Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Tuesday, March 9, 2010

கதையல்ல நிசமா?? கற்பனையா ??




நிஜ முகம்-

இதை நான் கொஞ்ச நாட்களாகவே எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், நாம் எழுதுவதால் என்ன பயன் என நினைத்து எழுதாமல் இருந்தேன். 
என்வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி,  இதைப்பற்றி ஏற்க்கனவே ஒரு நெடிய பதிவு எழுதி பதியும்போது கணினி பழுதடைந்து எல்லாமே அழிந்துவிட்டது.

எல்லோரும் மீடியா மீடியா என்றால் ஓடியா ஓடியா என்று ஓடி வருகிறார்கள் காரணம் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் மீடியா தயவிருந்தால். விளம்பரம் என்பது ஒவ்வொரு மனிதனையும் எதோ ஒரு வகையில் கவர்ந்து விடுகிறது. நானும் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் இருந்த காலத்தில், மீடியா சொல்வதெலாம் உண்மை என்று மனசார அறிந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது.

2003 ஆம் வருடம், தமிழகத்தில் புதிய டிவி ஒன்று ஓரளவுக்கு பெயரெடுக்க நல்ல நிகழ்ச்சிகளை அளிக்க ஆரம்பித்த காலகட்டம், அப்போது ஒருநிகழ்ச்சி பிரபல நடிகை அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு தமிழக மக்களுக்கு பல உண்மைகளை சொல்லி வந்தது. அதில் பலருக்கு நடந்த கொடுமைகள் அதில் போலீஸ், ஆளும் கட்சியினர் செய்த அக்கிரமங்கள் போன்றவற்றை காட்டி மக்களுக்கு உண்மைகளை தெரியவைத்தனர்.  நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முடித்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை நானும் பார்ப்பேன். மனது பதைபதைக்கும் கோவம் வரும் நடந்ததை கேள்விப்பட்டால். டி ஆர் பி என்றும் ஒன்றை குறிவைத்து நடக்கும் நாடகமாக இல்லாமல் உண்மையான நாட்டு நடப்பை பேசவந்த நிகழ்ச்சி.

இதே நிகழ்ச்சி உண்மைக்கு புறம்பான தவறான தகவலை உண்மை என நம்பவைக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வை அளிக்கும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை

எங்கள் கல்லூரியில் நடந்த ஒருநிகழ்வு தவறாக ஒளிபரப்பப்பட்டது, நான் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது எங்களுடன் படித்த ஒரு மாணவன் விடுதியில் உடன் படிக்கும் மாணவர்களின் பணத்தை நெடு நாட்களாக திருடி வந்து இருந்தான். ஒரு மாணவர் கூட்டம் அவன் மேல் சந்தேகம் கொண்டு அவனை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். அவனும் எடுத்ததை ஒத்துக்கொண்டான். இதுநடந்தது ஒரு மாலை நேரம், அடுத்த நாள் கலையில் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அவன் இரவோடு இரவாக விடுதியை விட்டு ஓடி விட்டான். சிறு வயதில் எல்லோரும் பெரிய அறிவாளி போல அவனிடம் எழுதி வாங்குவது, விசாரணை மேற்கொள்வது என இருந்தனர்.

அடுத்த நாள் காலையில் ஆளைக்காணாமல் பிடித்த குழு முழித்தது, கல்லூரியில் தெரிவிக்கப்பட்டது, பையனின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது, காவல் துறையிலும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை ஆரம்பம் ஆனது காவல் துறையினர் எல்லோரிடமும் விசாரணையினை மேற்கொண்டனர். அவன் ஓடிப்போனதாகவே விசாரணை மேற்கொண்டு இருந்தது. திடிரென்று ஒருநாள் காவல் துறையினரின் பார்வை மாறியது, மாணவர்கள் அவனை பிடித்து அடித்து கொலை செய்து எங்கோ புதைத்து விட்டது போல ஒருகோணம் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக இது நடக்கவில்லை. ஆனால் அந்த மாணவனின் தந்தை மேலிடத்து உதவியுடன் விசாரணையை இந்த விதத்தில் மேற்கொள்ள வைத்தார்.

இதில் மாட்டிக்கொண்டது அவனுடன் படித்த, உடன் இருந்து பணத்தையும் இழந்த நண்பர்கள், அவனை பிடித்த மாணவர் குழு வெகுவாக கழண்டு கொள்ள இவர்கள் அவனுடன் பழகிய காரணத்துக்காக விசாரணையினை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.கிட்டத்தட்ட ஒரு வருடம் விசாரணை நடந்து மாணவர்கள் பாசமாக, ஆபாசமாக, அசிங்கமாக, மிரட்டி என்று எல்லா விதத்திலும் விசாரிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் எல்லோரும் சலித்துப்போன ஒரு நாளில் இந்த விஷயம் கதையல்ல நிஜத்தில் வந்தது.

மாணவனின் தந்தை இதை அங்கு கொண்டு வந்துள்ளார் என நினைக்கிறேன், நிகழ்ச்சி முழுக்க மாணவனை மற்ற மாணவர்கள் சேர்ந்து கொன்று விட்டனர், அதை மறைத்து நாடகம் ஆடுகின்றனர் என்ற கோணத்திலேயே கொண்டு செல்லப்பட்டது. நாணயத்துக்கு கூட இரண்டு பக்கம் உண்டு ஆனால் இந்த நிகழ்ச்சியில் மறுபக்கத்தை அவர்கள் தொடக்கூட இல்லை அதாவது உண்மையின் பக்கத்தை. அவன் ஓடிப்போனது அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் உறுதியாய் தெரிந்த நிலையில், தொலைபேசியில் அதை தெரிவித்தும் நிகழ்ச்சியை அவர்கள் கோணமாகிய கொலை என்றே கொண்டு சென்று முடித்தனர்.

அந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரும் இன்று வரை அந்த மாணவனை அடித்து கொன்று அல்லது எதோ செய்து மறைத்துவிட்டனர் என்றே நினைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால் நடந்த உண்மை அந்தநிகழ்ச்சி முடிந்த சில வாரங்களில் ஓடிப்போன அந்த மாணவன் விசாரணையில் இருந்த அவன் அறைத் தோழனுக்கு கடிதம் போட, விசாரணை மறுபடியும் முழு வீச்சில் ஆரம்பித்தது, கடிதத்தில் அவன் கல்லூரியின் தொலைபேசிக்கு ஒரு ஞாயிறு மாலையில் பேசுவதாக தெரிவிக்க, இதற்கு இடையில் கல்லூரி தொலைபேசி எண்கள் மாற்றப்பட்டிருந்தது. தொலைப்பேசி நிறுவனத்தின் உதவியுடன் பழைய எண்கள் உபயோகத்தில் வைக்கப்பட்டு,அவனிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் பேசுகையில் எங்கிருந்து பேசுகிறான் என கண்டு பிடித்து அடுத்த இரண்டு நாளில் அவனை காவல்துறை பிடித்துவிட்டனர். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளான். கிட்டத்தட்ட ஒரு வருடம் எல்லோருக்கும் தண்ணி காட்டி இருந்தான்.

இரண்டுநாளில் கோர்டில் ஒப்படைக்கப்பட்டு கல்லூரிக்கு வந்து தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டான், அவனால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கிட்டத்தட்ட பத்து மாணவர்கள். இதுநடந்து முடிந்ததும் சம்பந்தப்பட்ட டிவிக்கு தெரியப்படுத்தினால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அது ஒரு தயாரிப்பாளர் நிகழ்ச்சி நாங்கள் இப்பொது ஏதும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். உண்மை வெளியே தெரியாமல் பொய் மட்டுமே மக்களிடம் கண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருவன் செய்த தப்பினால் அவனைத்தவிர பலர் அவனது ஆசிரியர் நண்பர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அந்த மாணவன் இன்று சென்னையிலோ இல்லை வேறு எங்க இருக்கலாம், இந்தப்பதிவை படித்துக்கொண்டும் இருக்கலாம் ஆனால் அவனும் அவன் தந்தையும் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுதான் உலகமோ? 


கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒரு த்ரில்லர் கிரைம் படம் போல நடந்த நிகழ்வுகள் இது, இதை வைத்து ஒரு சினிமா கண்டிப்பா எடுக்கலாம், அந்த அளவுக்கு நடந்தது. அந்த மாணவர்களுக்கு எவ்வளவு அவமானங்கள், உடன் படித்தவர்களே, அவனை பிடித்த மாணவர் குழுவே அவர்களை உங்களுக்கு என்னடா ஜாலியா விசாரணை ன்று வகுப்பை கட் அடித்துவிட்டு செல்கிறீர்கள் என கேலி செய்தனர்.  பிடித்தவர் ஒருவர் அகப்பட்டவர் ஒருவர், காவல்துறை மேல்டத்தின் பிரசர் காரணமாக கோணத்தை எப்படி எல்லாம் மாற்ற வேண்டி இருந்தது, விசாரணையில் காவல்துறையின் சில நல்லவர்களையும்  கண்டுகொண்டனர். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து அவர்கள் படிப்பை முடித்து இன்று நல்ல நிலையில் தானுள்ளனர் ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நிகழ்வுடன்உடன் படித்த மாணவ மாணவிகளே இவர்களை தவறாக, விசாரணைக்கு போகும்போது இகழ்ச்சியாக படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியினால் பிரிந்து இருந்த அந்த ஓடிப்போன மாணவனின் தந்தையும் தாயும் சேர்ந்தனர் இது மட்டுமே ஒரு நல்ல நிகழ்வு. கெட்டதிலும் ஒரு நல்லது போல.


இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது இல்லை, சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

Tuesday, June 24, 2008

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

வகுப்பில் நன்றாக படிக்க கூடிய பையனில் அவனும் ஒருவன், ஏனோ தெரியவில்லை அவனில் ஒரு இனம்புரியா சோகம் இருந்தாலும் அந்த சோகத்தை மறக்கடிக்க செய்வது அவன் வகுப்பு தோழர்கள் மட்டுமே. வகுப்பறைகள் மூன்றாவது விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள இடத்தில் மாற்றப்பட்டது. அவனுக்கும் அந்த மாற்றம் தேவைப்பட்டது. இந்த மாற்றம் அவனில்லும் எதோ ஒரு மாற்றத்தை தூண்டிவிட்டது.

வகுப்பில் ஒரு நாள், மாணவர் அனைவரும் விளையாட சென்றுவிட்டு வந்திருந்தனர், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் வந்து அவனுடைய ஒரு புத்தகத்தை எடுத்தான், அட்டை கிழிந்து இருந்தது, அந்த அட்டை நேற்றுத்தான் போடப்பட்டது. எப்படி கிழிந்தது என்று தெரியவில்லை, அவன் அழுதுகொண்டே நம்ம ஹீரோ விடம் வந்தான், ஏனென்றால் வகுப்பில் அப்போது வேறு யாரும் இல்லை, அவர்கள் உள்ளே வரும்போதுதான் மற்றொரு மாணவன் வெளியே சென்றான்.

அந்த மற்றொருவன் தான் இப்போது வில்லன், ஏனென்றால் அவனுக்கு அப்போதே ஒரு வன்முறை எண்ணம் இயற்கையாக அமைந்து இருந்தது, சரியாக படிக்க மாட்டான், அடிக்கடி டீச்சரிடம் அடி வாங்குவன் இது போதாதா அவனுக்கு ரவுடி பட்டம்கட்ட??

அட்டை கிழிந்த மாணவனுக்கு ரவுடி மீது சந்தேகம், இப்போது நம்ம ஹீரோ உதவிக்கு வருகிறார், "டேய் நான் பார்தேண்ட அவன்தான் உன் அட்டையை கிழித்தது",

"எப்படா பார்த்த?" இது அட்டை கிழிந்த மாணவன், நம்ம விளையாட போனப்ப நான்தான் கடசியா வந்தேன்ல அப்ப அவன் உன் பைய எடுத்து பாத்துகிட்டு இருந்தான், நான் என்னனு எட்டி பார்த்தா உன் நோட்டு அட்டைய கிழிச்சு உள்ள வச்சான். மனதினுள் இதை அவன் நம்பிவிட்டால் நமது நெருங்கிய நண்பன் ஆகிவிடுவான் என்ற திட்டத்துடன் தன் வாழ்வின் முதல் பொய்யை சொல்ல துவங்கினான்.

அட்டை கிழிந்த மாணவன் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்தவன் இப்போது அதில் வேறு பெட்ரோல் ஊற்றிவிட நேராக டீச்சரிடம் கொண்டு சென்றான். நம்ம ஹீரோ சாட்சி குடுக்க, குற்றவாளி விசாரிக்கப்பட்டான். "டீச்சர் நான் ஏதும் பண்ல, எனக்கு ஏதும் தெரியாது" என்றான். அப்ப எதுக்கு கடசியா வெளிய போன, என்ன பண்ணின வகுப்புக்கு உள்ள? இது டீச்சர். "இல்ல டீச்சர் நான் ஏதும் விளையாட போகல, என்ன யாரும் சேத்துக்கல அதான் வகுப்பில் உட்க்கார்ந்து இருந்தேன்" இது அவன்.

இப்படி பண்ணின எவன் விளையாட சேத்துப்பான்?? டேய் உண்மைய சொல்லு யார் இது பண்ணினா? இவனா நல்ல தெரியுமா ??? டீச்சர் கேள்வி கேட்க்க, நம்ம ஹீரோ இவன்தான் டீச்சர் நான் பாத்தேன் இவன் அட்டைய கிழிக்கும்போது. சொல்லும்போது நம்ம ஹீரோ மனதில் அயிரம்கேள்விகள், தவறு என்று தெரிந்து செய்யும் ஓவொன்றும் அப்படி வலிக்கும் என்று புரிந்து கொண்டான். அப்போது குற்றம் சாட்டப்பட்டவன் பார்த்த பார்வையின் அர்த்தம் இருக்கே,

டேய் நீயா இப்படி? என்று புடனியில் அடித்த மாதிரி இருந்தது நேற்று எனக்கு. ஏன் என்று தெரியாமல் நானாக தலை குனிந்தபடியே சமீபத்தில் நடந்த அலுவலக அரசியலில் என்னை குற்றவாளி ஆக்கிய நிகழ்வை நினைத்தேன். chaos தியரி புரிந்த மாதிரி இருந்தது....