Friday, July 4, 2008

வழக்கமான விதிமீறல்

அன்று இரவு நண்பனை கூட்டிவர வண்டியை எடுத்துக்கிளம்பினேன், எல்லாம் நன்றாகத்தான் சென்றது, கத்திபாரவிலிருந்து ஏர்போர்ட் செல்லுமிடத்தில் முன் சென்று கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார் இடதுபுறத்தில் 2 வீலரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை இடித்துச்சென்றது. அருகிலிருந்த நபர்கள் மற்றும் வண்டிக்கு பின்னால் வந்தவர்கள் அவருக்கு உதவச்செல்லவே, நான் நிற்காமல் சென்ற அந்த வண்டியைத்துரத்த முயன்றேன் நீண்ட தூரம் துரத்தி ஒருமுறை அருகில் செல்லும்போது வண்டியை நிருத்தச்சொன்னேன். அந்த ஓட்டுநரோ எதற்கு என்று கேட்க, ஒரு விபத்தை செய்துவிட்டு நிற்காமல் வருகிறாயே என்று கூறினேன். அதற்க்கு அவர் "நீயும் அடிபட்டு சாக வேண்டுமா" என்று கூறியபடியே நிற்காமல் செல்லவே நான் அடுத்து வரும் சிக்னலில் இருக்கும் காவலரிடம் கூறலாம் என்று நினைத்துச்சென்றால் ஏர்போர்ட் வரை சாலையில் எந்த காவலருமில்லை.

ஏர்போர்ட் சென்ற பொது அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் நடந்ததை கூறி என்ன செய்வது என்று கேட்க. அவர்கள் விபத்து மிகப்பெரியதா? ஆளுக்கு அடியா? வண்டிக்கு பெரிய சேதமா? என்று கேள்வி கேட்டனர். எனக்கு அதையெல்லாம் பார்க்க நேரமில்லை ஏனெனில் அடித்த வண்டி நிற்கவில்லை அதை தொடர முடிவு செய்து தொடர்ந்தேன் என்று கூற. அதற்க்கு அவர்கள் அடிபட்டவர் புகார் குடுக்காமல் எதுவும் செய்ய முடியாது தம்பி, நீங்கள் வேண்டுமென்றால் திரும்பி போகும்போது கத்திப்பாராவில் சென்று அங்கு இருக்கும் அதிகாரியிடம் கேளுங்கள் எவரேனும் புகார் குடுத்து இருந்தால் அவரிடம் வண்டி நம்பரை தெரிவியுங்கள் என்றார். அதில் அவர் எனக்கு நன்றி சொன்னது மிகவும் ஆச்சரியம் எதற்க்காக எனக்கு நன்றி கூறினார் என்று தெரியவில்லை.

திரும்பி அவ்வழியே செல்லும்போது அங்குள்ள காவலரிடம் ஏதும் விபத்து பற்றி புகார் வந்திருக்கிறதா என்று நான் கேட்க, அவர் அப்படி ஏதும் புகார் இல்லை என்று கூறிவிட்டார். நான் குறித்து வைத்த வண்டி எண் TN 01 P 7275 எந்தவித உபயோகத்திற்கும் இல்லாமல் சென்றது.

நேற்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருக்கும்போது வலது ஓரத்தில் சென்ற அரசுப்பேருந்து திடீரென்று இடதுபுறம் திரும்ப பக்கவாட்டில் சென்ற ஆட்டோ இடதுபுறம் சென்று அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மோதியது. அடி பலமில்லை இருந்தாலும் இது தவிர்க்கபட்டிருக்கலாம். இதில் தப்பு யார் மீது? அந்த பேருந்து ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் திருப்பியதாலா? இல்லை ஆட்டோ அவர் பாதையில் விட்டு இடதுபுறம் சென்றதாலா?

சமீபத்தில் எதிலோ ஒரு நாளிதழில் படித்தது, சென்னையில் ஏற்ப்படும் சாலைவிதி மீறலில் பெரும்பான்மை சதவிகிதம் அரசுப்பேருந்து ஓட்டுனர் செய்வதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். தினசரி வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் செயல் இது, என்னைப்பொறுத்தவரை 90 சதவிகித மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் சாலை விதிமீறலில் ஈடுபடுகின்றனர். எனக்கு இவ்வாறு செய்யும் ஓட்டுனர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற கோவம் வருகிறது. எனது தந்தையும் ஒரு அரசுப்பேருந்து ஓட்டுனர் அனால் அவர் தொலைதூர வண்டி இயக்குவதால் இந்த தவறை செய்கிறாரா என்று தெரியவில்லை, எனக்கு சாலை விதிமுறைகளையும், பேருந்து ஓட்டுனர்களின் மனநிலையையும் சொல்லிக்குடுத்தது அவர் மட்டுமே. இன்றும் அவர் சொல்லிக்குடுத்ததை மட்டுமே நம்பி நான் வண்டி ஓட்டிக்கொண்டு உள்ளேன்.

அடுத்து வருவது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், இவர்களை பற்றி என்ன சொல்ல? அனைவருக்கும் தெரியும். அடுத்து பைக் ஓட்டுபவர்கள், சந்து கிடைத்தால் போதும் பின்னால் வருபவர் என்ன அனாலும் பரவாயிலை அவர் மட்டும் சென்றால் போதும் என்று செல்வது. இந்த வேன் ஓட்டுனர்கள் கதவை திறந்து வைத்துத்தான் ஓட்டுவார்கள்.

கடைசியாக நடந்து செல்பவர்கள், சாலையை கடக்க அதற்கான பாதையை உபயோகிப்பது இவர்களுக்கு பிடிக்காது, நாடு சாலையில் திடீரென்று குதிப்பார்கள், வரும் வாகனங்கள் இவர்களை இடிக்காமல் செல்ல வேண்டி வேறெங்காவது செல்ல வேண்டும்.

இந்த கணக்கில் மென்பொருள் அலுவலக பேருந்துகளையும், கார்களையும், கல்வி நிறுவன பேருந்துகளையும், நான் மறக்கவில்லை.

சில எளிதான அறிவுரைகள்: சென்னையில் மாநகர பேருந்திற்கு பின் செல்லும்போது அந்த பேருந்து எங்கு செல்கிறது, வெள்ளை நிற அறிவிப்பு பலகையா என்று பார்த்து அதன்படி நகர்ந்து செல்லுங்கள். சில பேருந்துகள் திடீரென்று திரும்பும் இடத்தை யூகிக்க முடியும்.

எந்த காரணத்தைக்கொண்டும் ஆட்டோவின் பின்னால் செல்ல வேண்டாம்.

யார் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் நீங்கள் விதிகளை மதியுங்கள், ஏனென்றால் ஏதேனும் விபத்து நடக்கும்பட்சத்தில் உங்கள் மீது தப்பு சொல்ல முடியாது.

தேவையற்ற இடத்தில் தேவையற்ற வேகம் வேண்டாம், இடமறிந்து வேகத்தை கூட்ட வேண்டும்.

முன் செல்லும் வாகனம் எவ்வாறு பயணப்படும் என்று மனக்கணக்கு எப்போதும் அவசியம்.

வலதுபுறம் வரும் வண்டியை கவனிக்காமல் எப்போது முந்துதல் கூடாது.

நகரின் வெளியில், நெடுஞ்சாலையில் செல்லும்போது எக்காரணத்தைக்கொண்டும் சாலையை விட்டு இறங்க வேண்டாம்.

6 comments:

Karthik said...

நிச்சயமாக படிக்க வேண்டிய பதிவு.

DHANS said...

வருகைக்கு நன்றி :)

ஜோசப் பால்ராஜ் said...

யாருமே விதிகளை மதிக்கவில்லை நான் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்?
இப்படித்தான் எல்லோரும் நினைக்கின்றார்களே தவிர, நாமாவது ஆரம்பிப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. இது தான் பிரச்சனையே.
சாலை விதிகளை மதிப்போர் எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்தால் தான் சரியாக வரும் என்று நினைக்கின்றேன்.
ஒரு நேரத்தில் 100 பேர் பயணம் செய்யும் சாலையில் 10 பேர் சாலைவிதியை மதித்தால், அது தனியாக தெரியும்ல.

ஒரு அலுவலகத்தில் ஒன்றாக வேலைபார்ப்போர், ஒரே நேரத்தில் இரு சக்கரவாகனத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது இது போல செய்யலாம். இதானல் நல்ல பலன் ஏற்படும் என்று நினைக்கின்றேன். இது நல்ல முறையில் மற்றவர்களுக்கும் பரவும்.

சுரேகா.. said...

நல்லா இருக்கு!

உண்மையை, உண்மையா எழுதி இருக்கீங்க!

வாழ்த்துக்கள்!

DHANS said...

//நாமாவது ஆரம்பிப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. இது தான் பிரச்சனையே.//

உண்மைதான், சங்கம் ஆரம்பிப்பது நல்ல யோசனைதான், ஏற்கனவே இது போன்ற பல பேச்சுகள் பல தளத்தில் ஆரம்பித்து பின்னர் அப்படியே நின்று போயிற்று.

100 பேர் பயணம் செய்யும் சாலையில் ஒருவர் விதிகளை மதித்தாலே தனியாக தெரிகின்றது, என்ன இவன் ஒரு கேனையன் என்ற பட்டத்தோடு, அனால் பத்துபேர் என்பது மற்றவர் கண்ணோட்டத்தை மாற்றும்.

//ஒரு அலுவலகத்தில் ஒன்றாக வேலைபார்ப்போர், ஒரே நேரத்தில் இரு சக்கரவாகனத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது இது போல செய்யலாம்//

நல்ல யோசனை, எனது அலுவலகத்தில் பெரும்பாலும் பேருந்தில் அனைவரும் வந்து விடுகின்றனர், மற்றவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்.

தங்கள் யோசனைகளுக்கு மிக நன்றி

DHANS said...

சுரேகா அவர்களுக்கு நன்றி

தங்கள் பதிவைப்படித்தேன், நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.