Thursday, April 12, 2012

இதுதான் நமது தமிழ் சமூகம்



மாலையில் இருந்தே டாஸ்மார்க்கில் கூட்டம் அலை மோதவில்லை,வழக்கத்தை மிஞ்சும் வியாபாரமும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்னணியே முன்னணி செய்தித்தாள்களில் இரவு பார்ட்டிக்கு விளம்பரங்கள் இல்லை.

காவல் துறையினரின் முதல் நாள் மீட்டிங்கும் பின்னர் தொலைகாட்சி பேட்டியும் இல்லை.

நள்ளிரவு குடியும் பின்னர் கொலைவெறி வாகனம் ஓட்டுதலும் இல்லை.

புத்தாண்டு உறுதி மொழி இல்லை அதை எடுத்தாலும் கடைபிடிக்காத எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.

அதீத குறுஞ்செய்தி இல்லை.

தொலைக்காட்சிகளில் வழக்கம் போல வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் இல்லை.
 
இப்படி பல இல்லைகள் இருந்தாலும் இந்த புத்தாண்டைக்கொண்டடும்போது ஒரு பெருமிதம் மட்டும் இருக்கிறது.

இத்தனை இல்லைகள் இருக்கும் அமைதியான தமிழ்ப்புத்தாண்டே நமக்கு போதும்

சமீபத்தில்தான் களவாணி படம் பார்த்தேன் அதில் சாமிய கொண்டுபோய் ஆறு மாசம் நீ வச்சு கும்பிடு ஆறு மாசம் நான் வச்சு கும்பிடறேன் என்று சொல்வது போல.

அஞ்சு வருஷம் நீ சித்திரை ஒன்னாம் தேதிய கொண்டாடு அஞ்சு வருஷம் நான் தை ஒன்னாம் தேதிய கொண்டடறேன்னு ஒப்பந்தம் போட்டுடுவாங்க என்று நினைக்கறேன்.

ஊருக்கு போவதால் பதிவு உலகம் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது ஆகையால் இந்த வருஷம் ஒரு நாள் முன்னாடியே எல்லோருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thursday, April 5, 2012

முடிவு


இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தியது, ஒருவர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிடும்.



சிறு வயதில் இருந்தே எனக்கு இந்த முடிவு எடுப்பதில் சரியான அனுபவம் கிடையாது, நான் எடுத்த சில முடிவுகள் சரியாக அமைந்தாலும் பல முடிவுகள் தவறாகவே அமைந்தது. என் வாழ்க்கையின் சில முக்கிய முடிவுகள்



பள்ளியில் படிக்கும்போது ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளி ஆசிரியர் எனது இடது கை பழக்கத்தை விட்டொழிக்க எடுத்த முயற்சிகளால் ஓரளவு வெற்றி பெற்று என்னை வலது கையில் எழுத வைத்து இருந்தார்.  எக்காரணத்தை கொண்டும் இடது கையில் எழுதுவதை மறக்கக்கூடாது என்று முடிவெடுத்து இன்று வரை இரு கையிலும் எழுதும் திறமை பெற்றுள்ளேன். அன்று எடுத்த அந்த முடிவு இன்றும் என்னை ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருவனாக அடையாளப்படுத்துகிறது.




சிறுவயதில் மிகவும் தன்னம்பிக்கை வைத்த சிறுவனாக இருந்த நாட்களில் நீச்சல் கற்றுக்கொள்ள செல்லும்போது, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தாத்தா ஊரில் இருந்து எங்க ஊருக்கு செல்ல வேண்டும், நான் நீச்சல் கற்றுக்கொள்வது என முடிவெடுத்தது பிற்காலத்தில் என்னை காப்பாற்றியது.

 
தமிழ் மீடியத்தில் நன்றாக புரிந்து படித்துக்கொண்டு இருந்தவனை கல்லூரிகாலத்தில் எளிதாக இருக்கும் என்று ஆறாம் வகுப்பில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்க்க நினைத்தபோது, புரியாமல் ஆங்கிலத்தில் படிப்பதை விட புரிந்து தமிழில் படிக்கிறேன் என்று முடிவெடுத்தேன்.



பின்னர் எட்டாம் வகுப்பில் மறுபடியும் மூளை சலவை செய்யப்பட்டு டைக்கும் ஷூக்கும் ஆசைப்பட்டு ஆங்கில வழிக்கல்வியில் மாறினேன்.



தமிழ் மீடியத்தில் இருக்கும் வரை மிக மிக நல்ல பையன், ஆங்கில மீடியமே எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது, பொய் சொல்ல, மனப்பாடம் செய்து படிக்க, பிட் அடிக்க, ஏமாற்ற, கெட்ட வார்த்தை பேச என்று ஆனால் எளிதில் இரண்டே வருடத்தில் ஆங்கில வழி கல்வியில் ஒன்றிவிட்டேன் , சுமாரான மாணவனாக மாறி மனப்பாடத்திலேயே படிக்க கற்றுவிட்டேன், மேற்கூறிய இரண்டு முடிவுகளிலும் என்னால் எதுசரி எது தவறு என அறுதியிட்டு கூற முடியவில்லை.



பத்தாம் வகுப்பிற்கு பிறகு எந்த குரூப் எடுப்பது என்று வந்தபோது என் சுயமான முடிவெடுக்கும் நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது, ஆமாம் வீட்டில் இருந்த சகோதர சகோதரி இரண்டு பெரும் முதல் குரூப் ஆகையால் முதல் குரூப் தவிர வேறு எதுவும் எனக்கு ஆப்சன் ஆகக்கூட கொடுக்கப்படவில்லை, அதிலும் உயிரியல் குரூப் தான்.


மேல்நிலைப்பள்ளியில் அதிக சுதந்திரம் காரணமாக மேலும் பள்ளியை கட் அடித்து, ஊர் சுற்றி படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் கவலை இல்லாத எனக்கான வாழ்க்கையை வாழ்ந்தேன். மருத்துவம் என்பதை கண்டிப்பாக படிக்கக்கூடாது என்று முடிவெடுத்து பொறியியல் படிக்க மட்டுமே முயற்சித்தேன்.


பொறியியல் படிக்க முயற்சி செய்தாலும் மதிப்பெண் பத்தாததால் ஒரு வருடம் மறுபடியும் படிக்கவா இல்லை ஏதும் கலை கல்லூரியில் படிக்கவா என்று வந்த போது மறுபடியும் ஒரு வருடம் படிக்க என முடிவெடுக்கப்பட்டு படித்தேன்,




தனித்தேர்வருக்கான பயிற்சிப்பளியில் சேரவா இல்லை நானே படிக்கவா என வந்தபோது நானே படிக்க என நிர்பந்திக்கப்பட்டு ஒரு வழியாக கஷ்ட்டப்பட்டு பொறியியல் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும்வரை வந்தேன்.


கல்லூரியில் எந்த துறை எடுப்பது கணிப்பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் என முடிவெடுத்தபோது இயந்திரவியல் என நிர்பந்திக்கப்பட்டேன்.


இயந்திரவியலை புடிக்காமல் படிக்கும்போது 5 பேப்பர் அரியர் வச்சு பின்னர் புத்தருக்கு போதி மரத்தடியில் வந்தது போல எனக்கு மொட்டைமாடியில் நியாநோதயம் வந்து பின்னர் ஒரு வழியாக புடிக்காவிட்டாலும் படித்து முடித்தேன்.


கணினி துறையில் வேலைக்கு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்க இயந்திரவியல் துறையில் சேர நிர்பந்திக்கப்பட்டு சேர்ந்தேன், வேலையிலும் வாழ்க்கையில் எது பிடிக்காத ஒரு வேலையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதையும் பின்பற்றி அதிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறேன்.


வாழ்க்கையில் எல்லோரையும் போல வாழ்ந்து முடிவெடுத்து இது வரை வந்த எனக்கு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான  முடிவைமட்டும் நானோ என்னை சார்ந்தவர்களோ எடுக்காமல் எந்த ஒரு ஜோசியக்காரனோ எடுக்கிறான் எனும்போது எனது வருத்தத்தை பதிவு செய்ய இது ஒரு வழி.


என்ன செய்ய வாழ்க்கை எனபது நீ உனக்காக நீயே முடிவெடுத்து வாழ்வது ஒரு வகை, மற்றவர்கள் உனக்காக முடிவெடுத்து நீ வாழ்வது மற்றொரு வகை. இதில் நான் இரண்டாம் வகையில் வாழ நிர்பந்திக்கப்பட்டு உள்ளேன்.


ஆனாலும் எந்த நாதாரியோ நான் ஜோசியக்காரன் என சொல்லி அவன் பொழைப்பை தேட எத்தனையோ பேர் பொழைப்பை கெடுக்கிறான்.

Wednesday, April 4, 2012

ஐபிஎல்- 2012 சில துளிகள்

எல்லா போட்டிகளுமே கண்டிப்பாக பத்தொன்பதாவது அல்லது இருபதாவது ஓவரில் மட்டும் முடியும்.

எந்த அணியும் தொடர்ச்சியாக பல போட்டிகளை வெல்லாது, அப்படி வென்று கொண்டு வந்தால் பின்னர் பல போட்டிகளை தோற்கும். 

எந்த அணியும் இறுதிப்போட்டிக்கு எளிதில் தகுதி பெறாது, கடைசி லீக் போட்டிவரை யார் இறுதிப்போட்டிக்கு போவார்கள் என்று முடிவு தெரியாது.  

போட்டியின் முதல் நாள் திடிரென்று ஏதும் ஒரு வீரர் காயம் அடைவார்கள், அதைப்பற்றிய காரசார விவாதம் நடைபெறும். 

வோடபோனின் புதிய ஜூ ஜூ விளம்பரம் வெளிவரும். 

புது புது வகையில் டிவி திரையை விளம்பரங்கள் மறைக்கும். 

விமான கம்பனிகள், மதுபான கம்பனிகள்  இரண்டு மாதத்துக்கு நல்லா கல்லா கட்டும்.
  
புது சினிமா இரண்டு மதத்துக்கு பெருசா ஏதும் வெளிவராது. 

ஏதும் ஒரு கிரிக்கெட் வீரருடன் புதுநடிகை போட்டிகளுக்கு பின்னால் கிசு கிசுக்கப்படுவார். அனேகமாக இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து  கோலி இடம்பெறலாம். 

காலையில் இருந்து தூங்கும் வரை ஐபிஎல் பற்றியே அனைவரும் பேசுவார்கள். ஐபிஎல் போட்டியை திரையில் காட்டி பாரில் கல்லா கட்டுவார்கள்.

நல்லா விளையாடும் வீரர்களின் பார்ம் பறிபோகும், மொக்கையை விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர் மறுபடியும் பார்ம் கிடைத்து அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய அணியில் இரத்தை பிடிப்பார்கள்.
 
ஓய்வு பெற்ற வீரகளுக்கு டிவி சானலில் கிராக்கி ஏற்படும், 12th man க்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தவன் எல்லாம் கிரிக்கெட்டை அலசி ஆராய்வான்.

துளிகள் தொடரும்....

Tuesday, April 3, 2012

ஆரம்பிச்சாச்சு ஐபிஎல்

போன வருடம் IPL  ஆரம்பித்த சமயம் எழுதி டிராப்டில் வைத்திருந்தேன், ஒரு வருடத்திற்கு பிறகு  பதிவதால் பல வருடம் பொட்டிக்குள் கிடந்த படம் போல வித்தியாசம் எல்லாம் பெருசா ஒன்னும் தெரியல.  

என்னிக்குத்தான் இந்த IPL முடியுமோ தெரியல, தூங்கும் முன்னாடி IPL தூங்கி எழுந்தா காலைல வேலைய ஆரம்பிக்கும் முன்னாடி செய்தி சேனல் முதல் சக நண்பர்கள் வரை ஒரே IPL பற்றி மட்டும் தான் பேச்சு, அப்பா சாமி முடியல.. அவனவன் பணத்துக்காக விளையாடறான் அத இவங்க இவ்வளவு பெருசா பேசறாங்க. அளவுக்கு மீறின அமிர்தமும் நஞ்சு என்பது சிலருக்கு போகப்போகத்தான் தெரியும்.

 
பதிவுலகத்துக்கு கொஞ்சநாள், இல்லை இல்லை நீண்ட நாள் இடைவெளி விட்டு இருந்தேன், என்ன எழுத என்பதில் இருந்து எழுத எங்க நேரம் என்பது வரை ஏகப்பட்ட கேள்விகள், இதில் நம்ம மடிக்கணினி வேறு தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது. இனி இந்த இடைவெளியை குறைக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
 
இந்த தலைமறைவு எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை அதனால் மாற்றத்தை நாம் தேடிப்போகக்கூடாது  
 அதுவாகவே நம்மளை தேடி வரும் என்பதை புரிந்து கொண்டேன்.

Thursday, March 8, 2012

இனி ஒரு விதி செய்வோம்

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கக்கூடிய சட்டத்திருத்தம்  மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது, இதன் மூலம் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இப்போது கிடைக்கக்கூடிய தண்டனையை விட அதிக தண்டனை கிடைக்கும். இதில் மிக முக்கியமானது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை தான். ரத்தத்தில் கலந்து இருக்கும் மதுவின் அடிப்படையிலும் மற்றும் விதிமீறல் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதமும் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கலாம்.


மேலும் பல வித விதிமீறல்களுக்கு ஐந்து மடங்கு அபராதம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது, சாலையில் எதிர் திசையில் செல்வது, சிக்னல் மதிக்காமை போன்றவற்றிற்கு தண்டனைகள் அதிகரிக்கப்படும் .


அதிகரித்து வரும் சாலை விபத்துக்களும் அதில் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் இந்த சட்டத்தை கொண்டுவர காரணம். உலகளவில் எதில் முன்னணியில் இருக்கிறோமோ சாலை விபத்துகளில் முதல் இடத்தில இருக்கிறோம். இதற்கு பல காரணங்கள் உண்டு அனைத்தும் நம் மக்களையே சாரும். மக்கள் மீது பழி சுமற்றி அரசு தப்பித்து விடக்கூடாது, ஏனென்றால் அரசும் கொஞ்சம் கூட யோசிக்காத அரசு அதிகாரிகளும் இதற்கு முக்கிய காரணம்.


சாலை விபத்துக்கள் நடக்க முக்கிய காரணம் எவை?


வாகனம் ஓட்டுபவர் தவறாக இருக்கலாம்


வாகனம் பழுதால் விபத்து ஏற்படலாம்


மற்ற வாகனம் தவறாக வந்ததால் ஏற்படலாம்


அடிப்படை சாலை வசதிகள் இல்லாதலால், வசதிகள் மோசமானதாக இருப்பதால் ஏற்படலாம்


தேவையான அறிவிப்புகள் இல்லாமை, மோசமான சாலை வசதிகள், பழுதடைந்த சாலை இவையும் ஒரு காரணம்.


இத்தகைய காரணங்களில் நாம் எல்லாவற்றிலும் முன் நிற்கிறோம், எதுவும் எதையும் விஞ்சும் வண்ணம் உள்ளது. இதில் சாலை விதிகளை பற்றி தெரியாத நம் மக்களே அதிகம் ஆனால் வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்துக்கு செல்லாமலே ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் அதிகம், அதை பெருமையாக வேறு சொல்வார்கள். விதிகளை தெரியாமல் உரிமம் வாங்குவதும் அதை காசுக்காக கொடுப்பதும் முதல் குற்றம்.


சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் நமது மக்கள் அடுத்து, விதி தெரிந்தாலும் எவன் மதிக்கிறான் நான் மதிக்க என்று செல்வோர், வாகனத்தில் ஏறிவிட்டால் மற்றவர்களையும், பாத சாரிகளையும் மதிக்காமல் சாலை முழுதும் தனக்கே சொந்தம் என என்னும் சிலர் இவர்கள் எல்லாம் முதல் காரணிகள். இவர்களுக்காகவே இந்த சட்டம். ஆனால் எனக்குள் இன்னும் சில சந்தேகம், கனரக வாகனங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு என்ன சட்டம்?


பின்புறம் விளக்கு இல்லாத கனரக வாகனம், நெடுஞ்சாலையில் ஓரத்தில் அபாய விளக்கு இல்லாமல் நிறுத்தி வைப்பதால் ஏற்படும் விபத்து, சிக்னல் கொடுக்காமல் கண்டபடி செல்லும் கனரக வாகனம் ஏற்படுத்தும் விபத்து, சாலையில் எதிர் திசையில் வந்து ஏற்படுத்தும் விபத்து , சரியாக பராமரிக்காமல் வாகனத்தை விபத்திற்கு உள்ளாக்குதல் என இவற்றிற்கு தகுந்த தண்டனை கிடைப்பது இல்லை.


அரசாங்க பேருந்துகளிலே பின் விளக்குகள் சரியாக இருப்பது இல்லை, அரசாங்க பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள் அதுவும் சமீப காளங்களில் குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் இது மிக அதிகமாக இருக்கிறது.
பொதுமக்களிலும் ஒழுக்கம் கட்டுப்பாடு விதிகளை மதித்தல் போன்றவை மோசமாக மாறிவிட்டது.


நமது நாட்டில் வாகனம் ஓட்ட கற்றுத்தரும் நிறுவனங்கள் ஏராளம் ஆனால் அவற்றில் மிக சரியாக சொல்லித்தருவதில் மிக சில நிறுவனங்களே கவனம் செலுத்துகின்றன.


கனரக வாகனங்களை பொறுத்தவரை இருக்கும் நிறுவனங்கள் பெரும்பான்மை சரியாக சொல்லித்தருபவையாக இருக்கின்றது ஆனால் கார் சொல்லிக்கொடுக்கும் நிறுவனகள் மிக சிலவே சரியாக சொல்லிக்கொடுப்பவை ஆனால் விபத்துகளில் பார்க்கும்போது கனரக  வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.


இதற்கும் மேலாக மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்து. மிக சீராக இருக்கும் சாலையில் திடிரென ஒரு பள்ளம் இருக்கும் ஆனால் அதன் அருகில் எந்த அறிவிப்பும் இருக்காது, மிக மோசமான சாலைகளை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டதில் நம்மில் பலருக்கு அனுபவமிருக்கும்.


அறிவிப்பு பலகை இல்லாத சாலை, குண்டு குழியுமான சாலைகளில் பொறுப்பாக ஒருவர் போனால் மற்றவர்கள் கண்மூடித்தனமாக வந்து  விபத்தில் சிக்குதல் அதிகம்.


பழைய மகாபலிபுரம் சாலையை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு வழிக்கு பத்தொன்பது ரூபாய் வாங்குகிறார்கள் காருக்கு ஆனால் இதுதான் இருப்பதிலேயே  மோசமான சாலை. சாலை ஓரத்தில் மரண குழிகள், எந்நேரமும் காவு வாங்கும் கம்பிகள் நின்றுகொண்டு இருக்கும், மேலும் சர்வீஸ் சாலை போடுகிறோம் என மண்ணை தோண்டி சாலையில் கொட்டி வைத்து இருப்பார்கள், அதற்கு அடுத்து பேருந்து நிறுத்ததிர்க்காக ஒரு வழியையே மறைத்து மக்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.


ASV சன்டெக் பார்க் அருகில் சாலையை கடக்க பாலம் அமைத்து இருப்பார்கள், இந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் 80 சதவிகித மக்கள் இள வயது (முப்பதுக்கும் குறைவாக ) ஆனால் அதில் 5 சதவிகித மக்கள் கூட சாலையை கடக்க பாலத்தை உபயோகிப்பது இல்லை. எல்லோரும் போக்குவரத்தை மறித்து நடு தடுப்பு சுவரை தாண்டி சாலையை கடக்கின்றனர். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இது போல பல இடங்களில் நடக்கிறது, ஆனால் இவர்களில் பலர் வாகனத்தில் போகும்போது மற்றவரை மனதுக்குள் திட்டாமல் செல்வது இல்லை. ஏன் நாம் வாடகைக்கு வாகனம் எடுக்கும் போது அதன் ஓட்டுனர் சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் கேள்வி கேட்பது இல்லை.


இதை விட கொடுமை சில இடங்களில் பாலம் அமைத்து அதில் ஏறக்கூட முடியாமல் சாலையை பறித்தும் வைத்து உள்ளனர் அரசு அதிகாரிகள்.


நன்றாக சாலையை அமைத்துவிட்டு அதில் திடிரென்று வேகத்தை குறைக்க என்று நடுவில் தடுப்புகளை வைக்கும் வழக்கத்தை நமது போலீசார் கொண்டு உள்ளனர். இத்தகைய தடுப்பில் விளக்கு இல்லாத ஒரு இரவில் மோதி அடிபட்ட அனுபவம் எனக்கு உண்டு.


இப்படி எல்லாமே மோசமாக செல்லும் போது நாம் எப்படி வருங்காலத்தில் மக்களை சாலை விதிகளை மதித்து நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்?


சாலை விதிகளை ஓட்டுனர் உரிமம் பெறும்போது மட்டும் படிக்காமல் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும்.


பெற்றோர் குழந்தைகளை சாலையில் அழைத்து செல்லும்போது விதிகளை மீறாமல் செல்ல வேண்டும்.


ஓட்டுனர் உரிமம் பதினெட்டு வயதில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.


விதிகளை மீறாமல் உரிமம் பெற கடினமான பரிட்சைகளை வைக்க வேண்டும்.


பயிற்சி பள்ளிகள் துவங்கும் விதிமுறைகள் கடினமாக்கப்பட வேண்டும், அவற்றை முறைப்படுத்த வேண்டும்.


சாலை வசதிகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும், அடிப்படை சாலை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.


இதற்கும் மேலாக மக்கள் மனதில் எனக்கென்ன என்ற எண்ணம் விலக வேண்டும்.


இவையெல்லாம் செய்தால் நம் நாட்டில் சாலை விபத்துகளை குறைக்கலாம்.


இன்னொரு முக்கியமான விஷயம் போலீசார் லஞ்சம் வாங்குவதை குறைக்க வேண்டும், இந்த சட்டம் வந்தால் எனக்கென்னவோ போலீசார் வாங்கும் லஞ்சம் அதிகரிக்கும் என தொன்றுகிறது. எந்த ஒரு அதிகாரிக்கும் தனது சம்பளம் போதும் லஞ்சம் தேவை இல்லை எனும் அளவிற்கு சம்பளமும் மனதும் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

அட போங்கப்பா

நமது பதிவர்களில் எல்லோரும் எதாவது ஒரு கட்சியை சார்ந்தவராகவே உள்ளனர் ஒரு சிலர் இல்லை கட்சியா? அரசியலா? என்று கேட்கும் அளவில் உள்ளனர், யாரும் நடுநிலையாக ஒரு கருத்தை சொல்வதும் இல்லை, நானும் கூட. நடுநிலை என்று நானே சொல்லிக்கொள்வது தவறு.



ஆனால் சமீபகாலமாக வரும் பதிவுகளில் அதுவும் மின்வெட்டை பற்றி வரும் பதிவுகளில் இப்பொதுள்ள ஆட்சியில் மின்வெட்டை பற்றி கவலைப்படாமல் ஏதோ இருப்பது போல எழுதுவது தான் வேதனை அளிக்கிறது. இப்போது ஏன் தேர்தலுக்கு முன்பிருந்தே ஆட்சிக்கு வர தகுதி இருந்த கட்சிகள் அனைத்துக்கும் தெரியும் தமிழகத்தின் மின் நிலை, அதில் ஆட்சியில் இருந்த கட்சிக்கு மிக தெளிவாக தெரியும் நிலை என்ன என்று.

எதிர்க்கட்சி ஒன்று இன்னும் மூன்று மாதத்தில் மின்வெட்டை நிறுத்தி விடுவோம் என்று கூறினால் நம்பிவிடுவீர்களா? ஆட்சியில் இருக்கும் கட்சி ஏன் அப்போது சொல்லவில்லை? அவர்களே எப்போது மின்வெட்டு நிறுத்தலாம் என்பதை மற்றவர்களை விட அதிகமாக தெரிந்தவராக இருப்பார்கள் ஆனால் எந்த பிரசாரத்தின்போது அவர்கள் மின்வெட்டு இருப்பதை ஒத்துக்கொள்ளவும் இல்லை அதை தீர்ப்போம் என உறுதி கூறவும் இல்லை.


எதிர்க்கட்சி அவ்வாறு உறுதி கூறினால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற கூறுகின்றனர் என்பது பலருக்கும் தெரியும், ஏன் அப்போதே பதிவிடுவது தானே உங்களால் முடியாது என்று?? அப்போது இருந்துவிட்டு இப்பொது குறை கூறுவதில் பயன் இல்லை, எந்த கட்சியாக இருந்தாலும் இன்றைய மின்வெட்டு தவிர்க முடியாதது, மேலும் மின்வெட்டை தவிர்க்க இரண்டு கட்சிகளுமே தகுந்த நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருக்கும், அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் கண்டிப்பாக மின்வெட்டு நிலைமை ஓரளவிற்கு சரி செய்யப்பட்டு இருக்கும், ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் மின்வெட்டு இருந்தால் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என.

கட்சி சார்பாகவோ, இல்லை தமக்கு பிடிக்காத தலைவரை தூற்றவோ இல்லாமல் நடுநிலையாக நடந்த நல்லவற்றை பாராட்டாமல் இருப்பது தவறு. நூலக மற்றம், சமச்சீர் கல்வி போன்றவற்றில் தவறாக கையாண்டு இருந்தாலும் நில அபகரிப்பு, டிஎன்பிசி தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை போன்ற நல்லவைகளும் இருக்கின்றன.




சதா ஆட்சியில் இருக்கும் கட்சியை தூற்றியும், என்னமோ எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்காது என்பது போலவும் வரும் பல பதிவுகளை பார்த்து எரிச்சலில் (மின் வெட்டு தந்த ஏரிச்சல் கூட சேர்ந்து) எழுதிய பதிவு.

இதனால் சகலவிதமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த பதிவால் என்னைத்தயவு செய்து எந்த கட்சியிலும் இணைத்து ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளன் ஆகவோ நினைத்துவிடதீர்கள்.


எனக்கு தேவை என்றால் யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவாளன் ஆகும் சந்தர்ப்பவாதி நான் என்பதை நீங்கள் யோசிக்கும் போதே தெரிகிறது அதற்கும் நான் பொறுப்பல்ல.




Monday, January 23, 2012

அரசு போக்குவரத்துக் கழகம்

சென்னையில் இருந்து கரூருக்கு நான் சென்ற அனுபவம், கடந்த மாதம் திடிரென்று ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்து வழக்கம் போல ஒரு நாள் முன்னாடி டிக்கெட் பார்த்தால் எந்த பேருந்திலும் டிக்கெட் இல்லை. சென்னையில் இருந்து கரூருக்கு கேபிஎன், விவேகம், ராயல் இப்போ புதுசா பாலாஜி என 4 நான் ஏசி பேருந்துகளும் பர்வீண் மற்றும் திருச்சி கரூர் வழியாக கோவை செல்லும் எஸ்ஆர் என்ற ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு அல்ட்ரா டிலக்ஸ் பேருந்துகளும் அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இரண்டு டிலக்ஸ் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் கரூரில் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தின் டிப்போ இருந்தபோது ஒரு நாளைக்கு பகலில் 5 பேருந்தும் இரவில் 5 பேருந்தும் சென்னைக்கு இயக்கப்பட்டன  ஆனால் இன்று இரண்டு பேருந்து மட்டுமே.


இதில் எஸ் ஆர் பேருந்து சமீபத்தில் ஆரம்பித்தது, இவர்கள் வழித்தடமும் கட்டணமும் மிக அருமை. எக்மோரில் கிளம்பி திருவான்ம்யூர் வந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் வழியாக தாம்பரம் வந்து அங்கிருந்து திருச்சி கரூர் வழியாக கோவை செல்கின்றனர். இதனால் வேளச்சேரி, திருவான்ம்யூர் மேடவாக்கம் வழித்தடத்தில் உள்ள பலர் பயன் பெறுகின்றனர், பேருந்தில் பாதிபேர் வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதியில் ஏறுகின்றனர். வெள்ளி இரவு தவிர மற்ற நாள்களில் சென்னை டு கரூர் டிக்கெட் ரூபாய் நானூறு. ஏசி பேருந்து. அரசு பேருந்திலேயே முநூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய் டிக்கெட் அதுக்கு கோயம்பேடு போக அடித்து பிடித்து போகணும், நேரமாகிட்டா ஆட்டோக்கு தண்டம் அழுகனும் அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. வெள்ளிகிழமை ஐநூறு. கேபிஎன் எப்பவுமே சரியான நேரத்துக்கு செல்ல மாட்டார்கள், சமீப காலமாக சர்வீஸ் மோசம், விவேகமும் அதே போலத்தான், ராயல் சர்வீஸ் பரவாயில்லை, பாலாஜி புதுசு இனிதான் எப்படி என்று தெரிய வேண்டும். அரசுப்பேருந்து கும்பகோணம் டிலக்ஸ் வண்டி நேரம் சரியாக போய்விடுவர் ஆனால் வண்டி மோசம், வசதியாக இருக்காது, மேலும் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டும் பயணிகள் காலுக்கு கீழே கூட உட்கார வைத்து எல்லோருக்கும் அசவுகரியத்தை கொடுப்பார். அரசு விரைவுபோக்குவரத்து கழகம் அதிக ஆட்களை ஏற்ற மாட்டார்கள் , மித வேகம் சொகுசாகவும் இருக்கும் சுத்தம் கொஞ்சம் கம்மியாக இருக்கும் (கேபிஎன் மற்றும் விவேகம் பேருந்தும் இது போலத்தான்)நேரம் கூட ஓரளவுக்கு சரியாக செல்வர் என்ன எப்போதாவது வண்டி பாதியில்  நின்றுவிட்டால் தாமதம் ஆகும்.


இதை விடுங்க, அன்று எந்த தனியார் பேருந்திலும் டிக்கெட் இல்லை, அரசுப்பேருந்தில் விரைவுப்போக்குவரத்து கழக பேருந்திலும் இல்லை அடுத்து டிலக்ஸ் பேருந்தில் இருந்தது,தற்போது ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்பதால் நண்பனை அழைத்து பதிவு செய்ய சொன்னேன். என்னுடைய பான் கார்டு கொடுத்து பதிவு செய்தாயிற்று. வெள்ளிக்கிழமை 8 . 45 மணிக்கு பேருந்து, வேளச்சேரியில் இருந்து D 70 பேருந்துக்கு காத்திருந்தால் ஏகப்பட்ட கூட்டம்.  பெரிய பையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என ஆட்டோ ஒன்றை பிடித்தேன், சிறிது நேரம் பேரம் பேசி ஏறினேன், ஏறும்போது ஆட்டோ ஓட்டுனர் மேல் சரியாக கோவம் அதிகம் கேட்கிறார் என்று, ஒரு மணிநேர பயணத்தில் அவரிடம் பேச்சு கொடுத்து வந்ததில் அவரின் நியாயமும் புரிந்தது. காதல் திருமணம் புரிந்து கொண்டு வந்து ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதாகவும் முன்பு போல் இப்போது வருமானம் இல்லையம். இப்போது குட்டியானை (டாட்டா ஏஸ்) ஷேர் ஆட்டோ வந்துவிட்டதால் நிறைய பேர் அதில் சென்று விடுகிறார்கள், மேலும் இந்த மாதிரி நீண்ட தூர சவாரி எதுவும் வருவதில்லை,  உள்ளிருந்து பேருந்து நிலையம் வரும் சவாரிகள் அதிகமாக வருகின்றன அதில் ஒரு சவாரிக்கு நாற்பது ரூபாய் சம்பாதிக்க முடியும் ஒரு நாளில் நானூறு முதல் ஐநூறு ரூபாய் வரும் அதில் ஆட்டோ ஓனருக்கு 150 மேலும் சாப்பாட்டு செலவு 50 போக வீட்டுக்கு 300 கொடுப்பேன். பையன் பள்ளி செலவு போக கஷ்ட ஜீவனம் என்று சொன்னார். மேலும் தன்னைப்போல ஒரு சாரரும் ஆட்டோ ஓட்டுனராக இருந்து நேர்மையாக சம்பாதிப்பதாகவும் ஆனால் ஒரு சாரார் அநியாயத்துக்கு  கேட்டு மொத்த ஓட்டுனருக்கும் கெட்ட பெயர் வாங்கித்தருகின்றனர் என கூறினார். எப்படியோ சரியாக 8 .35 க்கு கோயம்பேட்டில் விட்டு விட்டார், பேருந்தை கண்டுபிடித்து செல்வதற்கு 5 நிமிடம், அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு திருச்சி பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உரக்க என்னை கூப்பிடவே நான் திரும்பல ஏனென்றால் நான் என் பேருந்தை கண்டுபிடித்துவிட்டேன் அதானல் கவனிக்கவில்லை. அவர்கள் மறுபடியும் என்னவோ ஏலக்கடையில் ஏலம் விடுவது போல நீல சட்ட வா என ஒருமையில் அழைக்க கடுப்புடன் சென்றேன், எந்த பேருந்து என கேட்டுக்கொண்டே கையில் இருந்த பிரிண்ட் அவுட்டை பிடுங்கினார்கள் பின்னர் அவர்கள் எதோ உதவி செய்வதை போல அந்த பேருந்துதான் போ என நன் ஏற்கனவே கண்டுபிடித்து சென்ற பேருந்தை காட்டினார்கள். நான் கடுப்போடு அய்யா நான் ஏற்கனவே கண்டுபிடித்து போனேன் என்னை ஏலம் விடுவது போல கூப்பிட்டு எதுக்கு இது, உங்ககிட்ட உதவி கேட்ட மட்டும் செய்யுங்க என்று சொல்லி எனது பேருந்துக்கு வந்தேன்.

பேருந்தில் ஏறும்போதே நடத்துனர் எந்த சீட் என்றார், எனது இருக்கை எண் 10 , சொன்ன உடன் ஆன்லைனா எப்போ வரதுன்னு தெரியாதா? இவனுக பாட்டுக்கு ஆன்லைன் டிக்கெட் ஆப்சன் புதுசா போட்டுட்டாங்க அவன் அவன் செய்துவிட்டு வந்து நம்ம தாலிய அறுக்கானுங்க என்று கூறி போய் உட்கார் என்று (மறுபடியும் ஒருமை).பேருந்து கிளம்பும் நேரத்துக்கு இரண்டு நிமிடமிருக்கும்போது நடத்துனரின் புலம்பல் அதிகரித்தது, ஓட்டுனர் கிளம்பலாமா என கேட்க இன்னும் இரண்டு ********ங்க இன்னும் வரல இருங்க போலாம் என கூறினார், பின்னர் ஒரு ஐந்து நிமிடம் பொருத்து இருந்து வண்டியை கிளப்பினர். அதுவரை படியில் நின்றுகொண்டு இருந்தவரிடம் எனக்கு பக்கத்துக்கு இருக்கையில் அமர சொன்னார் நடத்துனர். அவரும் என் அருகில் அமர்ந்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தார், பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வர முயற்சி செய்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் செல்போனில் பேசினார், நல்ல வேலை சீட் கிடைச்சுருச்சு என மகிழ்ச்சியாய் பேச, அருகில் இருந்த பெண் கூட செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் அவர் தலையாட்டலும் அவரின் பார்வையும் இவரைப்பார்த்து இருந்தது, நமக்கு எதுக்கு இந்த புலன் விசாரணை என்று தூங்க முயற்சி செய்தேன்.
பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது, ஒருவர் ஓடி வந்து வண்டியை நிறுத்தினார். அவர் இதில் டிக்கெட் பதிவு செய்து இருப்பதாகவும் சிறிது நேரம் ஆகிவிட்டதாகவும் கூறினார், நடத்துனர் நாங்கள் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்தோம் நீங்க உங்க இஷ்டத்துக்கு வந்தா நாங்க என்ன பண்ண, வேற ஒருவருக்கு சீட் கொடுத்தாச்சு இப்ப என்ன பண்ணுவது? என்னால் ஒன்னும் செய்ய முடியாது என்றவர் வண்டியை கிளம்ப சொன்னார். பின்னர் அந்த பயணி நான் ஆர்ஐ பையன் என சொல்ல வண்டி சடன் ஸ்டாப். உடனே அவரை ஏற்றிக்கொண்டு கிளம்பியது, என் அருகில் இருந்தவரை வேறு ஒரு இருக்கைக்கு மாற்றிக்கொண்டு அதில் அந்த பையனை அமர வைத்தார். பின்னர் அவரிடம் அப்பாக்கு டிரான்ஸ்பார் வந்தாச்சா, என்ன பண்றீங்க என கதை பேசிவிட்டு சிறிதுநேரத்தில் என்னிடம் டிக்கெட் கேட்டார். அப்போது தான் ஆரம்பித்தது என்னுடைய நல்ல நேரம்.

டிக்கெட் பிரிண்ட் அவுட் கொடுத்தேன் உடனே என்னுடைய பான் கார்டு கேட்டார், நானும் எடுத்து கொடுத்தேன், பின்னர் பான் கார்டை என்னிடம் கொடுத்துவிட்டு உடனே ஒரு நிமிடம் உங்க பான் கார்டு கொடுங்க என்றார், நானும் திருப்பிக்கொடுக்கவே அவர் இதில் உங்க பேர் மாற்றி இருக்கு என்றார், நான் பார்த்தபோது டிக்கெட் பூக்செய்த நண்பன் எனது பேரில் ஒரு எழுத்தை மறந்து விட்டு இருந்தான். நான் டிக்கெட்டிலும் பான் கார்டிலும் ஒரே பான் நம்பர் தான் இருக்கு மேலும் பெயர் எழுதும்போது தவறாக ஒரு எழுத்தை மறந்து இருப்பார்கள் என்றேன். உடனே அதெல்லாம் எனக்கு தெரியாது டிக்கெட்டில் இருக்கும் பேர்க்கு மட்டுமே நீங்க சான்று கட்டனும் இரண்டும் வேராக இருந்தால் இறங்கிகோங்க, நான் பெருங்களத்தூரில் இறக்கிவிட்டுவிடுகிறேன் என கூறினார். நான் முடியாது எந்த விதத்தில் இறக்கி விடுவீர்கள் டிக்கெட் பதிவு செய்தபோது ஒரு எழுத்து விடுபட்டாலும் எனது பெயர் மாறவில்லையே ( தனராஜ் என்பதற்கு பதில் தன்ராஜ் ) என கூறினேன், உடனே ஒருமையில் இறங்கினார். இந்த பேச்சல்லாம் என்கிட்டே வச்சுக்காத, நான் ரூல்ஸ் படித்தான் செய்யறேன் வேணும் என்றால் போய் கம்ப்ளைன் செய்துக்கோ என்றார். நான் கம்ப்ளைன் செய்யத்தான் போகிறேன் ஆனா அதுக்கு உங்க பெயரும் பணி எண்ணையும் கொடுங்க என்றேன், அவர் அதுக்கு பஸ் ரூட் சொல்லு அவங்களுக்கு தெரியும் என்றார். அவர் பெயர் பாட்ஜ் அணிந்து இருக்கவில்லை. என்னால் இறங்க முடியாது அப்படி நான் இறங்க வேண்டும் என்றால் நீங்கள் என்னிடம் எழுதி கொடுங்கள் இந்த தவறால் பயணி பயணிக்க முடியாது என்று நான் மேற்கொண்டு பார்த்துகொள்கிறேன் என கூறினேன். டிக்கெட்டை தப்பா பதிவு செய்துவிட்டு என்கிட்ட நியாயம் பேசறியா? என மறுபடியும் ஆரம்பிக்க, அருகில் இருந்த அந்த பையன் " அண்ணா பாவம் அண்ணா விட்ருங்க" என சிபாரிசு செய்தான், எனக்கு வந்த கோபத்தில் அவனிடம் நீங்க எனகொன்றும் சிபாரிசு செய்ய தேவை இல்லை உங்க வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும் என கூறவே நடத்துனருக்கு மறுபடியும் கோபம் வந்தது. சக ஊழியரின் பையனை அதுவும் அவர்க்கு மேல் உள்ள ஊழியரின் பையனை இப்படி சொன்னால்? இதற்காகவே உன்னை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் தெரியுமா என கூறினார். நான் உங்களால் முடிந்தால் செய்யுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டு அவரிடம் என் பான் கார்டை வாங்கிக்கொண்டு அமர்ந்தேன்.

பெருங்களத்தூரில் இன்னொரு நபர் ஏறவில்லை அதனால் முதலில் ஏற்றிய நபரிடம் அந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு, நல்ல வேலை இவன் வரல இல்லன்ன ஒரு பஞ்சாயத்து ஆகிருக்கும் போல என ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு அமர்ந்தார். சரி இத்தோடு முடிந்தது என நினைத்து பயணத்தை தொடர்ந்தேன்.
காலையில் கரூர் சென்று இறங்கும்போது இதே போல வேற யாரிடமாது செய்து ஒரு நாள் வாங்க போறான் பாரு என்று என் காதுபட கூறினார். நான் கடைசி படியில் நின்று இறங்காமல் அவரை பார்த்து முறைத்தேன். என்ன முறைக்கற அதான் ஊரு வந்துட்டல்ல இறங்கி போ என்றார். நீங்க தேவை இல்லாம பேசறீங்க,நேற்று இரவு நடந்தது அதோட முடிந்தது மறுபடியும் ஆரம்பிக்கணும்னா நான் ரெடி என்றேன், உடனே அவர் என்ன உங்க ஊர் என்று துள்ளுரியா இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே என சொல்ல, நான் எந்த ஊரா இருந்தாலும் பாத்துக்குவேன் அதும் இது என் ஊரு இங்கயே என்கிட்ட பேசினா நல்லா இருக்காது என்றேன், நம்ம ஊரில் நம்மகிட்ட இப்படி பேசுகிறாரே என கோவத்தில்.
இருவரும் கீழே இறங்கி வார்த்தைகள் தடிக்க ஓட்டுனர் விடுங்க தம்பி வீட்டுக்கு போங்க என்று என்னை சமாதானப்படுத்தினார். நான் எனது சகோதரரை அழைத்து ஒரு சிறிய பிரச்சனை பேருந்தில் என கூற அவர் உடனே வருகிறேன் என்று கூறினார். அதற்குள் என்ன ஆள் கூப்பிடுரியா எனக்கும் தெரியும், அரசு ஊழியரிடம் வம்பு செய்தால் உனக்கு தான் பிரச்சன ஒழுங்கா ஓடிடு என்று கூறவே. அது அரசு ஊழியருக்கு நீங்க தான் உங்க வேலைய ஒழுங்கா செய்யலியே அப்புறம் எப்படி ஊழியர் அவீங்க என சொல்லி சிரித்தேன். அதற்குள் சத்தம் கேட்டு அரசு விரைவுப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்தவர் வந்தார். ( பேருந்து நின்றது அந்த அலுவலகத்துக்கு அருகில் ) மேலும் அங்கு புத்தக கடை வைத்திருப்பவரும் வந்தார். வந்த இருவரும் என்னதம்பி என்ன பிரச்சனை என்று என்னை பார்த்து கேட்க, இவர்தான் நேற்றில் இருந்து பிரச்சனை செய்கிறார் என்று நடந்தவற்றை கூறினேன்.
இடையில் அவரும் ஸ்டாப் கிட்ட வம்பு பண்றான் என்னனு கேளு என்று சொல்ல, அருகில் இருந்த ஒருவர் இவர் எல்லாம் மரியாதையா தான் பேசினார் நடத்துனர்தான் கொஞ்சம் ஓவரா பேசினார் என்றார். அரசு விரைவுப்போக்குவரத்து அலுவலர் ஏன்பா நம்ம வண்டில வர வேண்டியதான என்று கூறிவிட்டு, நடத்துனரிடம் நீங்க ஏன் எல்லோரிடமும் சண்டை போடுகிறீர்கள் அதுவும் நம்ம ஸ்டாப் பையனிடம் கூடவா? என்று கேட்க அவர் கொஞ்சம் திகைத்தார்.


நான் அவங்க ஜி எம் கிட்ட புகார் கொடுக்கபோறேன் என்று கூறினேன். ரொம்ப ஓவரா பேசிட்டார் உன்னால முடிஞ்சத பண்ணு சொல்லிட்டார் அதனால் நான் என்னால என்ன பண்ண முடியும் என காட்றேன் என்று கூறவே. என் அப்பாவின் நண்பர் விடுப்பா என்று கூறி, நடத்துனரிடம் மறுபடியும் சமாதனம் பேசினார். சின்ன விசயத்த பெருசாக்காத என்று கூறி சமாதனம் செய்ய, அதற்குள் என் அண்ணனிடம் இருந்து போன் வந்தது கிளம்பிவிட்டதாகவும் ஏதும் பிரச்னை என்றால் அரசு விரைவுப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருக்க சொன்னார். பின்னர் அப்பாவின் நண்பர் ஏன் தம்பி பிரச்னையை பெருசாக்கறீங்க என்று என்னிடம் கூறி விட்டு நடத்துனரிடம் நீ செய்த வேலைக்கு இப்போ உனக்கு தான் பிரச்னை, பையன் பெரிய அளவுக்கு கொண்டு போறேன், ஜிஎம்க்கு மேல போகும் ஒழுங்கா விட்டுவிடு என சொல்லி அவர்க்கு புரிய வைத்தார். உடனே அவர் ஆளே மாறிப்போய் இருந்தார், என்ன தம்பி இத நேற்றே சொல்லி இருந்தீங்க என்றால் இந்த பேச்சே வந்து இருக்காதே என்று கூறினார். நீங்க வெயிட் செய்தது எல்லாம் சரி ஆனால் பேச்சில் மரியாதையை இல்லாவிட்டால் எவனும் அரசுப்பேருந்தில் ஏற மாட்டான் இனிமேலாவது மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி சென்றேன்.

அரசுப்பேருந்தின் நன்மைகள் என்னவென்றால் கிளம்பும் முன் சிறிது நேரம் காத்திருப்பார்கள், பேருந்து ஏதும் பிரச்னை என்றாலும் சிரமம் பார்க்காமல் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அதி வேகம் செல்ல மாட்டார்கள், அதனால் விபத்தில் உயிரிழப்புகள் தனியார் பேருந்தை விட கம்மி என்பது என் கருத்து.ஆனால் இவர்கள் போல பேருந்துக்கு தாங்கள்தான் ஓனர் என்ற நினைத்துக்கொண்டு இருந்தால் எவ்வளவு கட்டணம் ஏறினாலும் பேருந்து லாபத்தில் நடக்காது.






Friday, January 13, 2012

3 இடியட்ஸ் படத்தின் கலர் ஜெராக்ஸ் நண்பன்

விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா தெரியாது ஆனால் இந்தப்படத்தை விமர்சனம் செய்ய விரும்புகிறேன்.
 நண்பன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இந்த வருடம் பொங்கலுக்கு, சிறு வயதில் தீபாவளி பொங்கல் என்றால் குறைந்தது 4 படங்களாவது வரும் இப்போது அது இரண்டு ஒன்று என குறைந்துவிட்டது, இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியிட்டு வசூலை அதிகரிக்கும் எண்ணத்துடன் வெளி வந்து இருக்கும் நண்பன் எப்படி?


இந்தியில் வெளி வந்து வசூலை அள்ளிக்குவித்த படம், அமிர்கானின் சிறப்பான நடிப்பால் பேசப்பட்ட படம், கல்வி சூழலை விமர்சித்து வெளி வந்த படம் என்று இந்த படத்தின் இந்திப்பதிப்பு மிகவும் பேசப்பட்டதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த படத்தை வூட்லான்ஸ் சிம்பனி திரை அரங்கில் பார்க்க வேண்டிய கட்டாயம். எந்த ஒரு படத்தையும் நமக்கு பிடித்த படமாக மாற்ற திரை அரங்கும் அங்கு நிலவும் சூழலும் ஒரு வித காரணி என நான் சொல்வேன், அந்த விதத்தில் இந்த திரை அரங்கும் இங்கிருந்த சூழலும் அத்தகைய பிடித்தமான படத்தை எனக்கு தரவில்லை. மிக மிக மோசமான சவுண்ட் சிஸ்டம், அதிலும் விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகளின் தொல்லை என படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் அவஸ்தையாகவே முடிந்தன. ஓரளவிற்கு சத்தம் அடங்கும் வரை திரையில் விஜய் படம் ஓடினாலும் மனதில் இந்தி பதிப்பின் டயலாக் மட்டுமே ஓடியது.

வேறு வழியில்லாமல் பெற்றோர் வற்புறுத்தலுக்காக இன்ஜினியரிங் சேரும் ஒருவன், குடும்பத்தை காப்பாற்ற இன்ஜினியரிங் சேரும் ஒருவன், இன்ஜினியரிங் விரும்பி படிக்கும் ஒருவன் என மூன்று பேர் தமிழகத்தின் முதன்மை இன்ஜினியரிங் கல்லூரியில் சேருகிறார்கள், கல்லூரி வரும்போது தமிழகத்தின் முதல் இருநூறு இடங்களில் இருக்கும் இவர்கள் முடியும்போது படிப்பு அவர்களை எப்படி மாற்றியது என்பதே கதை .


விஜய் மிக அறிவாளி, படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடம் கழித்தே வருகிறார், எல்லாவற்றையும் மாத்தி யோசிக்கிறார், கல்வி சூழ்நிலையை மாற்ற வேண்டும் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் கற்பிக்கப்பட வேண்டும் வெறும் கழுதைகளை உருவாக்கக்கூடாது என்கிறார். ஜீவா நன்றாக படித்து முதல் நிலை கல்லூரியில் வந்து சேர்ந்தாலும் சேர்ந்த பின்னால் நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை, தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என யோசித்து பயந்து சாகும் சராசரி மாணவனின் மன நிலையில் உள்ளார். வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் மிகப்பெரிய புகைப்பட கலைஞராக வர வேண்டும் எனபது ஸ்ரீகாந்தின் கனவு அவரது அப்பாவின் கனவிற்காக இன்ஜினியரிங் படிப்பில் சேருகிறார் அதனால் படிப்பில் சுமார். மூவரும் விடுதியில் ரூம் மேட்ஸ்.

கல்லூரியும் முதல்வராக நம்ம சத்யராஜ், அவர் படித்த கல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்து அங்கேயே பணியில் சேர்ந்து அந்த கல்லூரியை 28 இடத்தில இருந்து தமிழ்நாட்டின் முதல் இடத்துக்கு உயர்த்தியுள்ளார்( படத்தின் பாதி டயலாக் விசிலடிச்சான் குஞ்சுகளால் புரியாததால் இப்படித்தான் அவர் சொன்னதாக நினைத்துக்கொண்டு உள்ளேன்). சத்யராஜ் இந்த பாத்திரத்தை எப்படி செய்யப்போகிறார் என்ற கொஞ்சம் பயமும் இருந்தது ஆனால் சமாளித்துவிட்டார். எப்பவும் நம் கல்லூரியில் எப்படியும் ஒரு ஆர்வக்கோளாறு இருக்கும் புத்தகத்தை அட்டை டு அட்டை மனப்பாடம் செய்து கல்லூரியின் சந்தோசத்தை அனுபவிக்காமல் இருக்கும் ஆனால் படிப்பில் அதுதான் நம்பர் ஒன்னாக இருக்கும் அத்தகைய பாத்திரத்தை அநாயசமாக செய்துள்ளார் சத்யன்.
 இலியான மிகவும் ஒல்லியாக இருக்கிறார் பெருசா வேலை இல்லை என்றாலும் நன்றாக நடித்துள்ளார், அனாயா (?) சிவா மனசுல சக்தி படத்து நாயகி இதில் இலியானாக்கு அக்கா.


படம் ஆரம்பித்தவுடன் ஆரம்பிக்கும் நகைச்சுவை படம் முடிந்தும் நம்மை விட்டு அகல மறுக்கிறது, மூவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்க நம்ம வசந்த் அன் கோ பையன் இறுதியாண்டு ப்ராஜெக்ட் ஒன்றை தானே உருவாக்குகிறான் (ஒரு ஹெலிகாப்டர் அதில் வயர்லெஸ் கேமரா ) ஆனால் அதை முடிக்க சிறிது நாள் டைம் கேட்க நம்ம சத்யராஜ் கொடுக்க மறுத்ததால் அவர் ப்ரொஜெக்டை குப்பையில் போட்டு சோகத்துடன் சென்று விடுகிறார். விஜய் அதை பார்த்து அந்த ப்ரொஜெக்டை முடித்து சோதனை செய்து பார்க்கும்போது வசந்த் அன் கோ பையன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனின் இறுதி ஊர்வலத்தில் ஆரம்பிக்கும் விஜய்க்கும் சத்யாரஜ்குமான பகை நாளடைவில் பெரிதாகுகிறது. சத்யராஜ் தான் நடத்தும் கல்லூரியில் எல்லோரும் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை படித்து மதிப்பெண்கள் எடுத்து வேலையில் சேர்ந்து வளர்ந்தால் போதும் என்ற எண்ணம். விஜயக்கோ படிப்பு என்பது புதிதாக கற்க ஏதுவாக இருக்க வேண்டும், அடிப்படை தெரிந்துகொண்டு அதை உபயோகித்து புதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று எண்ணம், இந்த இருவேறான எண்ணம் ஓடும் இருவர் மோதிக்கொல்வதே கதை, விஜய் தன நண்பர்களை எப்படி அவரவர் வாழ்க்கையில் வெற்றி பெற தூன்றுகோளாக இருக்கிறார், ஆனால் கல்லூரி முடித்த பின் காணாமல் போய்விடும் அவரை தேடி கண்டுபிடிப்பது தான் கதை.


சத்யன் முதலாம் ஆண்டு ஆசிரியர் தினத்தில் வரவேற்புரை நிகழ்த்த அழைக்கப்படுகிறார்.தமிழ் தெரியாத அவர் கல்லூரி நூலக பொறுப்பாளரை தமிழ் உரையை ஆங்கிலத்தில் எழுதி தர சொல்லி அதை அப்படியே மனப்பாடம் செய்து பேசிவிட திட்டம் போடுகிறார். விஜய் படிப்பு என்பது மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பது அல்ல என தன் நண்பர்களுக்கு புரிய வைக்க அந்த உரையில் சில வார்த்தைகளை மாற்றி விடுகிறார் சத்யனுக்கு தெரியாமல், நல்ல உரையாக இருக்க வேண்டிய அது மிக விரசமான உரையாக மாறி கல்லூரி முதல்வரிடம் கேட்ட பெயர் வாங்கி வைக்கிறார் சத்யன். அதன் பின்னர் இந்த மூவரிடமும் சவால் விட்டு அடுத்த பத்து வருடம் கழித்து இதே நாள் சந்திப்போம் அப்போது யார் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கிறார் என பார்ப்போம் என சவால் விட்டு செல்கிறார். பத்து வருடம் கழித்து அதே நாளில் எல்லோரும் வந்து சேர விஜய் மட்டும் கல்லூரி முடித்து சென்றவர்தான் ஆளை காணவில்லை ஆனால் சத்யனுக்கு அவர் இருக்குமிடம் தெரியும் என்பதால் தேடிக்கண்டு பிடிக்க கிளம்புகிறார்கள். சத்யராஜின் பெண்ணை விஜய் காதலிக்கிறார் ஆனால் அவரையும் விட்டு காணாமல் போகிறார், ஒரு வழியாக விஜய் இருக்கும் இடத்தை தேடி சென்றால் அங்கு இருப்பது வேறு ஒருவர், ஆனால் தன்னுடன் படித்த விஜய் வாங்கிய டிகிரி மற்றும் புகைப்படம் அங்கு உள்ளது அதில் விஜய்க்கு பதில் வேறு ஒருவர். அவர் யார் என்பது படத்தை பார்த்தால் தெரியும்.

படம் முழுக்க அதகளம் செய்பவர்கள் சத்யன் மற்றும் சத்யராஜ். சத்யன் கலக்கியுள்ளார், சத்யராஜ் முதல் பாதியில் சுமாராக செய்திருந்தாலும் இரண்டாம் பாதியில் அட்டகாசம். ஜீவா வழக்கம் போல தன் பாத்திரத்துக்கு தேவையானவைகளை அட்டகாசமாக செய்துள்ளார், ஸ்ரீகாந்த் இந்தியில் மாதவன் செய்த பாத்திரம், சொதப்பியுள்ளார், ஆனால் இந்தியில் இருந்த மூன்று பாத்திரத்தை அப்படியே எடுத்தாலும் தமிழில் விஜய்க்கு மட்டும் முக்கியத்துவம் இருப்பதுபோல் தெரிகிறது. விஜய் படம் முழுக்க அமுக்கி வாசித்து உள்ளார், கோவில் படத்தில் சிம்பு எப்படி அமுக்கி வாசித்தாரோ அப்படி ஆனால் நன்றாக வந்து இருக்கிறது. என்ன தன் ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அழகாக பாத்திரத்துக்கு பொருந்தி இருப்பார். அமீர் கான் இடத்தில இவரை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. ஒரு பாடலில் துப்பாக்கி படத்தின் கெட்அப்பில் (அப்படித்தான் என்று நினைக்கிறன்) வருகிறார் நன்றாக இருக்கிறது அது. சச்சின் படத்தில் இருந்தது போல இருந்து இருந்தால் சரியாக பொருந்தி இருக்கும்.
கதாநாயகி, அவரின் அக்கா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவாவிடம் அடி வாங்குகிறார் விஜய், இந்தியில் இருந்த சில சீன்கள் இருக்காது என நினைத்தால் இருக்கிறது,  விஜய் திருந்தியுள்ளார், நல்ல தொடக்கம்


எப்படியோ படத்தை இந்தியி பார்த்தவருக்கு தமிழில் பார்க்கும்போது சொதப்பியது தெரிந்தாலும் பிடிக்கும் , முதல் முறை பார்க்கும் எல்லோருக்கும் படம் ரொம்ப பிடிக்கும் ஆனால் எனக்கு தெரிந்து தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் எதுவும் இதில் இல்லாததால் வேட்டை வந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். அதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்னாலே வெளியிட்டுள்ளனர் போல. சங்கர் வழக்கம் போல தான் ஒரு பிரமாண்டமான ஆள் மட்டுமே என நிருபித்துள்ளார், தமிழ் சூழலுக்கு கதையை மாற்றியுள்ளோம் என கூறிவிட்டு ஒரு பாட்டை மட்டும் இடையில் போட்டுவிட்டார். இந்தியில் இருந்த ரிச்னெஸ் தமிழ் படத்தில் இல்லை. கடைசி சீனில் மாதவனின் புகைப்பட புத்தகங்களை அந்த பையன் எடுத்து போடும்போது அதெல்லாம் ஒன்றும் நேஷனல் கியோகரபி புத்தகம் போல இல்லாமல் அண்ணா யுனிவெர்சிட்டி லோக்கல் ஆத்தர் புக் போல உள்ளது. இது போல சில சில இடத்தில ரிச்னெஸ் கெடுகிறது. கனாக்காணும் காலங்கள் நாடகத்தில் வருவது போல இருபது பேரை வைத்து ஒரு கல்லூரியை காட்டியுள்ளார். கல்லூரி மாணவன் என்றாலே காலர் இல்லாத டி ஷர்ட் போடுவது என்பதை யார் சொல்லிக்கொடுத்தார்கள் என தெரியவில்லை. கல்லூரி மாணவர்கள் என்றால் நன்றாக படிப்பவர் படிக்காதவர் என எல்லோரும் குடிப்பவர் போல ஒரு தோற்றத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தகத்து. இந்தியில் இருந்து எடுத்தாலும் அங்கும் இருக்கும் சூழலும் இங்கு இருக்கும் சூழலும் வேறு, மாணவர்களை குடிக்கத்தூண்டுவது போல இருக்கும். அதுபோல எப்படியும் டாக்டர்க்கு படித்து முடித்தவுடன் எல்லோரையும் கொல்லத்தான போறீங்க என்று டாக்டர்களை அவமதிப்பது போல டயலாக் வைத்ததும் இன்றைய சூழலில் கண்டிக்கத்தக்கதே. ஸ்ரீகாந்தின் அப்பா விஜயிடம் தான் பட்ட கஷ்டங்களை சொல்லும்போது டயலாக் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம், அவர் ஏன் தன் பையன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று சொல்லுவது பெரிதாக மனதை தொடவில்லை. படம் முடிந்து டிகிரி வாங்கும்வரை அங்கே சுத்திக்கொண்டு இருக்கும் ஸ்ரீகாந்த் ஏன் கடைசி பரீட்சை எழுதவில்லை? போடோக்ராபர் ஆக முடிவு செய்தாலும் இன்ஜினியரிங் முடித்து இருக்கலாமே, அதன் டைம் இருந்ததே.


சங்கர் நண்பனை 3 இடியட்ஸ் படத்தின் கலர் ஜெராக்ஸ்சாக எடுத்துள்ளார், விஜய்க்கு ஒரு நல்ல படம், சங்கருக்கு மற்றும் ஒரு வெற்றிப்படம், சத்யனுக்கு ஒரு திருப்புமுனை, சத்யராஜ்க்கு இனி கேரக்டர் ரோல் அடுத்து நிறைய வரவைக்கும் படம். ரீ ரெகார்டிங் சுத்த மோசம், படம் ஸ்ரீகாந்த் கதை சொல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் பேசுவது பாதி புரியவில்லை. பின்னால் அமர்ந்து இருந்த ஒரு குடிமகன் விஜயின் பரம ரசிகன் போல படம் முழுக்க எல்லா சீனிலும் விஜய் மட்டுமே வரவேன்றும் விஜய் பேசினால் மற்றவர் படத்தில் பதில் பேசக்கொடது என நினைத்து 'தெளிவாக' இருந்தார்.




பொங்கல் ரேசில் நண்பன் முதலிடத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது, வேட்டை வந்தால் தான் தெரியும்.

Tuesday, January 3, 2012

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாய்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது நாட்டில் எதுவுமே மாறாமல் ஒற்றுமையா இருப்பது ஒன்றில் மட்டுமே, அதுதான் ஒழுக்கமின்மை. பெரும்பாலான இந்தியர் இந்த ஒழுக்கமின்மையில் அடங்குகின்றனர். சின்ன சின்ன விசயத்தில் இருந்து பெரிய விஷயங்கள் வரை நம்மில் இருப்பது ஒழுக்கமின்மை மனப்பான்மையே.

சின்ன வயதில் இருந்தே நாம் வளர்க்கப்படும் விதம் அவ்வாறே இருப்பதால் இதில் நாம் யாரை குறை சொல்ல? சின்ன வயதில் பள்ளியில் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் அதே மாணவர்கள் முன்னிலையில் மதிய உணவு இடைவேளையில் புகைபிடிக்கிறார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் அதை கடைபிடித்து நேர்மையாக ஒரு முன்னோடியாக இருந்தால் கண்டிப்பாக அவர்களிடத்தில் பயிலும் மாணவர்களில் ஒரு 25 % மாணவர்கள் கண்டிப்பாக அவரை பின்பற்றுவர்.

ஆசிரியர் மட்டுமில்லாமல் ஆசிரியைகளும் சிலர் அவ்வாறே இருகின்றனர், மற்றவர்களை பற்றி புறம் பேசுதல், மாணவர்கள் முன்னிலையில் சிறு சிறு விதி மீறல் செய்தல் போன்றவைகளை செய்வதால் பாதிக்கப்படுவது நம் மக்களே, இதில் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களை குறை சொல்லி பயன் இல்லை, அவர்களும் மனிதர்களே.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தால் போதும் என்ற நினைப்பில் பெற்றோர் இருந்தால் எப்படி பிள்ளைகள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வளருவார்கள், பள்ளியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என படித்து விட்டு வரும் பிள்ளைகளை கூட்டி செல்லும் பெற்றோர் எத்தனை பேர் வாகன பாதைகளுக்கு எதிர் புறமாக செல்கின்றனர்? சிகப்பு விளக்கை தாண்டி செல்வது,  பையனுக்கு லைசென்சு வாங்கற வயசு வரதுக்குள்ள வண்டி வாங்கி கொடுப்பது, என் பையன் எட்டு வயசுலேயே கார் ஓட்டுவான் என பெருமை பேசுவது, ஒரு பெரிய குடும்பத்தையே இரு சக்கர வண்டில கூடி செல்வது,  பையனோ பெண்ணோ  தப்பு செய்திருந்தால் தண்டிக்காமல் ஆதரித்து பேசுவது, மன்னிப்பு கோராமை என எல்லா தப்பையும் அவர்கள் முன்னாடி நாம் செய்தால் அவர்கள் எப்படி வளருவார்கள். வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி அதை முன்னால் பெருமையாக பேசினால் பின்னர் பிள்ளைகள் எப்படி ஒழுக்கமாக வளருவர்?

வாகனம் ஓடுவது மட்டும் இல்லை, ஊருக்கு செல்ல அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது என நாம் எதையும் பிள்ளைகள் முன்னாடியே செய்கிறோம். மேலும் பெண்களை மதிக்காமல் நடப்பது, பிள்ளைகள் முன்னினையில் பெண்களை கிண்டல் செய்வது, தேவையில்லாத கமெண்ட் அடிப்பது, ஆண் பெண் பேதம் பார்த்து வளர்ப்பது என எல்லாவற்றையும் நாமே செய்துவிட்டு பிற்காலத்தில் இந்த காலத்து பிள்ளைகள் கெட்டு போய்விட்டனர் என சொல்கிறோம்.

குறிப்பாக, இப்போது பெரும்பாலான ஆண்கள் பெண்களை எந்த அளவுக்கு மதிக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும், நமது ஒட்டுமொத்த இந்தியாவுமே இன்னும் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் படித்தவர் படிக்காதவர் எல்லோருமே தமது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க முன் வருவது இல்லை. தன் வீட்டு பெண்களையே மதிக்காத எத்தனையோ ஆண்கள் எப்படி மற்ற பெண்களை மதிப்பார்கள்? பள்ளிகளில் இருந்து கல்லூரி, அலுவலகம் என போகுமிடம் எல்லாம் சக ஆண்கள் எவ்வாறு பெண்களின் மேல் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என யோசித்தால் நிலைமை கவலைக்கிடமாக போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரு பெண் எவ்வளவு கஷ்டத்தை கடந்து ஒரு அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தால் அதை சில வஞ்சக மனிதர்கள் எளிதில் அந்த பெண்ணிற்கு இடையூறு செய்து எவ்வவளவு தொந்தரவு தர முடியுமோ அவ்வளவும் தருகின்றனர்.

அதை நேர்மையாக அவர்களுக்கு அதரவாக பேசும் ஆண்களுக்கு பெண்களிடம் வழிபவன், பல் இளிப்பவன், சொல் விடுபவன் என சக மனிதர்களிடமே  இளக்கார பேச்சு வேறு.

சுயக்கட்டுப்பாடு இல்லாத, ஒற்றுமை இல்லாத, ஒழுக்கம் இல்லாத, போராட்ட குணம் இல்லாத சமுதாயமாக நமது ஒட்டுமொத்த இந்தியாவுமே வழிநடத்தப்படுகின்றது. பெண்கள் மரியாதையை என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, அத்தனை பேர் நம்மில் படித்தவர்கள் ஒரு அரை கிலோமிட்டர் தூரம் சென்று திரும்பி வருவதற்கு பதிலாக, எதிர் வழியில் செல்கிறோம், நாம் செய்வது மற்றவர்களுக்கு இடையூறு என்பதை தெரிந்தே செய்கிறோம். சாலையை கடக்க சுரங்க பாதையோ இல்லை மேல் வழிப்பாதையோ இருக்கும்போது தடுப்புக்கட்டையை தாண்டி குதிப்பது பெரும்பாலும் படித்தவர்களே.

ஒழுக்கம், சுயகட்டுப்பாடு என்பது பாடப்புத்தகத்தில் மட்டும் இருந்தால் போதும் என்ற நினைப்பு பெரும்பாலும் அனைவர் மனதிலும் இருக்கிறது.

ஊரே அம்மணமாய் இருக்கும்போது கோவணம் கட்டியவன் பைத்தியம் என்பது போல ஒரு சிலர் நேர்மையாய் இருப்பதுமற்றவர்களுக்கு கேலி செய்ய எதுவாக அமைந்து விடுகிறது, வருடத்தின் முதலிலேயே இத்தகைய பதிவை எழுதுவது மனதிற்கு சிறுது வருத்தமே ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

தனி நபர் சம்பந்தப்பட்ட விசயங்களை நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை, புகை பிடிப்பது, குடிப்பது என்பது அவரவர் விருப்பம் ஆனால் அதற்குபின் நாம் நடந்துகொள்வது என்பது தனை நபர் சார்ந்தது அல்ல.


நான் இதில் சொல்ல வந்தது பொதுவாக நம் அனைவருக்கும் உள்ள பிரச்சனையே, நானும் இதில் சிலவற்றை பிடித்தோ பிடிக்காமலோ, சமுதாயதுக்காகவோ செய்துள்ளேன், எப்படி இதில் இருந்து மீண்டு வருவது?

Monday, January 2, 2012

கடந்து வந்த பாதை 2011

நடந்து முடிந்த 2011 ஆம் ஆண்டு எல்லோருக்கும் எப்படி இருந்ததோ ஆனால் எனக்கு கொஞ்சம் மோசமானதாகவே முடிந்தது, செய்வதெல்லாம் நான் ஆனால் ஆண்டு இறுதியில் பழியை தூக்கி அந்த ஆண்டின் மேல் போடுவது எல்லோரும் செய்வதுதானே.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேரம் சரி இல்லை என எனது பெற்றோர் சொன்னாலும் வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை, ஆனால் சரியாக ஆரம்பத்திலேயே வாகன விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பி முகத்தில் சிறிது அடியோடு வெளிவந்தேன், அந்த காயங்கள் ஆறினவுடன் மறுபடியும் வேதாளம் முடுங்கைமரம் ஏறியது. என் நேரமோ என்னவோ தெரியவில்லை ஏதும் எனக்கு நேர்ந்தால் எனது காருக்கும் ஏதும் நேர்ந்துவிடும், நான் அடிபட்ட அடுத்த நாளே எனது காரும் அடிபட எல்லாமே தலைகீழ்.




அதற்குப்பின்னர் என்னதான் நான் தேறி வந்தாலும் எனது கார் தேறவில்லை, காரில் சிறு சிறு வேலைகளும் எனது வேலைப்பளுவினால் காரை கவனிக்கமால் அது மேலும் பல வேலைகளை கொண்டு வந்து, அதை வெறுத்து விற்கலாம் என முடிவு செய்யும் அளவிற்கு சென்றது.


அலுவலகத்திலும் வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களும், அலைச்சலும் மிகுதியாக இருந்தன, அலுவலகத்தை பொறுத்தவரை என்ன வேலைகளை செய்தாலும் பலன் கிடைக்காமல் இருந்து வந்தது, நம் வேலைகளை நம் மனதிற்கு திருப்தி இருக்குமாறு செய்ததால் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.


சொந்த விசயத்தில் பலவிதமான இன்னல்கள், எல்லாவற்றிலும் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை, சான் ஏறினால் முலம் சறுக்குதல் என்பது சரியாகவே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சொந்த விஷயம் அலுவலக விஷயம், நண்பர்கள் மற்றும் மனது என எல்லாவற்றிலும் பிரச்சனைகள் வர எப்படியோ தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு ஒரு வழியாக சமாளித்து வந்தாயிற்று. எல்லா மோசமான காரியங்களும் இறுதியில் ஒரு நல்ல காரியத்தால் மறக்கப்பட்டுவிடும் என்பது போல ஆண்டின் இறுதியில் திடிரென்று ஒரே வாரத்தில் வீடு வாங்குவது என்று முடிவு செய்து உடனே வாங்கியாகிவிட்டது, அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் வரும்போல இருந்தாலும் எளிதில் சமாளித்து வந்து இருக்கிறேன், இன்னும் பண விசயங்களில் நிறைய சமாளிக்க வேண்டி இருந்தாலும் சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கை உடன் பிறந்தோர் கூட இருப்பதால் ஏற்படுகிறது.


ஆகமொத்தம் கடந்த ஆண்டு என்னைப்பொறுத்த வரை சிறிது கஷ்டமான ஆண்டாக இருந்தது( அதில்பாதி நானே தேடிக்கொண்டது) , இந்த புத்தாண்டு கண்டிப்பாக இன்னும் அதிக சோதனைகளைக்கொடுக்கும் என ஏதிர்பார்த்து இருக்கிறேன், எத்தனைகள் சோதனைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதால் இந்த ஆண்டு எல்லாவற்றிலும் நல்ல ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.


பதிவுலகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டின் பாதியில் மீண்டும் புதிய உத்வேகத்தில் எழுத ஆரம்பித்து ஒரு வாரத்தில் நிறுத்திவிட்டேன், இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் மீண்டும் அடுத்த அத்தியாயத்தை துவக்கலாம் என முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்