Tuesday, March 9, 2010

கதையல்ல நிசமா?? கற்பனையா ??
நிஜ முகம்-

இதை நான் கொஞ்ச நாட்களாகவே எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், நாம் எழுதுவதால் என்ன பயன் என நினைத்து எழுதாமல் இருந்தேன். 
என்வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி,  இதைப்பற்றி ஏற்க்கனவே ஒரு நெடிய பதிவு எழுதி பதியும்போது கணினி பழுதடைந்து எல்லாமே அழிந்துவிட்டது.

எல்லோரும் மீடியா மீடியா என்றால் ஓடியா ஓடியா என்று ஓடி வருகிறார்கள் காரணம் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் மீடியா தயவிருந்தால். விளம்பரம் என்பது ஒவ்வொரு மனிதனையும் எதோ ஒரு வகையில் கவர்ந்து விடுகிறது. நானும் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் இருந்த காலத்தில், மீடியா சொல்வதெலாம் உண்மை என்று மனசார அறிந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது.

2003 ஆம் வருடம், தமிழகத்தில் புதிய டிவி ஒன்று ஓரளவுக்கு பெயரெடுக்க நல்ல நிகழ்ச்சிகளை அளிக்க ஆரம்பித்த காலகட்டம், அப்போது ஒருநிகழ்ச்சி பிரபல நடிகை அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு தமிழக மக்களுக்கு பல உண்மைகளை சொல்லி வந்தது. அதில் பலருக்கு நடந்த கொடுமைகள் அதில் போலீஸ், ஆளும் கட்சியினர் செய்த அக்கிரமங்கள் போன்றவற்றை காட்டி மக்களுக்கு உண்மைகளை தெரியவைத்தனர்.  நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முடித்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை நானும் பார்ப்பேன். மனது பதைபதைக்கும் கோவம் வரும் நடந்ததை கேள்விப்பட்டால். டி ஆர் பி என்றும் ஒன்றை குறிவைத்து நடக்கும் நாடகமாக இல்லாமல் உண்மையான நாட்டு நடப்பை பேசவந்த நிகழ்ச்சி.

இதே நிகழ்ச்சி உண்மைக்கு புறம்பான தவறான தகவலை உண்மை என நம்பவைக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வை அளிக்கும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை

எங்கள் கல்லூரியில் நடந்த ஒருநிகழ்வு தவறாக ஒளிபரப்பப்பட்டது, நான் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது எங்களுடன் படித்த ஒரு மாணவன் விடுதியில் உடன் படிக்கும் மாணவர்களின் பணத்தை நெடு நாட்களாக திருடி வந்து இருந்தான். ஒரு மாணவர் கூட்டம் அவன் மேல் சந்தேகம் கொண்டு அவனை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். அவனும் எடுத்ததை ஒத்துக்கொண்டான். இதுநடந்தது ஒரு மாலை நேரம், அடுத்த நாள் கலையில் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அவன் இரவோடு இரவாக விடுதியை விட்டு ஓடி விட்டான். சிறு வயதில் எல்லோரும் பெரிய அறிவாளி போல அவனிடம் எழுதி வாங்குவது, விசாரணை மேற்கொள்வது என இருந்தனர்.

அடுத்த நாள் காலையில் ஆளைக்காணாமல் பிடித்த குழு முழித்தது, கல்லூரியில் தெரிவிக்கப்பட்டது, பையனின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது, காவல் துறையிலும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை ஆரம்பம் ஆனது காவல் துறையினர் எல்லோரிடமும் விசாரணையினை மேற்கொண்டனர். அவன் ஓடிப்போனதாகவே விசாரணை மேற்கொண்டு இருந்தது. திடிரென்று ஒருநாள் காவல் துறையினரின் பார்வை மாறியது, மாணவர்கள் அவனை பிடித்து அடித்து கொலை செய்து எங்கோ புதைத்து விட்டது போல ஒருகோணம் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக இது நடக்கவில்லை. ஆனால் அந்த மாணவனின் தந்தை மேலிடத்து உதவியுடன் விசாரணையை இந்த விதத்தில் மேற்கொள்ள வைத்தார்.

இதில் மாட்டிக்கொண்டது அவனுடன் படித்த, உடன் இருந்து பணத்தையும் இழந்த நண்பர்கள், அவனை பிடித்த மாணவர் குழு வெகுவாக கழண்டு கொள்ள இவர்கள் அவனுடன் பழகிய காரணத்துக்காக விசாரணையினை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.கிட்டத்தட்ட ஒரு வருடம் விசாரணை நடந்து மாணவர்கள் பாசமாக, ஆபாசமாக, அசிங்கமாக, மிரட்டி என்று எல்லா விதத்திலும் விசாரிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் எல்லோரும் சலித்துப்போன ஒரு நாளில் இந்த விஷயம் கதையல்ல நிஜத்தில் வந்தது.

மாணவனின் தந்தை இதை அங்கு கொண்டு வந்துள்ளார் என நினைக்கிறேன், நிகழ்ச்சி முழுக்க மாணவனை மற்ற மாணவர்கள் சேர்ந்து கொன்று விட்டனர், அதை மறைத்து நாடகம் ஆடுகின்றனர் என்ற கோணத்திலேயே கொண்டு செல்லப்பட்டது. நாணயத்துக்கு கூட இரண்டு பக்கம் உண்டு ஆனால் இந்த நிகழ்ச்சியில் மறுபக்கத்தை அவர்கள் தொடக்கூட இல்லை அதாவது உண்மையின் பக்கத்தை. அவன் ஓடிப்போனது அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் உறுதியாய் தெரிந்த நிலையில், தொலைபேசியில் அதை தெரிவித்தும் நிகழ்ச்சியை அவர்கள் கோணமாகிய கொலை என்றே கொண்டு சென்று முடித்தனர்.

அந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரும் இன்று வரை அந்த மாணவனை அடித்து கொன்று அல்லது எதோ செய்து மறைத்துவிட்டனர் என்றே நினைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால் நடந்த உண்மை அந்தநிகழ்ச்சி முடிந்த சில வாரங்களில் ஓடிப்போன அந்த மாணவன் விசாரணையில் இருந்த அவன் அறைத் தோழனுக்கு கடிதம் போட, விசாரணை மறுபடியும் முழு வீச்சில் ஆரம்பித்தது, கடிதத்தில் அவன் கல்லூரியின் தொலைபேசிக்கு ஒரு ஞாயிறு மாலையில் பேசுவதாக தெரிவிக்க, இதற்கு இடையில் கல்லூரி தொலைபேசி எண்கள் மாற்றப்பட்டிருந்தது. தொலைப்பேசி நிறுவனத்தின் உதவியுடன் பழைய எண்கள் உபயோகத்தில் வைக்கப்பட்டு,அவனிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் பேசுகையில் எங்கிருந்து பேசுகிறான் என கண்டு பிடித்து அடுத்த இரண்டு நாளில் அவனை காவல்துறை பிடித்துவிட்டனர். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளான். கிட்டத்தட்ட ஒரு வருடம் எல்லோருக்கும் தண்ணி காட்டி இருந்தான்.

இரண்டுநாளில் கோர்டில் ஒப்படைக்கப்பட்டு கல்லூரிக்கு வந்து தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டான், அவனால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கிட்டத்தட்ட பத்து மாணவர்கள். இதுநடந்து முடிந்ததும் சம்பந்தப்பட்ட டிவிக்கு தெரியப்படுத்தினால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அது ஒரு தயாரிப்பாளர் நிகழ்ச்சி நாங்கள் இப்பொது ஏதும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். உண்மை வெளியே தெரியாமல் பொய் மட்டுமே மக்களிடம் கண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருவன் செய்த தப்பினால் அவனைத்தவிர பலர் அவனது ஆசிரியர் நண்பர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அந்த மாணவன் இன்று சென்னையிலோ இல்லை வேறு எங்க இருக்கலாம், இந்தப்பதிவை படித்துக்கொண்டும் இருக்கலாம் ஆனால் அவனும் அவன் தந்தையும் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுதான் உலகமோ? 


கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒரு த்ரில்லர் கிரைம் படம் போல நடந்த நிகழ்வுகள் இது, இதை வைத்து ஒரு சினிமா கண்டிப்பா எடுக்கலாம், அந்த அளவுக்கு நடந்தது. அந்த மாணவர்களுக்கு எவ்வளவு அவமானங்கள், உடன் படித்தவர்களே, அவனை பிடித்த மாணவர் குழுவே அவர்களை உங்களுக்கு என்னடா ஜாலியா விசாரணை ன்று வகுப்பை கட் அடித்துவிட்டு செல்கிறீர்கள் என கேலி செய்தனர்.  பிடித்தவர் ஒருவர் அகப்பட்டவர் ஒருவர், காவல்துறை மேல்டத்தின் பிரசர் காரணமாக கோணத்தை எப்படி எல்லாம் மாற்ற வேண்டி இருந்தது, விசாரணையில் காவல்துறையின் சில நல்லவர்களையும்  கண்டுகொண்டனர். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து அவர்கள் படிப்பை முடித்து இன்று நல்ல நிலையில் தானுள்ளனர் ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நிகழ்வுடன்உடன் படித்த மாணவ மாணவிகளே இவர்களை தவறாக, விசாரணைக்கு போகும்போது இகழ்ச்சியாக படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியினால் பிரிந்து இருந்த அந்த ஓடிப்போன மாணவனின் தந்தையும் தாயும் சேர்ந்தனர் இது மட்டுமே ஒரு நல்ல நிகழ்வு. கெட்டதிலும் ஒரு நல்லது போல.


இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது இல்லை, சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

4 comments:

தராசு said...

நல்ல ஆதங்கம்.

பதிவை கொஞ்சம் சுருக்கி, மீடியாவின் மீதான ஆதங்கங்களையும், தீர்வுகளையும் முன்வைப்பது பதிவுக்கு இன்னும் இனிமையூட்டும்.

DHANS said...

nandri...

i was planning to shorten the post but actually its already a shorten verson. had to cut a lot and also for solution i have nothing with me.

everyone is going behind the money so solution wont be effective.

Anonymous said...

உண்மைதான்... பல டிவி ரியாலிட்டி ஷோக்களே ரீல்தான் என பிரிபல டிவியில் பணிபுரியும் என் நண்பன் சொன்னான்... நல்ல பதிவு.

DHANS said...

//பல டிவி ரியாலிட்டி ஷோக்களே ரீல்தான் என பிரிபல டிவியில் பணிபுரியும் என் நண்பன் சொன்னான்... நல்ல பதிவு.//

நன்றி சுந்தரேசன், உண்மைதான் பாதுக்காக குறி வைத்து நடத்தப்படும் இவறை பொழுதுபோக்குக்காக பார்த்தல் போதுமானது