Friday, March 20, 2009

நான் பள்ளி சென்ற கதை

காலையில் கிளம்பும்போது அந்த பள்ளிச்சிறுமியை தினமும்பார்ப்பேன், இன்று எதோ ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். ஒவ்வொரு நாளும் ஓவொரு முக பாவனையுடன் வித விதமான பேச்சில். அமைதியாய், ஆச்சரியமாய், மகிழ்ச்சியாய், அழுகையுடன் என்று வித விதமான செய்கைகள் பேச்சுகள் என்று. இன்று புதிதாய் பள்ளி வாகனம் மாற்றப்பட்டு உள்ளதாம் அதை பற்றி பேசும்போதே என்னுள் எனது கடந்த கால பள்ளி செல்லும் நினைவுகள் வந்தது.

அப்பா பதிவுக்கு ஒரு தலைப்பும் விசயமும் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.

நான் பள்ளியில் சேர்க்கப்படும்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் இருந்தோம். கரூருக்கு அருகில் இருந்த கிராமம் எங்களுது. பள்ளிக்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றால் அங்கிருந்து பள்ளி பேருந்து வரும். நான் பள்ளிக்கு செல்வது என்பது இன்றும் உறவினர்களால் கேலி செய்யப்படும் ஒரு நிகழ்வு, பின்ன சும்மாவா என் தாத்தாவுடன் சென்று பள்ளி பேருந்தை பிடிக்க வேண்டும். அவர் சைக்கிளுக்கு நான்தான் ஆஸ்த்தான பயணி. என்னை அவ்வளவு பாதுகாப்பா கூட்டி செல்வார் . அவர் சைக்கிளில் பின்னால் ஒரு பெரிய பலகை வைத்திருப்பார் அதில் முதலில் என் அண்ணாவின் புத்தகப்பை அடுத்து என்னை உட்கார வைப்பார், அதன் பின்னர் எனது புத்தகப்பை என் பின்னால். இதுல என்ன இருக்கு??? இருங்க இருங்க, அப்புறம் ஒரு கயிறு எடுத்து புத்தகப்பை மற்றும் என்னை சேர்த்து கட்டுவார். கட்டிவிட்டு பின்னை நன்றாக புடித்துக்கொள்ள சொல்லுவார். டாடா கூட காட்டக்கூடாது. அப்படியே சென்று பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவார். பின்னால் இவன் ஒரு பெரிய மேதையாவன் பாதுகாப்பா கொண்டு செல்லனும் என்று அப்போதே அவருக்கு தெரிந்து இருக்கிறது பாருங்களேன்.

இரண்டு வருடங்கள் கழித்து எங்கள் ஊரிலேயே ஒரு அண்ணன் பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுவது தெரிந்து எங்களை அதில் அனுப்பி வைத்தனர். அப்போது பள்ளிக்கு ஆட்டோவில் போவது ஒரு முக்கியமான நிகழ்வு, ஆட்டோ என்றால் நன்றாக இருக்கும். அங்கேயும் ஆட்டோவில் முன்னாள் நிற்பதற்கு தகுதி சிறு வயதாக இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு இரு புறமும் நின்று கொண்டு வர பெரிய பையனாக இருக்க வேண்டும். நான் தான் ரெண்டும் இல்லை மேலும் எங்கள் வீட்டில் இருந்தே ஏறி விடுவதால் பின்னால் சீட்டில் நடுவில் தான் உட்கார வேண்டும். அதிலும் பக்கத்து ஊரில் ஒரு சிறுவன் (நானே அப்போது சிறுவன் தான் ஆனாலும் 1 ஒன்றாம் வகுப்பு படித்தேன்) ஏறினான், முன்னாள் நிற்கும் இடம் அவனுக்கு போயிற்று. ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் என் அண்ணன் நின்று கொள்வார்.இதில் தான் எத்தனை அனுபவங்கள் , பள்ளி முடிந்து திரும்பும்போது சில நாட்கள் நாவல் மரத்தின் அடியில் ஆட்டோவை நிறுத்தி உதிர்ந்த நாவல் பழம் எடுத்து சாப்பிடுவோம். ஸ்டார்ட் ஆகாத ஆட்டோவை தள்ளுவது. எங்க ஆட்டோதான் எப்பவுமே பள்ளியில் இருந்து கடைசியாக கிளம்பும், எனக்கு தெரிந்து இரண்டு முறை தான் மற்ற ஆட்டோவை முந்தியுள்ளது.

மூன்று வருடம் இப்படியே பயணம் செய்து பின்னர் ஓட்டுனர் அருகில் நிற்கும் தகுதி வந்த வேளையில் நாங்கள் கரூருக்கு வீடு மாறி வந்தோம். பின்னர் மறுபடியும் பள்ளி பேருந்து. அப்போது எங்கள் வீட்டில் குடியிருந்தவரின் பெண் எங்கள் பள்ளியில் படித்தார், அவரும் பள்ளி பேருந்தில் செல்வதால் அவருடன் அனுப்பி வைப்பார்கள். பேருந்தில் அப்போதெல்லாம் உட்கார இடம் இருக்காது. அடைத்துதான் செல்வார்கள். சின்ன பசங்க எல்லாம் சீட்டில் சாய்வதற்கும் உட்காருவதர்க்கும் உள்ள பலகைக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கே அதில் காலை வைத்து சாயும் பலகையை நோக்கி முகம் பார்த்து உட்கார வேண்டும். மற்றவர்கள் எங்களுக்கு பின்னால் இருக்கும் இடத்தில் முன்னோக்கி அமருவார்கள். எங்கள் பேருந்து வேறு நாய் வண்டி போல இருக்கும். சிறிது காலத்தில் பேருந்து மாறியது. அப்போது அந்த அக்காவும் என்னை அவர் அருகிலே உட்க்கார வைத்துக்கொண்டனர்.

ஒன்றரை வருடங்கள் அப்படியே ஓடியது. பின்னர் அரசு பேருந்தில் செல்ல துவங்கினேன், தினமும் வீட்டில் இருந்து காலையில் கிளம்பி ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இரண்டு பேருந்துகளே பள்ளிக்கு செல்லும். கால் மணி நேர வித்தியாசத்தில் இருக்கும் இரண்டும். இரண்டாவதாக வரும் பேருந்தில் சென்றால் கூட்டம் அதிகம், மணி அடிக்கும்போது உள்ளே செல்லும் நிலை இருக்கும் ஆதலாம் முடிந்த வரை முதல் பேருந்தில் செல்வேன். எல்லாமே கூட்டமாக வரும், பத்தாவது முதல் +2 வரை படிக்கும் மாணவர் அரசு பேருந்தில் தான் வருவார்கள். அப்போதெல்லாம் நினைப்பேன் ஏன் இவர்கள் அழகா சைக்கிளில் வராமல் பேருந்தில் கூட்டமாக வருகிறார்கள் என்று, பின்னர் நான் அந்த வகுப்பு வரும்போது தான் புரிந்தது, பின்னே அந்த பேருந்து எங்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னாள் இரண்டு பெண்கள் பள்ளியை கடந்து வரும்.

ஆறாவது பாதியிலேயே நான் சைக்கிளில் செல்ல துவங்கிவிட்டேன், வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு ஏழு கிலோமீட்டர் சுற்றி செல்வோம் (கூட்டம் இல்லாமல் செல்லும் வழி அது, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று செல்வோம்) பத்தாவது வரை சைக்கிள்தான் எங்கு சென்றாலும் சைக்கிள்தான் துணை, சில நாட்கள் வீட்டிற்கு அருகில் பை பாஸ் சாலைக்கு அருகே உள்ள வயல் வெளிகளுக்கு சென்று தனியாய் அமைந்து விடுவேன், ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் திரும்பும்போது மன அமைதி இருக்கும்.

11ம் வகுப்பு பள்ளி மாறிவிட்டேன், வீட்டில் இருந்து 15 நிமிடபயணம் . மதிய சாப்பாடு வீடிற்கு வந்து சாப்பிடுவேன் பெரும்பாலும் பள்ளி நடக்காது அப்படி நடந்தாலும் நாங்கள் போக மாட்டோம். 9 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் பத்து மணிக்கு பாதி பேர் வெளியே சென்று விடுவார்கள்.பெரும்பாலும் விளையாடவும் சிலர் சினிமாவுக்கும் செல்வார்கள், என்னைமாதிரி பயந்த பையன்கள் வீட்டிற்கு சென்று விடுவோம், நன்றாக தூங்கிவிட்டு பின்னர் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு பள்ளி வந்து சிறிதுநேரம் அரட்டை அடித்துவிட்டு மீண்டும் டியுசன் சென்று விடுவோம்.

பதினொன்றாம் வகுப்பு பாதியில் நண்பன் ஒரு TVS-50 இல் பள்ளிக்கு வரத்துவங்கினான். அவனுடம் சேர்ந்து வரத்துவங்கியதால் எனது சைக்கிள் ஓய்வு எடுத்தது. அவ்வப்போது தேவைப்படும்போது எடுப்பேன் மற்றபடி அதிகம் சென்றது நண்பனுடன் வண்டியில். அப்போது ரொம்ப முக்கிய தேவை எனில் வீட்டில் எப்படியாவது கேட்டு எனது தந்தையின் TVS-50 யை எடுத்து செல்வேன் அப்போது அதுவே பெரிய சாதனை பள்ளிக்கு வண்டியில் வருவது.

கல்லூரி வந்தவுடன் ஹாஸ்டல் வாழ்க்கை, ஈரோட்டிற்கு சென்று வர கல்லூரி பேருந்து 7 B மறக்க முடியாத பேருந்து. பல காதல்களையும் சில மோதல்களையும் ஒன்று சேர சுமந்த பேருந்து, இதில் அதிகம் பயணித்ததுஇல்லை எப்போதும் கீழே இறங்கி மூன்றாம் நம்பர் பேருந்தை பிடிப்பதுதான் எங்கள் வழக்கம்.

இவ்வாறெல்லாம் இனிய பயன்களை கடந்த நான் இப்போதெல்லாம் அலுவலக பேருந்தை ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விட்டேன், சமீப காலமாக அவ்வப்போது வெளியே எட்டிப்பார்த்து பயணத்தை அனுபவிக்கிறேன்.

பயணங்கள் எப்போதும் இனிமையானவை.. இப்போது கூட...

5 comments:

nsrajesh said...

hi
are you from Pugalur??

jaisri said...

Nice Story...

R u from IRTT?

DHANS said...

நன்றி திரு ராஜேஷ்.

நான் புகலூர் இல்லை கரூர். சொந்த ஊர் வெண்ணைமலை பசுபதி பாளையம்

DHANS said...

வருகைக்கு நன்றி ஜெயஸ்ரீ.

நான் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில்தான் பயின்றேன்.
தாங்களுமா?

பிரேம்குமார் said...

ஹி ஹி ஹி...நானும் உங்க கட்சி தான். பேருந்தில் ஏறி உக்காந்தாலே தூக்கம் வந்துரும்