எனது பள்ளி ஆசிரியர்கள்
எவருமே அவரது பள்ளி வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த ஆசிரியர்களை மறந்து இருக்க முடியாது. என்னை எந்த விதத்திலாவது கவர்ந்த அல்லது என்னால் மறக்க முடியாத, எனக்கு நினைவில் உள்ள ஆசிரியர்களை பற்றி எழுதப்போகிறேன்.(ஆசிரியர் மற்றும் ஆசிரியை அனைவரும் தான்)
கீழ் வகுப்பில் இருந்து வருவோம்,
எனக்கு எல்.கே.ஜி வகுப்பு எடுத்தவரெல்லாம் நியாபகம் இல்லை அனால் யு.கே.ஜி வகுப்பு ஆசிரியை முகம் மட்டும் இன்னும் நியாபகம் இருக்கிறது. கலையான அந்த முகம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, கடைசி வரை அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன், இப்போது அவர் அந்த பள்ளியில் இல்லை. எனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தது, மதியம் தூங்க வைத்தது எல்லாம் இன்னும் நியாபகம் வருகின்றது. எனது கல்வி வாழ்வை துவக்க உறுதுணையாய் அமைந்த அந்த ஆசிரியைக்கு நன்றி.
அடுத்து எனது இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஆசிரியை, கற்பகம் டீச்சர், அப்போதெல்லாம் இவரிடம் நிறைய பயம், அதிகம் அடிக்க மாட்டார்கள் அனால் முகத்தில் ஒருவித கோவம் மட்டும் எப்போதும் இருக்கும். பின்னர் என்னை வகுப்புத்தலைவன் ஆகியதில் இருந்து என்னிடம் சின்ன பாசம். ஆனால் இவங்கதான் என்னை ஒரு பெரிய மாற்றத்துக்கு "அடி" போட்டு தயார் பண்ணினாங்க. இடது கை பழக்கம் உள்ள என்னை அடித்து அடித்து வலதுகையில் எழுத வைத்த உலகப்பெருமை இவங்களையே சேரும். அன்றில் இருந்து இன்று வரை இவங்கள நெனச்சாலே ஒரு வித கோவம் எனக்குள் வருகின்றது. அனாலும் ஒரு நல்ல காரியம்,நான் இடது கையால் எழுதுவதை விடவில்லை.
ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நான் அன்றில் இருந்து இன்று வரை என்னால் மறக்க முடியாத சில ஆசிரியரை சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.ஆறாம் வகுப்பு படிக்க போகும் முதல் நாளில் எனது தந்தை எனது அண்ணாவின் துணையுடன் என்னை ஆங்கில வழி கல்விக்கு மாற்ற திட்டம் போட்டார், அப்போது நான் படித்த அதே பள்ளியில் இருந்த ஆங்கில வழித்திட்டத்தில் ( மெட்ரிகுலேசன் பள்ளி ) என்னை சேர்க்க திட்டமிட்டு படிவம் எல்லாம் நிரப்பியாயிற்று, திடீரென்று என்னைப்பார்த்த அந்த பள்ளி முதல்வர் என்னப்பா உன்னால ஜெய்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், நீ நம்புறியா? சேந்துகிரியா இல்லை வேணாமா என்றார். நான் வேணாம் என்று சொல்லியவுடன் பையனுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தமிழ் வழியிலே படிக்கட்டும் அடுத்த வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினார், அதுமட்டுமில்லாது எனது வகுப்பு ஆங்கில ஆசிரியரை தனியாகச்சந்தித்து என்னைப்பற்றி சொல்லி தனி கவனம் எடுத்துக்கொள்ள கூறியுள்ளார். எனவே இவர்க்கும் என்னிடத்தில் தனி மரியாதை எப்போதும் உண்டு.
எனது ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் வைத்தியலிங்கம், மிக அமைதியான ஆசிரியர், அப்போது அவர்க்கு சின்ன வயசுதான் இருக்கும், வகுப்பில் என்னை வகுப்புத்தலைவன் ஆக்கியது மட்டுமில்லாமல், தினமும் வகுப்பில் ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வது, ஆங்கிலத்தை நுணுக்கமாக சொல்லித்தருவது என்று என்னை ஒரு வழியாக தயார்ப்படுத்தினார் (அப்படியும் நான் கத்துகல என்பது வேறு விஷயம்).இருந்தாலும் ஆங்கிலத்தின் மேலுள்ள ஒரு பயம் போயிற்று. இப்பொது ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர்க்கு எனது நன்றிகள்.
அடுத்து அறிவியல் ஆசிரியர் பாபு அவர்கள், இவரும் ஆங்கில ஆசிரியரும் நண்பர்கள், குணத்தில் நேர் எதிர், கோவத்தில் எனக்கு அண்ணன். அடிபிரிச்சுடுவார், என்மீது கொஞ்சம் அக்கறை உண்டு இவர்க்கு. ஆனாலும் வகுப்புத்தலைவன், நன்றாக படிக்கிறேன் என்ற அகந்தையில் நான் ஏதும் சில சின்ன விஷயம் பண்ணினாலும் அடி பின்னி எடுத்துவிடுவார். இவர் கடைசிவரை என்னிடம் கற்றுக்கொள்ள சொல்லியது "கோவப்படு, நான் என்ற அகந்தையை எப்போதும் விட்டுவிடு, உனக்கு மட்டும்தான் வெற்றி நிரந்தரம் என்பதை மறந்துவிடு" இதுதான். இவரின் பண்புகள் எனக்குள் வந்ததை சமீபத்தில்தான் கண்டுகொண்டேன் (இன்னும் இந்த அகந்தை மேட்டர் நம்மகிட்ட வரல, அப்பப்ப தலை தூக்கும் அப்போதெல்லாம் இவர் நியாபகம் வந்து எட்டிப்பார்க்கும்)
எட்டாவது வரை இவர்கள் இரண்டு பேர்மட்டுமே எனக்கு நினைவில் நின்ற ஆசிரியர், ஒன்பதாவது போகும்போது என்னை ஒரு வழியாக மனதளவில் ஆங்கில வழிக்கல்விக்கு தயார் படுத்திக்கொண்டேன், அதே முதல்வர் இப்போது என்னப்பா தயாரா என்று சொல்லி சிரிக்கிறார். என்னை வகுப்பறையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்த ஆசிரியையிடன் சொல்லிவிட்டுச்சென்றார். அந்த ஆசிரியை பெயரும் கற்பகம், இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் ஆசிரியை, இவர்க்கும் என்னை பிடிக்க ரொம்ப சில நாட்களே ஆகியது. எனக்கு மிக நல்ல அறிவுரைகளை சொல்லி, பயத்தை போக்கி, என்னை மற்ற மாணவர்களுடன் சகஜமாக பழக வைத்ததின் பெருமை இவரையே சேரும். இன்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரைப்பற்றி பேசுவது உண்டு.
அடுத்து கணித ஆசிரியர் விஜயகுமார், நானும் பள்ளிக்கு புதிது இவரும் புதிது, அடி பின்னியெடுக்கும் ஆசிரியர்க்கு பதிலாக இவர்தான் உங்கள் கணித ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை இவருடன் தொடர்பு இருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் தனிப்பாடதிலிருந்து வெளியேறினேன். இவரைப்பற்றி நிறைய எழுத வேண்டியதால் தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.
அடுத்து புது முதல்வர், இவரும் விஜயக்குமாரின் பதிவில் வந்துவிடுவார், இவர்க்கும் மிகப்பெரிய பங்கு இல்லாவிடிலும் எனது எதிர்காலத்தை மாற்றிய ஆசிரியரில் மிக முக்கிய இடம் உண்டு.
அப்புறம் சமூக அறிவியல் ஆசிரியை சுலோக்சனா, தாவரவியல் ஆசிரியை அங்கையர்க்கன்னி இவங்கல்லாம் அங்கங்க வந்துட்டு போனாங்க. அங்கையர்க்கன்னி நான் புத்தகத்தைப்பார்த்து பரீட்சை எழுதும்போது கண்டுபிடித்து அடித்து,ஏண்டா என்கிட்டயே இப்படி மாட்டிகிட்டா நீ பிட் அடிக்கவே லாயக்கு இல்லை என்று சொல்லி என்னை நன்றாக வித விதமாக பிட் அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற தூண்டிவிட்டவர்.(இத இப்ப பார்த்தாங்கன்னா அவ்வளவுதான் )
பதினொன்றாம் வகுப்பு, பள்ளி மாறியாயிற்று.கோவிந்தராஜன் அய்யா தமிழாசிரியர், என்னால் மறக்க முடியாத ஆசிரியர்... தமிழை படிக்காத நீ, போதுமான அளவுக்கு ஏற்கனவீ படிச்சுட்ட அத தக்கவைத்துக்கொண்டாலே போதும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க தேவையானதை மட்டும் இப்போது செய் என்று அறிவுரைகூறியவர்.
பசுபதி -இயற்பியல் ஆசிரியர், பொதுவாக மற்றவரைப்போல இவரை எனக்கு கொஞ்சம் புடிக்காது ஆனால் இவரின்றி நான் இயற்பியலில் 185 மதிபெண்கள் எடுத்து இருக்க முடியாது, எனது தந்தையின் நண்பர், அதற்காக என்மீது தனி அக்கரை செலுத்தாமல் எல்லோரிடமும் அக்கறை செலுத்துவார். அவர் சொல்லிகொடுத்த அந்த cyclotran பாடம் இன்றும் என் நினைவில் நிற்கின்றது. இவர் கையெழுத்தை நான் செய்முறை அறிவியல் ஆய்வு புத்தகத்தில் போட ஆரம்பித்து வகுப்பில் பாதி பேர் அதை பின்பற்றினர்.
இதற்கு பிறகு எனக்கு மனதில் நிற்கும் ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை... இன்னும் சிலர் இருந்து இருக்கலாம். ஆனால் எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு நேரமிருந்தால் அவரது ஆசிரியர் பற்றி எழுதலாம் இன்னும் விரிவாக சுவையாக. (முக்கியமாக கோவிந்தராஜ் அய்யாவைப்பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்)
No comments:
Post a Comment