Thursday, March 8, 2012

இனி ஒரு விதி செய்வோம்

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கக்கூடிய சட்டத்திருத்தம்  மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது, இதன் மூலம் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இப்போது கிடைக்கக்கூடிய தண்டனையை விட அதிக தண்டனை கிடைக்கும். இதில் மிக முக்கியமானது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை தான். ரத்தத்தில் கலந்து இருக்கும் மதுவின் அடிப்படையிலும் மற்றும் விதிமீறல் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதமும் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கலாம்.


மேலும் பல வித விதிமீறல்களுக்கு ஐந்து மடங்கு அபராதம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது, சாலையில் எதிர் திசையில் செல்வது, சிக்னல் மதிக்காமை போன்றவற்றிற்கு தண்டனைகள் அதிகரிக்கப்படும் .


அதிகரித்து வரும் சாலை விபத்துக்களும் அதில் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் இந்த சட்டத்தை கொண்டுவர காரணம். உலகளவில் எதில் முன்னணியில் இருக்கிறோமோ சாலை விபத்துகளில் முதல் இடத்தில இருக்கிறோம். இதற்கு பல காரணங்கள் உண்டு அனைத்தும் நம் மக்களையே சாரும். மக்கள் மீது பழி சுமற்றி அரசு தப்பித்து விடக்கூடாது, ஏனென்றால் அரசும் கொஞ்சம் கூட யோசிக்காத அரசு அதிகாரிகளும் இதற்கு முக்கிய காரணம்.


சாலை விபத்துக்கள் நடக்க முக்கிய காரணம் எவை?


வாகனம் ஓட்டுபவர் தவறாக இருக்கலாம்


வாகனம் பழுதால் விபத்து ஏற்படலாம்


மற்ற வாகனம் தவறாக வந்ததால் ஏற்படலாம்


அடிப்படை சாலை வசதிகள் இல்லாதலால், வசதிகள் மோசமானதாக இருப்பதால் ஏற்படலாம்


தேவையான அறிவிப்புகள் இல்லாமை, மோசமான சாலை வசதிகள், பழுதடைந்த சாலை இவையும் ஒரு காரணம்.


இத்தகைய காரணங்களில் நாம் எல்லாவற்றிலும் முன் நிற்கிறோம், எதுவும் எதையும் விஞ்சும் வண்ணம் உள்ளது. இதில் சாலை விதிகளை பற்றி தெரியாத நம் மக்களே அதிகம் ஆனால் வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்துக்கு செல்லாமலே ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் அதிகம், அதை பெருமையாக வேறு சொல்வார்கள். விதிகளை தெரியாமல் உரிமம் வாங்குவதும் அதை காசுக்காக கொடுப்பதும் முதல் குற்றம்.


சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் நமது மக்கள் அடுத்து, விதி தெரிந்தாலும் எவன் மதிக்கிறான் நான் மதிக்க என்று செல்வோர், வாகனத்தில் ஏறிவிட்டால் மற்றவர்களையும், பாத சாரிகளையும் மதிக்காமல் சாலை முழுதும் தனக்கே சொந்தம் என என்னும் சிலர் இவர்கள் எல்லாம் முதல் காரணிகள். இவர்களுக்காகவே இந்த சட்டம். ஆனால் எனக்குள் இன்னும் சில சந்தேகம், கனரக வாகனங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு என்ன சட்டம்?


பின்புறம் விளக்கு இல்லாத கனரக வாகனம், நெடுஞ்சாலையில் ஓரத்தில் அபாய விளக்கு இல்லாமல் நிறுத்தி வைப்பதால் ஏற்படும் விபத்து, சிக்னல் கொடுக்காமல் கண்டபடி செல்லும் கனரக வாகனம் ஏற்படுத்தும் விபத்து, சாலையில் எதிர் திசையில் வந்து ஏற்படுத்தும் விபத்து , சரியாக பராமரிக்காமல் வாகனத்தை விபத்திற்கு உள்ளாக்குதல் என இவற்றிற்கு தகுந்த தண்டனை கிடைப்பது இல்லை.


அரசாங்க பேருந்துகளிலே பின் விளக்குகள் சரியாக இருப்பது இல்லை, அரசாங்க பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள் அதுவும் சமீப காளங்களில் குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் இது மிக அதிகமாக இருக்கிறது.
பொதுமக்களிலும் ஒழுக்கம் கட்டுப்பாடு விதிகளை மதித்தல் போன்றவை மோசமாக மாறிவிட்டது.


நமது நாட்டில் வாகனம் ஓட்ட கற்றுத்தரும் நிறுவனங்கள் ஏராளம் ஆனால் அவற்றில் மிக சரியாக சொல்லித்தருவதில் மிக சில நிறுவனங்களே கவனம் செலுத்துகின்றன.


கனரக வாகனங்களை பொறுத்தவரை இருக்கும் நிறுவனங்கள் பெரும்பான்மை சரியாக சொல்லித்தருபவையாக இருக்கின்றது ஆனால் கார் சொல்லிக்கொடுக்கும் நிறுவனகள் மிக சிலவே சரியாக சொல்லிக்கொடுப்பவை ஆனால் விபத்துகளில் பார்க்கும்போது கனரக  வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.


இதற்கும் மேலாக மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்து. மிக சீராக இருக்கும் சாலையில் திடிரென ஒரு பள்ளம் இருக்கும் ஆனால் அதன் அருகில் எந்த அறிவிப்பும் இருக்காது, மிக மோசமான சாலைகளை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டதில் நம்மில் பலருக்கு அனுபவமிருக்கும்.


அறிவிப்பு பலகை இல்லாத சாலை, குண்டு குழியுமான சாலைகளில் பொறுப்பாக ஒருவர் போனால் மற்றவர்கள் கண்மூடித்தனமாக வந்து  விபத்தில் சிக்குதல் அதிகம்.


பழைய மகாபலிபுரம் சாலையை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு வழிக்கு பத்தொன்பது ரூபாய் வாங்குகிறார்கள் காருக்கு ஆனால் இதுதான் இருப்பதிலேயே  மோசமான சாலை. சாலை ஓரத்தில் மரண குழிகள், எந்நேரமும் காவு வாங்கும் கம்பிகள் நின்றுகொண்டு இருக்கும், மேலும் சர்வீஸ் சாலை போடுகிறோம் என மண்ணை தோண்டி சாலையில் கொட்டி வைத்து இருப்பார்கள், அதற்கு அடுத்து பேருந்து நிறுத்ததிர்க்காக ஒரு வழியையே மறைத்து மக்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.


ASV சன்டெக் பார்க் அருகில் சாலையை கடக்க பாலம் அமைத்து இருப்பார்கள், இந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் 80 சதவிகித மக்கள் இள வயது (முப்பதுக்கும் குறைவாக ) ஆனால் அதில் 5 சதவிகித மக்கள் கூட சாலையை கடக்க பாலத்தை உபயோகிப்பது இல்லை. எல்லோரும் போக்குவரத்தை மறித்து நடு தடுப்பு சுவரை தாண்டி சாலையை கடக்கின்றனர். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இது போல பல இடங்களில் நடக்கிறது, ஆனால் இவர்களில் பலர் வாகனத்தில் போகும்போது மற்றவரை மனதுக்குள் திட்டாமல் செல்வது இல்லை. ஏன் நாம் வாடகைக்கு வாகனம் எடுக்கும் போது அதன் ஓட்டுனர் சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் கேள்வி கேட்பது இல்லை.


இதை விட கொடுமை சில இடங்களில் பாலம் அமைத்து அதில் ஏறக்கூட முடியாமல் சாலையை பறித்தும் வைத்து உள்ளனர் அரசு அதிகாரிகள்.


நன்றாக சாலையை அமைத்துவிட்டு அதில் திடிரென்று வேகத்தை குறைக்க என்று நடுவில் தடுப்புகளை வைக்கும் வழக்கத்தை நமது போலீசார் கொண்டு உள்ளனர். இத்தகைய தடுப்பில் விளக்கு இல்லாத ஒரு இரவில் மோதி அடிபட்ட அனுபவம் எனக்கு உண்டு.


இப்படி எல்லாமே மோசமாக செல்லும் போது நாம் எப்படி வருங்காலத்தில் மக்களை சாலை விதிகளை மதித்து நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்?


சாலை விதிகளை ஓட்டுனர் உரிமம் பெறும்போது மட்டும் படிக்காமல் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும்.


பெற்றோர் குழந்தைகளை சாலையில் அழைத்து செல்லும்போது விதிகளை மீறாமல் செல்ல வேண்டும்.


ஓட்டுனர் உரிமம் பதினெட்டு வயதில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.


விதிகளை மீறாமல் உரிமம் பெற கடினமான பரிட்சைகளை வைக்க வேண்டும்.


பயிற்சி பள்ளிகள் துவங்கும் விதிமுறைகள் கடினமாக்கப்பட வேண்டும், அவற்றை முறைப்படுத்த வேண்டும்.


சாலை வசதிகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும், அடிப்படை சாலை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.


இதற்கும் மேலாக மக்கள் மனதில் எனக்கென்ன என்ற எண்ணம் விலக வேண்டும்.


இவையெல்லாம் செய்தால் நம் நாட்டில் சாலை விபத்துகளை குறைக்கலாம்.


இன்னொரு முக்கியமான விஷயம் போலீசார் லஞ்சம் வாங்குவதை குறைக்க வேண்டும், இந்த சட்டம் வந்தால் எனக்கென்னவோ போலீசார் வாங்கும் லஞ்சம் அதிகரிக்கும் என தொன்றுகிறது. எந்த ஒரு அதிகாரிக்கும் தனது சம்பளம் போதும் லஞ்சம் தேவை இல்லை எனும் அளவிற்கு சம்பளமும் மனதும் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

5 comments:

DhanaSekaran .S said...

சட்டங்களால் ஓர் அளவே தடுக்க முடியும் .சுய அறிவு வேண்டும்..

அருமை விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள்.

தராசு said...

இதற்கும் மேலாக மக்கள் மனதில் எனக்கென்ன என்ற எண்ணம் விலக வேண்டும்.

தராசு said...

//இதற்கும் மேலாக மக்கள் மனதில் எனக்கென்ன என்ற எண்ணம் விலக வேண்டும்.//

இதான், இதான் முக்கியம்.

koodal bala said...

\\\வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்துக்கு செல்லாமலே ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் அதிகம், அதை பெருமையாக வேறு சொல்வார்கள்\\\ இது மிக முக்கிய காரணம்

DHANS said...

அது ஒரு முக்கிய காரணம் கூடல் பாலா ஆனால் அத்தகைய மனப்பான்மை வரக்காரணம் என்ன? நாம் நம் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் கூட