திருக்கின்றனர் என்று எண்ணுகிறேன் சரியா??, அவர்கள் வாழ்க்கையாய் கற்றதை நகர்ப்புறவாசிகள் பணம் குடுத்து கற்க வேண்டிய நிர்பந்தம் இங்கு என்று எண்ணுகிறேன், சரியா? இல்லை என் எண்ணம் தவறா? எதுவாக இருந்தாலும் சரி வாழ்க்கை அனைவருக்கும் ஒண்ணுதானே....

Wednesday, June 11, 2008

வகுப்பறையில் ஒரு நாள்

எட்டாவது படிக்கையில் நடந்தது இது, அதுவரை தமிழ் வழி கல்வி கற்ற என்னை ஆங்கில "வலி" (அப்போ அப்படித்தான் தோன்றியது எனக்கு) கல்விக்கு எட்டாவது படிக்கும்போது மாற்றினார் என் தந்தை.

பள்ளிக்கு வந்து ஒரு வாரம் இருக்கும், ஒரே பள்ளியில் மாற்றப்பட்டதால் பெரிதாக எதுவும் வருத்தமில்லை நண்பர்களை பிரிந்து விடுமே என்று (அதான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடி விடுவேனே பழைய வகுப்பு தோழர்களை பார்க்க)

அன்று ஒரு நாள் புவியியல் வகுப்பு, சுலோக்ஷனா டீச்சர் )இன்று வரை அவங்கள எனக்கு பிடிக்கவில்லை), பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள், நான் ஏதும் புரியாமல் பக்கத்தில் இருந்தவனை பார்க்க (அவனும் என்னைப்போல தமிழ் டு ஆங்கிலம் ) அவனும் என்னைப்பார்த்து முழித்தான், (டீச்சர் எப்போதுமே ஆங்கிலத்தில் தான் வகுப்பு எடுப்பார்கலாம்!!! ) பின்னர் அவன் ஒரு நோட்டை எடுத்து புள்ளி வைத்து கட்டம் போட்டு initial போட்டு விளையடுவோமே அது விளையாடலாம் என்றான்.

நாங்களும் சுவாரசியமாக விளையாட திடீரென்று அந்த டீச்சர் எங்கள் இருவரையும் எழுப்பி நிறுத்தினார், நன்றாக மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து பயந்து போனோம், அது போல நீங்கள் நியூ அட்மிசன் தான என்று கேட்க தலை ஆட்டினோம். பின்னர் அவர் மற்ற மாணவர்களை பார்த்து கூறியது இதுதான் "இங்க பாருங்க இந்த புது பசங்கல, நான் பாடம் நடத்தும்போது எப்படி நோட்ஸ் எடுக்கிறாங்க நீங்களும் இவ்ளோ வருசமா படிக்கறீங்க எவனாது இப்படி இருந்துருகீங்களா"

எங்களுக்கு ஒரே ஷாக், அனாலும் அப்படியே மைன்டைன் பண்ணிட்டோம்ல... பசங்க அப்ப எங்க கூட அவ்வளவா பேச மாட்டாங்க ஆனா எங்கள ஒரு மாதிரியா பார்த்து சிரிச்சாங்க பாருங்க அதிலிருந்து எங்களுக்கு அந்த வகுப்பில் இருந்த தனிமை குறைந்தது...

வகுப்பறையில் ஒரு நாள் -தொடரும்

ஜாதகம் நம்பலாமா??

எனக்கு மனதுக்குள் மிகப்பெரிய கேள்வி, ஜாதகத்தை நம்பலாமா? சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த ஜாதகம், ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, வயசு அதிகமாக அதிகமாக கோவிலுக்கு செல்வதும் குறைந்தது, பரீட்சை காலங்களில் எலோரும் போல கோவிலுக்கு செல்வது என இருந்தேன்.

இப்பொது கோவிலுக்கு செல்வதும் குறைந்து விட்டது, சென்னை வந்து 2 முறை பெசென்ட் நகரில் உள்ள புதிதாக கட்டப்பட்ட முருகன் கோவிலுக்கு மட்டுமே சென்றுள்ளேன். எனக்கோ கூட்டம் என்றால் ஒத்துக்காது அப்புறம் எங்க கோவிலுக்கு செல்வது.

சரி ஜாதகத்துக்கு வருவோம், நான் ஒரு எட்டாவது படித்துக்கொண்டு இருப்பேன் அப்போ எல்லாம் வீட்டில் அம்மா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று விடுவார்கள். ஒரு நாள் எங்க மாமா வீட்டிற்க்கு ஒரு ஆள் ஜாதகம் பார்க்க வந்தார், பின்னர் அவரை எங்க வீட்டிற்க்கு கூட்டி வந்து பார்க்க சொன்னார்கள். அவர் சொன்னதிலிருந்து முதலில் அண்ணன் ஜாதகம், அண்ணன் சுமாராக படிப்பார் என்று சொன்னார், எங்களுக்கு அதிர்ச்சி என்னடா மருத்துவம் படிப்பவரை சுமாராக படிப்பார் என்று சொல்கிறாரே என்று, இருந்தாலும் அதில் மற்றவர்களை விட எதோ சுமாராக படிப்பார் போல என்று சமாதான படுத்திகொண்டோம். பின்னர் பையன் இரும்பு சம்பந்தப்பட்ட படிப்பு மற்றும் தொழில் தான் இருப்பார் என்றார். எங்க அப்பா குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் பையன் காதல் திருமணம் செய்ய போகிறான் என்று சொன்னார். அதையும் குறித்து வைத்துக்கொண்டோம்.

பின்னர் அக்கா ஜாதகம் (அக்காவும் விடுமுறையில் வந்திருந்தார்) ஜாதகத்தை பார்த்த உடன் இந்த பெண்ணிற்கு படிப்பு வராது, 12 வரை மட்டுமே படிக்க வாய்ப்பு உள்ளது என்று அடுத்த குண்டு போட்டார், பின்ன அவரும் மருத்துவம் படிக்கும்போது அப்படி சொன்னா?? உண்மையில் எங்க வீட்டில் அவர்தான் ரொம்ப நல்லா படிப்பார். அவரிடம் என்னங்க சும்மா மாத்தி மாத்தி சொல்றீங்க என்று சொன்னா அவர் அதற்கு பையன் மருத்துவம் படித்தால் ஊசி இரும்பு தான இரும்பு சம்பந்தமான தொழில் தானனு முடக்கினார், காதல் கல்யாண மேட்டர் பொறுத்து இருந்து பார்த்தாயிற்று, எனக்கு தெரிந்து என் அண்ணன் கல்லூரியில் மௌனம் பேசியதே சூரியா மாதிரி இருந்தார், பொண்ணுங்கன்னா ஒத்துக்காது. அக்கா படிப்புக்கு பதில் பேசவே இல்ல இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பலாமா?

இன்னொரு விஷயம் உள்ளது, என் ஜாதகம் தப்பா எழுதி இருக்காங்க என்று சொல்லி மறுபடியும் ஒருத்தர் எழுதி குடுத்தார், அஅதில் அடுத்து வரும் 80 வருடங்களுக்கு சிறு சிறு குறிப்பாக குறிப்பு எழுதி உள்ளார். நான் எதையும் நம்பவில்லை அவர் குறிப்புப்படி 2002-2003 படிப்பில் மந்தமா இருக்கும் என்றார், நான் இரண்டாம் வருடம் படித்துகொண்டிருந்தேன், 5 பேப்பரில் கப்பு.
2003 இறுதியில் காவல்நிலையம் செல்வேன் என்று எழுதி இருந்தார், அதன்படி செல்ல வேண்டியதாயிற்று. அதிலிருந்து சிறிது நம்பிக்கை ஏற்ப்பட்டது.

இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பறதா வேண்டாமா?

அனாலும் எப்பலம் மனசு கஷ்டப்படுகிறதோ அப்போ ஜாதகத்தை நம்பலாமா என்று சஞ்சலம் மனதில், அம்மா வழக்கம் போல ஜாதகம் பார்த்துவிட்டு வந்து டைம் சரி இல்ல பார்த்து இருந்துக்கோ என்பார்கள், நானும் சரி என்று விட்டு உங்களுக்காக பாத்துக்கறேன் ஆனா ஜாதகம்லாம் நீங்களே பாத்துக்கோங்க எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வேன்.

டைம் நல்லா இருக்கிறது என்று சொன்னால் அதே வரிகளை பொய்யாக சொல்லி வைப்பேன். நல்லது நடக்கும் என்றால் நம்பலாம் தான?

கடவுள் நம்பிக்கையுமுண்டு அனாலும் கோவிலுக்கு செல்ல பிடிக்கவில்லை, நான் கடவுளை வணங்கும் பல பேரை பார்த்து இருக்கிறேன் எல்லோரும் தங்களுக்க்காகவும் குடும்பதிர்க்காகவும் வேண்டுகின்றனர், எவரும் அனைவரும் நல்லா இருக்கணும் என்றோ, தனது நாடு நல்லா இருக்கணும் என்றோ வேண்டுவது இல்லை, இதுவே எனது கோவில் வெறுப்பை குடுத்தது. என்ன இருந்தாலும் நானும் சராசரி மனிதன் தானே, நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல அதான் நல்லதுன்னா நம்பலாம், கெட்டதுன்னா நம்ப தேவை இல்லைனு முடிவெடுத்துள்ளேன் இது சரியா?

Tuesday, June 10, 2008

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி

எனக்கே அதிசயமா இருந்துச்சு, என்னடா நம்ம அலுவலகத்துல நம்ம குழு வெளிய சுத்த பிளான் போட்டு அதும் நடக்குதான்னு. எங்கள் அலுவலகத்தில் உட்கட்சி பூசல்களுக்கு பெயர் போன குழு எங்களுடையது. குழு ஆரம்பித்த முதல் இருந்தவன் என்ற முறையில் இந்த திட்டம் நிச்சயம் நடக்கணும் என்றால் அதற்கு கடவுள் புண்ணியம் வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடவும் புண்ணியம் நிறைய உள்ளது போல. ஒரு மாதத்திற்கு முன் திடீரென்று நம் அருகில்லுள்ள இடத்திற்கு சென்று வரலாம் என்று மீட்டிங் போட்டார்கள், அந்த மீட்டிங் லட்சணம் வழக்கம் போல எதையோ பேச வந்து எதையோ பேசி எங்கோ போனது, சரி இவங்க கிளம்பின மாதிரித்தான் என்று நினைத்து நீங்கள் எங்கு போனாலும் எனக்கு சம்மதம் என்று சொல்லி வெளிநடப்பு செய்தேன்.

அப்புறம் அது கோனே நீர்வீழ்ச்சி என்று முடிவு செய்யப்பட்டு அதற்கு எப்படி போவது என்று ஒரு வாரம் பேச்சு நடந்தது.(இரயிலா இல்லை பேருந்தா என்று பட்டிமன்றம் நடத்தாத குறை தான்) . நீங்க முடிவு பண்ணுங்க என்று விடுமுறையில் கிளம்பினேன், வருவதற்குள் பாண்டிச்சேரி என்று முடிவெடுத்து வேலை பாதி முடித்தாயிற்று. ( ஏண்டா உங்களுக்கு வெளிய போகணும் போய் தண்ணி அடிக்கனும்னா அதுக்கு தனிய போய்ட்டு வர வேண்டியது தான, எதுக்குடா இப்படி ஒரு பேர் வச்சு ஏற்கனவே முடிவு பன்னின எடத்துக்கு போகணும்னு பிளான் போட்டு களுத்தருகறீங்க??? (நமக்கும் பாண்டிக்கும் ஏற்கனவே நேரம் சரி இல்லை, இருந்தும் எல்லா திட்டமும் நடந்தது)

எல்லாம் முடித்து சனிக்கிழமை கிளம்பலாம் என்று திட்டம், அதற்குள் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது, அதற்கு சனிக்கிழமை பந்த் என்று சொன்னார்கள். நம்ம பசங்க எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்து அதே போல கிளம்பினோம். வழக்கம் போல கிளம்புகையில் எங்கடா இன்னும் ஒண்ணும் நடக்கலியே என்று நினைத்தேன். நினைத்து சில நேரத்தில் ஒருவர் ஏறுவதாக சொன்ன இடத்தை மாற்றி புரிந்து கொண்டு ( க்ரோம்பெட் பஸ் ஸ்டாண்ட் க்கு பதிலாக M.I.T கேட் சென்று விட்டோம்), வண்டியை திருப்பி கொண்டு வந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து வர வைத்தார். சில நேரத்திலேயே இன்னொரு நண்பர் வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார், ஏங்கடா இன்னும் கிளம்பவே இல்லை அதுக்குள்ள தண்ணி போட்டுட்டு வந்துடீங்களா என்று பார்த்தால், அவர் 2 நாட்கள் முன்ன அடித்த தண்ணி இப்போ வருதாம். 2 மணி நேரத்தை ஓட்டிவிட்டு பின்னர் அவரை கழட்டி விட்டு கிளம்பியது வண்டி, அறை மணி நேரத்தில் நின்றது பின்ன சாப்பிட வேண்டாமா?

சாப்பிட்டு கிளம்பி பாண்டி பொய் சேர மணி 12.30 . எது aurovill ஆம் தியானம் பண்ணுவாங்களாம் அங்க போனாங்க முதல்ல, ஏங்கடா நீங்க பண்ண போறது இது இல்லையேனு நெனச்சு வண்டியிலேயே உட்கார்ந்து இருந்தா, ஒரு மணி நேரம் கழிச்சு வந்தாங்க, இவங்க வந்ததுக்கும் பண்றதுக்கும் சம்பந்தமே இல்ல போங்க.

வண்டி கிளம்பியது அடுத்து சரக்கு வாங்கணுமாம், அன்னிக்கு பந்த் அதனால எல்லா கடையும் பூட்டிடங்க, விடுவங்களா பசங்க ஏற்கனவே ஆர்டர் செஞ்ச இடத்துல போய் வாங்க ஆச்சு ஒரு மணி நேரம். இதுக்கபுரம் இதுக்கப்புறம் தான் சாப்டனும் என்றால் சரக்கு அடிக்கும் முன்னாடி சாப்பிட கூடாதாம், ஏங்கடா எங்கள மனுசனா மதிங்கடா என்று ஒரு நாலு பேர் கதறினோம். எவனும்கண்டுக்கல, side dish வாங்க போனாங்க, அங்க வண்டி ஒரு மணி நேரம் நின்னுச்சு இதுக்கு இடைல பாதி பேர் ஆசிரமம் அப்புறம் எதோ கோவில்னு போய்ட்டு வந்தாங்க. நான் சத்தியமா வண்டிய விட்டு நகரலங்க.

என்னடா இன்னும் அரம்பிகலையேனு பார்த்தா என்ன வச்சுத்தான் ஆரம்பிப்போம்னு நான் மாங்கா வாங்க போன பாத்து நிமிஷம் தான் லேட் னு சொல்லி ஆரம்பிச்சாங்க. நமக்கும் கோவத்துக்கும் தான் ரொம்ப தூரமாச்சே அதான் ரொம்ப கூலா வண்டில உட்கார்ந்தேன், அடுத்து ஆரம்பிச்சுது பாருங்க, நீதான் லேட் பண்ணின நான் தான் பணினேன்னு அடிசுகிட்டாங்க. ஏங்கடா இதெல்லாம் வாங்கின தண்ணி உள்ள போன அப்புறம்தான பண்ணுவீங்க என்று பார்த்தா இப்பவேவானு யோசிச்சா அப்புறம் சொல்றாங்க தண்ணி அடிக்க டைம் இல்லையாம். ஏங்கடா அப்ப எதுக்குடா ஆசிரமம் தியானம்னு சுத்த சொன்னாங்க?

அப்படி இப்படினு எதோ ஒரு தீவு இருக்கு அங்க போலாம்னு சொல்லி அங்க போய் அரை மணிநேரம் ஓட்டி அப்புறம் போய் இறங்கினா மணி 4.30. ஆரம்பிச்சாங்க, கண்டபடி குடிச்சாங்க. மணி 6 ஆச்சு படகு வந்துடும் கிளம்புங்கடானு சொல்லி கிளம்ப வைக்க நாங்க நாலு பெரும் பட்ட பாடு இருக்கே ஐயோ.

அப்புறம் தான் ஆரம்பிச்சது படகுல ஏறும்முன்னாடி ரெண்டு பேர் பிளாட்.தூக்கி போட்டு ஏத்துனா எடுத்தாங்க பாருங்க வாந்தி, மாத்தி மாத்தி எடுகிறாங்க. இதுல ஒருத்தன் அண்ணா நான் உங்க ஜூனியர் என்ன வீடு வரை கொண்டு சேர்ப்பது உங்க பொறுப்புனு பேசறான். ஏண்டா உங்களுக்கு சேவகம் பண்ணத்தான் எங்க வீட்ல பெத்து விற்றுகாங்களா என்று நெனச்சுகிட்டே அவன பார்த்தேன், அவன் இதே டயலாக்க இன்னொருத்தன் கிட்ட சொன்னான். அட போதைல கூட பையன் தெளிவா இருக்கான்னு நெனச்சேன்.

இவங்கள வண்டில கொண்டு வந்து போடறதுக்குள்ள ஐயோ சாமி போதும்டா என்று இருந்தது. இதுல ஒவ்வொருத்தனும் டிசைன் டிசைன் அஹ வாந்தி எடுக்கிறான், உளறல் வேற. வண்டி கிளம்பியது பெரும்போரட்டதுக்கு பிறகு. நிங்க ஒவ்வொருத்தனும் ஜன்னல் வெளியதான் கிடகிறாங்க, வாந்தி எடுக்கணுமாம், டாய் எதுத்த மாதிரி வரவன் தலைய எடுத்துகிட்டு போய்டுவாண்டா!!!. எவனும்கேட்க்கல.. ரொம்ப கடி ஆகி எப்படியோ போங்கடான்னு சொல்லி உட்காந்துட்டேன். வழில 5 தடவ நிறுத்தி வாந்தி எடுத்தாங்க.
வீடு வந்து சேரும்போது மணி 11.... தயவு செஞ்சு குடிகாரங்க கும்பலா போனா நீங்க தனியா போய் மாட்டிக்காதீங்க. நீங்க வீட்ல அப்பா அம்மாக்கு கூட இவ்ளோ பணிவிடை செஞ்சு இருக்க மாட்டீங்க அவ்ளோ செய்ய வச்சுடுவாங்க.

Monday, June 9, 2008

பொறியியல் முதல் வருடம்,விடுதியின் முதல் நாள்

பொறியியல் முதல் வருடம், விடுதியின் முதல் நாள் காப்பாளரிடம் சென்று கையொப்பம் இட முயலும்போது அந்த கேள்வி என்னை தொட்டது, அப்பா எங்கே??

நான் அவர் வரலீங்க என்று சொல்ல அதற்கு அவர் அப்பா வரலியா? அப்போ ரூம் ஒதுக்க முடியாதுனு குண்ட தூக்கி போட்டார்.

கிளம்பும்போது எங்க அப்பாட்ட சொன்னேன் விடுதி வரை வந்து விட்டுட்டு போங்க னு, அவர்தான் இந்த பஸ் தான் காலேஜ்கு நேரா போகுதே அப்புறம் எதுக்கு நான் வரணும்னு கேட்டுட்டு ஈரோட்டிலேயே இறங்கி என்னை மட்டும் பஸ் எத்தி விட்டுட்டார்.

சரி அத விடுங்க, நாம சும்மா இருப்பமா காப்பாளரிடம் ரூம்லாம் ஒதுக்கியாச்சு கையெழுத்து மட்டும் போட்டு ரூம்க்கு போனா போதும்னு அன்னிக்கே சொன்னாங்கனு சொனேன். அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்தார், பையன விடுதில கொண்டு வந்து விட கூட உங்க அப்பா வர மாட்டாரான்னு கேட்க, எனக்கு கோவம். சார் என்ன சேர்க்க அவர் தான் வந்தார், சேர்க்கைக்கு அப்புறம் மூன்று நாட்கள் விடுமுறை அதனால் நான்தான் வீட்டுக்கு சென்று இன்னிக்கு வரலாம்னு சொன்னேன். இன்னிக்கும் நான் தான் எங்க அப்பாட்ட வர வேணாம்னு சொன்னேன். இதுல்ல என்னங்க தப்பு என்று கேட்டேன். அப்பத்தான் சுற்றும் முற்றும் பார்த்தேன், எல்லா பசங்களும் அவங்க அப்பா,அம்மா சில பேர் சுற்றம் சூழ வந்திருந்தார்கள்.

விடுதி காப்பாளர் எனக்கு தெரிஞ்சு விடுதிக்கு வந்து சேர தனியா வந்த முதல் ஆல் நீதான் என்று ஒரு பாபட்ட குடுத்தார், அது கூட நீ ரொம்ப பேசற, mechanical department தான, வா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அறை ஒதுக்கி குடுத்தார். "அறை எண் A15 இல் நான்". எனக்கு மின்னலே பார்த்த effect இல் மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட் என்பது ஒரு கனவு, ஏனென்றால் நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்திலேயே அப்படிதான் இருந்தோம்.

அறைக்குள் வந்தாச்சு இனி மற்ற 3 பேர் வரணும், எனக்குன்னு ஒரு கட்டிலையும், பொருட்கள் வைக்க அலமாரியையும் பிடித்துக்கொண்டு மற்றவர்களை எதிர்நோக்கி இருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு தந்தையும் மகனும் வந்தார்கள். வந்தவுடன் அவர்களாக பேசிக்கொண்டனர்,கட்டிலை அப்டி நகர்த்திவிடலாம், மேசையை சன்னலுக்கு அருகில் போட்டால் வெளிச்சம் நல்லா வரும் படிக்க என்றெல்லாம். எனக்கு தூக்கி வாரி போட்டது, சிக்கினோம்டா நல்லா என்று நினைத்தேன். சிறிது நேரத்தி அந்த தந்தை ரூம் க்கு இன்னும் பூட்டு வாங்க வில்லை என தெரிந்து 4 சாவியுடன் கூடிய பூட்டை வாங்க சென்றார். பின் அவனிடம் பேச்சு குடுத்தேன், பெயர் ஹரிஹரன், அவன் இந்த பேச்செல்லாம் எங்க அப்பாவிற்காக கண்டுக்காதீர்கள் என்று சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

சிறிது நேரத்தில் அடுத்த நபர் வந்தார்,பெயர் விஜயகுமார் (பின்னாளில் தல என்று அழைக்கப்பட்டார், காரணம் அவர் ஊர் பெட்டவாய்தலை, நீங்கள் வேற காரணம் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல) அவருடன் அவர் அண்ணன். சில நேரத்தில் அவர்கள் இருவரும் கிளம்பிவிட, ஹரி அப்பாவும் கிளம்பிவிட (ஹரிக்கு பின்னாளில் மாமா என்று பெயர் வந்தது ) நாங்கள் இரவு சாபத்தை (அதாங்க சாப்பாட்டை) முடித்துக்கொண்டு காலையில் எப்போ எழுந்துகொள்ளலாம் என்று பேசினோம். ஹரி ஒரு 6.30 to 7 மணிக்கு எழுந்து கிளம்பலாம் என்று பேசி அலாரம் வைத்து தூங்கினோம். திடீரென்று சத்தம் வெளியே கேட்டது, எல்லோரும் நன்றாக பேசுவதும் நடப்பதும் என்று, சிறிது நேரத்தில் ஹரியும் எழுந்து விட்டான், மணியை பார்த்தால் 6.30 அலாரமும் அடிக்கவே எழுந்து சில நேரம் உட்கார்ந்து பின் கிளம்புவதர்க்கு செல்ல கதவை திறந்தால் வெளியே பெரிய அதிர்ச்சி. ஆமாம் நாங்கள் மட்டுமே அப்போது தூங்கி எழுந்து வெளியே வர நாங்கள் பார்த்த அனைவரும் எழுந்து கிளம்பி கையில் நோட்டு புத்தகத்துடன் கிளம்பி விட்டனர், அதுமட்டும் இல்லாமல் அவர்கள் எங்களை பார்த்த பார்வை, ஐயோ மிக கேவலமான பார்வை. என்ன இருந்தாலும் முதலாம் அண்டு மாணவர் என்பதால் அனைவரையும் ஒன்றாக மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்பது காவலாளிக்கு விடப்பட்ட கட்டளை. நாங்கள் கிளம்பி வரும் வரை அவர்கள் அனைவரும் காத்திருந்தனர் (எங்களுக்காக இல்லை அனைவரும் 8 மணிக்கு மட்டுமே கிளம்பி வெளியே செல்ல வேண்டும் என்பது அங்க விதி )

இவ்வாறாக எனது முதல் நாள் ஆரம்பித்தது.. இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது, மெதுவாக அதையெல்லாம் பார்க்கலாம்.

Friday, June 6, 2008

நேற்றிலிருந்து நான் கோபப்பட்ட தருணங்கள்

நேற்றிலிருந்து நான் கோபப்பட்ட தருணங்கள் மற்றும் ஆட்கள்.


வண்டியில் சென்றபோது signal லில் நிறுத்த கோட்டுக்கு முன் நின்று கொண்டிருக்கையில் பின்னால் நின்ற வாகன ஓட்டிகள் விலகி முன் சென்று நிற்குமாறு சொன்ன போது.


சொன்ன தேதியில் வண்டியை சரி செய்து தராமல் நண்பனிடம் வண்டி ஓசி வாங்க வைத்த மெக்கானிக் மீது.


கடற்கரையில் நண்பர்களுடன் வந்திருந்த பெண்களை சில காலி பையன்கள் கிண்டல் செய்து மோசமான வார்த்தைகளில் கிண்டலடித்த பொழுது.


வீட்டிற்க்கு திரும்புகையில் இரவு வண்டி நிறுத்தும் இடத்தில் கொசுவலை கட்டி தூங்கி என்னை மிகுந்த சிரமத்துகிடையில் என் வண்டியை நிறுத்த நிர்பந்தித்த வீட்டு காவலாளி மீது.


காலையில் வெளியே செல்லும்முன் மின்விசிறியை நிறுத்தாமல் சென்ற அறை நண்பன் மீது.


தொலைபேசி வசதி இருந்தும் சொல்லாமல் சமைக்க வராத என் வீட்டு சமையல் கார பெண்.


சாப்பாடு வாங்க செல்கையில் பில் போட்டுவிட்டு எவனிடமோ குருவி திரைப்படத்தை விமர்சித்து கொண்டு பணம் வாங்காமல் இருந்த சிப்பந்தி மீது.


இரவில் படுக்கும்முன் எதற்கு எடுத்தாலும் புலம்பும், கோவப்படும் என் பழக்கத்தின் காரணமாக என்மீதும்.


காலையில் அலுவலக பேருந்தில் செல்கையில் மற்றுமொரு எனது அலுவலக பேருந்து அச்சுறுத்தும் முறையில் அருகில் வந்தபோது.


காலையில் இருந்து என்னை ............................................................................................................................. மீது.


எந்த நடிகர் மீதும் நடிகை மீதும் அபிமானமில்லாமல் இருப்பதால் என்னை ஓட்டிய எனது சக ஊழியர் மீது.


எனது அம்மாவிற்கு போன் செய்யும் போது ஒருவாரமாக ரிப்பேர் ஆகி இருக்கும் வீட்டு போனை சரி செய்யாத BSNL நிறுவனத்து செயலை நினைக்கையில்.


எப்பவுமே பெண்களை மிக மோசமான பார்வையிலும் , மிக மோசமான பேச்சிலும் கொச்சைப்படுத்தும் என் சக ஊழியர் இன்றும் அவ்வாறே செய்த போது.


குடிப்பதற்காகவே நாளை அலுவலகத்தில் என் குழு மேற்கொள்ளும் பயணத்தில் என்னையும் வர சொல்லி கட்டாயபடுத்தும் என் குழு நண்பர்கள் மற்றும் எதிரிகள் மீது.


இன்று காலை நடக்க இருந்த என் பள்ளி நண்பனின் திருமணத்தை மறந்த என் நியாபக சக்தி மீதும்....


என் கோவத்தை குறை என்று என் நண்பர்கள் எப்போதும் சொல்லும் போது...


இந்த மிக சிறிய தருணங்களில் நான் கோபப்படுகிறேன்.


நான் விரும்பி படித்த தமிழை இப்போ எழுத்துப்பிழை இல்லாமல் எழுத தடுமாறும்போது என்மீதே எனக்கு கடுங்கோவம்.

Thursday, June 5, 2008

ஆட்டோமொபைல்+ FIAT PALIO

நான் பதிவு படிக்க ஆரம்பித்த நாளில் இருந்து ஆட்டோமொபைல் பற்றி எதும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் மிக மிக குறைவாக தான் உள்ளது.

அதனால் நான் எழுதலாம் என்று நினைக்கிறேன், முதல் பதிப்பாக எனக்கு மிகவும் பிடித்த car பற்றி எழுதப்போகிறேன்.

பலருக்கு car என்றவுடன் நினைவிற்கு வருவது ambassidor , அந்த காலத்தில் அது மட்டும் தான் car. இப்போ எவளவோ மாடல் வந்துவிட்டது அதற்கு போட்டியாக.

நான் கார் பற்றி யோசிக்கும்போது முதலில் எனக்கு புடித்த கார் டாடா எஸ்டேட். பெருசா லாரி மதிரிஇருக்கும். அப்புறம் சமீப காலத்தில் கார் பற்றி யோசித்து வாங்கினா என்ன வாங்கலாம்னு பார்க்கையில் எனக்கு பிடித்து fiat palio.
அதற்கு நிறைய காரணங்கள், அதன் நிறம் மற்றும் டிசைன் முதல் காரணம். பலர் பார்த்திருக்கலாம் அடிக்கிற கலர்ல நிறைய கார் இருக்கும் அனா நல்லா இருக்காது. அனா இந்த கார் எல்லாம் அடிக்கிற கலர்லதான் வந்தது அதும் மிக நல்ல இருக்கும் பார்ப்பதற்கு. இன்னும் கூட the hottest car in this segment என்று இதற்க்கு பெயர். காரணம்தான் டிசைன். அதை வடிவமைத்தது Giorgetto Giugiaro இவர் designer of the century என்ற பட்டத்தை 1999 ல் வாங்கியவர்.என்ன இருந்தும் என்ன இந்த கார்க்கு மக்கள் மத்தியில் ராசியில்லா கார் என்று பெயர். வழக்கம் போல யாருக்கும் புடிக்காத ஒன்னு எனக்கு புடிச்சு போச்சு. இத லிஸ்ட்ல நிறைய இருக்குங்க, மஜ்னு படத்து கதாநாயகி உட்பட.
இதன் என்ஜின் இரண்டு வகையில் வந்தது, அதாவது 1.2 L , 1.6L. 1.2 என்றால் 1200 cc, இதுல 3 வகை. நம்ம ஊர்ல கார் என்றால் முதல்ல பாக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்ளோ கிலோ மீட்டர் ஓடும் என்று. அதில் இது என்னமோ மற்ற கார்களை விட கம்மிதான். அதுக்கும் காரணம் உண்டு ஏனென்றால் இந்த கார் வந்த காலகட்டத்தில் சந்தையில் இருந்த கார்கள் எல்லாம் ஒன்று சிறிய கார்கள். maruti 800, alto,omni, santro, zen. அல்லது பெரிய கார்கள் accent, esteem, cielo இந்த மாதிரி. நம்ம கார் இது இரண்டுக்கும் இடையில் வரும் மாடல். பெரிய சின்ன கார் அல்லது சின்ன பெரிய கார் எப்படி வேணும்னாலும் வச்சுக்கலாம். இப்ப swift, getz இருக்குல அந்த லிஸ்ட ஆரம்பிச்சு வச்சதே இந்த மாடல் தான். அதனால் ஒரு லிட்டர்க்கு 13-15 கிலோமீட்டர் போகும். சின்ன கார் என்றால் 800 - 1000 cc என்ஜின் அதனால் 18 கிலோமீட்டர் போகும். நம்ம ஊர் மக்கள் அதையும் இதையும் யோசிச்சு இந்த கார் mileage தராது என்று சொல்லி ஒதுக்கினர். ஓரளவிற்கு உண்மையும் கூட என்றாலும் மற்ற விசயத்தில் இந்த கார் மற்ற கார்களை விட பலமடங்கு சிறந்தது.
வடிவமைப்பில், தரத்தில் இந்த கார் மிக சிறந்தது, இன்றும் கார் கதவை மூடினால் 'தப்' என்ற சத்தம் ஜப்பானிய கார்களுக்கு அடுத்து இந்த காரில் மட்டுமே வரும், அந்த அளவிற்கு உறுதியானது. பாதுகாப்பு விசயத்தில் மிக சிறந்தது அதற்கு உதாரணம் side beam எனப்படும் பக்கவாட்டு பட்டை இந்த கார்களில் உண்டு.
வந்த கொஞ்ச நாளில் டீசல் மாடல் வந்தது, அதன் பிறகு mileage குறைவு என்றதால் என்ஜின் மற்றம் செய்து Palio NV என்று வந்தது.1.6 என்ஜின் என்பது வேக பிரியர்களுக்கு, 100 BHP க்கு அதிகமான சக்தி கொண்டது. இது மிக கம்மியான தூரத்தையே தரும் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால்.
வந்த முதல் வருடத்திலேயே "வருடத்தின் சிறந்த கார்" என்ற பட்டதை பெற்ற கார், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கார் ஆனால் சில வருடங்களில் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதற்க்கு நம் மக்களின் தவறான அணுகு முறையும்கூட காரணம் ஆனாலும் fiat தகுந்த பராமரிப்பு பணிகளை செய்ய இயலவில்லை அதுதான் முதலில் அவர்களுக்கு அவர்களே வைத்துக்கொண்ட ஆப்பு. இந்த கார் வாங்கினவர்கள் ஆனால் அடிக்கடி பராமரிப்புக்கு வரும் பிரச்சினைகளை கொண்டிருக்கவில்லை.
எப்படியோ இவர்கள் மீண்டும் இந்த காரை தயாரிக்க ஆரம்பித்து உள்ளனர், இம்முறை TATA நிறுவனத்துடன் கூட்டு நடை முறையில் வருகிறது. தயாரிபூடு FIAT நிறுவனம் நிறுத்திக்கொண்டு, சந்தைப்படுத்துதல் விற்பனை மற்றும் பராமரிப்பு பணிகளை TATA நிறுவனம் பார்த்துக்கொள்ளும். பராமரிப்பு பணிகளிலும் நல்ல முன்னேற்றம் என்று கேள்வி.
மேலும் FIAT நிறுவனம் மற்ற கார்களையும் வெளியிட உள்ளதால் நீண்ட கால நோக்கில் அவர்கள் பராமரிப்பு பணிகளை திறம்பட மேம்படுத்தும் திட்டத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.
தற்போது சக்கை போடு போட்டுகொண்டிருக்கும் SWIFT diesel மாடல் கார்களில் FIAT என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதே என்ஜின் FIAT Palio Multijet என்ற மாடல் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. என்ன இருந்தும் என்ன இந்த கார் தவறான நேரத்தில் வந்த சரியான கார் என்று சொல்கிறார்கள் கார் நிபுணர்கள்.
என்னைப்பொருத்தவரையில் நான் வங்கபோகும் கார் இதுதான். இந்த முடிவை நான் எடுத்தவுடன் என்னை ஏளனமாக பார்த்தவர்கள் பலர், சிலர் என்னை பகிரங்கமாக மற்றவர் மத்தியில் இறக்கி பேசுகின்றனர். சிலர் நீ எப்பயுமே இப்படித்தான் எது மொக்கையாக எல்லோருக்கும் புடிக்காம இருக்கிறது என்றால் அதுதான் உனக்கு புடிக்கும், இந்த கார்க்கு மறுவிற்பனை மதிப்பு மிக குறைவு என்று சொல்கிறார்கள். கார் வாங்கி ஓட்டுவதற்கு அதை வாங்கும் முன்னாடியே அதை விற்பதைப்பற்றிய எண்ணம் இருக்கும் இவர்கள் எப்படி அதை அனுபவித்து ஓட்டுவார் என்று தெரியவில்லை. எவர் எப்படி சொன்னாலும் எனக்கு கவலை இல்லை, எனக்கு எது மகிழ்ச்சி தருமோ அதை மட்டுமே செய்வதாக முடிவெடுத்து பல நாட்கள் ஆகின்றன.
இந்த பதிவு முழுக்க முழுக்க தொழில்நுட்ப விளக்கங்களுடனும், குறிப்புகளுடனும் இல்லை, கூடிய விரைவில் அதனையும் சேர்த்து தர முயல்கிறேன்.
இந்த பதிவோ எந்த விதத்திலும் மேற்கொண்ட கார்க்கு விளம்பரமோ தடையோ கிடையாது.

Tuesday, June 3, 2008

என்னோட விடுமுறை ரொம்ப நல்லா முடிந்தது பாகம் II

மோகன் அண்ணா தான் முதலில் வண்டியை ஓட்டினார் . மேட்டுப்பாளையம் வரையில் நிறுத்தாமல் வந்து அங்க நிறுத்தி ஒரு டி அப்புறம் ஒரு பப்ஸ் வாங்கி குடுத்தார்கள். அப்புறம் மாமா வண்டிய எடுத்தார். நல்ல தான் ஓட்டுகிறார் அனாலும் சில சமயம் எனக்கு பயமா இருந்தது. அப்படி இப்படின்னு நைட் 8 மணிக்கு கூடலூர் வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் மைசூர் போவதான திட்டம். போகும் வழியில் முதுமலை வழியாக போவதால் காட்டு விலங்குகள் இருக்கக்கூடும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காலையில் கிளம்பினோம், அண்ணா வரவில்லை அவர்க்கு அங்கு அரசாங்க மருத்துவமனையில் பழைய வேலைகள் முடிக்க பட வேண்டி இருந்ததாம். போகும் பொழுது ஒற்றை யானை நின்று கொண்டு எல்லோரையும் மிரட்டி கொண்டு இருந்தது அனால் யாரும் அதற்கு பயப்படுவது போல் இல்லை. அப்புறம் கொஞ்சம் மான் மயில் எல்லாம் அங்கங்கு இருந்தது. முதலில் மைசூர் என்றவுடன் பார்ப்பதற்கு நிறைய இடம் உள்ளது போலும் என நினைத்தேன். சாமுண்டீஸ்வரி கோவில்னு சொன்னாங்க அங்க போனா வெயில் காச்சி எடுத்து அதையும் மீறி மாமா கோவில் உள்ள போகணும்னு அன்பு கட்டளை இட்டதால போய்ட்டு தெரிச்சு ஓடி வந்தேன். நமக்கு இந்த கூட்டமா இருக்கிற கோவில்லாம் புடிக்காது அதனாலேயே இன்னும் திருப்பதி போனது இல்லைனா பாத்துக்கங்க, அப்படிப்பட்ட என்ன இங்க இழுத்து வந்துட்டு அடுத்து அரண்மனை போலாம் னு சொன்னாங்க. அங்க போன கேமரா எடுத்து போக முடியாதுன்னு 10 ரூபாய் வாங்கி புடிங்கி வச்சுகிடாங்க. அரண்மனை நல்லாத்தான் இருந்துச்சு. அந்த காலத்துல நல்லாத்தான் வாழ்ந்துருக்கார் அந்த ராஜா. அத்தன ரூம் பாவம் வீட்ட பூடிகிட்டு ஊருக்கு போலம்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லா ரூமையும் பூட்டினாதான் கிளம்ப முடியும் போல. அதும் அங்கங்க ஒரு விநாயகர் சிலை வச்சு அதுக்கும் ஒரு உண்டியல் வச்சுருக்காங்க. அது ராஜா வேலையா இல்ல அங்க வேலை பாக்கற ஆளுங்க வேலையா தெரியல. உள்ள ஒரு காடும் காட்டை சேர்ந்த மிருகங்களும் இருக்குங்க....

அப்புறம் கிளம்பி பிருந்தாவன் கார்டன்னு சொன்ன இடத்துக்கு போனா கேமரா கட்டணம் 50 வாங்கி அனுப்பினாங்க. எதுக்குடா உள்ள வந்தோம்னு சொல்ற அளவுக்கு நிலைமை. அடிச்சு புடிச்சு கிளம்பி வந்து முதுமலை போலாம்னு வந்த 5 மணியோட உள்ள ride முடிஞ்சுடுச்சாம். அந்த ride போய்ட்டு வந்ததுல ஒரு அம்மா யானை குட்டினு சொல்லி எல்லோரும் ஒன்னு பார்த்தோம் கடைசில அத காட்டு பன்னினு சொல்லிட்டாங்க அனா அது யானை குட்டி மாதிரி தான் இருந்துச்சுன்னு புலம்பிகிட்டே போச்சு..

அடுத்த நாள் காலைல முதுமலை ride. போய் ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி போனா ஒண்ணும் காணும், கடைசில பழக்க படுத்தின யானைய காட்டுகுள்ள கூட்டி போய் நிக்க வச்சுருந்தாங்க அனாலும் அதுல ஒரு தப்பு பண்ணிட்டாங்க நம்ம வனத்துறை அதிகாரிகள்.கழுத்துள்ள கட்டின மணிய அவிழ்க்க மறந்துட்டாங்க...

போதும் னு சொல்லி கிளம்பி வந்து அண்ணாவை கூட்டிகிட்டு ஊட்டி கிளம்பியாச்சு..

இனிதான் நம்ம சனி இன்னும் விளையாட ஆரம்பிச்சார்... அது அப்புறம்....

என்னோட விடுமுறை ரொம்ப நல்லா முடிந்தது

சரியாக 11 நாட்கள் விடுமுறை, வழக்கம் போல திட்டம் போட்டு பயணங்களை துவக்கினால் எல்லாம் கெட்டு போகும் என்பது நிஜமாகியது. வியாழன் மதியம் கோயம்புத்தூர் செல்வதாக இருந்து கடைசியில் அன்று மாலை சென்றேன். அன்று நண்பன் ராஜாவை சந்திப்பதாக ஏற்பாடு, அப்படியே சந்தித்து அன்று இரவு பழைய கதைகளை பேசி முடித்து தூங்கும்போது மணி 1. நம்ம ஆள் எதோ மேல்படிப்பு படிக்கிறார். வீட்ல கம்பெனிக்கு MD அக இருந்தார் கொஞ்ச நாள் முன்னாடி, அப்புறம் படிக்க வந்து இப்ப படிப்ப முடிச்சுட்டார். எல்லாம் பேசி முடிச்சு காலைல என்ன பஸ் ஸ்டாப்ல கொண்டு வந்து விடுடா னு சொன்னா, பையன் காலைலன்னா 10 மணிக்கு ஓகே வா னு கேட்கறான். காலைல கல்யாணம் 6 மணிக்கு போகணும் என்று சொல்ல, அவன் எனக்கு காலைலனா 9 மணிக்கு மேல தான்னு சொல்லி அதிர வச்சான். எப்படியோ அவன எழுப்பி என்ன கொண்டு வந்து பஸ் ஸ்டாப் ல விடும்போது மணி 6. அப்புறம் பஸ் புடிச்சு, கால் டாக்ஸி புடிச்சு மண்டபத்துக்கு போய் நின்னா நமக்கு தெரிந்த பசங்க யாரும் இல்ல. அப்புறம் சந்தீப் வந்து சேர்ந்தான். மற்றவர்கள் தாமதமாக சென்னையில் இருந்து வருவார்கள் என்று தெரிவிக்கபட்டிருந்தது... கடைசியில் எல்லோரும் ஊட்டி செல்வதாக ஏற்பாடு.. இப்பதான் நம்ம திட்டம் அட்டம் கான ஆரம்பித்தது, சென்னையில் இருந்து யாரும் வரவில்லை காரணம் அவர்கள் ஏறவேண்டிய பேருந்து சரியான நேரத்துக்கு கிளம்பியது தான். அப்புறம் அது இதுன்னு திட்டம் போட்டு எல்லாம் சொதப்ப நான் வெள்ளி இரவே கரூர் வரவேண்டியதாயிற்று. சனி கிழமை லேட்டா எழுந்து அக்காவுடன் புடவை எடுக்க கிளம்பினேன். முதலில் K.P.N போனோம், அப்போதே சொன்னாங்க போய் உட்கார் நான் எடுத்துட்டு வரேன்னு நல்ல வேலை 30 நிமிடத்தில் ஒரு புடவை முடிஞ்சது, அடுத்த புடவைக்கு தைலா. அந்த கடை நமக்கு புடிக்கும் சரி நீ புடவை பாரு நான் போய் எது சட்டை கிடைக்குமான்னு பார்க்கிறேன்னு சொல்லிடு போய் 2 சட்டை எடுத்தேன். கடை பையன் சும்மா சொல்ல கூடாது நம்மள எங்க நல்ல சட்டை எடுத்து விடுவானோ என்று பிளான் பண்ணி சார் என்ன சட்டை என்ன கலர் னு torture செஞ்சு கவிழ்த்தான். ஒரு வழியா எடுத்து வந்து வழக்கம் போல card எடுத்து தேச்சுக்க சொல்லி நீட்ட, அவங்களும் தேய் தேய் னு தேச்சாங்க.

நம்ம card ஏற்கனவே ஒரு மாதிரி, உடனே அவர் card சரி இல்ல வேற குடுங்க சொன்னார், கரூர் ல card வாங்கற கடையே ரொம்ப கம்மி அதுலயும் இப்படியா னு நெனச்சு இருந்த எல்லா கார்டு, விசிடிங் கார்டு உட்பட குடுக்க அவர் தன் கடமையை செய்தார். நல்ல மெஷின் என்ன செலவு பண்ண விடவில்லை. தப்பிச்சம்னு சொல்லி வந்தா அக்கா புடவை எடுத்து முடிசுட்டங்க சந்தோசத்துல வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் பள்ளி நண்பர்கள் சந்திப்பு அனா கிளம்பும்போது மாமா சொன்னார் 12 மணிக்கு வந்திரு ஊட்டி கிளம்பல்லாம்ன்னு. அஹா மறுபடியும் ஆரம்பம் டா நமக்கு சனினு நெனச்சு சரி சரி தலை ஆடிகிட்டே கிளம்பினேன். 10 மணின்னு சொல்லிடு ஒரு பயலும் கிளம்பல... அப்படி இப்படி னு 10.30 க்கு வர ஆரம்பிச்சாங்க அப்படியே பழைய நண்பர்கள பார்த்து பேச ஆரம்பிச்சா மணி 11.30. அப்புறம் எங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லிட்டு கிளம்பிட்டேன். சரியா 12.30 க்கு வண்டி ஊட்டி கிளம்பியது, நான், அண்ணா, மாமா அப்புறம் மோகன் அண்ணா.கிளம்பின அப்புறம் தான் தெரியும் கார்ல பாடு கேட்கறதுக்கு FM தவிர வேற எதுவும் இல்லன்னு। அப்பயே நெனச்சேன் நமக்கு சனி சாணி எடுத்து அடிச்சுட்டான்னு.
பத்து நாள் விசயங்கள ஒரு நாள்ல எழுத முடியாது அதனால மற்றது அப்புறம்