Wednesday, July 16, 2008

பயணம்

சமிபத்தில் இரண்டு முறை அரசுப்பேருந்தில் சென்னையிலிருந்து கரூர் பயணம் செய்தேன். இதில் நான் கவனித்து அறிந்தது. வெள்ளிகிழமைகளில் அனைத்து பேருந்தும் நிரம்பி வழிந்தது.

தனியார் பேருந்துகள் அரசுப்பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்சென்றனர், கேட்பதற்கு யாருமில்லை, கேட்டலும் அவர்கள் மதிப்பதாக இல்லை.

முதல் பயணம், நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துப்பயணம் அதுவும் அரசு விரைவுப்பேருந்து- டிலக்ஸ் பேருந்து. எனக்காக முதல் வரிசை இருக்கை வழக்கம்போல ஒதுக்கப்பட்டு இருந்தது (காரணம் முதல் வரிசையில் கால்களை நன்றாக நீட்டிக்கொள்ளலாம்) பேருந்தில் ஏறியவுடன் நான் அறிந்தது, அரசு பேருந்துக்கு எவ்வளவு விலை உயர்ந்த பேருந்தை குடுத்தாலும் பராமரிக்காமல் மிக விரைவில் மோசமக்கிவிடுவார்கள் என்று.

மிக அழுக்காக இருந்தது பேருந்து, இருக்கைகளும் அப்படியே, அதிசயமாக மின் விசிறிகள் ஓடின. சத்தம் வரவில்லை (ஆச்சரியம்) மொத்தத்தில் நல்ல பேருந்தை சீரழித்து வைத்திருந்தனர். அடுத்து பயணிகள், நடத்துனர் என்னிடம் பேசியபோதே இருவர், பயணசீட்டில் சினிமாக்கு காசு குடுத்தோம் ஏன் படம் போடலை என்று விவாதம் செய்தனர். அவரும் டிவி சரியாக தெரியவில்லை, நிறங்கள் மாறி வருகின்றன, சிறிது நேரத்தில் பாடல் போடப்படும் என்றார். அவர்கள் கேட்பதாய் இல்லை, நடத்துனர் மிக கடுப்பாகி, படமா கேட்கறீங்க, இதோ இருங்க என்ற படியே ஒரு படம் போட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்து முழுவதும் தூங்கியது. போடப்பட்ட படம் "நெஞ்சம் மறப்பதில்லை"

பின்னர் சிறிது நேரத்தில் படத்தை நிறுத்தி விட்டு இனிமயான ராஜா பாடல்கள் போடப்பட்டது. மிக மெல்லிய சத்தத்தில் இனிமையாகவே இருந்தது பயணம். அரசு விரைவுப்பேருந்து என்று பெயர் அனால் நான் பார்த்த வரை பேருந்து விரைவாய் செல்லவில்லை. பின்னால் வந்த அனைத்து பேருந்துகளும் முந்தி சென்றது, ஆனாலும் பயணம் எந்த அதிர்வுகளும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அப்போது நினைத்தேன் இதுவே மற்ற அரசு பேருந்துகளாக (விரைவு பேருந்து தவிர திருச்சி கிளை பேருந்துகள் ) இருந்தால் விரைவாக செல்வார்கள், பேருந்து பராமரிப்பு சிறப்பாக இருக்கும் என்று.

நடுவில் சாப்பிட நிறுத்தினர், வழக்கம் போல மிக மட்டமான ஒரு உணவகம். இறங்கும்போதே அங்கிருந்தவனிடம் சண்டை. குடிநீர் வாங்கலாம் என்று இறங்கினால் நம்மை பிடித்து அங்கிருந்த மிக மட்டமான கழிவறைக்கு கொண்டு சென்று விட்டு விடுவார்கள் போல. சண்டை ஆரம்பிக்கும் போதே நடத்துனர் தயவால் நிறுத்தப்பட்டது. ஒரு லிட்டர் தண்ணீர் 18 ரூபாய். அநியாய கொள்ளை.

சாலைகள் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது வழி நெடுக. காலை 6.30 கரூர் சென்றடைந்தேன்.

சென்னைக்கு திரும்ப விரைவு பேருந்தில் சென்றால் தாமதம் ஆகும் என்று திருச்சி கிளை பேருந்துக்கு போக வற்புறுத்தினார் என் தந்தை. சாதரண பேருந்து (சாய்வு இருக்கை இருந்தாலும் 41 இருக்கை பேருந்து ) அழகிய தமிழ் மகன் படத்துடன் கிளம்பியது, வேகம் இருந்தாலும் பயணம் பாடாய் படுத்தியது. இருக்கைகள் நன்றாக சுத்தமாக இருந்தது ஆனால் சிறிது நேரத்தில் முதுகு வலி எடுத்தது, பேருந்து சத்தம், படத்தின் சத்தம் மிக அதிகம். ஏன் படம் போட்டால் இவ்வளவு சத்தம் ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையில் காலை 5 மணிக்கு கொண்டு வந்து விட்டனர். இந்த பயணம் மிக அசவுகரியமாக இருந்தது. நன்றாக பராமரிக்கப்பட்ட பேருந்து ஆனாலும் சரியான இருக்கைகள் இல்லை, சத்தம் அதிகம், பேருந்தில் போடப்பட்ட படத்தின் சத்தம் அதிகம், படம் ஓடி முடித்து மறுபடியும் முதலில் இருந்து ஓடியது. கூப்பிட்டு சொல்லி நிறுத்தப்பட்டது (ஏற்க்கனவே ஒரு முறை கள்ளழகர் படத்தை இரண்டு முறை பார்த்த அனுபவம்)

இரண்டு பயணத்துக்கும் இருந்த வித்தியாசம்- விரைவு பேருந்து விரைவாய் செல்லாது ஆனால் சவுகரியமாய் இருக்கும், திருட்டு டிவிடி போடப்படுவது இல்லை முடிந்த வரை பாடல்களை மட்டுமே போடுகின்றனர்.
வேக குறைவிற்கு காரணம், டிசல் பம்பை வேலை செய்து வேகம் அதிகம் போகாதவாறு செய்துள்ளனர், டிசல் சிக்கனமாம். அப்புறம் எதற்கு விரைவு பேருந்து என்று பெயர் ????

அரசு பேருந்து- திருச்சி பராமரிப்பு நன்று ஆனால் பயணம் அசவுகரியம், தாரளமாக திருட்டு டிவிடி போடப்படும். சத்தம் அதிகம் வைத்து காதை பிளக்கும் (இரண்டாவது முறை திருச்சி கிளையின் டிலக்ஸ் பேருந்தில் வந்தேன் அதற்க்கு விரைவு பேருந்தே தேவலை அவளவு மோசமான பராமரிப்பு). இவர்களுக்கு வேக கட்டுப்பாடு இல்லை, ஆனால் இருக்கைகளை தவிர நின்று கொண்டே செல்லவும் பயணிகளை ஏற்றி விடுகின்றனர் இதனால் அனைவருக்கும் சிரமம்.

அரசு விரைவு பேருந்து லாபமில்லையாம், கடந்த மாதம் சம்பளமே பத்து நாட்கள் கழித்து குடுத்தனராம். மற்ற கிளைகள் லாபத்தில் ஓடினாலும் இவை அப்படி இல்லை காரணம் பகலில் ஓடும் பேருந்துகள் காலியாக ஓடுகின்றனவாம் மேலும் அதிக அதிகாரிகள், நிர்வாக சீர்கேடு என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

No comments: