Showing posts with label முதல் பயணம். Show all posts
Showing posts with label முதல் பயணம். Show all posts

Thursday, June 26, 2008

எனது முதல் சென்னை பயணம்

எனது முதல் சென்னை பயணம்

உண்மைய சொல்லனும்னா இதன் என்னோட முதல் நெடுந்தூர பயணம். மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தேன், எனது அக்கா பனிரெண்டாம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு எழுத சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பள்ளி விடுமுறை வேறு, அப்பாவிற்கோ அவரது சலுகைகளான வருடத்திற்கு 4500 கிலோமீட்டர் குடும்ப இலவச பயணத்திட்டத்தை ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை. எப்படியோ என்னையும் சென்னை கூடிப்போகிறேன் என்று சொல்லிவிட்டனர்.

அது என்ன கிழமை என்று தெரியவில்லை கரூரில் இருந்து சென்னைக்கு பேருந்துப்பயணம். அரசுப்பேருந்து, நீண்டதூரம் செல்ல வேண்டும், என் அப்பா விடுமுறையில் எங்களுடன் பயணம் மேற்கொண்டார், அவர் ஓட்டுனர் இருக்கையை விட்டு பயணியர் இருக்கையில் பயணிப்பதை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். எனக்கு ஜன்னலோர இருக்கை.

அப்போதெல்லாம் பேருந்துக்கு திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று பெயர், ஒவ்வொரு இருக்கைக்கு பின்னால் ஒரு திருக்குறள் எழுதப்பட்ட பட்டை ஒட்டப்பட்டிருக்கும். இப்போ அதை எல்லாம் மறந்து விட்டிருக்கின்றனர். ஒரே ஒரு குறள் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் எழுதப்பட்டுள்ளது சில பேருந்துகளில். (காலம் மாறிபோச்சு போல)

விடிய விடிய தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன், பேருந்து எத்தனை லாரிகளை முந்திக்கொண்டு சென்றது, எத்தனை பேருந்துகளை முந்திச்சென்றது என்று எண்ணிக்கொண்டு வந்தேன். இடையில் நிறுத்தி சாப்பிட சென்றபோது அங்க வந்த பேருந்துகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். அப்பாவின் நண்பர் பிரபு அண்ணா வந்து வீட்டுக்கு கூட்டிச்சென்றார்.

அன்று மாலை வரை ஓய்வு, எனக்கு சென்னையை பார்த்தாலே ஒரு மலைப்பு அப்போது, அன்று மாலை வழக்கம் போல அண்ணா சமாதி, M.G.R சமாதி எல்லாம் குட்டிச்சென்ற்ரார்கள், பின்னர் கடற்கரை (என்னடா எல்லாமே அங்கதான இருக்குன்னு சொல்லக்கூடாது, எனக்கு அப்போ அதெலாம் தெரியாது) முதல் முதலாக கடலைப்பார்த்தேன், நெஜமா ரொம்ப பயமா இருந்துச்சு, பெரிய பெரிய அலை, அப்பா கையா பிடிச்சுகிட்டு தண்ணில ஆடுனேன். கடற்கரைல சுண்டல் வாங்கித்தந்தாங்க, அதெல்லாம் எனக்குப்புதுசு, அதுவரை வெளி திண்பண்டங்களை (பள்ளிக்கு வெளியிலோ, இல்லை வேறு எங்கும் சாலையோரமாக உள்ள கடைகளிலோ வாங்கி திங்க அனுமதி இல்லை எனக்கு) சாப்பிட்டது இல்லாததால் ஆசையாய் நிறையா சாப்பிட்டேன்.

அக்காவிற்கு அடுத்த நாள் நுழைவுத்தேர்வு, ஏதோ ஒரு கல்லூரியில் எழுதினார்கள், எழுதி முடித்து விட்டு வந்த உடனே வீட்டுக்கு வந்தாயிற்று. அன்று எங்கும் கூட்டிச்செல்லவில்லை. எனக்கும் பெரிதாக ஏதும் தோணவில்லை வீட்டிலேயே விளையாட, தொலைக்காட்சி பார்க்கவே நேரமில்லை அப்ப எங்க வெளிய போறது. அடுத்த நாள் V.G.P கோல்டன் பீச் சென்றோம், அந்த அசையா மனிதன், அங்குள்ள ராட்டினங்கள், சிறு ரயில் வண்டிகள் எல்லாமே புதுசு எனக்கு. மாலை வரை அங்கு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.

அடுத்த நாள் இரவு கிளம்பி சென்னையில் இருந்து கரூர் வந்து சேரத்திட்டம். மறுபடியும் பேருந்துப்பயணம், நீண்ட பயணம், மறுபடியும் அதே லாரி, பேருந்து எண்ணிக்கை, வேடிக்கை என்று வந்து சேர்ந்தேன், இருந்தாலும் கரூர் வந்து சேர சேர மனதில் ஒரு சோகம், அவ்ளோதானா பேருந்துப்பயணம் என்று மனது எண்ணியது. இப்படித்தாங்க என் முதல் சென்னைப்பயணம் இருந்துச்சு. இன்றுவரை எனக்கு எங்கு செல்வதானாலும் சாலை வழியே செல்லவே இன்றும் மனதுக்குப்பிடிக்கிறது.

அதுக்கப்புறம் பள்ளியில் வகுப்பு தோழர்களிடம் சென்னை சென்றேன், அங்கு அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று ஒரு வாரம் முழுக்க சொல்லித்திரிந்தேன்.

இந்த ஒரு பயணம்தான் எனக்கு நான் என்ன குறிக்கோளில் படிக்கப்போகிறேன் என்பதை எடுத்துக்காட்டியது. ஆம் அக்கா மருத்துவக்கல்லுரியில் சேரப்போகிறார், நாமும் அது போலத்தான் என்று அப்போதே முடிவு எடுத்தாயிற்று. (நான் இல்லீங்க அப்பாதங்க)

சென்னையில் இருந்த அத்தனை நாளிலும் எங்களுக்கு விதவிதமாக சாப்பாடு போட்ட பிரபு அண்ணா தம்பதியர் மற்றும் அவர்கள் வீடு. இன்னைக்கும் அவர் வீடுக்குச்செல்வது என்றால் அவர்களின் உபசரிப்பும் சாப்பாடும் முதலில் மனதில் வரும்.

இலவச பயணத்திட்டம் பற்றி எழுதினேன் அல்லவா, நான் கல்லூரி வந்தவுடன் அதுவரை உபயோகிக்காமல் விட்ட அந்த திட்டத்தை நான் மட்டுமே காலி செய்தேன் நான்கு வருடமும்.

அந்த திருக்குறள் எழுதப்பட்ட பட்டையை நான் கோடு போட பயன்படுத்தி இருக்கிறேன். அப்பா ஒரு பத்து இருபது குறள் எடுத்து கொண்டு வந்து தந்தார்கள். தினமும் ஒரு குறளாக பயன்படுத்துவேன். வகுப்பு ஆசிரியர்க்கு அதனாலேயே என்மீது தனி பிரியம்.(வித்தியாசமா scale பயன்படுத்தறேன் என்று, எங்க வாங்கினது இது என்று கேட்டு வர வேறு சொல்லி இருகாங்க ஒரு தடவ என்கிட்ட).

அப்போதெல்லாம் கேமரா இல்லாததால் இந்த பயணங்களில் போட்டோ எடுக்கவே இல்லை :(

சென்னையில் எங்கு சென்றாலும் பல்லவன் பேருந்துகளையே உபயோகப்படுத்தினோம். அப்பா ஊழியர் என்பதால் உடன் வந்த குடும்பத்தினர்க்கு பயணசீட்டு வாங்கும்போது அனைத்து நடத்துனரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தனர் அப்போது.