Thursday, April 9, 2009

என்னை முட்டாளாக்கிய கடவுளுக்கு நன்றி

நான் முட்டாளாக்க திட்டம் போட்டேன் ஆனால் கடவுள் என்னை முட்டாளாக்கிவிட்டார். என்ன சொல்வது எனது திட்டம் அனைத்தும் தெரிந்து இருக்கும் போல அதனால் என்னைமுந்திக்கொண்டு திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வெற்றியும் பெற்று விட்ட அவனை என்னவென்று சொல்வது.

நம்பிக்கை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது, இனி நம்பி பயன் இல்லை, கவலை அடைய எதுவுமில்லை, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக்கொள் உனக்கென்று எதுவும் நிரந்தரமில்லை என்பதை ஒரு பெரிய இழப்பின் மூலம் தெரிய வைத்த அவருக்கு நன்றி.

துக்கம் நடந்த வீட்டில் செய்யக்கூடாத சில செயல்களை சொல்கிறேன்.
துக்கத்திற்கு சென்றால் அமைதியாய் இருந்து திரும்புங்கள் என்ன ஆச்சு, எப்படி ஆனது என்று கேட்டு துக்க வீட்டில் உள்ளவரை சங்கட படுத்தாதீர்,

முன்னாடியே பாத்திருக்க வேண்டியது தானே, வேற இடத்தில கொண்டு சேர்த்து பார்த்திருக்கலாம் தானே என்று அறிவு ஜீவி தனமாக பேசாதீர். எவரும் வசதி குறைவான இடத்தில சிகிச்சை செய்ய வேண்டும் என்றோ, இல்லை மெதுவாக சிகிச்சை செய்யலாம் என்றோ நினைக்க மாட்டார்கள்.

இறந்தவரை பற்றியோ அவரின் உடல் நிலையை பற்றியோ தவறான சேதிகளை பரப்பாதீர். பின்னாளில் அவரின் ஆயுள் காப்பீட்டு பணம் பெறக்கூட அச்செய்தி தடையாயிருக்க கூடும்.

இறந்தவரின் நெருங்கிய உறவினரை முடிந்த வரையில் தொந்தரவு செய்யாதீர், அவர்கள் தேறி வரும் நேரம் பார்த்து நீங்கள் சென்று அழுது, அவரை பற்றி பெருமை பாடி மறுபடியும் கஷ்டப்படுத்தாதீர்.

இறந்தவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை பரிதாப பார்வையிலோ, இறக்க பார்வையிலோ பார்க்காதீர்.

இறந்த மூன்றாம் நாளே அவரின் சொத்துகளையோ, பொருட்களையோ விலை பேசி, கேட்டு தொந்தரவு செய்யாதீர்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கின்றது ஆனால் சொல்ல முடியவில்லை, துக்கத்தில் இருந்து வெளிவர அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு வெகு விரைவிலேயே திரும்பினால் உறவினர்களின் ஏளன பேச்சு மனதை புண் படுத்துகிறது. இறந்த நன்கு நாட்களுக்குள் வேலைக்கு செல்கிறார்கள் மற்றும் பல பேச்சு. அதுக்காக மாச கணக்கா அழுது கொண்டு இருக்க முடியுமா?? மருத்துவ மனையில் இருக்கும்போது உதவி செய்ய ஒரு நாய் வரவில்லை, இப்போது பேச வந்துட்டானுக.

இறப்புக்கான காரணத்தை நம்பாமல் மருத்துவமனைக்கு தொலைபேசி அறிய முயற்சித்த உங்களுக்கு மிக நன்றி, இப்படி மற்றவர் விசயத்தில் அதிக அக்கறை காட்டுவது போல எல்லோருக்கும் எதாவது செய்யணும் என்று செய்தால் நன்றாக இருக்கும். நீங்கள் தெரிந்து கொண்ட தவறான காரணத்தை மற்றவர்களுக்கும் தவறாக பரப்பி என்ன புகழை கொண்டீர்கள்?? உங்களுக்கும் கடந்த காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்ப்பட்டது என்பதையும் அதில் இருந்து மீண்டு வர உங்களுக்கு இத்தனை ஆண்டு காலம் பிடித்தது என்றும் தெரிந்தும் அதனை மறந்தது ஏன்?..

இந்த இழப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது ஏராளம், கடவுள் நம்பிக்கையை அசைத்துப்பார்த்து புரட்டி போட்டுவிட்டது. எதிர்பாராத இழப்பின் மூலம் நமக்கு யார் யார் உண்மையான பாசத்துடன் பழகினர் என்று தெரிய வந்து உள்ளது. நண்பர்களே உறவினர்களே உங்களின் உண்மையான முகத்தை காண்பித்ததற்கு மிக நன்றி. இந்த பதிவு யாருக்காகவும் எழுதப்படவில்லை. மீண்டு வர நாளாகும் என்றாலும் அந்த நாளை எதிர்நோக்கி பயணத்தை துவக்கி முன்னேறுகின்றோம்.

4 comments:

ச.பிரேம்குமார் said...

பதிவு முழுசா படிக்காம பின்னூட்டம் போட்டுட்டேன்னு நினைக்கிறேன் :(

என்னாச்சு தனா, யார் மறைந்தார்கள் ? :(

DHANS said...

பரவாயில்லை, தங்கள் பின்னூட்டத்தை வெளியிடவில்லை மன்னிக்கவும்.
மறைந்தது எனது சகோதரியின் கணவர்.

Karthik said...

ஐம் ஸாரி. :(

DHANS said...

எனக்கு நன்றி சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை, எனக்கும் என் துக்கத்தை பகிர்ந்து கொள்ள சில நண்பர்களை கொடுத்த பதிவுலகத்துக்கு நன்றி.