ஏன்? இந்த கேள்வி ஒருவனை துளைக்கவும் செய்யும் துணிச்சலை அளிக்கவும் செய்யும். எனக்கு எதைக்கொண்டு வந்தது என தெரியவில்லை, ஆனால் ஏன் என்றகேள்விமட்டும் மனதில் வந்துகொண்டே இருக்கின்றது...
ஏன் நான் இப்படி இருக்கின்றேன்? விடை தெரியா கேள்விக்கு விடையை கண்டு பிடிக்க தேடலை துவக்கிய நான் இப்போது அந்த தேடலையே தேடுகிறேன்.
தொலைந்து போனவை காலத்தால் மறக்கப்பட்ட மகிழ்ச்சி மட்டும் அல்ல மகிழ்ச்சியை கொணர்ந்த காரணிகளான முயற்சியையும்.
உங்களுக்கு தெரியாது என்னை எது ஆள்கிறது என்று ஆனால் என்னால் சொல்ல முடியும் என்னிடம் எது இல்லை என்று, இல்லை என்று சொன்னால்சிரிக்கிறீர்கள், இருக்கு என்று சொன்னால் மகிழ்கிறீர்கள் ஆனால் இல்லாததை இல்லை என்று சொல்லாமல் இருக்கு என சொல்லி இருவரையும் ஏமாற்றவிரும்பவில்லை நான்.
உங்களுக்காக வாழும் என் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாய் பார்க்கலாம் ஆனால் என்னையும் பார்க்க சொன்னால் எப்படி பார்ப்பது? எப்படி சொல்வது என் மகிழ்ச்சிஎன்பது உங்கள் வருத்தம் என்று?
குழப்பத்தில் தானே மீன் பிடிக்க முடியும் என என்னுள் பிடிக்க ஏதும் இல்லை, இது பயமா, முயலாமையா? முயற்சியின்மையா? அயர்ச்சியா? இல்லை என்னவென்றுதெரியாத ஒரு சூனியமா? புள்ளி இல்லாத ஒரு முற்றுப்புள்ளி போல இருக்கிறது வாழ்க்கை, உடனடித்தேவை ஒரு முற்றுப்புள்ளி ஆனால் அதைச்சுற்றி கோலம்போட வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.
சுயமா நலமா என வருகையில் சுயம் என தெரிந்தும் நலம் என சொல்ல அனுமதிக்கப்பட்டேன், என்ன சொல்ல என் சுயத்தை விட மற்றவர் நலம் முக்கியமாயிற்றே.சமூகம் எதை வைத்து அவர்களை தீமாணிக்கிறது? ஆயிரம் பேர் சொல்லலாம் சமூகத்திற்காக வாழ்வை மாற்றாதே என்று ஆனால் ஆயிரம் பேர்சொன்னால்அவர்களும் சமூகம் தானே, ஆனால் ஒருவரும் சொல்லவில்லையே வாழ்வை இழந்துவிடு என்று அதற்காக அவர்கள் சமூகம் இல்லையா?
கேள்விகள் துளைத்தாலும் கேள்விகளை மட்டுமே சுமந்து செல்கிறேன் உங்களை போலவே குழப்பத்துடன்.
பதில் கிடைத்தால் கண்டிப்பாக முற்றுப்புள்ளியுடன் மட்டுமே கிடைக்கும் என நம்பிக்கையோடு!