Thursday, March 11, 2010

பட்டப்பெயர்கள்


பட்டப்பெயர்கள் இதைப்பற்றி நினைத்தாலே மனதில் எல்லோருக்கும் கோவமும் சிரிப்பும் சேர்ந்து வரும். தன்னை அழைக்கும்போது வந்த கோவம் காலப்போக்கில் சிரிப்பாகவும் மாறிவிடும்.ஒருவரது இயலாமையை வைத்து அழைக்கப்படும் பட்டப்பெயர்கள் கண்டிப்பா அவங்கள காலம் முழுவதும் வருத்திக்கொண்டே இருக்கும், ஆனால் அவர்களது திறமையையோ அல்லது தனிதன்மையையோ வைத்து அழைக்கப்படும்போது ஒரு பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.

என்னைப்போல சிலர் இரண்டையும் அனுபவித்திருப்பார்கள், சின்ன வயதில் இருந்து எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களை இங்கு பார்க்கலாம்.எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களையும் நான் வைத்த பெயர்களையும் பற்றி எழுதலாம் என தோன்றியது, தோன்றினால் உடனே செயல்படுத்த வேண்டுமே, அதான் இந்த பதிவு, நேத்து கொஞ்சம் சீரியஸ் பதிவு எழுதியதால் இன்று ஒரு மொக்கை, 

எனக்கு பட்டப்பெயரை பெற்றோரே முதன் முதலில் துவக்கி வைத்தனர், 

சின்னத்தம்பி :
தனராஜ் என பெயர் வைத்து ஆனால் அந்தப்பெயரில் கூப்பிடாமல் சின்னத்தம்பி என அழைக்க ஆரம்பித்து ஊரில் சொந்தக்காரர்கள் எல்லோரும் அவ்வாறே இன்று வரை அழைக்கின்றனர். எனது அண்ணன் பெரிய தம்பி நான் சின்னத்தம்பி. சின்னத்தம்பி பெரிய தம்பி படம் பார்க்கும்போது அதில் பிரபு தான் சின்னத்தம்பி, அவர்தான் நதியாவை கல்யாணம் பண்ணுவார், அதை வைத்து ஊரில் சிலர் ஓட்டியபோது அந்தப்பெயர் பிடிக்காமல் போனது.

சின்னவா:
அப்பாவின் நண்பர் வீட்டில் எனக்கு வைத்த பெயர், அவர்கள் வீட்டில் இன்று வரை சின்னவா என்றுதான் அழைக்கின்றனர், அவர்கள் வீட்டில் இந்த பெயரை வைத்தது யாரென்று தெரியவில்லை ஆனால் சிறுவயதிலேயே வைத்துவிட்டனர், அண்ணாவை வழக்கம் போல பெரியவன் என அழைத்தனர். பிடிக்காமல் போக காரணம் இல்லை பிடிக்கவும் காரணம் இல்லை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

தன்ராஜ்:
எனக்கு விவரம் தேஞ்ச நாளில் இருந்து அரசு பதிவேடு, பள்ளி பதிவேடு என எல்லா இடத்திலும் எனது பெயர் தனராஜ் ஆனால் என்னை யாருமே தனராஜ் என அழைப்பது இல்லை, தன்ராஜ் என்றே அனைவரும் அழைத்தனர், இதுவும் பிடித்திருந்ததால் அப்படியே இன்று வரை தொடர்கிறது.

தன்ஸ்:
எனக்கு விவரம் தெரிஞ்சு எனக்கு வைக்கப்பட்ட முதல் பட்டப்பெயர். எனது நண்பன் பிரபாகரன் மற்றும் அவனது தம்பிகள் சேர்ந்து எனக்கு என்று பட்டபெயர் என்று ஒன்றும் இல்லாததால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது "தன்ஸ்" என வைத்தனர், அதுவே இன்று வரை நிலைத்து நிற்கும் பெயராகவும், வித்தியாசமாக என்னையும் புண்படுத்தாமல் இருப்பதால் நானும் அதையே பின்பற்றுகிறேன். பள்ளி கல்லூரியில் ஒரே தன்ஸ் அதுவும் நானே. சில தனசேகர்கள் தன்ஸ் என்ற பெயருக்கு முதலில் முயற்சித்தனர் ஆனால் என்னுடைய பெயரே நிலைத்தது. இன்றும் எனக்கு பிடிக்கிறது, என்னுடைய லுவலக நண்பர்கள் இன்றும் என்னை தன்ஸ் என்றே அழைக்கின்றனர், உலகம் முழுக்க 
பரவிவிட்டதால் இதையே நானும் தொடர்கிறேன்.

லொட்டை:
என் வாழ்வில் வைக்கப்பட்ட இன்னுமொரு பட்டபெயர், வைக்கப்பட்டபோது எனக்கு பிடிக்காமல் நிறைய முறை சண்டைபோட்டுள்ளேன் ஆனால் இப்போது அப்படி இல்லை. என் தனித்தனிமை காரணமாக வைக்கப்பட்ட பெயர், பள்ளி நண்பன் பூபதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வைத்த பெயர். நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் என்பதால் என்னை ஓட்டுவதற்காக வைத்தான், இடதுகை என்றாலே ஒரு வித கெட்ட எண்ணத்தை நமது சமுதாயம் எல்லோரிடமும் ஊட்டி வளர்த்து இருப்பதால் முதலில் எனக்கு பிடிக்காமல் போனது, ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்து பதினொன்றாம் வகுப்பிலேயே மறைந்து பனிரெண்டாம் வகுப்போடு முடிந்தது  இந்தப்பெயர். கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து ஒரு நாள் கல்லூரியில் எல்லோரும் எழுதிக்கொடுத்த ஆடோகிராப் நோட்டை புரட்டுகையில் எல்லோருக்கும் வித்தியாசமான பட்டப்பெயர்கள் இருக்க நமக்கு மட்டும் 'தன்ஸ்' என்று ஒன்று மட்டுமே இருக்கே என யோசித்து, இந்த பெயரும் போர் அடிக்க துவங்கி விட்டது என்று தோன்றியது,  அப்போது தான் எனக்கு வைக்கப்பட்ட "லொட்டை" என்ற   பெயர் மறுபடியும் நியாபகம் வந்தது, அந்த பெயரையும் வைத்து என்னை ஒரு சிலராவது இன்றும் கூப்பிட்டு இருக்கலாமோ எனவும் தோன்றி இனி யாரும் அவ்வாறு அழைக்கப்போவது  இல்லை என்று முடிவு செய்தேன். வெகு சமீபத்தில் எனது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழியால் ஒரு நாள் லொட்டை என அழைக்கப்பட்டேன், மனதில் ஒரே சந்தோசம் ஆனால் அவரும் ஓரிரு முறைக்கு பிறகு அவ்வாறு அழைப்பதை விட்டுவிட்டார்.

கண்ணாடி, சோடாபுட்டி:
 கண் குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் இருக்கின்ற இந்த பெயர், இதை எவரும் ரசிப்பது இல்லை அழைப்பவரை தவிர ஆனாலும் தவிர்க்க முடியாத பெயராகிவிட்டது. ஆசிரியர் துவங்கி நண்பர்கள் முதல் எதிரிகள் வரை அனைவரும் இந்த பெயரை வைத்து அழைப்பார்கள். கடந்த வாரம் கூட நண்பர் ஒருவர் விளையாட்டுக்காக இவ்வாறு அழைத்து என் மனதை புண்படுத்தினார், இவ்வாறு அழைப்பவர்களிடம் உடனே சொல்லிவிடுவேன் இது எனக்கு புடிக்காது என்று மரோப்டியும் நான் விளையாட்டுக்கு தான சொனேன் அதுக்கு ஏன் கோவப்படுகிறாய் என்று கூறினால் அவ்வளவுதான் அவர்கள் முகம் சுருங்க ஏதும் சொல்லிவிடுவேன். சிறுவயதிலேயே கோவக்காரனாக வளர்ந்த நான் இந்த பெயரால் இன்னும் அதிகமாக கோவப்பட்டேன். சிறுவயதிலேயே ஒருவனை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளிவிடும் இப்படிப்பட்ட பெயர்களை துளியும் சங்கடம் இல்லாமல் அழைக்கும் மக்களை என்னவென்று சொல்ல, நாளை அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இதில் அவதிப்பட்டு புண்படும்போது தெரியக்கூடும்.  என் வாழ்வில் மிகப்பிடிக்காத பட்டப்பெயர்.


அணில் :
எனது கல்லூரியில் உடன் படித்த தோழிகள் எனக்கு வைத்த பெயர், பெயர்க்காரணம் தெரியவில்லை ஆனால் அவர்கள் அவ்வாறே அழைத்தனர். அலுவலகத்திலும் இருவர் எனக்கு இந்த பெயரை வைத்திருந்தனர். இந்த பெயரும் பிடிக்காமல் இருக்க காரணம் இல்லை பிடிக்கவும் இல்லை. யாரும் இந்த பெயரில் அழைப்பதும் இல்லை.

விஜய்:
எங்கள் கல்லூரி பெண்கள் விடுதியில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று எனக்கு என் தோழி கூறினாள். அப்போது சந்தோசமாக இருதது, நல்ல வேலை இன்று ஒருவரை தவிர மற்றவர் மறந்துவிட்டனரா இல்லை எனக்கு யாரிடமும் தொடர்பு இல்லாததாலோ இந்த பெயர் மறைந்து விட்டது.  
பார்ட்னர்:
மூன்றாம் வருடம் படிக்கும்போது நண்பர்கள் நான்குபேர் நாம் படிப்பு முடித்துவிட்டு ஒருவேளையில் செட்டில் ஆகி நன்றாக தோழி கத்துக்கொண்டு கம்பனி ஆரம்பிப்போம் என பேச ஆரம்பித்து, அலுவலகத்துக்கு பெயர் வைத்து அன்றே நாங்கள் பார்ட்னர் ஆகிவிட்டோம் இன்றும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ட்னர் என்றே அழைத்துக்கொள்கிறோம். இந்த பெயர் என்னுள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்ததால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடலை மன்னன்:
சென்னை வந்து செட்டில் ஆனதுக்கபுறம் எனது அறைத்தோழன் அண்ணன் சாலைக்குமார் அவர்கள் வைத்த பெயர், நான் அவருக்கு வைக்கும் முன் அவர் முந்திக்கொண்டு எனக்கு வைத்துவிட்டார், உண்மையில் அவருக்கு வைக்க வேண்டிய பெயர், ரிங் டோன் வைத்து பிகர் மடக்கும் வித்தை தெரிந்தவர், கல்யாணம் ஆனாலும் கடலையை விடாதவர். 


நான் வைத்த பெயர்கள்:

நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே ஆருக்காவது பட்டப்பெயர் வைக்கணும் என்று முடிவு செய்தேன், சில முயற்சிகள் தோற்றாலும் கல்லூரி முதல் வருடத்தில் என் முதல் வெற்றி கிட்டியது.

குழந்தை: 
என் நண்பன் பாலகுரு இன்று கல்லூரி நண்பர்கள் முழுக்க குழந்தை என அழைக்கப்படுவதற்கு நானே காரணம். சில மதங்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்காக தேனி சென்று அவன் வீட்டிற்கு சென்றபோது அவன் பெற்றோரிடன் எனக்கு குழந்தை என பெயர் வைத்தவன் யார் என கேட்டீர்களே அது இவன்தான் என அறிமுகப்படுத்தினான்.  எனக்கு சந்தோசமாக இருந்தது, அவர்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன், நல்ல வேலை அவர்கள் என்னை திட்டவில்லை மாறாக பொருத்தமான பெயர்தான் என அங்கீகரித்தனர். 

ஐஸ்வர்யா:
கல்லூரி முதல் வருட விடுதியில் இருத்த ஒரு நாய்க்குட்டிக்கு நான் வைத்த பெயர், அழகாக இருந்ததால் அப்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைவாக வைத்தேன். இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது, யாரது சொல்லிடாதீங்க. வேறு எந்த பெயரில் அழைத்தாலும் திரும்பாத அந்த குட்டி இந்த பெயருக்கு மட்டுமே திரும்பும். பார்ட்னர்:
இந்த பெயரையும் நானே தேர்ந்தெடுத்து அழைத்ததால் இதற்கும் கிரெடிட் நானே எடுத்துக்கொள்கிறேன், எங்களைப்பின்பற்றி சிலரும் இவ்வாறே அழைத்துக்கொனனர் ஆனால் நிலைக்கவில்லை. 


அதுக்கப்புறம் சில ஆசிரியர்கள் பட்டப்பெயரால் அழைக்கப்படுவார்கள், எல்லோரையும் போல நானும் அவர்களை அந்த பெயரிலேயே நண்பர்களுடன் பேசுகையில் குறிப்பிடுவேன். தவறு என்றாலும் அப்போது அதெல்லாம் நமக்கு எங்க புரியப்போகுது.

இவ்ளோ நேரம் இந்த மொக்கையை படித்திருந்த உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்...... 

1 comment:

mad said...
This comment has been removed by the author.