Friday, June 27, 2008

வகுப்பறையில் ஒரு நாள்-ஹாக்கி

வகுப்பறையில் ஒரு நாள்

எட்டாவது சேந்து சில நாட்களில் உடற்கல்வி ஆசிரியர் வந்து மாணவர் அனைவரையும் அழைத்து நமது பள்ளியில் ஹாக்கி அணித்தேர்வு செய்யப்போகிறோம், விருப்பமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்று கூறினார். நம்ம மனசு ஆஹா கிரிக்கெட் என்றால் அத்தன பெரும் வருவாங்க இதுக்கு எப்படியும் ரொம்ப கம்மியாதான் பசங்க வருவாங்க அதனால நாம இதவே விளையாடலாம், அதுவுமில்லாம இது நம்ம தேசிய விளையாட்டு என்று நினைத்தது. அதுமாதிரி நெறைய பசங்கலாம் வரல ஒரு இருபதுபேர் இருந்தோம்.

அப்பவே மைல்டா ஒரு கேள்வி மனசுல இருந்துச்சு,, எதுக்குடா இத்தன பேரையும் இந்த மைதானத்த இரண்டு ரவுண்டு அடிக்க சொல்றாருன்னு, கஷ்ட்டப்பட்டு அடிச்சு முடிச்சா, சரி எல்லோரும் மட்டைய எடுத்துகிட்டு வாங்கடா சொல்லித்தாரேன் என்று சொல்லி கூட்டிப்போனார், அடடா நம்ம இவளவு எளிதாக தேர்வு செய்யப்படுவோம் என்று நினைக்கவில்லையே சந்தோசப்பட்டேன். நானும் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு சென்றேன்.
எல்லோருக்கும் பந்தை அடிக்க சொல்லிகொடுத்தார், எனக்கும்தான், சரி என்று நானும் அடிக்க, அடுத்த அடி எனக்கு விழுந்தது, மட்டையின் எந்தப்பக்கம் அடிக்க சொன்னா நீ எந்தப்பக்கம் அடிக்கற என்று, அப்புறம் அவர் சொன்னமாதிரி அடிக்க முயற்சி செய்தால் பந்து ஐந்து அடிகூட நகரவில்லை. அப்புறம்தான் தெரிந்தது நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன், இவர் சொல்லிகொடுத்தது வலதுகைப்பழக்கம் என்று.நான் அவரிடன் "சார் நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் எனக்கு இப்படி வரவில்லை, இடது கை மட்டைகுடுங்க நான் விளையாட" என்று சொல்ல. அவர் என்னை ஒரு மாதிரியாத்தான் பார்த்தார். இப்பதான் தெரியுது நம்ம கனாக்காணும் காலங்கள்ல வர பி.டி மாதிரியோ என்று...

அப்புறம் இப்படி விளையாண்டா விளையாடு இல்லாட்டி போ, நம்ம பள்ளியில அந்த மட்டை எல்லாம் இல்ல, நீ உண்மைலேயே விளையாடனும் என்று எண்ணம் இருந்தா நீயே சொந்த காசுல ஒரு மட்டை வாங்கி வந்து விளையாடு என்றார். எங்க நமக்கு குடுக்கற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்ல அப்ப எங்க ஹாக்கி மட்டை வாங்க, இருந்தாலும் மனச தளர விடாம ஊர்ல இருக்க எல்லா கடைலயும் போய் கேட்டேன், இடதுகை மட்டை எங்ககிட்ட இல்ல வேற பக்கம் இருக்கலாம் என்று சொன்னாங்க, நானும் நம்பி ஒரு மாசாம் தேடிட்டு அப்புறம் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து ஹாக்கிக்கு முழுக்கு போட்டுட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு ஹாக்கில இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு என்று தனியாக மட்டை இல்லையாம். அவர்களும் வலது கை ஆட்டக்காரர் போல ஆட வேண்டுமாம். இடது கை மட்டை எங்குமே கிடைக்காதாம். இப்ப சொல்லுங்க அந்த பி. டி எப்படி பட்டவர் என்று, "ஐ வான்ட் டு சி யூர் ஒரிஜினல் சர்டிபிகட்" என்று அணிக்கு அவர்ட்ட கேட்க்க அங்க ஆள் இல்ல .

நம்ம ஊர்ல விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கே இந்த அளவுக்குத்தான் தெரிஞ்சு இருக்கு அப்புறம் எங்க ஒலிம்பிக்ஸ்ல போய் தங்கம் வாங்கறது, அதெல்லாம் கனவோடு நிறுத்திக்கணும் போல.

இப்படித்தான் நான் ஹாக்கி விளையாண்டு, அப்படியே மாவட்ட அணி, மாநில அணி, அப்புறம் இந்திய அணி, அப்படியே நேரா ஒலிம்பிக்ஸ் தான் என்ற கனவு கலைந்து போனது. என்னடா வகுப்பறையில் ஒருநாள் என்று சொல்லி மைதானத்தில் ஒருநாள் என்று முடிச்சுட்டானே என்று பாக்காதீங்க, இதுவும் வகுப்பறையில்தான் ஆரம்பித்தது :))

எனது பள்ளி ஆசிரியர்கள்

எனது பள்ளி ஆசிரியர்கள்

எவருமே அவரது பள்ளி வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த ஆசிரியர்களை மறந்து இருக்க முடியாது. என்னை எந்த விதத்திலாவது கவர்ந்த அல்லது என்னால் மறக்க முடியாத, எனக்கு நினைவில் உள்ள ஆசிரியர்களை பற்றி எழுதப்போகிறேன்.(ஆசிரியர் மற்றும் ஆசிரியை அனைவரும் தான்)

கீழ் வகுப்பில் இருந்து வருவோம்,
எனக்கு எல்.கே.ஜி வகுப்பு எடுத்தவரெல்லாம் நியாபகம் இல்லை அனால் யு.கே.ஜி வகுப்பு ஆசிரியை முகம் மட்டும் இன்னும் நியாபகம் இருக்கிறது. கலையான அந்த முகம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, கடைசி வரை அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன், இப்போது அவர் அந்த பள்ளியில் இல்லை. எனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தது, மதியம் தூங்க வைத்தது எல்லாம் இன்னும் நியாபகம் வருகின்றது. எனது கல்வி வாழ்வை துவக்க உறுதுணையாய் அமைந்த அந்த ஆசிரியைக்கு நன்றி.

அடுத்து எனது இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஆசிரியை, கற்பகம் டீச்சர், அப்போதெல்லாம் இவரிடம் நிறைய பயம், அதிகம் அடிக்க மாட்டார்கள் அனால் முகத்தில் ஒருவித கோவம் மட்டும் எப்போதும் இருக்கும். பின்னர் என்னை வகுப்புத்தலைவன் ஆகியதில் இருந்து என்னிடம் சின்ன பாசம். ஆனால் இவங்கதான் என்னை ஒரு பெரிய மாற்றத்துக்கு "அடி" போட்டு தயார் பண்ணினாங்க. இடது கை பழக்கம் உள்ள என்னை அடித்து அடித்து வலதுகையில் எழுத வைத்த உலகப்பெருமை இவங்களையே சேரும். அன்றில் இருந்து இன்று வரை இவங்கள நெனச்சாலே ஒரு வித கோவம் எனக்குள் வருகின்றது. அனாலும் ஒரு நல்ல காரியம்,நான் இடது கையால் எழுதுவதை விடவில்லை.

ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நான் அன்றில் இருந்து இன்று வரை என்னால் மறக்க முடியாத சில ஆசிரியரை சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.ஆறாம் வகுப்பு படிக்க போகும் முதல் நாளில் எனது தந்தை எனது அண்ணாவின் துணையுடன் என்னை ஆங்கில வழி கல்விக்கு மாற்ற திட்டம் போட்டார், அப்போது நான் படித்த அதே பள்ளியில் இருந்த ஆங்கில வழித்திட்டத்தில் ( மெட்ரிகுலேசன் பள்ளி ) என்னை சேர்க்க திட்டமிட்டு படிவம் எல்லாம் நிரப்பியாயிற்று, திடீரென்று என்னைப்பார்த்த அந்த பள்ளி முதல்வர் என்னப்பா உன்னால ஜெய்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், நீ நம்புறியா? சேந்துகிரியா இல்லை வேணாமா என்றார். நான் வேணாம் என்று சொல்லியவுடன் பையனுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தமிழ் வழியிலே படிக்கட்டும் அடுத்த வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினார், அதுமட்டுமில்லாது எனது வகுப்பு ஆங்கில ஆசிரியரை தனியாகச்சந்தித்து என்னைப்பற்றி சொல்லி தனி கவனம் எடுத்துக்கொள்ள கூறியுள்ளார். எனவே இவர்க்கும் என்னிடத்தில் தனி மரியாதை எப்போதும் உண்டு.

எனது ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் வைத்தியலிங்கம், மிக அமைதியான ஆசிரியர், அப்போது அவர்க்கு சின்ன வயசுதான் இருக்கும், வகுப்பில் என்னை வகுப்புத்தலைவன் ஆக்கியது மட்டுமில்லாமல், தினமும் வகுப்பில் ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வது, ஆங்கிலத்தை நுணுக்கமாக சொல்லித்தருவது என்று என்னை ஒரு வழியாக தயார்ப்படுத்தினார் (அப்படியும் நான் கத்துகல என்பது வேறு விஷயம்).இருந்தாலும் ஆங்கிலத்தின் மேலுள்ள ஒரு பயம் போயிற்று. இப்பொது ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர்க்கு எனது நன்றிகள்.

அடுத்து அறிவியல் ஆசிரியர் பாபு அவர்கள், இவரும் ஆங்கில ஆசிரியரும் நண்பர்கள், குணத்தில் நேர் எதிர், கோவத்தில் எனக்கு அண்ணன். அடிபிரிச்சுடுவார், என்மீது கொஞ்சம் அக்கறை உண்டு இவர்க்கு. ஆனாலும் வகுப்புத்தலைவன், நன்றாக படிக்கிறேன் என்ற அகந்தையில் நான் ஏதும் சில சின்ன விஷயம் பண்ணினாலும் அடி பின்னி எடுத்துவிடுவார். இவர் கடைசிவரை என்னிடம் கற்றுக்கொள்ள சொல்லியது "கோவப்படு, நான் என்ற அகந்தையை எப்போதும் விட்டுவிடு, உனக்கு மட்டும்தான் வெற்றி நிரந்தரம் என்பதை மறந்துவிடு" இதுதான். இவரின் பண்புகள் எனக்குள் வந்ததை சமீபத்தில்தான் கண்டுகொண்டேன் (இன்னும் இந்த அகந்தை மேட்டர் நம்மகிட்ட வரல, அப்பப்ப தலை தூக்கும் அப்போதெல்லாம் இவர் நியாபகம் வந்து எட்டிப்பார்க்கும்)

எட்டாவது வரை இவர்கள் இரண்டு பேர்மட்டுமே எனக்கு நினைவில் நின்ற ஆசிரியர், ஒன்பதாவது போகும்போது என்னை ஒரு வழியாக மனதளவில் ஆங்கில வழிக்கல்விக்கு தயார் படுத்திக்கொண்டேன், அதே முதல்வர் இப்போது என்னப்பா தயாரா என்று சொல்லி சிரிக்கிறார். என்னை வகுப்பறையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்த ஆசிரியையிடன் சொல்லிவிட்டுச்சென்றார். அந்த ஆசிரியை பெயரும் கற்பகம், இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் ஆசிரியை, இவர்க்கும் என்னை பிடிக்க ரொம்ப சில நாட்களே ஆகியது. எனக்கு மிக நல்ல அறிவுரைகளை சொல்லி, பயத்தை போக்கி, என்னை மற்ற மாணவர்களுடன் சகஜமாக பழக வைத்ததின் பெருமை இவரையே சேரும். இன்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரைப்பற்றி பேசுவது உண்டு.

அடுத்து கணித ஆசிரியர் விஜயகுமார், நானும் பள்ளிக்கு புதிது இவரும் புதிது, அடி பின்னியெடுக்கும் ஆசிரியர்க்கு பதிலாக இவர்தான் உங்கள் கணித ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை இவருடன் தொடர்பு இருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் தனிப்பாடதிலிருந்து வெளியேறினேன். இவரைப்பற்றி நிறைய எழுத வேண்டியதால் தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து புது முதல்வர், இவரும் விஜயக்குமாரின் பதிவில் வந்துவிடுவார், இவர்க்கும் மிகப்பெரிய பங்கு இல்லாவிடிலும் எனது எதிர்காலத்தை மாற்றிய ஆசிரியரில் மிக முக்கிய இடம் உண்டு.

அப்புறம் சமூக அறிவியல் ஆசிரியை சுலோக்சனா, தாவரவியல் ஆசிரியை அங்கையர்க்கன்னி இவங்கல்லாம் அங்கங்க வந்துட்டு போனாங்க. அங்கையர்க்கன்னி நான் புத்தகத்தைப்பார்த்து பரீட்சை எழுதும்போது கண்டுபிடித்து அடித்து,ஏண்டா என்கிட்டயே இப்படி மாட்டிகிட்டா நீ பிட் அடிக்கவே லாயக்கு இல்லை என்று சொல்லி என்னை நன்றாக வித விதமாக பிட் அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற தூண்டிவிட்டவர்.(இத இப்ப பார்த்தாங்கன்னா அவ்வளவுதான் )

பதினொன்றாம் வகுப்பு, பள்ளி மாறியாயிற்று.கோவிந்தராஜன் அய்யா தமிழாசிரியர், என்னால் மறக்க முடியாத ஆசிரியர்... தமிழை படிக்காத நீ, போதுமான அளவுக்கு ஏற்கனவீ படிச்சுட்ட அத தக்கவைத்துக்கொண்டாலே போதும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க தேவையானதை மட்டும் இப்போது செய் என்று அறிவுரைகூறியவர்.

பசுபதி -இயற்பியல் ஆசிரியர், பொதுவாக மற்றவரைப்போல இவரை எனக்கு கொஞ்சம் புடிக்காது ஆனால் இவரின்றி நான் இயற்பியலில் 185 மதிபெண்கள் எடுத்து இருக்க முடியாது, எனது தந்தையின் நண்பர், அதற்காக என்மீது தனி அக்கரை செலுத்தாமல் எல்லோரிடமும் அக்கறை செலுத்துவார். அவர் சொல்லிகொடுத்த அந்த cyclotran பாடம் இன்றும் என் நினைவில் நிற்கின்றது. இவர் கையெழுத்தை நான் செய்முறை அறிவியல் ஆய்வு புத்தகத்தில் போட ஆரம்பித்து வகுப்பில் பாதி பேர் அதை பின்பற்றினர்.

இதற்கு பிறகு எனக்கு மனதில் நிற்கும் ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை... இன்னும் சிலர் இருந்து இருக்கலாம். ஆனால் எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு நேரமிருந்தால் அவரது ஆசிரியர் பற்றி எழுதலாம் இன்னும் விரிவாக சுவையாக. (முக்கியமாக கோவிந்தராஜ் அய்யாவைப்பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்)

Thursday, June 26, 2008

எனது முதல் சென்னை பயணம்

எனது முதல் சென்னை பயணம்

உண்மைய சொல்லனும்னா இதன் என்னோட முதல் நெடுந்தூர பயணம். மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தேன், எனது அக்கா பனிரெண்டாம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு எழுத சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பள்ளி விடுமுறை வேறு, அப்பாவிற்கோ அவரது சலுகைகளான வருடத்திற்கு 4500 கிலோமீட்டர் குடும்ப இலவச பயணத்திட்டத்தை ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை. எப்படியோ என்னையும் சென்னை கூடிப்போகிறேன் என்று சொல்லிவிட்டனர்.

அது என்ன கிழமை என்று தெரியவில்லை கரூரில் இருந்து சென்னைக்கு பேருந்துப்பயணம். அரசுப்பேருந்து, நீண்டதூரம் செல்ல வேண்டும், என் அப்பா விடுமுறையில் எங்களுடன் பயணம் மேற்கொண்டார், அவர் ஓட்டுனர் இருக்கையை விட்டு பயணியர் இருக்கையில் பயணிப்பதை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். எனக்கு ஜன்னலோர இருக்கை.

அப்போதெல்லாம் பேருந்துக்கு திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று பெயர், ஒவ்வொரு இருக்கைக்கு பின்னால் ஒரு திருக்குறள் எழுதப்பட்ட பட்டை ஒட்டப்பட்டிருக்கும். இப்போ அதை எல்லாம் மறந்து விட்டிருக்கின்றனர். ஒரே ஒரு குறள் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் எழுதப்பட்டுள்ளது சில பேருந்துகளில். (காலம் மாறிபோச்சு போல)

விடிய விடிய தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன், பேருந்து எத்தனை லாரிகளை முந்திக்கொண்டு சென்றது, எத்தனை பேருந்துகளை முந்திச்சென்றது என்று எண்ணிக்கொண்டு வந்தேன். இடையில் நிறுத்தி சாப்பிட சென்றபோது அங்க வந்த பேருந்துகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். அப்பாவின் நண்பர் பிரபு அண்ணா வந்து வீட்டுக்கு கூட்டிச்சென்றார்.

அன்று மாலை வரை ஓய்வு, எனக்கு சென்னையை பார்த்தாலே ஒரு மலைப்பு அப்போது, அன்று மாலை வழக்கம் போல அண்ணா சமாதி, M.G.R சமாதி எல்லாம் குட்டிச்சென்ற்ரார்கள், பின்னர் கடற்கரை (என்னடா எல்லாமே அங்கதான இருக்குன்னு சொல்லக்கூடாது, எனக்கு அப்போ அதெலாம் தெரியாது) முதல் முதலாக கடலைப்பார்த்தேன், நெஜமா ரொம்ப பயமா இருந்துச்சு, பெரிய பெரிய அலை, அப்பா கையா பிடிச்சுகிட்டு தண்ணில ஆடுனேன். கடற்கரைல சுண்டல் வாங்கித்தந்தாங்க, அதெல்லாம் எனக்குப்புதுசு, அதுவரை வெளி திண்பண்டங்களை (பள்ளிக்கு வெளியிலோ, இல்லை வேறு எங்கும் சாலையோரமாக உள்ள கடைகளிலோ வாங்கி திங்க அனுமதி இல்லை எனக்கு) சாப்பிட்டது இல்லாததால் ஆசையாய் நிறையா சாப்பிட்டேன்.

அக்காவிற்கு அடுத்த நாள் நுழைவுத்தேர்வு, ஏதோ ஒரு கல்லூரியில் எழுதினார்கள், எழுதி முடித்து விட்டு வந்த உடனே வீட்டுக்கு வந்தாயிற்று. அன்று எங்கும் கூட்டிச்செல்லவில்லை. எனக்கும் பெரிதாக ஏதும் தோணவில்லை வீட்டிலேயே விளையாட, தொலைக்காட்சி பார்க்கவே நேரமில்லை அப்ப எங்க வெளிய போறது. அடுத்த நாள் V.G.P கோல்டன் பீச் சென்றோம், அந்த அசையா மனிதன், அங்குள்ள ராட்டினங்கள், சிறு ரயில் வண்டிகள் எல்லாமே புதுசு எனக்கு. மாலை வரை அங்கு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.

அடுத்த நாள் இரவு கிளம்பி சென்னையில் இருந்து கரூர் வந்து சேரத்திட்டம். மறுபடியும் பேருந்துப்பயணம், நீண்ட பயணம், மறுபடியும் அதே லாரி, பேருந்து எண்ணிக்கை, வேடிக்கை என்று வந்து சேர்ந்தேன், இருந்தாலும் கரூர் வந்து சேர சேர மனதில் ஒரு சோகம், அவ்ளோதானா பேருந்துப்பயணம் என்று மனது எண்ணியது. இப்படித்தாங்க என் முதல் சென்னைப்பயணம் இருந்துச்சு. இன்றுவரை எனக்கு எங்கு செல்வதானாலும் சாலை வழியே செல்லவே இன்றும் மனதுக்குப்பிடிக்கிறது.

அதுக்கப்புறம் பள்ளியில் வகுப்பு தோழர்களிடம் சென்னை சென்றேன், அங்கு அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று ஒரு வாரம் முழுக்க சொல்லித்திரிந்தேன்.

இந்த ஒரு பயணம்தான் எனக்கு நான் என்ன குறிக்கோளில் படிக்கப்போகிறேன் என்பதை எடுத்துக்காட்டியது. ஆம் அக்கா மருத்துவக்கல்லுரியில் சேரப்போகிறார், நாமும் அது போலத்தான் என்று அப்போதே முடிவு எடுத்தாயிற்று. (நான் இல்லீங்க அப்பாதங்க)

சென்னையில் இருந்த அத்தனை நாளிலும் எங்களுக்கு விதவிதமாக சாப்பாடு போட்ட பிரபு அண்ணா தம்பதியர் மற்றும் அவர்கள் வீடு. இன்னைக்கும் அவர் வீடுக்குச்செல்வது என்றால் அவர்களின் உபசரிப்பும் சாப்பாடும் முதலில் மனதில் வரும்.

இலவச பயணத்திட்டம் பற்றி எழுதினேன் அல்லவா, நான் கல்லூரி வந்தவுடன் அதுவரை உபயோகிக்காமல் விட்ட அந்த திட்டத்தை நான் மட்டுமே காலி செய்தேன் நான்கு வருடமும்.

அந்த திருக்குறள் எழுதப்பட்ட பட்டையை நான் கோடு போட பயன்படுத்தி இருக்கிறேன். அப்பா ஒரு பத்து இருபது குறள் எடுத்து கொண்டு வந்து தந்தார்கள். தினமும் ஒரு குறளாக பயன்படுத்துவேன். வகுப்பு ஆசிரியர்க்கு அதனாலேயே என்மீது தனி பிரியம்.(வித்தியாசமா scale பயன்படுத்தறேன் என்று, எங்க வாங்கினது இது என்று கேட்டு வர வேறு சொல்லி இருகாங்க ஒரு தடவ என்கிட்ட).

அப்போதெல்லாம் கேமரா இல்லாததால் இந்த பயணங்களில் போட்டோ எடுக்கவே இல்லை :(

சென்னையில் எங்கு சென்றாலும் பல்லவன் பேருந்துகளையே உபயோகப்படுத்தினோம். அப்பா ஊழியர் என்பதால் உடன் வந்த குடும்பத்தினர்க்கு பயணசீட்டு வாங்கும்போது அனைத்து நடத்துனரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தனர் அப்போது.

Wednesday, June 25, 2008

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு


என்னங்க பாக்கறீங்க திடிர்ன்னு குண்ட தூக்கி போடுறேன்னா? உண்மை தாங்க, விலை ஏற்றம் செய்து ஒரு மாதம் ஆக போகின்ற நிலையில் இந்த நாட்களில் நான் கண்ட உண்மை.


சென்னையில் கடந்த ஒரு மாதமாக வழக்கமாக நான் பெட்ரோல் போடுகிற நிலையங்களில் ஆகட்டும், இல்லை மற்ற எல்லா நிலையங்களில் ஆகட்டும் பெட்ரோல் விலை 60 ரூபாய் ஒரு லிட்டர்க்கு.


ஒவ்வொரு முறையும் நான் பெட்ரோல் போடும்போது சாதரண பெட்ரோல் போடுவது வழக்கம், கடந்த மாதங்களில் அது எங்கேயும் கிடைப்பதில்லை. சாதரண பெட்ரோல் விலை 55 ரூபாய் அனால் சூப்பர் பெட்ரோல், எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் விலை 60 ரூபாய். எங்கேயும் சாதரண பெட்ரோல் கிடைப்பது இல்ல.


கூட்டி கழிச்சு பாருங்க விலை ஏற்றம் 5 ரூபாய் இல்லை 12 ரூபாய். எப்போதும் கிடைத்த சாதரண பெட்ரோல் இப்போ கிடைப்பதில்லை, 60 ரூபாய் போட்டு பெட்ரோல் போடும் நிலை. இரண்டு சக்கர வண்டிகளில் இந்த சூப்பர் பெட்ரோல் போடுவதால் எந்த பயனுமிருக்கப்போவது இல்லை. அப்படியே இருந்தாலும் 2 -3 கிலோமீட்டர் அதிகம் ஓடும் அதற்கு 5 ரூபாய் அதிகம் குடுக்க வேண்டும்.


அதும் என்னோட யமாஹா எல்லாம் லிட்டர்க்கு 30 கிலோமீட்டர் குடுத்தாலே அதிகம் அதையும் அடிச்சு பிடிச்சு கெஞ்சி ஓட்டி 40 கிலோமீட்டர் குடுக்க வைக்கறேன். முடியலப்பா சாமி. இதுல சூப்பர் பெட்ரோல் வேறயாம் அய்யா என் வண்டி எத போட்டாலும் 30 தான் குடுக்கும் என்று கெஞ்சியும் எவனும் மசிய மாட்டேங்கிறான்.


இதுல இவங்க சூப்பர்னு சொல்லி சாதரண பெட்ரோல்ல கலப்படம் செஞ்சு வித்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஏதும் இல்லை. ஏற்கனவே ஒரு நிலையத்தில சாதரண பெட்ரோல் போடும் இடத்தில் சூப்பர் என்று ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருந்தனர். அதான் டவுட்டு...


இதெல்லாம் மாறனும்னா ஒரே வலி (வழின்னு தான் டைப் பண்ணுனேன் அனா அதுவா இப்படி வலின்னு மாறிவிட்டது) நம்ம தலைவர் விஜயகாந்த் ஆட்சிக்கு வரணும். ( ஒரு காமெடி வேனாமாங்க....)


ஆட்சிய மாத்துங்க (மாத்துன மட்டும் குறைய போகுதா இல்லபா ஒரு சேஞ்க்குதான். மாத்தின நம்ம மக்கள் இதையெல்லாம் மறந்துடுவாங்க தான.)
அணையைப்போற விளக்கு இவ்ளோ நாள் பிரகாசமா எரிஞ்சுக்கிட்டு இருந்த மாதிரி இருக்கு.

Tuesday, June 24, 2008

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

இது பழைய நிகழ்வு, சென்ற வருடம் தீபாவளியின் போது நான்கு நாட்கள் விடுமுறை வந்தது, விடுமுறைக்கு முதல் நாள் எனது தந்தையின் அலைபேசி தொலைந்து போனது. நாங்களும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காமல் போகவே சரி வாடிக்கையாளர் சேவை மையத்தில் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தோம்.

எதற்கும் தொலைந்த நம்பர்க்கு அழைத்து பார்ப்போம் என்று அழைத்தால் யாரோ எடுத்தார்கள், எங்களுக்கோ மகிழ்ச்சி, அவரிடம் அலைபேசி எங்களுடையது, தவற விட்டுவிட்டோம், நீங்கள் எங்கு உள்ளீர்கள் வந்து வாங்கிகொள்கிறோம் என்று கூறினோம். அவரோ நான் வெளியூரில் உள்ளேன் தர முடியாது என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். பின்னர் எங்களது நெருங்கிய நண்பர் ஒருவரது பெண்ணிற்கு என் தந்தை நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியது வேறு யாரோ இருக்கவே அவர்கள் செய்ய என்னிடம் கேட்க அவர்களுக்கு அலைபேசி தொலைந்ததை சொன்னோம்.

இனிதான் ஆரம்பம் நம்ம பிஎஸ்என்எல் சேவை, வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்பு கொண்டு சொல்லலாம் என்று நினைத்தால் முதல் கேள்வி, வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளதா என்று, இருதால் என்ன நம்பர்? ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நம்பர் கண்டு பிடித்து அழைத்தோம், நம்பரை சரி பார்க்கவும் என்று வந்தது, பின்னர் பல முறை தொடர்பு கொண்டும் தங்கள் நம்பரை சரி பார்க்கவும் என்று மட்டுமே வந்தது, பின்னர் வேறு தொலைபேசியில் இருந்து அழைத்தால் அழைப்பு போயிற்று, யாரோ ஒரு பெண் எடுத்தார், தகவலை சொல்லி தந்தையின் நம்பரை துண்டிக்குமாறு வேண்டினோம். அவர் அதற்க்கு அசால்டாக இது தமிழ்நாடு சரக நம்பர் நீங்கள் அதற்க்கு தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி தொடர்பை துண்டித்தார் . அப்பா சென்னை தமிழ் நாட்டில் இல்லையா என்று மனதில் கேள்வி எழுந்ததுலாம் சொல்லனுமா??

கஷ்டப்பட்டு சேவை மைய நம்பரை கண்டுபிடித்தால் இப்படி சொல்றாங்க என்று நினைத்து மறுபடியும் அதே நம்பர்க்கு அழைக்க, அந்த பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது, "இப்போது தான சொன்னேன் இங்க சொல்ல கூடாதுன்னு, ஏங்க மறுபடியும் பண்றீங்க" என்று கேட்டார், அம்மா எனக்கு தமிழ்நாடு சேவை நம்பர் தெரியாது நீங்க உதவி செஞ்சா நல்லார்க்கும் என்று கேட்டால் கடுகடுப்புடன் எப்படியோ ஒரு நம்பரை கூறினார்.. அவரிடம் ஏனிந்த நம்பர்க்கு வேறு தனியார் நம்பரில் இருந்து அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கேட்டோம் அதற்க்கு அவர் இது எங்கள் சேவைக்கு மட்டும் மற்றவர் தொடர்பு கொண்டால் அப்படிதான் அடிக்கடி நடக்கும் என்று சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் :)

வேறு நம்பரை தொடர்பு கொண்டு விசயத்தை சொன்னால் அவர் அப்படிங்களா, சரிங்க நீங்க பக்கத்துல இருக்க ஆபிஸ் போய் ஒரு எழுத்துபூர்வமான புகார் குடுங்க தொடர்பை துண்டித்து விடுவார்கள் என்றார். எல்லாம் என் நேரம் என்று நினைத்து அருகில் இருக்கும் ஆபிஸ் தேடினால் கிண்டில இருந்தது, அங்கு சென்றால் தீபாவளி அரசாங்க விடுமுறை நான்கு நாட்கள் என்று சொல்லி மூடி இருந்தனர், பின்னர் சென்னையை அலசியதில் அனைத்து அலுவலகமும் விடுமுறை, மறுபடியும் சேவைமையம் , இந்த முறை வேறு அதிகாரி மறுபடியும் முதலில் இருந்து விளக்கி என்ன பண்ண என்று கேட்டோம், திங்கட்கிழமை சென்று புகார் குடுங்க என்றார். அய்யா அதில் மீத தொகை 3200 ரூபாய் இருக்கு, மற்றும் எடுத்த நபர் அதை தவறான முறையில் உபயோகிக்கறார் அதனால் தான் சொல்கிறோம் என்று சொல்ல, அப்படிலாம் தொடர்பை துண்டிக்கும் வசதி இல்லை என்றார். என்ன மறுபடியும் ஷாக் ஆகிட்டேன் :)

ஏர்டெல் நம்பரை பல முறை இப்படி பண்ணின அனுபவம் எனக்கு இருந்தும் நம்ம பிஎஸ் என் எல் ல ஒன்னும் பண்ண முடியல. அடுத்து அவரிடம் "அய்யா அதுவரை அவர் தவறான முறையில் அதை உபயோகித்து அதற்கு பின்னால் எங்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன பண்ண" என்று கேட்டோம். அதற்க்கு நாங்கள் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார். சரி நாங்கள் அழைத்ததுக்கு பதிவு என் குடுங்க, பின்னால் நாங்கள் புகார் குடுக்கும்போது இதையும் சொல்லி விடுகிறோம் எங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கட்டும் என்றால் அதெல்லாம் முடியாது என்று தொடர்புதுண்டித்தது.

இதற்கிடையில் அலைபேசியில் சேமித்து வைத்த நம்பர்களில் பலருக்கு அழைப்பு போயிருந்தது , பலர் அலறி அடித்து எங்களை தொடர்புகொள்ள விஷயம் மிக சீரியஸ் ஆனது. மறுபடியும் சேவை மையம்,இந்த முறை வேறு நபர் எடுத்தார், விசயத்தை மறுபடியும் சொல்லி புரிய வைத்து உதவி கேட்க அவர் இங்க அந்த வசதி ஏதும் இல்லை, நீங்கள் எழுத்து பூர்வ புகார் குடுக்க வேண்டும் என்றார்,சரி நீங்கள் நாங்கள் அழைத்து சொன்னதற்கு ஆதாரமாக பதிவு எண்குடுங்க என்றால் அதற்கும் வழி இல்லை என்றார். பின்னர் அவரே ஒரு விஷயம் சொல்லி எங்களை ஓரளவிற்கு மகிழ்ச்சிபடுத்தினார். அது நீங்கள் பேசியது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகையால் பயப்பட வேண்டாம் ஏதும் பிரச்சனை ஆகும் பட்சத்தில் இது உதவும் என்று கூறினார்.

அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நண்பர் ஒருவரின் உறவினர் ஒருத்தர் காவல் அதிகாரி, அவரிடம் உதவி கேட்டோம். அவரும் எண் தந்தை நம்பர்க்கு அழைக்கவே அவரிடமும் ஏகதாளம் பேசி உள்ளான் அலைபேசியை வைத்திருந்தவன். பின்னர் அவரே ஒரு யோசனை சொன்னார், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் குடுத்து நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள், திங்கள் கிழமை அலுவலகம் திறந்தவுடன் அவன் எங்குள்ளான் என்று கண்டு பிடித்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அதன் படியே செய்தோம்.

திங்கட் கிழமை, புகார் குடுத்து ஆளை தேடினால் அதற்க்கு நிறைய நேரம் ஆகும் என்று செய்தி... சரி மீதம் உள்ள தொகை எவ்வளவு என்று பார்த்தால் 1200 ரூபாய். அதாவது மிஞ்சட்டும் என்று தொடர்பை துண்டித்து வேறு சிம் வாங்கினோம். இதற்க்கு இடையில் பிஎஸ்என்எல் இணைய சேவை மூலம் புகார் குடுக்கலாம் என்று முயற்சித்து பார்த்தேன், அதை எழுதினால் இன்னும் ஒரு பதிவுவரும்.

இவர்கள் சேவை இப்படி இருக்க இவர்கள் நாங்கள் முதல் இடத்தில் இருந்தூம் இப்போ ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று புலம்புகிறார்கள் .

ஏங்க நான் கேட்கறேன், இந்த நான்கு நாட்களில் இதே அலைபேசி வேறு எதாவது தேசவிரோத, சமூகவிரோத கூட்டத்திடம் சிக்கி இருந்து அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது??

அலைபேசி இணைப்பு குடுப்பதில் அக்கறை காட்டும் இவர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும். சமீபத்தில் வேறு ஒரு பிரச்சனைக்காக இணையத்தில் குடுத்த சேவை மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் LIC ஆபிஸ் என்று தொடர்பை துண்டித்தனர். ~!!! ஒண்ணுமே புரியல.

நண்பர்களே நீகள் பிஎஸ்என்எல் அலைபேசி வைத்திருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

வகுப்பில் நன்றாக படிக்க கூடிய பையனில் அவனும் ஒருவன், ஏனோ தெரியவில்லை அவனில் ஒரு இனம்புரியா சோகம் இருந்தாலும் அந்த சோகத்தை மறக்கடிக்க செய்வது அவன் வகுப்பு தோழர்கள் மட்டுமே. வகுப்பறைகள் மூன்றாவது விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள இடத்தில் மாற்றப்பட்டது. அவனுக்கும் அந்த மாற்றம் தேவைப்பட்டது. இந்த மாற்றம் அவனில்லும் எதோ ஒரு மாற்றத்தை தூண்டிவிட்டது.

வகுப்பில் ஒரு நாள், மாணவர் அனைவரும் விளையாட சென்றுவிட்டு வந்திருந்தனர், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் வந்து அவனுடைய ஒரு புத்தகத்தை எடுத்தான், அட்டை கிழிந்து இருந்தது, அந்த அட்டை நேற்றுத்தான் போடப்பட்டது. எப்படி கிழிந்தது என்று தெரியவில்லை, அவன் அழுதுகொண்டே நம்ம ஹீரோ விடம் வந்தான், ஏனென்றால் வகுப்பில் அப்போது வேறு யாரும் இல்லை, அவர்கள் உள்ளே வரும்போதுதான் மற்றொரு மாணவன் வெளியே சென்றான்.

அந்த மற்றொருவன் தான் இப்போது வில்லன், ஏனென்றால் அவனுக்கு அப்போதே ஒரு வன்முறை எண்ணம் இயற்கையாக அமைந்து இருந்தது, சரியாக படிக்க மாட்டான், அடிக்கடி டீச்சரிடம் அடி வாங்குவன் இது போதாதா அவனுக்கு ரவுடி பட்டம்கட்ட??

அட்டை கிழிந்த மாணவனுக்கு ரவுடி மீது சந்தேகம், இப்போது நம்ம ஹீரோ உதவிக்கு வருகிறார், "டேய் நான் பார்தேண்ட அவன்தான் உன் அட்டையை கிழித்தது",

"எப்படா பார்த்த?" இது அட்டை கிழிந்த மாணவன், நம்ம விளையாட போனப்ப நான்தான் கடசியா வந்தேன்ல அப்ப அவன் உன் பைய எடுத்து பாத்துகிட்டு இருந்தான், நான் என்னனு எட்டி பார்த்தா உன் நோட்டு அட்டைய கிழிச்சு உள்ள வச்சான். மனதினுள் இதை அவன் நம்பிவிட்டால் நமது நெருங்கிய நண்பன் ஆகிவிடுவான் என்ற திட்டத்துடன் தன் வாழ்வின் முதல் பொய்யை சொல்ல துவங்கினான்.

அட்டை கிழிந்த மாணவன் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்தவன் இப்போது அதில் வேறு பெட்ரோல் ஊற்றிவிட நேராக டீச்சரிடம் கொண்டு சென்றான். நம்ம ஹீரோ சாட்சி குடுக்க, குற்றவாளி விசாரிக்கப்பட்டான். "டீச்சர் நான் ஏதும் பண்ல, எனக்கு ஏதும் தெரியாது" என்றான். அப்ப எதுக்கு கடசியா வெளிய போன, என்ன பண்ணின வகுப்புக்கு உள்ள? இது டீச்சர். "இல்ல டீச்சர் நான் ஏதும் விளையாட போகல, என்ன யாரும் சேத்துக்கல அதான் வகுப்பில் உட்க்கார்ந்து இருந்தேன்" இது அவன்.

இப்படி பண்ணின எவன் விளையாட சேத்துப்பான்?? டேய் உண்மைய சொல்லு யார் இது பண்ணினா? இவனா நல்ல தெரியுமா ??? டீச்சர் கேள்வி கேட்க்க, நம்ம ஹீரோ இவன்தான் டீச்சர் நான் பாத்தேன் இவன் அட்டைய கிழிக்கும்போது. சொல்லும்போது நம்ம ஹீரோ மனதில் அயிரம்கேள்விகள், தவறு என்று தெரிந்து செய்யும் ஓவொன்றும் அப்படி வலிக்கும் என்று புரிந்து கொண்டான். அப்போது குற்றம் சாட்டப்பட்டவன் பார்த்த பார்வையின் அர்த்தம் இருக்கே,

டேய் நீயா இப்படி? என்று புடனியில் அடித்த மாதிரி இருந்தது நேற்று எனக்கு. ஏன் என்று தெரியாமல் நானாக தலை குனிந்தபடியே சமீபத்தில் நடந்த அலுவலக அரசியலில் என்னை குற்றவாளி ஆக்கிய நிகழ்வை நினைத்தேன். chaos தியரி புரிந்த மாதிரி இருந்தது....

Thursday, June 19, 2008

பொறியியல் முதல் வருடம் வகுப்பின் முதல் நாள்

ஆடி அசஞ்சு எல்லோருடன் சேந்து வகுப்புக்கு வந்து சேந்தேன், நண்பன் ஹரி வேறு வகுப்பு, அப்போது தான் கவனித்தேன், வழக்கமாக முதல் வருடம் அனைத்து மாணவர்களையும் கலந்து வகுப்பு பிரிப்பார்கள் பின்னர் இரணம் வருடம் மட்டுமே துறைவாரியாக மாணவர் பிரிந்து செல்வர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இங்கு முதல் வருடத்திலேயே துறை வாரியாக பிரித்து போட்டிருந்தனர், முதல் நாள் முதல் வேளையிலேயே ஏமாற்றம், பின்னே இருக்காதா இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் அந்த ஒரு வருடத்தில் மட்டுமே மாணவிகளுடன் சேர்ந்து படிக்க முடியும், அந்த ஆவலில் இங்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சியது, ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் மட்டும் சிவில் மாணவர்களுடன் சேர்த்து வகுப்பு. சிவிலில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகம் எங்கள் வருடத்தில்.

அனைவரும் ஏளனமாக பார்த்தனர், இருந்தாலும் நாங்க மெக்கானிக்கல் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு சீன் போட்டு ஓட்டினோம், எங்கள் வகுப்பிலும் 3 பெண்கள் இருந்தனர், அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பினால் எங்கள் கெத்து என்ன ஆவது??? (பின்னால ரொம்ப கடல போடராண்டா இவன் என்று பசங்க சொல்ற அளவுக்கு நம்ம வாழ்க்க மாறிப்போச்சு )

சரி அத விடுங்க முதல் நாள் வகுப்பு முடிஞ்சு போச்சு, எல்லோரும் விடுதிக்கு கிளம்பனும், மாலை சிக்கிரமகவே கிளம்பிட்டதால அப்படியே நடந்து போய்க்கிட்டு இருந்தோம், முன்னாள் போன ஒருவன் "டேய் சீனியர்ஸ் உட்கார்ந்து இருக்காங்கடா சத்தம் போடாம அமைதியா வாங்கடா எஸ்கேப் ஆகிடலாம்" என்று சொல்ல எல்லோரும் அமைதியாய் நடந்தோம். திடீரென்று ஒரு சத்தம் " டேய் மணி " எல்லோரும் திரும்பி கத்தியது யாரென்று பார்க்க பார்க்க, அது அடியேன் தான்.

இருந்த சீனியர்சில் ஒருவன் என் நண்பன், கூடவே 14 வருடம் ஒன்றாக படித்து, 12thல கொஞ்சம் என்னைவிட நல்லா படிச்சு உள்ள வந்துட்டான் , நான் ஒரு வருடம் என்னை இம்ப்ருவ் பண்ணிக்கிட்டு வந்திருந்தேன், என்ன இருந்தாலும் நண்பன மறக்க முடியுமா? அதான் சௌன்ட்.... அப்படியே அத்தன பேரையும் அள்ளிக்கிட்டு போனாங்க, அதுல ஒருத்தன் என்னை மிரட்ட, அப்புறம் மணிதான் நம்மள காப்பாத்தினான். நம்மள அப்படியே உக்கார வச்சிட்டு கூட வந்த பசங்கள பிடிச்சானுக, அப்ப எல்லோரும் என்ன பார்த்த பார்வை இருக்கே.....
கருங்காலி எட்டப்பன் மாதிரி உட்க்கார்ந்து முறுக்கு திங்கறான் பாரு என்று சொல்லாமல் சொல்லியது.