Monday, July 28, 2008

நீ

நான் விலக்கப்படேனா? இத்தகவலை நண்பர்களுக்கு தெரிவித்த உன்னை கண்டிப்பாக வாழ்த்தவேண்டும் அனால் எல்லா புகழுக்கும் நீயே பொறுப்பு என்ற ஒரு கொள்கை உன்னிடம் இருக்கும்போது என் வாழ்த்துக்கள் உனக்கு எப்போதும் தேவை இல்லாதவை. உன்னைப்பற்றி நீயே மற்றவர்களுக்கு புரியவைத்த நிகழ்ச்சி என்னை எதிலும் பாதிக்கவில்லை. மேலும் என்னதான் சுற்றமும் சூழமும் மகிழ்ச்சியாய் இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி குடுக்கக்கூடிய எந்தவித மாற்றமும் ஏற்பட வண்ணம் பார்த்துக்கொண்ட நீ கவனத்தை சிறிது மற்ற வழிகளிலும் காட்டியிருக்கலாம்.

எந்த பாதிப்பும் மனதிற்கு ஏற்றா நான் சில காலங்களால் மனத்தால் மட்டுமே பாதிப்படைந்த குற்றத்திற்கு காரணம் நீ. உன்னை போற்றுவர்கள் இருக்கும்வரை எந்தவொரு சுடும் உண்மையும் உன்னை நெருங்காது. நெருங்கும் உண்மைகளும் உன்னை பொறாமை என்ற பெயரில் வந்து சேரும். என்னாலான உதவிகளை செய்யாதபோது கூட அதற்கான காரணத்தை சுயநலத்தின் பாதிப்பில் மாற்றிகொண்டாய் அதற்க்கு என்றுமே நான் வருத்தப்பட போவது இல்லை.

உலகம் தவறு செய்தவரைக்கூட மன்னிக்கும் ஆனால் துரோகம் செய்தவரை மன்னித்தாலும் இகழ்ந்துவிடும், நீ தவறுகள் பல செய்தாலும் உன்னை மன்னிக்கதவாறு துரோகமும் செய்துள்ளாய். எனக்கு மட்டும் அவ்வாறு செய்திருந்தால் மற்றவர்கள் மன்னிக்கலாம், மற்றவர் அறியாமலே நீ அவர்களுக்கும் துரோகம் செய்திருப்பதால் உன்னை யாரும் மன்னிக்க போவது இல்லை. ரகசியங்கள் காக்கப்படுவதால் உனக்கு வழங்கப்படும் மன்னிப்புகள் வெற்றியடையும் என்று நம்பிவிடாதே. என்றோ ஒருநாள் கண்டிப்பாக எங்கிருந்தோ உண்மைகள் வெளிப்படும் அன்று உன்னை காப்பாற்ற நான் இருக்க மாட்டேன்.

உனக்கு என்னால் முடிந்த ஒன்று நன்றி சொல்வது, தனிமையின் இன்பத்தை அனுபவிக்க காட்டிய உனக்கு நன்றி என்று எவ்வாறு கூறுவது, நீ கற்றுகொடுத்தது தனிமை மட்டுமல்ல, எனக்கென்று உள்ள உலகத்தையும்.

அனுபவம் மட்டுமே பக்குவத்தை கொடுக்கும், எனக்கு அனுபவத்தை கொடுத்தாய் ஆனால் நீ பக்குவத்தை மட்டும் கற்றுக்கொள்ள மறுத்துவிட்டாய், பாதிப்படைந்த பயனாளிகள் வரிசையில் நீயும்.

இன்று முதல் பதிவு எழுத நேரமிருக்காது என்று நினைத்தேன் அனால் அதற்க்கு சிறிது காலம் நேரம் நீடித்து கொடுத்த உன்னை என்னவென்று சொல்ல, நீ எனக்காக செய்யும் ஒவ்வொரு தடை முயற்சியும் எனக்கான முன்னேற்றம் என்று எடுத்துக்கொள்வதா?இல்லை உனக்காக நீயா போட்டுக்கொண்ட கடினப்பாதை என்று சொல்வதா? எதுவாக இருந்தாலும் சரி இனி எனக்குண்டான பாதையில் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது

Friday, July 25, 2008

விடுமுறை

நீண்ட நாட்களாக காத்திருந்த துறை மாறுதல் திங்கட்கிழமை முதல் கிடைப்பதால் இனி வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் மாறப்போகும் துறையில் முழு முயற்சியுடன் ஆணி புடுங்க வேண்டும் என்று நினைப்பதால் சிறிது காலம் பதிவுலகப்பக்கம் வர நேரம் கிடைக்காது. வீட்டில் இணைய இணைப்பு வாங்கும் வரை பதிவுலகத்தில் இருந்து விலகி இருக்கவேண்டி வரும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் பதிவுலகில் இருந்து தற்காலிக விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்.

Thursday, July 24, 2008

வாகனம் ஓட்டுவது எப்படி?

வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்த பதிவு.

இந்திய வாகன ஓட்டுனர்களுக்கு சில அடிப்படை விதிகள் எப்பவுமே தெரிந்திருக்க வாய்ப்பு மிக கம்மி, இத்தனை ஆண்டுகளில் அரசும் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வழியில் அடிப்படை சாலை விதிகளை அளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கும்போது இந்த பதிவை பார்த்தேன். இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு மிக உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.இதில் அடிப்படை சாலை விதிகளை பின்பற்றுதல், மேலும் எப்படி வாகனத்தை எடுக்க வேண்டும், எப்படி நிறுத்த வேண்டும் சமின்கைகள் இடைவெளி போன்றவற்றை தெளிவாக கூறியுள்ளனர்.

இந்த வலைபூவிற்கு (http://driving-india.blogspot.com) சென்று பாருங்கள்



நான் என்ன செய்ய?? -முடிவு

நான் என்ன செய்ய என்று ஒரு தலைப்பில் கடந்த வாரம் ஒரு முடிவெடுக்க இந்த பதிவை எழுதியிருந்தேன். முடிவு எடுத்துவிட்டேன்

முதலில் பேசி முன் பணம் செலுத்திய காரை மட்டுமே வாங்கினேன், சில ஆயிரங்கள் நட்டம் என்றாலும் மன நிறைவு. என்னவோ தெரியவில்லை இது போன்ற விசயங்களில் இன்னும் எனது மனம் இப்படியே இருக்கின்றது. முறைப்படி வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று உறுதி செய்ததால் பாத்து நாட்கள் ஆகியும் எனக்காக வேறு ஒருவரிடமும் விற்காமல் விலை பேசாமல் வண்டியை வைத்திருந்த அவர்கள் நேர்மையிடம் தோற்றுபோக விரும்பவில்லை.

மேலும் பலனாக வண்டியின் பெயர் மாற்றம், சராசரி பராமரிப்பு, காப்பீடு அனைத்தையும் அவர்களே செய்து கொடுப்பதாக உறுதி கொடுத்து உள்ளனர். இவை அனைத்தையும் நானே செய்தால் இனும் சில ஆயிரங்கள் செலவாகும்.
மன நிறைவுடன் செய்த உறுதியை நிறைவேற்றிவிட்டேன்.

Tuesday, July 22, 2008

அவன்

வஞ்சித்தலும் வஞ்சிக்கப்படுதலும் என் வாழ்வின் அங்கமாகிவிட்டது சமீபகாலங்களில். மனசோர்வு அதிகமாகி போன இந்நாளில் என்ன செய்வதென்றே தெரியாமல் தனிமையில் இருக்க பயந்து என்னை நானே வஞ்சித்துக்கொண்டேன். ஆம் இப்போதெல்லாம் தனிமை பயமாய் இருக்கிறது, அதற்கு காரணமும் உண்டு.

தன்னம்பிக்கை இழந்து, என் நம்பிக்கையும் குறைந்து சோர்ந்து போய் உள்ளேன், மனதில் எங்கோ ஒரு சிறிய இடத்தில் மீண்டு வருவேன் என்ற தீ எரிந்து கொண்டு உள்ளது, அதை நம்பியே எனது தனிமையை களிக்கின்றேன்.
எதற்கும் யாருக்கும் தவறிழைக்க கூடாதென்ற நினைப்புடன் இருப்பவனை எவரும் எளிதாக பலவீனப்படுத்திவிடலாம். உன்னை பதிலுக்கு சீண்டுவதை கூட கேவலமாக நினைக்கும் என்னிடம் விளையாண்டு கொண்டு உள்ளாய், உன்னிடம் சரி நிகராக சண்டையிட உனக்கு தகுதி இல்லை. அதற்காக பலவீனப்பட்டு உன்னிடமிருந்து ஓடி விடுவேன் என்று மட்டும் நினைக்காதே, மீண்டு வருவேன், இன்னிடத்தில் இருந்தே உனக்கு புரிய வைப்பேன், என் சக்தி என்னவென்று எனக்கு தெரியாத நிலைமையை ஏற்படுத்திய உனக்கு நன்றி.

எத்தகைய நினைப்பு உனக்கு என்மீது, என் வரலாறு எனகூட்டும் நம்பிக்கையில் சொல்கிறேன், தயவு செய்து என்னுடைய எதிர்ப்புகுரிய நபர்களின் பட்டியலில் வந்துவிடாதே, இழப்பு உனக்குத்தான் அதிகமாய் இருக்கும் வரும் நாட்களில்.நீ இந்த பதிவை படிக்கபோவது இல்லை என்று எனக்கு தெரியும் அனால் அடிக்கடி நான் படிப்பேன், இது உன்னை பலவீனப்படுத்த இல்லை என்னைப்பலப்படுத்த. தற்போதைய இடம் உனக்கு என்னை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தி ஒதுக்கி, புறக்கணித்து கொடுமைப்படுத்த வேண்டும் என்பதே, அனால் எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை உண்டு, எனது தனிமை என்னை எப்போதும் தாலாட்டும் என்பது உனக்கு தெரியாது.

நான் தற்ப்போது பலவீனப்பட்டு உள்ளேன் என்பது உண்மை, அனால் இது தற்காலிகமானது ----------. உன்னை சொல்லி அழைக்க உறவுகளே இல்லை, எந்த பெயருக்கும் உனக்கு தகுதி இல்லாமல் போய்விட்டாயே என்று வருத்தப்படுகிறேன். எனது எதிரிகளுக்கு கூட எதிரிகள் என்ற உறவு உண்டு ஆனால் உனக்கு????

தெரிகின்றது நாட்கள் நெருங்கிக்கொண்டு உள்ளன என்று எனக்கா? உனக்கா?பொறுத்திருந்த பார்ப்போம். உன் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிந்ததால்தானே இன்னும் என்னைபலவீனப்படுத்த முயல்கிறாய், உனக்கு தெரியாது உனக்கிறுப்பது உன் சுற்றத்தில் ஒரு போலி மரியாதையை என்று. என்னால் மட்டுமே உன் ரகசியங்கள் காக்கப்படும் ஆனால் மற்றவரால்??

மேலும் எழுத மனது துடிக்கிறது ஆனால் உன்னை மையமாக வைத்து எழுத என் புத்தி மறுக்கிறது. மன்னிக்ககூட தகுதி இல்லாத உனக்கு இபோதைக்கு இப்பதிவு கூட தகுதி இல்லை.

Thursday, July 17, 2008

நான் என்ன செய்ய??

முன்பே சொன்ன படி நான் கார் வாங்கி விட்டேன், விட்டேன் என்றால் முன் பணம் செலுத்தி விட்டேன், இன்னும் வங்கி கடன் வரத்தால் இரண்டு நாளில் வண்டியை எடுக்க போகிறேன். அவர்களிடம் ஒரு தொகைக்கு பேசி முன்பணம் செலுத்தி உள்ளேன்.

நேற்று எனது மற்றொரு நண்பர் நான் வாங்கிய அதே மாடல் வண்டி வியாளிக்கு வந்துள்ளதாகவும் விலை கணிசமான அளவு குறைவாகவும் இருப்பதாக கூறி எனை அழைத்தார். அவர் அழைப்பை மறுக்க முடியாமல் நானும் சென்று பர்தீன், ஊடிப்பர்ததில் வண்டி நன்றாக உள்ளது. நான் ஏற்க்கனவே முடித்த வண்டிக்கும் இந்த வண்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனால் இந்த வண்டி கணிசமான அளவு குறைவான விலைக்கு கிடைக்கின்றது.

இப்போது நான் என்ன செய்வது? இரண்டுமே பழைய கார் , ஒரே வருடம், ஒரே அளவு ஓடியுள்ளன. வித்தியாசம் எதுவுமில்லை விலையை தவிர.

பழைய காருக்கு முன்பணம் செய்து உறுதி செய்ததால் நாணயமாக அதையே எடுத்துக்கொள்வதா?

இல்லை சில ஆயிரங்களை சேமிக்க இந்த இரண்டாவது காரை எடுத்துக்கொள்வதா?

தொழில் நேர்மை என்னை முதல் முடிவிர்ற்கு செல்ல தூண்டுகிறது இருந்தாலும் சேமிப்பு இரண்டாவதுமுடிவுக்கு இழுக்கிறது.

நண்பர்களே முடிந்தால் முடிவெடுக்க உதவி செய்யுங்கள்

வகுப்பறையில் ஒருநாள் - தேர்வு

ஒன்பதாவது வகுப்பு, மாதாந்திர தேர்வு- சமூக அறிவியல். நமக்கு தான் இந்த பாடம் ரொம்ப புடித்த பாடமே என்று ரொம்பநல்லா படிச்சுட்டு போய் எழுத உட்க்கார்ந்தேன். ஆசிரியை எல்லோரையும் உட்க்காரவைத்து கேள்வித்தாளை விநியோகிக்க தொடங்கினார். கேள்வித்தாள் தீந்து போகவே, பாதியில் வெளியே சென்று பக்கத்து வகுப்பில் வாங்கி வந்து விநியோகித்தார்.

எனக்கும் ஒரு கேள்வித்தாள் வந்து சேர்ந்தது, நானும் பயபக்தியோடு வாங்கிவிட்டு , பரீட்சை பேப்பரில் கோடு போட்டு , முருகன் துணை எழுதி விட்டு கேள்வித்தாளை எடுத்து படித்தேன். அப்பவே நினைத்தேன் கேள்விகள் மிக கடினம் என்று.

வழக்கமாக நான் கேள்வித்தாளை ஒரு முறை புரட்டி பார்த்து சில கேள்விகளுக்கு நேரடி விடை மனப்பாடமாக இருக்கும், சில கேள்விகளுக்கு ஓரளவிற்கு தெரியும் மீதியை எப்படியோ எழுதி ஒப்பேற்றிவிடலாம், சில கேள்விகளுக்கு சுத்தமாக தெரியாது எதாவது கதை எழுதி ஒப்பேற்றவேண்டும் என்று பிரித்து வைத்து இருப்பேன்.

இந்த கேள்வித்தாள் மிக கடின வகை, எந்த கோடிட்ட இடத்தை நிரப்பு கேள்விகளுக்கும் சரியான விடை தெரியவில்லை, இரண்டு மதிப்பெண் கேள்விகள் ஏதோ தெரிந்தது போல இருந்தது, ஐந்து மதிப்பெண் கேள்விகள் சில பாதி தெரிந்தது, மீதி ஒன்றுமே தெரியாது. பத்து மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் மிக கடினம். சரி வழக்கம் போல தெரிந்ததா பாத்து எழுதிவிட்டு வருவோம் என்று எழுத தேவையான கேள்விகளை எல்லாம் குறித்து எழுத தொடங்கி விட்டு ஒண்ணுமே புரியாமல் உட்க்கார்ந்து இருந்தேன்.

எதோ நியாபகத்தில் கேள்வித்தாளை மறுபடியும் பார்த்தேன் "பகிர்" என்று இருந்தது. ஆமாம் அது பத்தாம் வகுப்பு கேள்வித்தாள். வசமாக மாடிக்கொண்டோம் என்று நினைத்து மணியை பார்த்தால் கேள்வித்தாள் குடுத்து அரை மணி ஆகி இருந்தது.பின்னர் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்தேன், கேள்வித்தாள் மாறிவிட்டது என்று சொன்னால் அரைமணி நேரமா என்ன பண்ணின என்று கேட்டு அசிங்கமா போய்விடும். இல்லை என்றால் பத்தாவது தேர்வுக்கு ஒன்பதாவது பையன் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.நீண்ட நேரம் யோசித்து என்ன செய்ய என்று தெரியவில்லை, ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

பின்னர் தெரிந்ததை எழுதுவது கடைசியாக பேப்பரை குடுக்காமல் வந்துவிட முயற்சி செய்யலாம் என்று முடிவு, இல்லை என்றால் குடுத்து கடைசியில் திருத்தி வரும்போது அடி வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். என் நல்ல நேரம் கடைசியில் பேப்பர் வாங்கும்போது அது வரை இருந்த ஆசிரியை எதோ வேலையை வெளியே போய்விட புதிதாய் வந்தவர் அனைவரின் விடைத்தாளையும் ஒன்றாக வங்கி குடுக்குமாறு கூறிவிட்டார், கஷ்ட்டப்பட்டு பேப்பர் குடுக்காமல் வந்துவிட்டேன்.

பேப்பர் திருத்தி வரும்போது என் பேப்பர் மட்டும் காணமல் போய்விட அந்த ஆசிரியை வேறு வழி இல்லாமல் அந்த வகுப்பின் முதல் மதிப்பெண்ணை எனக்கும் வழங்கி விட்டார். அவர் வழங்கிய 91 மதிப்பெண்தான் நான் சமூக அறிவியலில் இதுவரை எடுத்த அதிக மதிப்பெண்

Wednesday, July 16, 2008

குழப்பம்

கடிவாளம் இல்லாத குதிரை போல கண்டபடி ஓடுகிறது மனம், எல்லாம் நல்ல படியாக நடக்கும் போது குதூகலிக்கும் மனம் சிறிது தாமதத்திற்கும் கோபப்படுவது ஏனோ? சிறு வயதிலிருந்தே இந்த தாமதம் என்ற ஒன்று மட்டும் எப்போதும் என்னை கோபப்பட செய்கின்றது. முன்கோபி என்ற பெயரை எனக்கு சூட்ட இந்த தாமதம் ஒரு காரணி.

வாக்குறுதியை மீறும்போது தாமதம் ஏற்ப்படுகிறது, அதனால் ஒருவர் அவரது பணியில் அலட்சியமாக இருக்கிறார் இதை எதிர்ப்பவன் முன்கோபி கூலாக இருக்க கத்துக்கொள் என்றெல்லாம் எனக்கு அறிவுரை. எவனும் அலட்சியக்காரனுக்கு புத்தி சொல்ல தயாராக இல்லை, எப்படி சொல்வான் அவனும் ஒரு அலட்சியக்காரனாக இருக்கும் பட்சத்தில்.

தெரியவில்லை மகிழ்ச்சி காலங்கள் மறுபடியும் வருமோ இல்லை புயலுக்கு முன் அமைதி என்றபடி புயலடிக்குமோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை செல்கிறது. கூடவே நானும்....

இன்றிரவு என்ன செய்யலாம் என்ற கருத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது வரை இந்த பத்து நிமிடத்தில் ஓடி மறைந்துள்ளது.

பிரச்சனைகளை ஆலோசிக்க துணை தேடினால் அதை அவர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்.

கடந்த வருடங்களை பார்க்கும்போது காலம் என்னுள் ஏற்ப்படுத்திய மாற்றங்கள் திகைப்பை ஏற்ப்படுத்துகின்றன, இன்பத்தை தேடி வாழ்க்கையில் இன்னும் சென்று கொண்டிருக்கும் நான் இதுவரை என்னுள் இருந்த மகிழ்ச்சியை மறந்து விட்டேன் என்று யோசிக்கவே இல்லை.

இப்போது எனக்கு என்ன தேவை???? உண்மை நேர்மை என்று கிடைக்காத பல தேவைப்படுகின்றது.... கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டுள்ளேன்.

பயணம்

சமிபத்தில் இரண்டு முறை அரசுப்பேருந்தில் சென்னையிலிருந்து கரூர் பயணம் செய்தேன். இதில் நான் கவனித்து அறிந்தது. வெள்ளிகிழமைகளில் அனைத்து பேருந்தும் நிரம்பி வழிந்தது.

தனியார் பேருந்துகள் அரசுப்பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்சென்றனர், கேட்பதற்கு யாருமில்லை, கேட்டலும் அவர்கள் மதிப்பதாக இல்லை.

முதல் பயணம், நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துப்பயணம் அதுவும் அரசு விரைவுப்பேருந்து- டிலக்ஸ் பேருந்து. எனக்காக முதல் வரிசை இருக்கை வழக்கம்போல ஒதுக்கப்பட்டு இருந்தது (காரணம் முதல் வரிசையில் கால்களை நன்றாக நீட்டிக்கொள்ளலாம்) பேருந்தில் ஏறியவுடன் நான் அறிந்தது, அரசு பேருந்துக்கு எவ்வளவு விலை உயர்ந்த பேருந்தை குடுத்தாலும் பராமரிக்காமல் மிக விரைவில் மோசமக்கிவிடுவார்கள் என்று.

மிக அழுக்காக இருந்தது பேருந்து, இருக்கைகளும் அப்படியே, அதிசயமாக மின் விசிறிகள் ஓடின. சத்தம் வரவில்லை (ஆச்சரியம்) மொத்தத்தில் நல்ல பேருந்தை சீரழித்து வைத்திருந்தனர். அடுத்து பயணிகள், நடத்துனர் என்னிடம் பேசியபோதே இருவர், பயணசீட்டில் சினிமாக்கு காசு குடுத்தோம் ஏன் படம் போடலை என்று விவாதம் செய்தனர். அவரும் டிவி சரியாக தெரியவில்லை, நிறங்கள் மாறி வருகின்றன, சிறிது நேரத்தில் பாடல் போடப்படும் என்றார். அவர்கள் கேட்பதாய் இல்லை, நடத்துனர் மிக கடுப்பாகி, படமா கேட்கறீங்க, இதோ இருங்க என்ற படியே ஒரு படம் போட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்து முழுவதும் தூங்கியது. போடப்பட்ட படம் "நெஞ்சம் மறப்பதில்லை"

பின்னர் சிறிது நேரத்தில் படத்தை நிறுத்தி விட்டு இனிமயான ராஜா பாடல்கள் போடப்பட்டது. மிக மெல்லிய சத்தத்தில் இனிமையாகவே இருந்தது பயணம். அரசு விரைவுப்பேருந்து என்று பெயர் அனால் நான் பார்த்த வரை பேருந்து விரைவாய் செல்லவில்லை. பின்னால் வந்த அனைத்து பேருந்துகளும் முந்தி சென்றது, ஆனாலும் பயணம் எந்த அதிர்வுகளும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அப்போது நினைத்தேன் இதுவே மற்ற அரசு பேருந்துகளாக (விரைவு பேருந்து தவிர திருச்சி கிளை பேருந்துகள் ) இருந்தால் விரைவாக செல்வார்கள், பேருந்து பராமரிப்பு சிறப்பாக இருக்கும் என்று.

நடுவில் சாப்பிட நிறுத்தினர், வழக்கம் போல மிக மட்டமான ஒரு உணவகம். இறங்கும்போதே அங்கிருந்தவனிடம் சண்டை. குடிநீர் வாங்கலாம் என்று இறங்கினால் நம்மை பிடித்து அங்கிருந்த மிக மட்டமான கழிவறைக்கு கொண்டு சென்று விட்டு விடுவார்கள் போல. சண்டை ஆரம்பிக்கும் போதே நடத்துனர் தயவால் நிறுத்தப்பட்டது. ஒரு லிட்டர் தண்ணீர் 18 ரூபாய். அநியாய கொள்ளை.

சாலைகள் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது வழி நெடுக. காலை 6.30 கரூர் சென்றடைந்தேன்.

சென்னைக்கு திரும்ப விரைவு பேருந்தில் சென்றால் தாமதம் ஆகும் என்று திருச்சி கிளை பேருந்துக்கு போக வற்புறுத்தினார் என் தந்தை. சாதரண பேருந்து (சாய்வு இருக்கை இருந்தாலும் 41 இருக்கை பேருந்து ) அழகிய தமிழ் மகன் படத்துடன் கிளம்பியது, வேகம் இருந்தாலும் பயணம் பாடாய் படுத்தியது. இருக்கைகள் நன்றாக சுத்தமாக இருந்தது ஆனால் சிறிது நேரத்தில் முதுகு வலி எடுத்தது, பேருந்து சத்தம், படத்தின் சத்தம் மிக அதிகம். ஏன் படம் போட்டால் இவ்வளவு சத்தம் ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையில் காலை 5 மணிக்கு கொண்டு வந்து விட்டனர். இந்த பயணம் மிக அசவுகரியமாக இருந்தது. நன்றாக பராமரிக்கப்பட்ட பேருந்து ஆனாலும் சரியான இருக்கைகள் இல்லை, சத்தம் அதிகம், பேருந்தில் போடப்பட்ட படத்தின் சத்தம் அதிகம், படம் ஓடி முடித்து மறுபடியும் முதலில் இருந்து ஓடியது. கூப்பிட்டு சொல்லி நிறுத்தப்பட்டது (ஏற்க்கனவே ஒரு முறை கள்ளழகர் படத்தை இரண்டு முறை பார்த்த அனுபவம்)

இரண்டு பயணத்துக்கும் இருந்த வித்தியாசம்- விரைவு பேருந்து விரைவாய் செல்லாது ஆனால் சவுகரியமாய் இருக்கும், திருட்டு டிவிடி போடப்படுவது இல்லை முடிந்த வரை பாடல்களை மட்டுமே போடுகின்றனர்.
வேக குறைவிற்கு காரணம், டிசல் பம்பை வேலை செய்து வேகம் அதிகம் போகாதவாறு செய்துள்ளனர், டிசல் சிக்கனமாம். அப்புறம் எதற்கு விரைவு பேருந்து என்று பெயர் ????

அரசு பேருந்து- திருச்சி பராமரிப்பு நன்று ஆனால் பயணம் அசவுகரியம், தாரளமாக திருட்டு டிவிடி போடப்படும். சத்தம் அதிகம் வைத்து காதை பிளக்கும் (இரண்டாவது முறை திருச்சி கிளையின் டிலக்ஸ் பேருந்தில் வந்தேன் அதற்க்கு விரைவு பேருந்தே தேவலை அவளவு மோசமான பராமரிப்பு). இவர்களுக்கு வேக கட்டுப்பாடு இல்லை, ஆனால் இருக்கைகளை தவிர நின்று கொண்டே செல்லவும் பயணிகளை ஏற்றி விடுகின்றனர் இதனால் அனைவருக்கும் சிரமம்.

அரசு விரைவு பேருந்து லாபமில்லையாம், கடந்த மாதம் சம்பளமே பத்து நாட்கள் கழித்து குடுத்தனராம். மற்ற கிளைகள் லாபத்தில் ஓடினாலும் இவை அப்படி இல்லை காரணம் பகலில் ஓடும் பேருந்துகள் காலியாக ஓடுகின்றனவாம் மேலும் அதிக அதிகாரிகள், நிர்வாக சீர்கேடு என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

Friday, July 11, 2008

கார் வாங்கியாச்சு

ரொம்ப நாளா சொல்லிகிட்டிருந்த கார் வாங்கும் படலம் இபோதுதான் முடிந்துள்ளது. தீவிரமா தேடி எனக்கு பிடித்த பாலியோ காரை நேற்று கண்டுபிடித்தேன். இதற்கு முன்னால் மூன்று கார்களைப்பார்த்தேன். அனைத்துமே இணையத்தில் தேடி கண்டு பிடித்ததுதான்.

முதல் கார், மிக குறைவான விலை குறிப்பிடிருந்தனர், சரி பார்க்கலாம் என்று நினைத்து சென்றோம். அதற்க்கு முன்னாடியே பலமுறை தொலைப்பேசியில் அழைத்து உறுதி செய்தனர். அரஞ்சு கலர் பார்க்க நன்றாக பளபளப்பாக இருந்தது. ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. அனைத்தும் ஓகே. இருந்தாலும் ஒரு மெக்கானிக் வைத்து அறிந்துவிடலாம் என்று நண்பரின் உதவியுடன் மெக்கானிக் கண்டுபிடித்து அறிந்தோம்.

காரின் வண்ணம் இரண்டாம் முறை பூசப்பட்டிருந்தது, சர்விஸ் செய்ததற்க்கான வரலாற்றை கூறவில்லை, இஞ்சின் பிரச்சனை இருந்தது. இதை வாங்குவது என்பது ரிஸ்க் என்று முடிவானது.அதனால் இந்த வண்டி இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.

அடுத்து மற்றொன்று, இதுவும் நல்ல வண்டி ஆனால் டீசல் வண்டி, விலையும் நம்ம தகுதிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தது. அதற்குமேல் அதில் வழக்கம் போல உள்ள டீசல் பம்ப் பிரச்சனை இருதது கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது

மூன்றாவதாக பேப்பரில் பார்த்த வண்டிக்கு அழைத்து நேரில் சென்று பார்க்க சென்றோம். பார்க்கும்போதே தெரிந்தது நன்றாக பராமரிக்கப்பட்ட வண்டி என்று.முதல் உரிமையாளர், வண்டியை ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. திருப்திகரமான வண்டி, ஆனால் கேட்ட விலை மயக்கம் வந்து விட்டது பின்னர் ஒரு வழியாக பேசி முடித்தாயிற்று. (மாதிரி புகைப்படம்)

முன் பணம் குடுத்து விட்டு இப்பொது வங்கி கடனுக்காக காத்துகொண்டு உள்ளேன். திங்கட்கிழமை கிடைத்து விடும் என்று நம்புகிறேன். வீட்டிலும் பெரிய எதிர்ப்பு இல்லை. நெடுநாள் ஆசை அதனால் எதுவும் சொல்லவில்லை ஆனாலும் எதோ ஒரு குற்ற உணர்ச்சி இருக்கின்றது, தேவை இல்லாமல் செலவு செய்து விட்டோமா என்று. பார்ப்போம் பல்சர் வாங்கியபோதும் இப்படித்தான் தோன்றியது. பின்னர் வீட்டில் சகஜமாக எடுத்துக்கொள்ள அது மறைந்தது.

எப்படியோ இந்த பிறந்தநாள் நன்றாக நல்ல செய்திகளை கொண்டு வருகின்றது. பத்து நாட்களுக்குள் மூன்று நல்ல செய்தி.நான் கார் வாங்கியது, மிக எதிர்பார்த்த துறை மாற்றம் எனது அலுவலகத்தில், அண்ணனின் திருமணம் மற்றும் சம்பள உயர்வு .. மகிழ்ச்சியான தருணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்.

இத்தருணத்தில் புறக்கணிப்பின் வலியிலிருந்து மீண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் புறப்படுகிறேன் புதிய உலகை நோக்கி. புறக்கணிப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களில் பல என்னை பக்குவபடுத்தியது போலத்தெரிகிறது. மிக கொடியதுதான் இது, நீ என்னுடன் பேசியது பின்னர் என்னிலுள்ள சிறிய தவறு என் நட்பை துளைத்து பின்னர் என்னையே துளைக்கும் அளவிற்கு வந்து, நண்பர்களை பிரித்து, எதிரிகளை கூட பிரித்து என்னை தனிமைச்சிறையில் அடைத்த தருனகள் என் வாழ்வில் கொடிய தருணங்கள். கண்முன்னே சிரித்து பழகிய நண்பர்கள் என்னிடம் பொய் சொல்லி தனியே சென்று களிக்கின்றனர். காரணம் எனக்கு தெரிந்தால் நான் துன்பப்படுவேனோ, இல்லை என்னை விள்ளக்க அவர்களாக எடுத்த முடிவோ என்னவோ மேலும் என்னை அழைக்க முடியாது என்பதாலோ. அவர்களே அடுத்த நாளில் என்னிடம் தெரியப்படுத்துகின்றனர் எவ்வாறு கழித்தோம் நேற்றைய நாளை என்று.

கண்முன்னே எனது நண்பர்களால் புறக்கணிக்கப்படுவது தெரிந்தும் ஊமைச்சிரிப்பு சிரித்துகொண்டு ஏன் இருக்க வேண்டும் நான்? அதற்காக வருத்தப்பட்டு மெலிந்து போவதும் கூடாது, என்னுள் இருந்த "நான்" என்ற சுயமரியாதை தலை தூக்கியது. போராட்டத்தை தனியாளாக நின்று ஏற்க்கத்துவங்கினேன், பல தோல்விகள் மிகச்சில வெற்றிகள், சிற்சில சந்தோசங்கள் என்று முடிந்த கடந்த வருடமும், நல்ல செய்திகளுடன் துவங்கும் இந்த வருடமும் எனக்குள் விதைத்த அனுபவங்களுக்கு நன்றி.

எதோ எழுதப்போய் எதோ எழுதிட்டேன், ஊருக்கு சென்றுவிட்டு வந்து அடுத்து அலப்பரைய ஆரம்பிக்க வேண்டியதுதான். நம்ம அலப்பரைய அப்புறம் சொல்றேன்...

இ புகைப்படம்

Friday, July 4, 2008

வழக்கமான விதிமீறல்

அன்று இரவு நண்பனை கூட்டிவர வண்டியை எடுத்துக்கிளம்பினேன், எல்லாம் நன்றாகத்தான் சென்றது, கத்திபாரவிலிருந்து ஏர்போர்ட் செல்லுமிடத்தில் முன் சென்று கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார் இடதுபுறத்தில் 2 வீலரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை இடித்துச்சென்றது. அருகிலிருந்த நபர்கள் மற்றும் வண்டிக்கு பின்னால் வந்தவர்கள் அவருக்கு உதவச்செல்லவே, நான் நிற்காமல் சென்ற அந்த வண்டியைத்துரத்த முயன்றேன் நீண்ட தூரம் துரத்தி ஒருமுறை அருகில் செல்லும்போது வண்டியை நிருத்தச்சொன்னேன். அந்த ஓட்டுநரோ எதற்கு என்று கேட்க, ஒரு விபத்தை செய்துவிட்டு நிற்காமல் வருகிறாயே என்று கூறினேன். அதற்க்கு அவர் "நீயும் அடிபட்டு சாக வேண்டுமா" என்று கூறியபடியே நிற்காமல் செல்லவே நான் அடுத்து வரும் சிக்னலில் இருக்கும் காவலரிடம் கூறலாம் என்று நினைத்துச்சென்றால் ஏர்போர்ட் வரை சாலையில் எந்த காவலருமில்லை.

ஏர்போர்ட் சென்ற பொது அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் நடந்ததை கூறி என்ன செய்வது என்று கேட்க. அவர்கள் விபத்து மிகப்பெரியதா? ஆளுக்கு அடியா? வண்டிக்கு பெரிய சேதமா? என்று கேள்வி கேட்டனர். எனக்கு அதையெல்லாம் பார்க்க நேரமில்லை ஏனெனில் அடித்த வண்டி நிற்கவில்லை அதை தொடர முடிவு செய்து தொடர்ந்தேன் என்று கூற. அதற்க்கு அவர்கள் அடிபட்டவர் புகார் குடுக்காமல் எதுவும் செய்ய முடியாது தம்பி, நீங்கள் வேண்டுமென்றால் திரும்பி போகும்போது கத்திப்பாராவில் சென்று அங்கு இருக்கும் அதிகாரியிடம் கேளுங்கள் எவரேனும் புகார் குடுத்து இருந்தால் அவரிடம் வண்டி நம்பரை தெரிவியுங்கள் என்றார். அதில் அவர் எனக்கு நன்றி சொன்னது மிகவும் ஆச்சரியம் எதற்க்காக எனக்கு நன்றி கூறினார் என்று தெரியவில்லை.

திரும்பி அவ்வழியே செல்லும்போது அங்குள்ள காவலரிடம் ஏதும் விபத்து பற்றி புகார் வந்திருக்கிறதா என்று நான் கேட்க, அவர் அப்படி ஏதும் புகார் இல்லை என்று கூறிவிட்டார். நான் குறித்து வைத்த வண்டி எண் TN 01 P 7275 எந்தவித உபயோகத்திற்கும் இல்லாமல் சென்றது.

நேற்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருக்கும்போது வலது ஓரத்தில் சென்ற அரசுப்பேருந்து திடீரென்று இடதுபுறம் திரும்ப பக்கவாட்டில் சென்ற ஆட்டோ இடதுபுறம் சென்று அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மோதியது. அடி பலமில்லை இருந்தாலும் இது தவிர்க்கபட்டிருக்கலாம். இதில் தப்பு யார் மீது? அந்த பேருந்து ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் திருப்பியதாலா? இல்லை ஆட்டோ அவர் பாதையில் விட்டு இடதுபுறம் சென்றதாலா?

சமீபத்தில் எதிலோ ஒரு நாளிதழில் படித்தது, சென்னையில் ஏற்ப்படும் சாலைவிதி மீறலில் பெரும்பான்மை சதவிகிதம் அரசுப்பேருந்து ஓட்டுனர் செய்வதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். தினசரி வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் செயல் இது, என்னைப்பொறுத்தவரை 90 சதவிகித மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் சாலை விதிமீறலில் ஈடுபடுகின்றனர். எனக்கு இவ்வாறு செய்யும் ஓட்டுனர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற கோவம் வருகிறது. எனது தந்தையும் ஒரு அரசுப்பேருந்து ஓட்டுனர் அனால் அவர் தொலைதூர வண்டி இயக்குவதால் இந்த தவறை செய்கிறாரா என்று தெரியவில்லை, எனக்கு சாலை விதிமுறைகளையும், பேருந்து ஓட்டுனர்களின் மனநிலையையும் சொல்லிக்குடுத்தது அவர் மட்டுமே. இன்றும் அவர் சொல்லிக்குடுத்ததை மட்டுமே நம்பி நான் வண்டி ஓட்டிக்கொண்டு உள்ளேன்.

அடுத்து வருவது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், இவர்களை பற்றி என்ன சொல்ல? அனைவருக்கும் தெரியும். அடுத்து பைக் ஓட்டுபவர்கள், சந்து கிடைத்தால் போதும் பின்னால் வருபவர் என்ன அனாலும் பரவாயிலை அவர் மட்டும் சென்றால் போதும் என்று செல்வது. இந்த வேன் ஓட்டுனர்கள் கதவை திறந்து வைத்துத்தான் ஓட்டுவார்கள்.

கடைசியாக நடந்து செல்பவர்கள், சாலையை கடக்க அதற்கான பாதையை உபயோகிப்பது இவர்களுக்கு பிடிக்காது, நாடு சாலையில் திடீரென்று குதிப்பார்கள், வரும் வாகனங்கள் இவர்களை இடிக்காமல் செல்ல வேண்டி வேறெங்காவது செல்ல வேண்டும்.

இந்த கணக்கில் மென்பொருள் அலுவலக பேருந்துகளையும், கார்களையும், கல்வி நிறுவன பேருந்துகளையும், நான் மறக்கவில்லை.

சில எளிதான அறிவுரைகள்: சென்னையில் மாநகர பேருந்திற்கு பின் செல்லும்போது அந்த பேருந்து எங்கு செல்கிறது, வெள்ளை நிற அறிவிப்பு பலகையா என்று பார்த்து அதன்படி நகர்ந்து செல்லுங்கள். சில பேருந்துகள் திடீரென்று திரும்பும் இடத்தை யூகிக்க முடியும்.

எந்த காரணத்தைக்கொண்டும் ஆட்டோவின் பின்னால் செல்ல வேண்டாம்.

யார் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் நீங்கள் விதிகளை மதியுங்கள், ஏனென்றால் ஏதேனும் விபத்து நடக்கும்பட்சத்தில் உங்கள் மீது தப்பு சொல்ல முடியாது.

தேவையற்ற இடத்தில் தேவையற்ற வேகம் வேண்டாம், இடமறிந்து வேகத்தை கூட்ட வேண்டும்.

முன் செல்லும் வாகனம் எவ்வாறு பயணப்படும் என்று மனக்கணக்கு எப்போதும் அவசியம்.

வலதுபுறம் வரும் வண்டியை கவனிக்காமல் எப்போது முந்துதல் கூடாது.

நகரின் வெளியில், நெடுஞ்சாலையில் செல்லும்போது எக்காரணத்தைக்கொண்டும் சாலையை விட்டு இறங்க வேண்டாம்.

Wednesday, July 2, 2008

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

விலைவாசிலாம் கண்ணா பின்னாவென்று ஏறுகிறது, எப்படிடா காலத்த ஓட்டறது?

ஆபிசில வேற புது வேலைலாம் டல்லா இருக்கு, இந்த வருஷம் அப்பரைசல் எப்படியும் ஒன்னும் போட மாட்டாங்க. வேற வேலையும் சுலபமா கிடைக்க மாட்டேன்குது.

வீட்டு ஓனர் வேற வாடகைய எப்படா ஏத்தலாம்னு பாத்துகிட்டு இருக்கான்.
வயசு வேற ஆச்சு, நம்ம கூட படிச்ச பசங்கள்ளாம் கல்யாணம் பண்றாங்க, இத பாத்தாலே நமக்கும் வயசாச்சுன்னு ஒரு பீலிங்கு.

இதுல கூட இருக்கவன்லாம் வீட்ல பொண்ணு பாக்கறாங்கன்னு சொல்லி இன்னும் பெட்ரோல ஊத்தறான்.

வீட்டுல கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கு, நமக்காக அண்ணன் என்ற ஒரு கேட் இருக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் கிடைக்கும்.

அதுக்குள்ள ஒரு வீடு வாங்கிடணும்னு இருந்த கனவு எல்லாம் கனவாவே போய் ரொம்ப நாள் ஆச்சு.

ஏதோ மென்பொருள் துறைல வேலை பாதவாவது ஏதாவது வேற கம்பனிக்கு ஜும்ப் பண்ணி சம்பளத்த ஏத்திக்கலாம் அதுக்கும் வழி இல்ல

கல்யாணம் பண்ணினா வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கணும் எப்படியும் ஒரு லட்சம் தேவை முதல்ல அதுக்கு சேத்து வைக்கணும்.

வீடுதான் வாங்கல நம்ம கெத்த மேயின்டின் பண்ண ஒரு கார் வாங்கி உருட்டுவோம், எப்படியும் நமக்கு யாராது பொண்ண குடுப்பாங்க என்று நம்பி.

வீட்லயே இருக்க பொண்ண வேணாம்ன்னு ஏற்கனவே முடிவு பண்ணினது வசதியா போச்சு.

எப்படியும் இதெல்லாம் சேர்க்க இரண்டு வருசமாது ஆகும் அதுக்கு இடைல யாரது நல்ல மாமனாரா கிடைச்சா செட்டில் ஆகிடலாம்.

மூணு வருசமா வேல செஞ்சு என்னாத்த சேத்து வச்சன்னு பார்த்த ஒரு மண்ணும் இல்ல, ஊதாரிக்கு அர்த்தம் இப்பதான் தெரியுது.

பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் அகிடலாமா? அப்படியே சரின்னாலும் எவன் பொண்ணு குடுப்பான் நல்ல பேருக்கெல்லாம் எவனும் பொண்ணு குடுக்கறது இல்ல எவ்ளோ சேத்து வச்சுருக்க அதுக்குத்தான் பொண்ணு.

காதல் பண்ணலாம்னாலும் நமக்கு இருக்க நண்பர்கள் வட்டாரம் நம்மள முதல்ல வெளிய விடனும் அதும் நடக்காது.

ஐயோ எனக்கும் பொறுப்பு வந்துடுச்சு போலருக்கு, இப்படிலாம் பதிவு எழுதறோம்.

அதான பார்த்தேன், இத எழுதும்போதே நண்பன் ஒருத்தன் வெளிய போகனும்னு கடன் கேட்க்கறான் குடுத்து குடுத்து சிவந்த கையால ஒரு ஆயிரத்த டிரான்ஸ்பர் பண்ணிடோம்ல, திரும்பி வரதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்றதுல ஒரு திருப்தி.

டேய் போதும்டா இந்த மொக்க பதிவு, செய்க்கிரம் போய் கொட்டிக்கோ சாப்பாடு தீந்துடும் என்று மனச்சாட்சி சொல்றதால விடறேன்.
இந்த கால இளைஞன் என்னலாம் யோசிக்கறான் பாருங்க.

இதுல வஞ்ச புகழ்ச்சி அணி எல்லாம் இல்ல, அங்கங்க தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும். படிப்போம் மறப்போம்.

நேற்றிரவு

நேற்று இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு படுக்கப்போகும் முன் நண்பன் வாடா காலாற நடந்துவிட்டு வரலாம் என்று அழைக்க எதோ குருட்டு யோசனையுடன் சரி என்று நடக்க ஆரம்பித்தோம். எங்க தெருவில் வீட்டுக்கு முன்னாள் கார் நிறுத்துபவர்கள் இப்போது பயந்து போயுள்ளனர். பின்ன அன்று ஒரு நாள் நிறுத்தியிருந்த காரை இரவில் வேகமாகச்செல்லும் மணல் லாரிகள் இடித்துவிட்டு சென்றிருக்க, அடுத்த சில நாட்களில் இன்னொரு கரையும் காலி பண்ணி இருந்தனர்.

கிளம்பும்போதே பக்கத்து வீட்டுக்காரர் ஒரு லாரி ஓட்டுனருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார், வீட்டு வேலைக்கு மணல் கொட்டுகிறேன் என்று அவர் வீட்டு சுற்றுச்சுவர் முழுவதையும் மூடி இருந்தனர். நாங்களும் பார்த்தோம், இருபது அடி ரோடு இப்ப ஒத்தையடிப்பதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்படியே வேளச்சேரி - தரமணி மெயின் ரோட்டுக்கு வந்தோம், கொஞ்ச நேரம் நடந்திருப்போம். இரண்டு பேர் பைக்கில் வந்து விஜயநகர் எது என்றனர், இதுதான் என்று சொல்ல, இல்ல இங்க எங்க இருக்கு விஜயநகர் என்றுகேட்டனர். அவங்களுக்கு ஒருவழியா வலி (வழிதான்) சொல்லி அனுப்பினோம். மெதுவாக சுற்றி வீட்டுக்கு வரும் வழியில் காவல்த்துறை ரோந்து,எங்கப்பா போயிட்டு வரீங்க என்று அவர்கள் கேட்க. வாக்கிங் போயிட்டு வரோம் என்று சொலிட்டு அவங்கள பாக்க, நைட் 12 மணிக்கு எவனாது வாக்கிங் போவனா? என்று எங்களை பார்த்து சிரித்தார்.

அவங்கள சமாளிச்சு வீட்டுக்கு வந்தா எதுத்த வீட்டுக்கு முன்னாடி ஒருத்தர் கார நிறுத்திட்டு கைய பிசஞ்சுகிட்டு இருந்தார். கிட்ட போய் என்னனு பார்த்தா, கார் சாவிய உள்ள வச்சுட்டு கதவ பூட்டிட்டார். அப்புறம் நாங்களும் கொஞ்சநேரம் என்ன பண்ண என்று யோசித்தோம். வழியே வந்த ஒரு வாடகை வண்டியை நிறுத்தி உதவி கேட்க, அவரும் உதவினார். நாங்களும் கதவில்லுள்ள இடைவெளியில் ஒரு scale விட்டு அழுத்தினால் திறந்துவிடும் என்று நினைத்து கஷ்டப்பட்டு அந்த கண்ணாடியை மூடி இருக்கும் ரப்பரை பிரிக்க இப்போதுதான் சோதனை. ஆமா scale இல்ல, அதுபோல ஆயுதங்களை தேடினா கிடைத்தது பெரிய கரண்டி எங்க வீட்டிலிருந்து, அவர் வீட்ல பெரிய கரண்டி 2, பரீட்சை அட்டை 1, நீண்ட கம்பி 1, ரப்பர் பட்டை , சின்ன கட்டை.நமக்கு ஆயுதம் செய்வோம் என்ற படம் நியாபகம் வந்தது.

திடீரென்று ஒரு யோசனை,சரி என்று just dial நம்பர்க்கு அழைத்து 24 மணிநேர சர்வீஸ் நம்பரை கண்டுபிடித்து ஒரு ஆளை அழைத்தால் அவர் இன்னொரு நம்பர் குடுக்க அதிலிருந்து இன்னொரு நம்பர் என்று நான்காவது நம்பரில் ஒருவர் கிடைத்தார். அவர் ஆளனுப்பி அவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆனது. காலையில்தான் அவர் பெட்ரோல் போட்டுள்ளார் போல, இரண்டு மணி நேரமாக வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.இதுக்கு இடைல அவங்க வீட்டிலிருந்து mirinda வேற. கடைசியில் வந்து சரி செய்யும்போது மணி இரண்டு. அந்த நேரத்தில அவங்க காபி வேற குடுத்தனர்.

இவ்ளோ நடந்ததுல கிடைத்த தகவல்கள்

அந்த வீட்டுக்கு 15000 வாடகை குடுக்கிறார் (ஆகா நம்ம ஒப்பந்தம் அடுத்த மாசம் காலாவதி ஆகிறது, ஓனர் ஒரு ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்துவார் என்று நினைத்தால் இவர் சொல்வதை வைத்து பார்த்தால் சுமார் 6000 ரூபாய் ஏற்றப்படும் என்று நினைக்கிறேன்)

வாடகை வண்டிகள் உதவி செய்வது மகிழ்ச்சி.

வண்டிக்கு இத்தகைய சோதனை வரும்போது உதவி செய்யும் நபர்கள் வண்டியின் அசல் பதிவுப்புத்தகத்தை சரி பார்க்கின்றனர்.

அவர்களை அனுப்பியவர் மறுபடியும் அழைத்து சரி செய்யப்பட்டது என்று உறுதி செய்கிறார் ( My TVS Guindy ). இருபது நிமிட தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

சரி செய்ய வந்தவர்களை தேனிர் அருந்தி செல்லலாம் என்று அழைக்க அவர்கள் நீங்க கூப்பிட்டதே போதும், நாங்க பார்த்து இதுவரை எங்களை இப்படிகேட்டதே இல்லை என்று சொல்லி சென்றனர்.

இனி வண்டியை விட்டு இறங்கும்போது சாவி கையில் இல்லாமல் இறங்க கூடாது என்று நாங்கள் பாடம் கற்றோம்.

காலையில் கிளம்பும்போது பார்த்தேன், மணல் கொட்டுகிறேன் என்று பக்கத்து வீட்டு காரை பாதி மூடி வைத்திருந்தனர். (இன்னிக்கு மறுபடியும் பெரிய சண்டை இருக்குடா )

இனி வாக்கிங் கிளம்புனா சீக்கிரம் கிளம்பனும்.