Monday, March 26, 2018

மதச்சார்பின்மை

கல்லூரி காலத்துல ஒரு நண்பன் இருந்தான், அவன் எனக்குதான் நண்பன் அவனுக்கு நாங்க எப்படின்னு தெரியாது. தீண்டாமை என்றால் என்ன என எங்களுக்கு அவன் சொல்லிக்கொடுத்தான் எங்களுக்கு அது அப்போ புரியலை, இப்போ புரியுது.

அதே கல்லூரியில்தான் சாதி மறுப்பு, மத ஒற்றுமையையும் மற்ற நண்பர்கள் சொல்லிக்கொடுத்தனர்.

  மெஸ்ஸில் சாப்பிட நாங்கள் தட்டு வைத்துக்கொள்ள வேண்டும், வழக்கமான கல்லூரி மணவர்களைப்போல நாங்களும் சோம்பேறிகளாகவும், எதையும் கண்டுகொள்ளாமல் இளங்காளைகளாகவும் சுற்றிவருவோம். தட்டுகள் எல்லாம் வீணாக்கப்படும்போது மற்ற மாணவர்கள் தட்டுக்களே எங்களுக்கு உதவும். நாங்கள் அவற்றை உபயோகிப்பதை  மற்றவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை ஒரு சிலரைத்தவிற. அந்த ஒரு சிலரில் இந்த நண்பனும் வருவான், அவன் தட்டை நாங்கள் தொட்டால் கூட தீட்டு என்று நினைப்பான்,அவனை மீறி நாங்கள் தொட்டுவிட்டால்  அதன்பின் அந்த தட்டு எங்களுக்கு சொந்தமாகிவிடும். வெகுநாள் எங்களுக்கு இந்த நிகழ்வு எளிதான வகையில் தட்டை சொந்தங்கொண்டாடுவதாக இருந்தாலும். ஒருநாள் நாங்கள்  இது ஒரு நவீன தீண்டாமை என உணர்ந்தோம். ஊருக்கு சென்று வருகையில் வீட்டில் இருந்து கொண்டுவரும் திண்பண்டங்கள் அனைத்தும் பகிர்ந்து உண்ணப்படும். இந்த நண்பன் கூட எங்களுக்கென்று தனியாக ஒரு பொட்டலம் கொண்டு வருவான் அதை அப்படியே  எங்களுக்கு கொடுத்துவிடுவான் அப்போது அது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும் ஆனால் நாங்க கொண்டுவரும் தீனியை தொடாமல் இருந்தது இப்போது தீண்டாமை என புரிகிறது.

விடுமுறையில் குற்றாலம் செல்வது எங்களுக்கு வாடிக்கை,அப்போது செல்லும்போதெல்லாம் தங்குவது செங்கோட்டை மற்றும் புளியங்குடி அருகில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் தான். எத்தனைபேர் வந்தாலும் முகம் சுழிக்காமல் எங்களுக்கு சமைத்துப்போட்டு தங்களில் ஒருவனாக கருதியவர்கள் அவர்கள் பெற்றோர்.  அவர்களை என்றுமே மறக்கமுடியாமல் இருக்கும் காரணம் அவர்களின் விருந்தோம்பல், அத்தகைய மக்களையே இன்று அவர்களின் மத நம்பிக்கை காரணமாக வேற்றுமையாக நினைக்கச்சொல்கிறது இந்தியாவை ஆளும் கட்சி இன்று.

இவர்கள் ஆட்சிக்கு வரும்வரை எனக்கு ஊழல் மட்டுமே எரிச்சலாக இருந்தது. என்னைப்பொருத்தவரை எந்த சாதியோ மதமோ என் நண்பர்களை வேறுபடுத்தவில்லை. நவீன தீண்டாமைகள்கூட காலப்போக்கில் காணாமல் போயிருந்தன. கடந்த நான்கு வருடங்களில் எத்தனை மாற்றம்?
சாதி மூலமாகவும், மதங்களைக்கொண்டும் வேற்றுமையை நினைக்க வைக்க எவ்வளவு மெனக்கெடல்? இன்று என் நண்பர்களில் சிலர் தன் பெயருக்குப்பின்னால் சாதியை சொருகிக்கொண்டதில் இருந்து, சிலர் நான் இவர்களை எதிர்ப்பதாலேயே என்னை விட்டு விலகியதில் இருந்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திராவிட கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் கொண்டுவந்த சமூக நீதியை நான்கே  வருடங்களில் இப்படி உடைக்குமென்றால் உங்கள் கட்சியோ ஆட்சியோ எனக்கு வேண்டாம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை எனது நண்பர்கள் மட்டுமே ஆனால் இன்று மூளைச்சலவை செய்யப்பட்டு  அவர்களில் சிலர் சாதியால் மதத்தால் பிரித்தாளும் தன்மை பா.ஜ.கவால் மட்டுமே வந்துள்ளது. இது வேரறுக்கப்படவேண்டும் இல்லையென்றால் தமிழகம் அடைந்துள்ள மற்றும் அடையப்போகும் சமூக நீதி குலைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பின்தள்ளப்படுவோம்.

நன்றாக யோசியுங்கள், நாம் நான்கு ஆண்டுகளுக்கு முன் இத்தகைய மனநிலையில் இருந்தோமா? செல்லாக்காசான பா.ஜ.க எதுக்கு தினமும் தொலைக்காட்சியில் வந்து தேவையில்லாத பிரச்சனையை விவாதிக்க வேண்டும்? ஊடகங்கள்,அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் மற்றும் பலருடன் இவர்கள் செய்வதும் ஒரு இனப்படுகொலைதான். யோசித்தால் ஒன்றல்ல பல என புரியும்.

வருத்தங்களுடன்...

No comments: