Thursday, October 17, 2019

ஐஸ்மேன்

2012 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டு, கடினமான வேலைப்பழு மற்றும் சூழ்நிலைகளை கடந்து வந்து ஒரு நல்ல நிலையில் இருந்த வருடம்.  வருடக்கடைசியில் திருமணமும் ஆகி இந்த வருடத்தை நன்றாக்கியது.  2010இல் இருந்த காரை விற்கவேண்டிய காலகட்டம், பணரீதியாக கடினமான ஆண்டாக இருந்தி 2012ல் திருமணம் நிச்சயக்கப்பட்டவுடன் கண்டிப்பாக ஒரு கார் வேண்டும் என் முடிவெடுத்து வாங்கினது ஃபியட் பாலியோ. இரண்டாவது உரிமையாளராக வாங்கியது. திருமணத்துக்கு முன் சிலமுறை மட்டுமே உபயோகப்படுத்தினேன், வீடி கிரகப்பிரவேசத்துக்கு ஒரு வேலையாக போகும்போது பஞ்சர் ஆனதின் பின் என் மனைவி எடுத்த முடிவு புது கார் வாங்கவேண்டும் என்பது.

வீடு வாங்கிய செலவு, திருமண செலவு என கையைக்கடிக்கும் நேரத்தில் இந்த எண்ணமே வரவில்லை எனக்கு. ஆனால் இதை சொன்னதில் இருந்தே மணதில் ஒரு நெருடல், என்னவள் தெளிவாக இருந்தாள். ஆம் கார் வாங்கவில்லை என்றால் நான் சந்தோசமாக இருக்கமாட்டேன் என புரிந்து என்னை வற்புறுத்தி, முன்பணம் உதவி செய்து வாங்கவைக்க மெனக்கெட்டாள்.

எந்தகார் வாங்க எனும் குழப்பமே எனக்கில்லை, ஃபியட் ரசிகனான எனக்கு ஃபியட்டில் எங்க பட்ஜெட்டில் வாங்கி இருந்தது ஃபியட் புன்டோ மட்டுமே. எங்களுக்கிருந்த குழப்பம் எந்த மாடல் மற்றும் எந்த வண்ணம் மட்டுமே. பாலியோவில் ஏபிஎஸ் இல்லாதது பெரும்குறை எனக்கு (அனுபவம் அப்படி). பாதுகாப்பே முதன்மை,அதனாலேயே ஃபியட் ரசிகனானேன். புன்டோவில் அதிகபட்ச வசதிகள் உள்ள மாடலை முடிவுசெய்தபோது இன்னொரு குழப்பம்,  ஒருவருடம் மந்தையா லீனியா அதிகபட்சஸ்மாடலுக்கு முந்தைய மாடல் தள்ளுபடியில் கிடைத்தது. எங்களின் மக கடினமான முடிவே இதல் எதை தேர்ந்தெடுப்பது என்பதே,கடைசியில் பாதுகாப்பு மற்றும் பைசா இரண்டின் முடிவால்  புன்டோ என இறுதியாயிற்று.


முன்பணம் மற்றும் தவணை எல்லாம் பார்க்கும்போது அகளக்கால் வைப்பதாகவே தோன்றியது  ஆனால் வைப்பது என முடிவெடுத்து வாங்கியது தான் என்னுடைய புன்டோ.  நான் சிகப்பென்று சொல்ல,அவள் கருப்பென்று சொல்ல கடைசியில் வெள்ளைநிறம் மட்டுமே எங்களிருவருக்கும் ஆட்சேபனை இல்லாது இருந்தது.  வேளச்சேரி கன்கார்ட் டாடா டிலரிடம் இருந்து 2012 அக்டோபர் 17ஆம் தேதி எங்கள் புன்டோவை பெற்றுக்கொண்டோம். அதே தினம்தான் எனக்குப்பிடித்த ஃபார்முலா ஒன் ரேசர் கிமி ராய்க்கினன் என்பவருக்கும் பிறந்தநாள்,என்னைப்போலவே அவரும் இடக்கை பழக்கமுள்ளவர் மேலும் ரசிகர்கள் அவரை ஐஸ்மேன் என்று அழைப்பதால் என்னுடைய காருக்கும் ஐஸ்மேன் எனி பெயரிட்டேன்.



அன்றிலிருந்து எங்களுடைய மகிழ்வான வாழ்க்கையில் ஒரு அங்கமானான் ஐஸ்மேன். எங்களின் இந்த  ஏழு வருட வாழ்க்கையில் எல்லா மகிழ்வான நிகழ்விலும் ஐஸ்மான் பங்குள்ளது, எல்லா மோசமான,சோகமான நிகழ்வையும் மறக்க அல்லது மகிழ்வாக்கவும் உதவியாது ஐஸ்மேன்  மட்டுமே. எங்க ரேசன்கார்டில் பெயர் மட்டுமே சேர்க்கவில்லை மற்றிபடி குடும்பத்தில் ஒன்னு.  வாழ்க்கையே பயணமாகிடுமோ என்னும் நிலையை பயணமே வாழ்க்கை என்றாக்கியது ஐஸ்மேன். இந்தெ ஏழு வருடங்களில் 2.8 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தை பாதுகப்பாக கடக்க எங்களுடன் இருந்த ஐஸ்மேனுக்கு இன்று பிறந்தநாள். இதை மறந்ததாலேயே காலையில் ஒரு சிறிய விபத்தை ஏற்படுத்தி நியாபகப்படுத்தியுள்ளான். கடந்த வருடத்தில் சரியாக கவனிக்காமல் சில வேலைகளை தள்ளிவைத்துள்ளேன் அதை இனி விரைந்து முடிக்கவேண்டும்.

7 வருட நினைவுகளுடன்

Monday, September 3, 2018

ஆசிரியர்கள் தினம்

நான் பள்ளியில் படித்த காலத்தை மூன்று வகைப்படுத்தலாம். ஜில்,ஜங்,ஜக் அல்லது மேல்நிலைக்கல்வி, இடைநிலைக்கல்வி மற்றும் ஆரம்பக்கல்வி.  எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வி இதில் என்னைப்பாதித்த ஆசிரியர்கள் சிலர், இந்த வரிசையில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் என்னைப்பாதித்தவர்களே உள்ளனர் மற்றபடி அதிக மதிப்பெண்னை எடுக்கவைத்தவர் எவரும் பெரிதாக இல்லை.  என்னால் மறக்க முடியாத ஆசிரியை எனக்கு இரண்டாம் வகுப்பு எடுத்த ஒருவர், அவர் பெயர் எனக்கு தெரியாது ஆனால் இன்றுவரை என் வாழ்வில் மறக்கத்துடிக்கும்,  வெறுக்கும் ஆசிரியை அவர். அப்படி என்ன  காரணம் இருக்கும் என நெனைக்கிறீங்களா?.  இடதுகை பழக்கம் உள்ள என்னை முட்டி முட்டியாக அடித்து வலது கையில் எழுத மாற்றியதே காரணம். ஒருவனை அவன் இயல்பிலிருந்து மாற்றி அதைத்தொடர கட்டாயப்படுத்தி இயல்பை மறக்கடிக்க வைப்பது என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய குற்றம். மிகவும் கண்டிப்பான பள்ளி எனவே  வீட்டிலும் சொல்லாமல், வீட்டில் இடதுகையிலும் பள்ளியில் வலது கையிலும் எழுதி சமாளித்தேன். ஒரு கட்டத்தில் பள்ளியில் எழுத்து வேலை அதிகமாகவும் வீட்டில் குறைவாகவும் மாறிட பின்னர் மெதுவாக வீட்டிலும் வலதுகையில் எழுத ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் கவனிக்கையில் காலம் கடந்துவிட்டது, என் கையெழுத்தும் மோசமாகி , எழுதும்வேகமும் குறைந்திருந்தது. இந்த ஆசிரியையே என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

அடுத்து ஏழாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்த பாபு வாத்தியார். சின்ன வயசு, கண்டிப்பானவர் ஆனால் நன்றாக படிக்கும் மாணவர்களிடம் கண்டிப்பு குறைவு. நான் அவரின் செல்லமான மாணவனாகவே இருந்தேன் அந்த ஒருநாள்வரை, எதுக்கோ வகுப்பு நேரத்தில் வெளியே சுற்றிவிட்டு வகுப்புக்கு ஓடி வருகையில் ஏதோ ஒரு பாடலை மனதில் பாடி தலையை ஆட்டி ஆடிக்கொண்டே சென்றேன், வேறொறு வகுப்பில் இருந்து இதை கவனித்த அவர் அடுத்த வகுப்பில் என்னை கூப்பிட்டு என்ன செய்தாய் என கேட்டார், இதில் கண்டிப்பு இல்லை. அவர் விளையாட்டாக கேட்டார் ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லை என சாதித்தேன். இந்த பொய்தான் அவரின் கோவத்தை கூட்டியது, அவர் அடித்தது மனதை காயப்படுத்தியது ஆனால் அதைவிட அதன்பின் நான் அவரின் செல்ல மாணவனாக இல்லை. எட்டாவது வரை மட்டுமே அந்த பள்ளியில் படித்தேன்,அதுவரையில் அவரின் பழைய பாசத்தை, நம்பிக்கையை  பெற முடியவில்லை. ஒரு பொய் அதை மறைக்க முயன்று ஆசிரியரின் நம்பிக்கையை தொலைத்தேன். இதில் நான் கற்றுக்கொண்ட பாடம் மிகப்பெரியது.  அந்த பாடமும் மிக காலம் கடந்தே கற்றுக்கொண்டேன்,நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் நட்பை இழப்பது கொடுமையானது. ஆசிரியர் தினத்தில் பிறந்த எனது தோழியின் நம்பிக்கையையும், நட்பையும் அதன் மூலம் மற்றும் சில நட்புகளையும்  எனது ஒரு தவறால் இழந்த
அந்த தருணத்தில் உணர்ந்தேன். மிகவும் தொய்ந்திருந்த காலகட்டம், நட்புகள் இல்லை, குழுவில் இருந்து விலக்குதல் அல்லது உதாசீனப்படுத்துதல் என அனுபவித்த காலம். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு சென்றுவிடலாம் என நினைக்க வைத்த காலம். ஆனால் பாபு வாத்தியார் மூலம் அனுபவித்ததை பல ஆண்டுகள் கழித்து பாடமாக கற்றுக்கொண்டேன்.

ஆறாம் வகுப்பில் இருந்தபோது தமிழ் வழி கல்வி கற்றதால்  மருத்துவக்கல்லூரியில் மிகவும் சிரமப்பட்ட என் அண்ணன் என்னை ஆங்கில வழி கல்வியில் சேர்த்துவிட சொன்னார். மிகவும் கோவப்பட்ட நான் அதுக்கு ஒத்துக்கவே இல்லை, வெட்டப்போற ஆட்ட கேட்டுகிட்டா வெட்றாங்க? நேரா நான் படித்த அதே பள்ளியின் மெட்ரிக்குலேசன் பிரிவில் கொண்டுபோய் விட்டனர். நல்ல வேலையாக அங்கு இருந்த தலைமை ஆசிரியர் என் விருப்பத்தை கேட்டார், எனக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்த அவர் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. என்னால் மறக்க முடியாத ஆசிரியர். பத்து நிமிடமே அவருடன் நான் செலவிட்ட நேரம் ஆனால் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்.

நான் எட்டாம் வகுப்பு செல்லும்போது ஆண்டு விடுமுறையை அப்புச்சி வீட்டில் கழித்துவிட்டு பள்ளிக்கு செல்ல சீருடையை அணிய போனால் அங்கு மெட்ரிக்குலேசன் சீருடை இருந்தது. அப்பாவிடவும் அண்ணனிடமும் மேலும் வெறுப்பு வந்தது. கல்லூரி  செல்லும்போது மிகவும் சிரமப்படவேண்டும் என கருதி அண்ணன் ஏற்பாட்டில் எல்லாம் நடந்திருந்தது. வேறு வழி இல்லாமல் புது பள்ளி சென்ற நான் பின்பு எனது பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்களாக அடுத்து வந்த மூன்று  வருடங்களையும் சொல்கிறேன்.  ஆசிரியர்களை பயத்துடன் அணுகாமல் நட்புடனும் அணுகலாம்  என கற்றுக்கொடுத்த விஜயக்குமார் மற்றும் சிற்றரசன் ஆசிரியர்களை மறக்க முடியாது. 

ஆங்கில வழி கல்வியில் திண்டாடிய என்னை வகுப்பிலேயே தேர்வு பேப்பரில் எழுத்துப்பிழை இல்லாத வார்த்தைகள் மொத்தம் ஐந்து அதிலும் முதல் மதிப்பெண் எடுத்த பையனின் பேப்பரில் மொத்த எழுத்துப்பிழை மூன்று என ஒப்பீட்டு என்னை மிகவும் சோர்வடைய, தன்னம்பிக்கை குறைய வைத்த சுலோக்ஷனா டீச்சர். அதை அந்த வகுப்புக்கு வெளியே அடுத்த வகுப்புக்காக காத்திருந்த லக்ஷ்மி டீச்சர் கேட்டுவிட்டு அடுத்த வகுப்பில் உள்ளே வந்தவுடன் என்னை எழுப்பினார், அவரே வகுப்பாசிரியையும் கூட. ஏற்கனவே அவமானப்பட்டு சோர்ந்திருத்த என்னை மறுபடியும் போன வருடம் எந்த பள்ளி எனக்கேட்டார், நான் இதே பள்ளியில் தமிழ் மீடியம் என்றேன். இந்த காலாண்டுத்தேர்வில் எத்தனை பாடத்தில் தோல்வி என கேட்டார், நான் அனைத்திலும் பாஸ் டீச்சர் என்றேன். இன்னொரு பையனை எழுப்பி எத்தனை பாடத்தில் பாஸ் என் கேட்டார். அவன் மூன்றில் பெயில் எனக்கூற, எப்போதில் இருந்து மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கிறாய் என கேட்டார்.  அவன் சேர்ந்ததில் இருந்தே எனக்கூறினான். உடனே ஒரு பாடத்திலாவது பெயில் ஆன அனைவரையும் எழுந்து நிக்கவைத்த பின்னர், இந்த பையனை பாருங்கள் இவன் இதுவரை தமிழ்மீடியத்தில் இருந்து படித்து இந்த வருடம்தான் மெட்ரிகுலேசன் ஆனால் எல்லா பாடத்திலும் பாஸ் ஆனால் நீங்க முதலில் இருந்து படித்தும் இப்படி என ஒப்பீட்டார். இவனைப்போல் கடின உழைப்போடு  படியுங்கள் என்றார். இந்த ஒப்பீடும் தவறு என்றாலும் அன்றைய என் சோர்ந்த மன நிலைக்கு  மிகவும் தேவையாக இருந்தது, மிகுந்த தன்னிம்பிக்கையை கொடுத்தது. அதிலிருந்து கல்லூரி செல்லும்வரை நான் எந்த பாடத்திலும் பெயில் ஆகவில்லை. இந்த காலகட்டத்தில் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்கள் இவர்கள். இவர்களுடன்  என் அண்ணணையும் சேர்த்துக்கொள்வேன், அவர் அன்று எடுத்த முடிவே என்னை இந்த நிலைமையில் கொண்டு வந்துள்ளது.

மேல்நிலைக்கல்வியில் தமிழ் ஐயா கோவிந்தசாமி, பிசிக்ஸ் வாத்தியார் பசுபதி மற்றும் மேக்ஸ் டியூசென் MM மறக்க முடியாதவர்கள்.

என்னை சீர்படுத்தியவர்கள் மற்றும் நேர்படுத்தியவர்கள் இவர்களே. இவர்களில் யாரும் என்னை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கவில்லை, அவ்வாறு எடுக்க வைத்தவர்கள் என் நினைவிலும் இல்லை. வாழ்வில் மறக்கமுடியா பாடங்களை கற்றுக்கொடுத்த  இந்த ஆசிரியர்களை என்னால்  என்றுமே மறக்கமுடியாது.

கல்லூரி ஆசிரியர்களில்  சிலர் மட்டுமே அவர்களில் மயில்சாமி, சி.பெரியசாமி, மொஹிதீன், HOD ராமதாஸ், முதலாம் வருடம்
சி, சி ப்ளஸ் ப்ளஸ் எடுக்க  கல்லூரி முடித்து வந்து மூன்று மாதங்களே  பணியாற்றிய வினோதினி, எங்கள் பிரிவில் பணியாற்றிய ஒரே பெண் விரிவுரையாளர் செல்வி என  அவர்களில் பலரை நேர்மறையாகவும் சிலரை எதிர்மறையாகவும் நினைவில் வைத்துள்ளேன்.  என்னுடைய அதிர்ஷ்டம் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்லூரி இரண்டும் அரசாங்க பள்ளி மற்றும் கல்லூரி. மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், எதை கற்பிக்க வேண்டும், எதை நாங்களே கற்க வேண்டும் என தெரிந்து அவ்வாறே செய்தனர். இது எங்களால் யார் துணையும் இன்றி எதையும் செய்யலாம் எனும் துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது. மற்ற தனியார் கல்லூரி மாணவர்களை போல எதுக்கும் யாரையாவது எதிர்பார்த்து இல்லாமல் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டுவந்தனர். கல்லூரி விட்டு வெளியே வந்தபோது நான் அறிந்திருந்தது கல்லூரி எங்களை வெளிஉலகத்துக்கு தயார்படுத்தியிருந்தது.

இன்றுவரை ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு ஆசிரியராக பல பாடங்களை அதிலும் வாழ்க்கைப்பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டே உள்ளனர். வாழ்க்கை உங்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டேதான் இருக்கும், அதில் இருந்து கற்றுக்கொள்வதும், பெற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் நம்மிடமே உள்ளது. இன்றைய தலைமுறையின் கற்றுக்கொள்ளும் ஆற்றல் பற்றி கொஞ்சம் பயமாகவே உள்ளது இருந்தும் அவர்களே இன்றைய சூப்பர் ஆசிரியர்கள்.

என்னை இந்த நிலைமைக்கு செதுக்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. எழுத்துப்பிழை இருந்தாலும் மன்னிக்கவும்

Monday, March 26, 2018

மதச்சார்பின்மை

கல்லூரி காலத்துல ஒரு நண்பன் இருந்தான், அவன் எனக்குதான் நண்பன் அவனுக்கு நாங்க எப்படின்னு தெரியாது. தீண்டாமை என்றால் என்ன என எங்களுக்கு அவன் சொல்லிக்கொடுத்தான் எங்களுக்கு அது அப்போ புரியலை, இப்போ புரியுது.

அதே கல்லூரியில்தான் சாதி மறுப்பு, மத ஒற்றுமையையும் மற்ற நண்பர்கள் சொல்லிக்கொடுத்தனர்.

  மெஸ்ஸில் சாப்பிட நாங்கள் தட்டு வைத்துக்கொள்ள வேண்டும், வழக்கமான கல்லூரி மணவர்களைப்போல நாங்களும் சோம்பேறிகளாகவும், எதையும் கண்டுகொள்ளாமல் இளங்காளைகளாகவும் சுற்றிவருவோம். தட்டுகள் எல்லாம் வீணாக்கப்படும்போது மற்ற மாணவர்கள் தட்டுக்களே எங்களுக்கு உதவும். நாங்கள் அவற்றை உபயோகிப்பதை  மற்றவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை ஒரு சிலரைத்தவிற. அந்த ஒரு சிலரில் இந்த நண்பனும் வருவான், அவன் தட்டை நாங்கள் தொட்டால் கூட தீட்டு என்று நினைப்பான்,அவனை மீறி நாங்கள் தொட்டுவிட்டால்  அதன்பின் அந்த தட்டு எங்களுக்கு சொந்தமாகிவிடும். வெகுநாள் எங்களுக்கு இந்த நிகழ்வு எளிதான வகையில் தட்டை சொந்தங்கொண்டாடுவதாக இருந்தாலும். ஒருநாள் நாங்கள்  இது ஒரு நவீன தீண்டாமை என உணர்ந்தோம். ஊருக்கு சென்று வருகையில் வீட்டில் இருந்து கொண்டுவரும் திண்பண்டங்கள் அனைத்தும் பகிர்ந்து உண்ணப்படும். இந்த நண்பன் கூட எங்களுக்கென்று தனியாக ஒரு பொட்டலம் கொண்டு வருவான் அதை அப்படியே  எங்களுக்கு கொடுத்துவிடுவான் அப்போது அது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும் ஆனால் நாங்க கொண்டுவரும் தீனியை தொடாமல் இருந்தது இப்போது தீண்டாமை என புரிகிறது.

விடுமுறையில் குற்றாலம் செல்வது எங்களுக்கு வாடிக்கை,அப்போது செல்லும்போதெல்லாம் தங்குவது செங்கோட்டை மற்றும் புளியங்குடி அருகில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் தான். எத்தனைபேர் வந்தாலும் முகம் சுழிக்காமல் எங்களுக்கு சமைத்துப்போட்டு தங்களில் ஒருவனாக கருதியவர்கள் அவர்கள் பெற்றோர்.  அவர்களை என்றுமே மறக்கமுடியாமல் இருக்கும் காரணம் அவர்களின் விருந்தோம்பல், அத்தகைய மக்களையே இன்று அவர்களின் மத நம்பிக்கை காரணமாக வேற்றுமையாக நினைக்கச்சொல்கிறது இந்தியாவை ஆளும் கட்சி இன்று.

இவர்கள் ஆட்சிக்கு வரும்வரை எனக்கு ஊழல் மட்டுமே எரிச்சலாக இருந்தது. என்னைப்பொருத்தவரை எந்த சாதியோ மதமோ என் நண்பர்களை வேறுபடுத்தவில்லை. நவீன தீண்டாமைகள்கூட காலப்போக்கில் காணாமல் போயிருந்தன. கடந்த நான்கு வருடங்களில் எத்தனை மாற்றம்?
சாதி மூலமாகவும், மதங்களைக்கொண்டும் வேற்றுமையை நினைக்க வைக்க எவ்வளவு மெனக்கெடல்? இன்று என் நண்பர்களில் சிலர் தன் பெயருக்குப்பின்னால் சாதியை சொருகிக்கொண்டதில் இருந்து, சிலர் நான் இவர்களை எதிர்ப்பதாலேயே என்னை விட்டு விலகியதில் இருந்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திராவிட கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் கொண்டுவந்த சமூக நீதியை நான்கே  வருடங்களில் இப்படி உடைக்குமென்றால் உங்கள் கட்சியோ ஆட்சியோ எனக்கு வேண்டாம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை எனது நண்பர்கள் மட்டுமே ஆனால் இன்று மூளைச்சலவை செய்யப்பட்டு  அவர்களில் சிலர் சாதியால் மதத்தால் பிரித்தாளும் தன்மை பா.ஜ.கவால் மட்டுமே வந்துள்ளது. இது வேரறுக்கப்படவேண்டும் இல்லையென்றால் தமிழகம் அடைந்துள்ள மற்றும் அடையப்போகும் சமூக நீதி குலைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பின்தள்ளப்படுவோம்.

நன்றாக யோசியுங்கள், நாம் நான்கு ஆண்டுகளுக்கு முன் இத்தகைய மனநிலையில் இருந்தோமா? செல்லாக்காசான பா.ஜ.க எதுக்கு தினமும் தொலைக்காட்சியில் வந்து தேவையில்லாத பிரச்சனையை விவாதிக்க வேண்டும்? ஊடகங்கள்,அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் மற்றும் பலருடன் இவர்கள் செய்வதும் ஒரு இனப்படுகொலைதான். யோசித்தால் ஒன்றல்ல பல என புரியும்.

வருத்தங்களுடன்...

Friday, June 24, 2016

கோட்டை அழிங்க,மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்

சில வருடங்களுக்கு பிறகு இந்த வலைப்பூ ஒரு பதிவைக்கொடுக்கிறது.

இந்த இடைவெளியில் என்னென்ன மாற்றங்கள்??

Facebook அறிமுகமாகி,  அதுக்கு அடிமையாகி பின்னர் அதை புரிந்து, அதிலிருந்து விடைபெற்று இதற்குடையில் திருமணம், குழந்தை, புதிய உறவுகள், பொறுப்புகள் என நிறைய. பதிவுலகிலிருந்து பலர் வெளியேறிய நிலையில் யாருமில்லா டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றப்போகிறேன் என தெரியவில்லை.

எழுதனும் என தோன்றுகிறது எழுதுகிறேன். மாதம் ஒரு பதிவாவது 

Tuesday, April 14, 2015

தமிழ் புத்தாண்டு

இன்னிக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் என்னிக்கு சொல்வது. என்ன தமிழ் புத்தாண்டா இல்லை விடுமுறை நாள் வாழ்த்துக்களா என குழம்பி ஐந்து வருசம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் ஆட்சி மாறினா விடுமுறை நாள் வாழ்த்துக்களும் கூற தமிழனை பழக்கிட்டாங்க.

எனக்கு தமிழ் புத்தாண்டு பிடிக்கும். நீங்க நள்ளிரவு 12மணிக்கு வெளியே சென்றாலும் ரோட்டில் குடிச்சுட்டு வண்டி ஓட்டுபவர்கள் மிக குறைவாக இருப்பார்கள், ஏன் புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்பவர்கள அதைவிட குறைவாக இருப்பார்கள். மாதக்கணக்கில் செய்தித்தாள்களில் பார்ட்டிக்கு விளம்பரம் இருக்காது, கொலைவெறி வண்டி ஓட்டுதல், காட்டுக்கத்தல் வாழ்த்துக்கள் இருக்காது, அட் ஏங்க போலியான வாழ்த்துக்கள் இருக்காது.  வாழ்த்துக்களும், பெருமைகளும் குறைவாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கும்.

ஐ.பி.எல்க்கு நடுவில் தமிழ் புத்தாண்டு நசுக்கி சின்னாபின்னமாக்கப்பட்டாலும்  உண்மையான சில வாழ்த்துக்களில் கம்பீரத்துக்கு குறைவில்லாமலே இருக்கிறது. அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் பெயர் மன்மத வருடமாம், நன்றாகவே இருக்கிறது.

Thursday, April 12, 2012

இதுதான் நமது தமிழ் சமூகம்



மாலையில் இருந்தே டாஸ்மார்க்கில் கூட்டம் அலை மோதவில்லை,வழக்கத்தை மிஞ்சும் வியாபாரமும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்னணியே முன்னணி செய்தித்தாள்களில் இரவு பார்ட்டிக்கு விளம்பரங்கள் இல்லை.

காவல் துறையினரின் முதல் நாள் மீட்டிங்கும் பின்னர் தொலைகாட்சி பேட்டியும் இல்லை.

நள்ளிரவு குடியும் பின்னர் கொலைவெறி வாகனம் ஓட்டுதலும் இல்லை.

புத்தாண்டு உறுதி மொழி இல்லை அதை எடுத்தாலும் கடைபிடிக்காத எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.

அதீத குறுஞ்செய்தி இல்லை.

தொலைக்காட்சிகளில் வழக்கம் போல வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் இல்லை.
 
இப்படி பல இல்லைகள் இருந்தாலும் இந்த புத்தாண்டைக்கொண்டடும்போது ஒரு பெருமிதம் மட்டும் இருக்கிறது.

இத்தனை இல்லைகள் இருக்கும் அமைதியான தமிழ்ப்புத்தாண்டே நமக்கு போதும்

சமீபத்தில்தான் களவாணி படம் பார்த்தேன் அதில் சாமிய கொண்டுபோய் ஆறு மாசம் நீ வச்சு கும்பிடு ஆறு மாசம் நான் வச்சு கும்பிடறேன் என்று சொல்வது போல.

அஞ்சு வருஷம் நீ சித்திரை ஒன்னாம் தேதிய கொண்டாடு அஞ்சு வருஷம் நான் தை ஒன்னாம் தேதிய கொண்டடறேன்னு ஒப்பந்தம் போட்டுடுவாங்க என்று நினைக்கறேன்.

ஊருக்கு போவதால் பதிவு உலகம் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது ஆகையால் இந்த வருஷம் ஒரு நாள் முன்னாடியே எல்லோருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thursday, April 5, 2012

முடிவு


இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தியது, ஒருவர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிடும்.



சிறு வயதில் இருந்தே எனக்கு இந்த முடிவு எடுப்பதில் சரியான அனுபவம் கிடையாது, நான் எடுத்த சில முடிவுகள் சரியாக அமைந்தாலும் பல முடிவுகள் தவறாகவே அமைந்தது. என் வாழ்க்கையின் சில முக்கிய முடிவுகள்



பள்ளியில் படிக்கும்போது ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளி ஆசிரியர் எனது இடது கை பழக்கத்தை விட்டொழிக்க எடுத்த முயற்சிகளால் ஓரளவு வெற்றி பெற்று என்னை வலது கையில் எழுத வைத்து இருந்தார்.  எக்காரணத்தை கொண்டும் இடது கையில் எழுதுவதை மறக்கக்கூடாது என்று முடிவெடுத்து இன்று வரை இரு கையிலும் எழுதும் திறமை பெற்றுள்ளேன். அன்று எடுத்த அந்த முடிவு இன்றும் என்னை ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருவனாக அடையாளப்படுத்துகிறது.




சிறுவயதில் மிகவும் தன்னம்பிக்கை வைத்த சிறுவனாக இருந்த நாட்களில் நீச்சல் கற்றுக்கொள்ள செல்லும்போது, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தாத்தா ஊரில் இருந்து எங்க ஊருக்கு செல்ல வேண்டும், நான் நீச்சல் கற்றுக்கொள்வது என முடிவெடுத்தது பிற்காலத்தில் என்னை காப்பாற்றியது.

 
தமிழ் மீடியத்தில் நன்றாக புரிந்து படித்துக்கொண்டு இருந்தவனை கல்லூரிகாலத்தில் எளிதாக இருக்கும் என்று ஆறாம் வகுப்பில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்க்க நினைத்தபோது, புரியாமல் ஆங்கிலத்தில் படிப்பதை விட புரிந்து தமிழில் படிக்கிறேன் என்று முடிவெடுத்தேன்.



பின்னர் எட்டாம் வகுப்பில் மறுபடியும் மூளை சலவை செய்யப்பட்டு டைக்கும் ஷூக்கும் ஆசைப்பட்டு ஆங்கில வழிக்கல்வியில் மாறினேன்.



தமிழ் மீடியத்தில் இருக்கும் வரை மிக மிக நல்ல பையன், ஆங்கில மீடியமே எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது, பொய் சொல்ல, மனப்பாடம் செய்து படிக்க, பிட் அடிக்க, ஏமாற்ற, கெட்ட வார்த்தை பேச என்று ஆனால் எளிதில் இரண்டே வருடத்தில் ஆங்கில வழி கல்வியில் ஒன்றிவிட்டேன் , சுமாரான மாணவனாக மாறி மனப்பாடத்திலேயே படிக்க கற்றுவிட்டேன், மேற்கூறிய இரண்டு முடிவுகளிலும் என்னால் எதுசரி எது தவறு என அறுதியிட்டு கூற முடியவில்லை.



பத்தாம் வகுப்பிற்கு பிறகு எந்த குரூப் எடுப்பது என்று வந்தபோது என் சுயமான முடிவெடுக்கும் நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது, ஆமாம் வீட்டில் இருந்த சகோதர சகோதரி இரண்டு பெரும் முதல் குரூப் ஆகையால் முதல் குரூப் தவிர வேறு எதுவும் எனக்கு ஆப்சன் ஆகக்கூட கொடுக்கப்படவில்லை, அதிலும் உயிரியல் குரூப் தான்.


மேல்நிலைப்பள்ளியில் அதிக சுதந்திரம் காரணமாக மேலும் பள்ளியை கட் அடித்து, ஊர் சுற்றி படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் கவலை இல்லாத எனக்கான வாழ்க்கையை வாழ்ந்தேன். மருத்துவம் என்பதை கண்டிப்பாக படிக்கக்கூடாது என்று முடிவெடுத்து பொறியியல் படிக்க மட்டுமே முயற்சித்தேன்.


பொறியியல் படிக்க முயற்சி செய்தாலும் மதிப்பெண் பத்தாததால் ஒரு வருடம் மறுபடியும் படிக்கவா இல்லை ஏதும் கலை கல்லூரியில் படிக்கவா என்று வந்த போது மறுபடியும் ஒரு வருடம் படிக்க என முடிவெடுக்கப்பட்டு படித்தேன்,




தனித்தேர்வருக்கான பயிற்சிப்பளியில் சேரவா இல்லை நானே படிக்கவா என வந்தபோது நானே படிக்க என நிர்பந்திக்கப்பட்டு ஒரு வழியாக கஷ்ட்டப்பட்டு பொறியியல் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும்வரை வந்தேன்.


கல்லூரியில் எந்த துறை எடுப்பது கணிப்பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் என முடிவெடுத்தபோது இயந்திரவியல் என நிர்பந்திக்கப்பட்டேன்.


இயந்திரவியலை புடிக்காமல் படிக்கும்போது 5 பேப்பர் அரியர் வச்சு பின்னர் புத்தருக்கு போதி மரத்தடியில் வந்தது போல எனக்கு மொட்டைமாடியில் நியாநோதயம் வந்து பின்னர் ஒரு வழியாக புடிக்காவிட்டாலும் படித்து முடித்தேன்.


கணினி துறையில் வேலைக்கு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்க இயந்திரவியல் துறையில் சேர நிர்பந்திக்கப்பட்டு சேர்ந்தேன், வேலையிலும் வாழ்க்கையில் எது பிடிக்காத ஒரு வேலையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதையும் பின்பற்றி அதிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறேன்.


வாழ்க்கையில் எல்லோரையும் போல வாழ்ந்து முடிவெடுத்து இது வரை வந்த எனக்கு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான  முடிவைமட்டும் நானோ என்னை சார்ந்தவர்களோ எடுக்காமல் எந்த ஒரு ஜோசியக்காரனோ எடுக்கிறான் எனும்போது எனது வருத்தத்தை பதிவு செய்ய இது ஒரு வழி.


என்ன செய்ய வாழ்க்கை எனபது நீ உனக்காக நீயே முடிவெடுத்து வாழ்வது ஒரு வகை, மற்றவர்கள் உனக்காக முடிவெடுத்து நீ வாழ்வது மற்றொரு வகை. இதில் நான் இரண்டாம் வகையில் வாழ நிர்பந்திக்கப்பட்டு உள்ளேன்.


ஆனாலும் எந்த நாதாரியோ நான் ஜோசியக்காரன் என சொல்லி அவன் பொழைப்பை தேட எத்தனையோ பேர் பொழைப்பை கெடுக்கிறான்.