Thursday, April 5, 2012

முடிவு


இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தியது, ஒருவர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிடும்.



சிறு வயதில் இருந்தே எனக்கு இந்த முடிவு எடுப்பதில் சரியான அனுபவம் கிடையாது, நான் எடுத்த சில முடிவுகள் சரியாக அமைந்தாலும் பல முடிவுகள் தவறாகவே அமைந்தது. என் வாழ்க்கையின் சில முக்கிய முடிவுகள்



பள்ளியில் படிக்கும்போது ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளி ஆசிரியர் எனது இடது கை பழக்கத்தை விட்டொழிக்க எடுத்த முயற்சிகளால் ஓரளவு வெற்றி பெற்று என்னை வலது கையில் எழுத வைத்து இருந்தார்.  எக்காரணத்தை கொண்டும் இடது கையில் எழுதுவதை மறக்கக்கூடாது என்று முடிவெடுத்து இன்று வரை இரு கையிலும் எழுதும் திறமை பெற்றுள்ளேன். அன்று எடுத்த அந்த முடிவு இன்றும் என்னை ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருவனாக அடையாளப்படுத்துகிறது.




சிறுவயதில் மிகவும் தன்னம்பிக்கை வைத்த சிறுவனாக இருந்த நாட்களில் நீச்சல் கற்றுக்கொள்ள செல்லும்போது, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தாத்தா ஊரில் இருந்து எங்க ஊருக்கு செல்ல வேண்டும், நான் நீச்சல் கற்றுக்கொள்வது என முடிவெடுத்தது பிற்காலத்தில் என்னை காப்பாற்றியது.

 
தமிழ் மீடியத்தில் நன்றாக புரிந்து படித்துக்கொண்டு இருந்தவனை கல்லூரிகாலத்தில் எளிதாக இருக்கும் என்று ஆறாம் வகுப்பில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்க்க நினைத்தபோது, புரியாமல் ஆங்கிலத்தில் படிப்பதை விட புரிந்து தமிழில் படிக்கிறேன் என்று முடிவெடுத்தேன்.



பின்னர் எட்டாம் வகுப்பில் மறுபடியும் மூளை சலவை செய்யப்பட்டு டைக்கும் ஷூக்கும் ஆசைப்பட்டு ஆங்கில வழிக்கல்வியில் மாறினேன்.



தமிழ் மீடியத்தில் இருக்கும் வரை மிக மிக நல்ல பையன், ஆங்கில மீடியமே எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது, பொய் சொல்ல, மனப்பாடம் செய்து படிக்க, பிட் அடிக்க, ஏமாற்ற, கெட்ட வார்த்தை பேச என்று ஆனால் எளிதில் இரண்டே வருடத்தில் ஆங்கில வழி கல்வியில் ஒன்றிவிட்டேன் , சுமாரான மாணவனாக மாறி மனப்பாடத்திலேயே படிக்க கற்றுவிட்டேன், மேற்கூறிய இரண்டு முடிவுகளிலும் என்னால் எதுசரி எது தவறு என அறுதியிட்டு கூற முடியவில்லை.



பத்தாம் வகுப்பிற்கு பிறகு எந்த குரூப் எடுப்பது என்று வந்தபோது என் சுயமான முடிவெடுக்கும் நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது, ஆமாம் வீட்டில் இருந்த சகோதர சகோதரி இரண்டு பெரும் முதல் குரூப் ஆகையால் முதல் குரூப் தவிர வேறு எதுவும் எனக்கு ஆப்சன் ஆகக்கூட கொடுக்கப்படவில்லை, அதிலும் உயிரியல் குரூப் தான்.


மேல்நிலைப்பள்ளியில் அதிக சுதந்திரம் காரணமாக மேலும் பள்ளியை கட் அடித்து, ஊர் சுற்றி படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் கவலை இல்லாத எனக்கான வாழ்க்கையை வாழ்ந்தேன். மருத்துவம் என்பதை கண்டிப்பாக படிக்கக்கூடாது என்று முடிவெடுத்து பொறியியல் படிக்க மட்டுமே முயற்சித்தேன்.


பொறியியல் படிக்க முயற்சி செய்தாலும் மதிப்பெண் பத்தாததால் ஒரு வருடம் மறுபடியும் படிக்கவா இல்லை ஏதும் கலை கல்லூரியில் படிக்கவா என்று வந்த போது மறுபடியும் ஒரு வருடம் படிக்க என முடிவெடுக்கப்பட்டு படித்தேன்,




தனித்தேர்வருக்கான பயிற்சிப்பளியில் சேரவா இல்லை நானே படிக்கவா என வந்தபோது நானே படிக்க என நிர்பந்திக்கப்பட்டு ஒரு வழியாக கஷ்ட்டப்பட்டு பொறியியல் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும்வரை வந்தேன்.


கல்லூரியில் எந்த துறை எடுப்பது கணிப்பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் என முடிவெடுத்தபோது இயந்திரவியல் என நிர்பந்திக்கப்பட்டேன்.


இயந்திரவியலை புடிக்காமல் படிக்கும்போது 5 பேப்பர் அரியர் வச்சு பின்னர் புத்தருக்கு போதி மரத்தடியில் வந்தது போல எனக்கு மொட்டைமாடியில் நியாநோதயம் வந்து பின்னர் ஒரு வழியாக புடிக்காவிட்டாலும் படித்து முடித்தேன்.


கணினி துறையில் வேலைக்கு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்க இயந்திரவியல் துறையில் சேர நிர்பந்திக்கப்பட்டு சேர்ந்தேன், வேலையிலும் வாழ்க்கையில் எது பிடிக்காத ஒரு வேலையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதையும் பின்பற்றி அதிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறேன்.


வாழ்க்கையில் எல்லோரையும் போல வாழ்ந்து முடிவெடுத்து இது வரை வந்த எனக்கு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான  முடிவைமட்டும் நானோ என்னை சார்ந்தவர்களோ எடுக்காமல் எந்த ஒரு ஜோசியக்காரனோ எடுக்கிறான் எனும்போது எனது வருத்தத்தை பதிவு செய்ய இது ஒரு வழி.


என்ன செய்ய வாழ்க்கை எனபது நீ உனக்காக நீயே முடிவெடுத்து வாழ்வது ஒரு வகை, மற்றவர்கள் உனக்காக முடிவெடுத்து நீ வாழ்வது மற்றொரு வகை. இதில் நான் இரண்டாம் வகையில் வாழ நிர்பந்திக்கப்பட்டு உள்ளேன்.


ஆனாலும் எந்த நாதாரியோ நான் ஜோசியக்காரன் என சொல்லி அவன் பொழைப்பை தேட எத்தனையோ பேர் பொழைப்பை கெடுக்கிறான்.

2 comments:

My Blog said...

It happens in LIFE

DHANS said...

நன்றி பூர்ணிமா, எல்லோரும் அவ்வாறே எடுத்துக்கொண்டு இருப்பதாலேயே இது தொடர்கிறது என்று நினைக்கிறேன்.

மற்றவர் பார்வையில் அவரவர் வாழ்க்கையை வாழ்வது என்பது ரொம்ப கொடுமை